ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டு, அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அந்நிகழ்வு குறித்த தகவல்களைச் சேகரித்திட புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறான புலன் விசாரணையில் கிடைக்கும் சாட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், அக்குற்ற நிகழ்வை குறிப்பிட்ட நபர்கள்தான் நிகழ்த்தினர் என்பதை காவல் துறை நீதிமன்றத்தின் முன்வைக்கிறது. மாறாக, காவல் துறையின் புலன் விசாரணையில் குற்ற நிகழ்வு குறித்த புகார் அடிப்படையற்றதாகவோ, சட்டப்படியான மேல்நடவடிக்கையைத் தொடர இயலாததாகவோ தெரிய வரும்போது, முதல் தகவல் அறிக்கையைக் கொண்டு நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்குக் கோப்பை முடித்து வைப்பதற்காக – காவல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் அறிக்கை, பொருண்மைப் பிழை அறிக்கை (Report of mistake of fact) என்று அழைக்கப்படுகிறது.

Dalit face குற்ற நிகழ்வு குறித்து காவல் துறைக்கு புகார் அளித்த முதல் தகவலாளருக்கு, அவருடைய புகார் மீது மேல் நடவடிக்கை தொடர இயலாது என்பதை காவல் துறை ஓர் அறிவிப்பாக அளிக்க வேண்டும் என்று தமிழ் நாடு காவல் நிலையாணை எண். 660 கூறுகிறது. ஆனால், இது குறித்து அறிவிப்பு அளிக்கும் காவல் துறை, என்னவென்றே எளிதாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியாத எழுத்துக்களில் அச்சிட்ட பொதுவான வாசகங்கள் அடங்கிய நன்கொடை ரசீது போன்ற ஒரு துண்டுச் சீட்டில் வழங்குவது வழக்கம். இந்தத் துண்டுச் சீட்டைத் தவிர வழக்கின் புலன் விசாரணை குறித்த எந்தத் தகவலும் அளிப்பதில்லை; எவ்வித ஆவணங்களும் வழங்குவதில்லை. ஆனால், இந்த அறிவிப்பைப் பெற்றுக் கொண்டமைக்கான அத்தாட்சியாக தகவலாளரின் கையொப்பத்தையோ, இடது கைப் பெருவிரல் ரேகையையோ மட்டும் பெற காவல் துறையினர் தவறுவதில்லை!

தகவலாளரின் புகார் சட்டப்படி பிழையானதென்றோ, பொருண்மைப்படி பிழையானது என்றோ காவல் துறையினர் முடிவு செய்திருப்பதாக அந்த அறிவிப்பில் அச்சிட்ட வாசகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். தகவலாளர் இந்த முடிவு குறித்து எதிர்ப்பு ஏதும் தெரிவிக்க விரும்பினால், அவ்வழக்கைப் புலன் விசாரணை செய்த, காவல் நிலைய வழக்குகளை விசாரணை செய்யும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், அந்த அறிவிப்பு கிடைத்த 7 நாட்களுக்குள் ஆட்சேபனை தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவ்வாறாக, காவல் துறையால் அளிக்கப்படும் அறிவிப்பைப் பெற்றுக் கொள்ளும் தகவலாளர்கள், தங்கள் புகார் உண்மைதான் என்பதை நிரூபிக்க வழியில்லை என்று எண்ணி, இந்த அறிவிப்பையே இறுதி ஆணையாக ஏற்று, மேல்நடவடிக்கை எதுவும் தொடர வாய்ப்பில்லை என வழக்கையே கைவிட்டு விடுகின்றனர். இதனால் எந்த ஒரு வழக்கையும் பொய்ப்புகார் என்று கூறி மேல் நடவடிக்கையைக் கைவிடுதல் என்பது, காவல் துறைக்கு மிக எளிதான வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

இதுபோன்ற ஒரு வழக்கில்தான் இந்தியத் தலைமை நீதிமன்றம், 1985ஆம் ஆண்டு குற்ற நிகழ்வால் பாதிக்கப்பட்டோர் சார்பாக இப்பிரச்சினையை விரிவாக அணுகி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியது. பகவந்த் சிங் – எதிர் – காவல் ஆணையர் (அஐகீ 1985 குஇ 1285) என அறியப்படும் இவ்வழக்கில்தான் முதன்முறையாக உச்ச நீதிமன்றம் தகவலாளரின் இப்பிரச்சினை குறித்த சட்ட உரிமையின் விளக்கத்தினை வழங்கியது. இவ்வழக்கின் மனுதாரரான பகவந்த் சிங்கின் மகள் குரிந்தர் கவுர், தீக்காயங்களின் காரணமாக இறந்து விடுகிறார். கவுரின் கணவரும், கணவரின் பெற்றோரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி கவுரை தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்தனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டு, மத்தியப் புலனாய்வுத் துறையால் (சி.பி.அய்.) வழக்கு புலன் விசாரணை செய்யப்பட்டது.

