மீண்டும் மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றிய விவாதங்களை பாஜக தொடங்கியிருக்கின்றது. குஜராத் சட்டமன்றத் தேர்தல் மற்றும் அடுத்து வரப் போகும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களை மனதில் வைத்து வழக்கமான தனது நச்சுப் பரப்புரையை ஆரம்பித்து இருக்கின்றது. இந்த முறை பாஜக அதற்குத் துணையாக உச்ச நீதிமன்ற சங்கிகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.
சங்கிகள் பீதியூட்டும் அளவிற்கு இந்தியாவில் கட்டாய மதமாற்றம் நடைபெறுகின்றதா என்றால் அது பொய் என்று நம்மால் உறுதியாகச் சொல்லிவிட முடியும். காரணம் அப்படியான பிரச்சினைகள் சங்கிகளின் மூளையில் உள்ளதே தவிர, சமூகத்தில் இல்லை. இல்லாத ஒன்றை இந்துப் பெரும்பான்மை சமூகத்திடம் சொல்லி அவர்களை சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அணிதிரட்டுவதுதான் இந்த நச்சுப் பரப்புரையின் முக்கிய நோக்கமாகும்.
பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளைக் கொடுத்து ஆசைகாட்டி நாடு முழுவதும் கட்டாய மதமாற்றம் நடைபெற்று வருவதாகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆர் எஸ் எஸ் பூச்சாண்டி காட்டி வருகின்றது. இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சங்கி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் மதமாற்றம் இப்படியே தொடர்ந்தால் வருங்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகி விடுவார்கள். இந்துக்களின் மீதுள்ள வஞ்சகத்தால் மாற்று மதத்தினர் இத்தகைய கட்டாய மதமாற்றத்தைச் செயல்படுத்தி வருகிறார்கள். எனவே கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க சிறப்பு மசோதாவை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான அமர்வு, கட்டாய மதமாற்றம் என்பது மிகவும் அபாயகரமாக மாறி வருவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் கருத்து தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து கட்டாய மதமாற்றம் குறித்த மாநிலங்களின் கருத்துருக்களை பெற்று, இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கின்றது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் "தனி நபரை குறிப்பிட்ட மதங்களுக்கு மாற்ற அடிப்படை உரிமை இருப்பதாக, மதச் சுதந்திர சட்டத்தில் சரத்துகள் இல்லை. இது ஒரு தீவிரத் தன்மை மிக்க விஷயமாக தற்போது மாறியுள்ளது. நாடு முழுவதும் ஏமாற்றும் மத மாற்றம் தலைவிரித்தாடுகிறது.
இத்தகைய கட்டாய மதமாற்றத்தை அரசு தீவிரத்தன்மையோடு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மோசடி, வற்புறுத்தல், வஞ்சகம் உள்ளிட்ட காரணங்களால் கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது. ஒடிஷா, மத்தியப் பிரதேசம், குஜராத், சட்டிஸ்கர், ஜார்கண்ட், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ஹரியானா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 9 மாநிலங்கள் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை இயற்றியுள்ளன
பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இத்தகைய சட்டங்கள் அவசியமானதாகும். மதச் சுதந்திரத்திற்கான உரிமை, மேலும் முக்கியமாக நாட்டின் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க இத்தகைய மதிப்புமிக்க சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, சட்டமன்றத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்’’ என ஒன்றிய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டாய மதமாற்றம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய் என்பதற்கான சாட்சியத்தை ஒன்றிய பாஜக அரசே தனது அறிக்கையிலேயே குறிப்பிட்டு இருக்கின்றது. குறிப்பாக அறிக்கையில் ”பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இத்தகைய சட்டங்கள் அவசியமானதாகும்” என்று சொல்வதன் மூலம் இந்த சாதிவெறி பிடித்த பாசிஸ்ட்கள் இத்தனை ஆண்டுகளாக பெண்களையும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கியவர்களையும் ஒட்ட சுரண்டி வந்திருக்கின்றார்கள் என்பதை ஒத்துக் கொள்கின்றார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் மதம் மாறுகின்றார்கள். குறிப்பாக தலித்துகள் மதம் மாறுகின்றார்கள். அவர்கள் யாரும் பொருளாதார ரீதியான ஒடுக்குமுறையை இந்து மதத்தில் சந்திப்பதால் மதம் மாறவில்லை. சாதி ரீதியான ஒதுக்குதலும், தீண்டாமையும், வன்முறையையும் கட்டவிழ்த்து விடப்படுவதாலேயே மதம் மாறுகின்றார்கள்.
