வரலாற்றுச் சிறப்பு மிக்க குடிமை உரிமைச்செயல்வீரரும் அற்புதமான மனிதருமான மிக நேசத்துக்குரிய நமது நண்பர் முனைவர் கே. பாலகோபாலின் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். நான் இங்கு அமெரிக்காவில் சொற்பொழிவுகளாற்றுவதற்காக, கடந்த அக்டோபர் 1 ஆம் நாள் முதல் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். கேம்பிரிட்ஜிலுள்ள எம்.அய்.டி.யில் உரையாற்றுவதற்குச் சில நொடிகளுக்கு முன்புதான் அந்த செய்தி வந்தது. சில நிமிடங்கள் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. பிறகு கூட்டத்திற்கு வந்தவர்களிடம் செய்தியைச் சொல்லிவிட்டு, அவரது நினைவுக்கு அக வணக்கம் செலுத்துவதற்காக ஒரு நிமிடம் மவுனம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர்கள் உடனடியாக இசைவு தந்தனர். பிறகு எனது உரையை அவருடைய நினைவுக்கு அர்ப்பணித்து விட்டுத் தொடங்கினேன்.

1980களிலிருந்தே பாலகோபாலை எனக்குத் தெரியும். அவருடைய கூர்மையான அறிவையும் மனித உரிமைகள் மீதான அவரது அர்ப்பணிப்பையும் நான் பாராட்டி வந்தேன். அவர் சிறந்த கணிதவியல் அறிஞர் என்பதும் நமது நாட்டிலுள்ள கணிதவியல் அறிஞர்கள் என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் அவரால் எளிதாக ஒளிர்ந்திருக்க முடியும் என்பதும் மனித உரிமை இயக்கத்திலுள்ள பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவர் அதை எளிதாகத் துறந்துவிட்டு, அன்றைய சி.பி.அய். (மா–லெ) மக்கள் யுத்தக் குழு இயக்கத்தை நசுக்குவதற்கு, அரசு மேற்கொண்ட அடுத்தடுத்த மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதற்கான இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை மேலும் செயலூக்கத்துடன் நடத்துவதற்காக சட்டமும் பயின்றார்.

பல நேரங்களில் அவர் அரசுக்கு எதிரான ஒரு நபர் ராணுவமாகச் செயல்பட்டு, அரசு இழைக்கும் குற்றங்கள் நடக்கும் இடத்திற்கு எப்படியாவது விரைந்து சென்று விடுவார். அரசு மேற்கொள்ளும் பேய்த்தனமான செயல் திட்டத்தை அம்பலப்படுத்தி, அதற்குத் தடுமாற்றம் ஏற்படச் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் அவரைக் குறிவைத்துத் தீர்த்துவிடுவார்களோ என்று அவருடைய பாதுகாப்பு குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுவோம். அத்தகைய அபாயங்களை அவர் பல முறை எதிர் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் சிறிதும் உறுதி தளரவில்லை.

பாலகோபால் நிறைய எழுதியுள்ளார். ஒரு கணிதவியல் அறிஞர் அவரைப் போல உரைநடை எழுதுவது அசாதாரணமானது. ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி'யிலும் வேறு இடங்களிலும் அவர் எழுதிய கருத்துப் போராட்டக் கட்டுரைகள், எந்தவொரு முற்சார்புகளைக் கொண்டுள்ள வாசகர்களுக்கும் அறிவு விருந்தாக அமைந்திருந்தன. அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மறு சிந்தனைக்கு உட்படுத்தும்படி தூண்டுவதில் அவரை ஒருபோதும் தவறியதில்லை. உண்மையறியும் குழுப் பணிகளைப் பொருத்தவரை, பெரும்பாலான நேரங்களில் அறிக்கைகள் எழுதும் பொறுப்பை அவரே எடுத்துக் கொள்வார். ஆனால், அந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் ஒப்புதலையும் பெறும் ஜனநாயக முறையைப் பின்பற்றுவார்.

அவரது அறிக்கைகளில் அவரது கூர்மையான பகுத்தாய்வு அறிவு, ஆழமான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். அவை சமநிலை குன்றாத முடிவுகளைப் பிரதிபலிக்கும். எனவேதான் அரசுக்கு விசுவாசமான ஏவலர்களாலோ, வலதுசாரிப் பிற்போக்குவாதிகளாலோகூட அவற்றை நிராகரித்துவிட முடியாது. மனித உரிமை இயக்கத்தில் பணியாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடத் தொகுப்பாக அந்த அறிக்கைகள் அமைகின்றன என்று நான் கருதுகிறேன்.

பாலகோபால் எந்தவொரு சமயத்திலும் தனது கொள்கையில் உறுதியாக நிற்கும் நெஞ்சுரத்தைக் கொண்டிருந்தார். தனது சொந்தத் தோழர்களின் எதிர்ப்புக்கிடையிலும் தனது கருத்தை விட்டுக் கொடுத்ததில்லை. ஏ.பி.சி.எல்.சி.யிலிருந்து அவர் விலகியதும், மாவோயிஸ்டுகள் கடைப்பிடிக்கும் வன்முறை பற்றிய அவரது கருத்து வேறுபாடுகளும் நாட்டிலுள்ள பல மனித உரிமைச் செயல்வீரர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தின. ஆனால், அவற்றால் அவரது ஆளுமைக்கு வடுவை ஏற்படுத்தவோ, அவர்களது மனதில் அவர் பெற்றிருந்த மரியாதையைக் குறைக்கவோ முடியவில்லை. மனித உரிமை இயக்க வரலாற்றில் மனித இனம் என்றும் மதிக்கத்தக்க ஓரிடத்தை அவர் பெற்றிருக்கிறார்.

பல கூட்டங்களின் மூலமாகவும், சில உண்மை அறியும் பணிகளில் பங்கேற்றதன் மூலமாகவும் அவருடன் பணியாற்றும் பேறு பெற்றிருக்கிறேன். கடைசியாக நான் பங்கேற்ற உண்மை அறியும் பணி, ஒரிசாவிலும் கர்நாடகாவிலும் கிறித்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பானதாகும். எச்.ஆர்.எப். அமைப்பின் பத்தாம் ஆண்டு நிறைவினையொட்டி வாரங்கல்லில் நடந்த கருத்தரங்கிற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். பாலகோபாலுடன் நேரம் கழிப்பதற்கு எனக்குக் கிட்டிய கடைசி வாய்ப்பு அதுதான். அந்த நினைவுகளை நான் எப்போதும் போற்றுவேன்.

இந்த மகத்தான நண்பரும் தோழருமான கே. பாலகோபாலுக்கு எனது மிகவும் மரியாதை மிக்க அகவணக்கத்தைச் செலுத்துகிறேன். புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் எச்.ஆர்.எப்., அவரது பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன்.

தமிழாக்கம் : எஸ்.வி. ராஜதுரை

Pin It