வழக்கை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்த கால அளவிற்குள் மத்தியப் புலனாய்வுத் துறை புலன்விசாரணை செய்து முடிக்கவில்லை என்பதால், நீதிமன்ற அவமதிப்பு புரிந்துவிட்டதாக பகவந்த் சிங், சி.பி.அய். மீது வழக்கு தொடர்ந்தார். அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்த பதிலுரையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பகவந்த் சிங் தொடரும் முன்பே “கவுரின் மரணம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய குற்றமாக இல்லை'' என்று சி.பி.அய். முடிவு செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மறுப்புக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, விட்டதாகத் தெரிவித்தது. அப்போதுதான் பகவந்த் சிங்குக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.

இத்தகவல் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன், “பகவந்த் சிங்கின் தரப்பு வாதத்தைக் கேட்டபின்பே குற்றவியல் நடுவர், கவுர் வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்த மறுப்புக் குற்றப்பத்திரிகை மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதுபோன்ற சூழலில் சட்ட நடைமுறையை நெறிமுறைப்படுத்த, தொடர்புடைய குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளை விவரித்து, கீழமை நீதிமன்றங்களுக்கு வழிகாட்டும் விதமாக இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை நீதிபதி பி.என். பகவதி வழங்கியுள்ளார்.

இத்தீர்ப்பின்படி, மறுப்புக் குற்றப் பத்திரிக்கை ஒரு குற்றவியல் வழக்கில் தாக்கல் செய்யப்படும் போது, அவ்வழக்கின் தகவலாளருக்கு நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை அனுப்ப வேண்டும். அந்த அறிவிப்பில் தகவலாளர் தரப்பில் மறுப்புக் குற்றப்பத்திரிகை குறித்த தமது ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்க வேண்டும். அந்த அறிவிப்பை ஏற்று தமது ஆட்சேபனையைத் தாக்கல் செய்ய முன்வரும் தகவலாளருக்கு வாய்ப்பு வழங்கி, அவர் தரப்பு வாதங்களைக் கேட்டு குற்றவியல் நடுவர் – மறுப்புக் குற்றப்பத்திரிகையை ஏற்பதா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அந்நிலையில், குற்றவியல் நடுவர், 1) தகவலாளர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்தால், அவர் காவல் துறையினர் தாக்கல் செய்த மறுப்புக் குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்டு மேல் நடவடிக்கையை கைவிடலாம் அல்லது 2) மறுப்புக் குற்றப்பத்திரிகையை ஏற்கும் அளவிற்குப் போதிய காரணங்கள் இல்லையென்று கண்டு, குற்றம் நிகழ்ந்திருப்பதாகக் கருதி குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்கலாம் அல்லது 3) குற்ற நிகழ்வு குறித்து போதுமான அளவிற்குப் புலனாய்வு செய்யப்படவில்லை என்று கருதினால், வழக்கை கூடுதல் புலனாய்வு செய்யச் சொல்லி காவல் துறைக்கு உத்தரவிடலாம்.

இந்த சட்ட நடைமுறைகளை மேற்கொள்ளுமுன் தகவலாளருக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்புரைத்தது. இத்தீர்ப்பின் முக்கியத்துவம் கருதி தீர்ப்பின் நகல்களை, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்பவும், அவை தத்தம் மாநிலத்திலுள்ள குற்றவியல் நடுவர்களுக்கு அனுப்பி, இத்தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட நடைமுறையைப் பின்பற்றச் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இத்தீர்ப்பு 1985ஆம் ஆண்டே வழங்கப்பட்டிருந்த போதிலும், இது குறித்த விழிப்புணர்வு நீதித்துறைக்கோ, வழக்குரைஞர்களுக்கோ கூட, கடந்த சில ஆண்டுகள் வரை குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. காவல் துறையினர் தங்கள் வழக்கப்படி துண்டுச் சீட்டில் அறிவிப்பு தருவதைத் தொடர்ந்தனர். இந்த அறிவிப்பையே ஏற்றுக் கொண்டு குற்றவியல் நடுவர்களும் காவல் துறை தாக்கல் செய்யும் மறுப்புக் குற்றப்பத்திரிகையை தகவலாளர் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க வாய்ப்பேதும் வழங்காமல், காவல் துறை தாக்கல் செய்யும் மறுப்புக் குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்டு, புகாரைத் தள்ளுபடி செய்து, முதல் தகவல் அறிக்கை கோப்புகளை முடித்து வைப்பதை வழக்கமான முறையில் செய்து வந்தனர்.