ஆனால் இந்துக்களின் ஒற்றுமையைப் பற்றி வாய்கிழியப் பேசும் ஆர்.எஸ்.எஸ் தலித்துகளை கலவரம் செய்வதற்கு பயன்படுத்திக் கொண்டதே தவிர, அவர்களை சாதிய இழிவில் இருந்து விடுபடுவதற்காக சிறு துரும்பைக் கூட எடுத்துப் போட்டதில்லை. இந்தியாவிலேயே தனது கட்சியில் எஸ்சி அணி என்ற ஒன்றை வைத்திருக்கும் சாதிவெறி பிடித்த பாசிஸ்ட்டுகளால் சாதி ஒழிப்பை அல்ல தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகக் கூட போராட முடியாது.
தினம் தினம் தலித் மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடக்கும் போதும் பாஜக அதை தட்டிக் கேட்கவில்லை என்பதோடு அப்படியான வன்முறையை நிகழ்த்துபவர்களின் உற்ற நண்பனாகவே காட்டிக் கொண்டது.
சில உதாரணங்களை நாம் பார்த்தோம் என்றால், தலித்துகளுக்கு எதிராக சங்கிகள் என்ன மனநிலையில் இருக்கின்றார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா தாலுக்காவுக்கு உட்பட்ட மோட்டா சமாதியாலா கிராமத்தில் தோலுக்காக பசுவைக் கொன்றதாகக் கூறி பசு பாதுகாப்பு அமைப்பினர் இளைஞர்களை நிர்வாணமாக்கி ஊரார் முன்னிலையில் மிகக் கொடூரமாக தாக்கினார்கள். பின்பு நடந்த சிஜடி விசாரணையில் அந்த பசு பேடியா கிராமத்தில் சிங்கத்தால் கொல்லப்பட்டது எனவும், அப்படி கொல்லப்பட்ட அந்தப் பசுவைதான் சமாதியாலா கிராமத்திற்குத் தலித் இளைஞர்கள் கொண்டு சென்றதாகவும் தெரிய வந்தது.
தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை உத்திரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா துணைத் தலைவர் தயாசிங் என்பவர் ‘விலை மகளை விட மிகவும் மோசமானவர் மாயாவதி’ எனக் கூறினார். ஒரு முன்னாள் முதலமைச்சரையே தலித் என்ற ஒரே காரணத்திற்காக இப்படி சாதிவெறி தலைக்கேறிய பாஜக சங்கிகளால் மட்டுமே பேச முடியும்.
குஜராத்தில் ராமர் கோயிலுக்குள் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதே போல கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டத்தில், உள்ளூர் ஆஞ்சநேயர் கோயிலில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை தவறுதலாக நுழைந்து விட்டது என்பதற்காக 23,000 ரூபாய் அபராதம் செலுத்தும்படி அந்தக் குடும்பத்தினருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி (2017-2019) தலித் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களில் 15.55% அதிகரித்துள்ள அதே காலகட்டத்தில் இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்கள் மீதான 84%-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலித் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் தொடர்பான முக்கால்வாசி வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படாமல் இருக்கிறது.
2017 முதல் 2019 வரையிலான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மொத்தமாக 1,31,430 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் 15.73% பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானவை என்று தேசிய குற்றப் பதிவேடு கூறுகிறது. பாலியல் பலாத்காரம், பெண்களை அடக்கி ஒடுக்கும் போக்கில் பெண்கள் மீதான தாக்குதல்கள், பெண்களின் கண்ணியத்தை அவமதிப்பது, கடத்தல் மற்றும் கட்டாயத் திருமணம் போன்ற பல்வேறு குற்றங்கள் இதில் அடங்கும் என்று தேசிய குற்றப் பதிவேடு தெரிவிக்கிறது.
பெண்களுக்கு எதிராக 2017-ல் 6,321 ஆக இருந்த மொத்த குற்றங்கள், 2018-ல் 6,800 ஆகவும், 2019-ல் 7,485 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெண்களை வன்முறையினூடாக அடக்கி அவமதிக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பாலியல் வன்புணர்வு முயற்சி 15.32 சதவீதம் அதிகரித்துள்ளது. பாலியல் வன்புணர்வு 22.14 சதவீதம் அதிகரித்துள்ளது. கடத்தல் சம்பவங்கள் 47.61 சதவீதம் பதிவாகியுள்ளது.