பின்னர், 1997ஆம் ஆண்டில் இப்பிரச்சனை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வேறு ஒரு வழக்கில் (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் – எதிர் – பாப்பையா – (1997) 7 எஸ்.சி.சி. 614) மீண்டும் கொண்டு வரப்பட்டது. மறுப்புக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறித்தும், அதன் மீது தகவலாளர் தனது ஆட்சேபனையைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கி அனுப்பும் அறிவிப்பை, தகவலாளருக்குத் தெரிவிக்கும் பொறுப்பை காவல் துறையினரிடம் ஒப்படைத்து விடாமல், குற்றவியல் நடுவர் நீதிமன்றமே அதைச் செய்து முடித்திட வேண்டும் என்று இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தது. இத்தீர்ப்பிற்குப் பின்னரே நீதித்துறைக்கும், வழக்குரைஞர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வு ஓரளவிற்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு தகவலாளர் தனது புகார் மீது மேல் நடவடிக்கையைத் தொடர முடியாது என்று காவல் துறை கைகழுவி விடும்போது, தன் வழக்கை ஏற்றுக் கொள்ள வேண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனது ஆட்சேபனையைத் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில், முதல் தகவல் அறிக்கைøயாகப் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறை எந்த வகையில் புலன்விசாரணை மேற்கொண்டது, என்னென்ன தடயங்கள் கிடைத்துள்ளன என்பது போன்ற தகவல்கள் அடங்கிய ஆவணங்களை, காவல் துறையினர் மேற்சொன்ன மறுப்புக் குற்றப்பத்திரிகையுடன் தாக்கல் செய்திருப்பார்கள். எனவே, தமது ஆட்சேபணையைத் தகவலாளர் நீதிமன்றத்தில் எழுத்து மூலமாகத் தெரிவிக்கும் முன்னர், மேற்படி ஆவணங்களின் நகலைக் கேட்டுப்பெற வேண்டும்.

ஆட்சேபனை தெரிவிக்கக் கோரும் அறிவிப்பு குறித்து தற்போது தெளிவான தீர்ப்புகள் உள்ளன. அத்தகைய அறிவிப்புடன் ஆவணங்களும் தகவலாளருக்குத் தரப்பட வேண்டும் என்பது, பொதுவான பார்வையில் தர்க்க ரீதியாகச் சரி என்ற போதும், இது குறித்து தெளிவான சட்டவிதியோ, தீர்ப்போ ஏதும் இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 173(2)(டிடி), “புலன் விசாரணை அதிகாரி, புலன் விசாரணையை முடித்தபின், தான் மேற்கொண்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மாநில அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி குற்ற நிகழ்வு குறித்து முதலில் தகவல் அளித்த நபருக்குத் தெரிவிக்க வேண்டும்'' என்று கூறுகிறது. இச்சட்டப் பிரிவில் இடம் பெறும் "விபரத்தை' என்ற சொல், தகவலை மட்டுமின்றி ஆவணங்களையும் உள்ளடக்கியதாகப் பொருள் கொள்ளுதலே நீதிக்கு இசைவானது. இருப்பினும், இது இன்று வரை தெளிவாக்கப்படவில்லை. 

அநீதி இழைக்கப்பட்ட வழக்கு

Dalit face விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி நரசிங்கராயப் பேட்டை காலனியைச் சேர்ந்த ஒரு தலித் குடும்பத்தின் மூத்த மகள் சரண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 15 வயது சிறுமி. 2003ஆம் ஆண்டில் ஒரு நாள் இரவு 8 மணியளவில் தன் வீட்டின் பக்கத்திலுள்ள கழனிக்கு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், அதே காலனியைச் சேர்ந்த ஒரு நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இது குறித்து நடத்தப்பட்ட பஞ்சாயத்தில், பாலியல் வன்கொடுமை செய்த நபர் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இச்சூழலில் வழக்குரைஞர் லூசியை அணுகிய பாதிக்கப்பட்ட பெண், அவரின் துணையுடன் காவல் நிலையம் சென்று அளிக்கும் புகார், முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்படுகிறது.

ஆனால், காவல் துறை வழக்கம் போலவே கைது, புலன்விசாரணை என எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெற்றோரும் உறவினரும் இழிவாகப் பேசி, தங்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று சவால் விட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், குற்ற நிகழ்வு நடைபெற்று சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவருடைய புகாரின் பேரில் புலன் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், புகாரில் உண்மை இல்லை எனக் கருதி வழக்கை முடிக்க மறுப்புக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாகவும், அதுபற்றி ஆட்சேபணை ஏதுமிருப்பின் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நாளில் முன்னிலையாகி, ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் கிடைக்கப் பெற்றது.

அறிவிப்பில் குறிப்பிட்டிருந்த நாளில் செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் முன்னிலையான பாதிக்கப்பட்ட பெண், வழக்கை காவல் துறை முடித்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கை மறுபுலனாய்வு செய்யக் கோரி ஒரு மனுவும், வழக்கில் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களை வழங்கக்கோரி ஒரு மனுவும் தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுக்கள் குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல், குற்றவியல் நடுவர், பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முன்னிலையானதாகவும், மறுப்புக் குற்றப்பத்திரிகைக்கு ஆட்சேபணை தெரிவித்ததாகவும், காவல் துறையின் புலன்விசாரணையை ஏற்கவில்லையெனில் தனிநபர் வழக்கு தொடர்ந்து கொள்ள "அறிவுறுத்தப்பட்டதாக'வும் கூறி, மறுப்புக் குற்றப்பத்திரிகையை ஏற்று உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வழக்குரைஞர் ஜோஸ் மூலம் இக்கட்டுரையாளரை அணுகினார். அப்படி தாக்கல் செய்யப்பட்ட மனு 17.2.2006 அன்று நீதிபதி ஜெயபால் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி பிழையானது என்பதைக் கண்டறிந்து அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் கோரிய அனைத்து ஆவணங்களின் நகல்களையும் வழங்கிடுமாறும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் பெறப்பட்ட ஆவணங்களின் நகல்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்தன. பாதிக்கப்பட்ட பெண், அவரின் பெற்றோர், உறவினர், சம்பவத்தைக் கண்ணுற்ற நபர்கள், பஞ்சாயத்து செய்த நபர்கள், மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், புகாரைப் பதிவு செய்த காவல் சார்பு ஆய்வாளர் என 12 நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றுடன் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கை போன்ற ஆவணங்களும் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன. இவை அனைத்தும் பாலியல் வன்கொடுமை நடைபெற்றதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்த போதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பொய்யென்று கூறி, மறுப்புக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டது தெரிய வந்தது.

வழக்குக் கோப்பைப் படித்து பரிசீலனை செய்த பின்பே குற்றவியல் நடுவர் தன்னுடைய உத்தரவை வழங்கியிருக்க வேண்டும் என்றும், ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்றும், வழக்கை மேற்கொண்டு தொடர வேண்டும் என்றும் விரிவான ஆட்சேபணை மனு பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு ஆவணங்களையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபணை மனுவையும் பரிசீலித்த செஞ்சி குற்றவியல் நடுவர், சனவரி 2007இல், காவல் துறையினர் தாக்கல் செய்த மறுப்புக் குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்து உத்தரவிட்டார். சாட்சிகளை விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது ஒரு புலன்விசாரணை அதிகாரி; மறுப்புக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது வேறு ஒரு காவல் அதிகாரி என்ற அடிப்படையிலும், மறுப்புக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வித காரணத்தையும் காவல் அதிகாரி தெரிவிக்காததை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்ட குற்றவியல் நடுவர், இது ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு என்பதால் கூடுதல் பொறுப்புமிக்க உயர் காவல் அதிகாரியான செஞ்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் கூடுதல் புலன் விசாரணை செய்து, புதியதொரு இறுதி அறிக்கையை (குற்றப் பத்தி ரிகை) ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஆட்சேபணை மனுவைத் தாக்கல் செய்வதற்குமுன், தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று, அதனடிப்படையில் ஆட்சேபணை மனு தாக்கல் செய்த காரணத்தால்தான் இத்தகையதொரு ஆணையைப் பெற முடிந்தது.

Pin It