2019-ம் ஆண்டில் தலித் பெண்கள் மற்றும் மைனர் பெண்கள் மீது நடந்த குற்றத்தை மையமாக வைத்து இந்திய குற்றப்பிரிவு 376-ன் (பாலியல் வன்புணர்வு) கீழ் பதிவு செய்யப்பட்ட 3,486 வழக்குகளில், 88.9% வழக்குகள் இன்னும் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்குகள் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் உள்ளன.
தலித்துகளுக்கு எதிராக 45,935 வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 11,829 பாஜக ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் பதிவாகியுள்ளன. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டில் 41,793 குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 9,451 குற்றங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. 2019-ம் ஆண்டு 923 தலித்துகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 219 கொலைகள் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் நடந்துள்ளன.
இவை எல்லாம் மோடி ஆட்சிக்கு வந்த பின்னால் இந்தியாவில் தலித்துகளுக்கு எதிராக நடந்த ஆயிரக்கணக்கான வன்முறைகள் ஆகும். ஆனால் இதில் எந்த ஒன்றுக்கும் பாஜகவோ அதன் பண்பாட்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சோ எந்த வகையான எதிர்வினையையும் ஆற்றவில்லை என்பதுதான் உண்மை.
அவர்களின் உண்மையான நோக்கம் இந்து மதத்தில் தங்களுக்கு அடிமையாக இருந்தவர்கள் வேறு மதங்களுக்குச் சென்று விட்டால் தங்களுக்கு அடிமை வேலை பார்க்கவும், அடியாள் வேலை பார்க்கவும், கலவரம் செய்யவும் ஆள் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம்தான்.மேலும் மதம் மாறிய தலித்துக்களை இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி பயமுறுத்தி பாசிச இந்து மதத்திலேயே அவர்களைத் தக்க வைக்கவும் பாஜக முயன்று வருகின்றது.
உண்மையிலேயே தலித்துகளின் நலனின் பாஜகக்கு அக்கறை இருந்தால், தீண்டாமைக் கொடுமை காரணமாக மதம் மாறினால், அவர்கள் எந்த மதத்திற்கு மாறுகின்றார்களோ அந்த மதத்தில் கூடுதலான இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களிடம் நற்பெயரை சம்பாதித்துக் கொள்ள முற்படும். ஆனால் பாஜக தொடர்ச்சியாக மதம் மாறிய தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுத்தே வந்துள்ளது.
கடந்த ஆண்டு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளைக் கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தார். மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் “பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களால் இட ஒதுக்கீடு சலுகைகளைக் கோர முடியாது. அவ்வாறு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து (reserved constituencies) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட முடியாது" எனவும் கூறினார். அதே நேரத்தில் இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு பலன்களைக் கோரவும், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்தலைச் சந்திக்க தகுதி பெற்றவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இன்று சங்கி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் மனு போட்டவுடன் ஏற்கெனவே நாக்பூரில் எழுதி கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டை வாசித்த உச்ச நீதிமன்றம் கூட 2015 ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பில், “ஒரு நபர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவுடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதாரக் குறைபாடுகள் நின்று விடுகின்றன, எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதன் காரணமாக அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்று கருதப்படுகிறார்” எனக் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (ஆனால் ஒருபோதும் உச்ச நீதிமன்றம் ஏன் இந்தியாவில் சாதி ஒழிக்கப்படவில்லை என்றோ, ஏன் சேரிகள் ஒழிக்கப்படவில்லை என்றோ, ஏன் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்றோ கேள்வி கேட்டதே இல்லை).
இந்தியாவில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தாலும், அந்த மக்கள் சாதி இந்துக்களின் அடிமைகளாகவே ஆண்டாண்டு காலத்திற்கு வாழ வேண்டும் என்பதுதான் பார்ப்பன பாசிஸ்ட்களின் நோக்கமாக உள்ளது. தலித்துகளில் உள்ள சில பார்ப்பன அடிமைகளை தங்கள் பக்கம் வைத்துக் கொள்வதன் மூலம் தலித்துகளின் ஓட்டுக்களைப் பெறவும் மதமாற்ற பூச்சாண்டி காட்டி சாதி இந்துக்களின் ஓட்டுக்களை வாங்கவும் பாஜக முயற்சிக்கின்றது. பாசிஸ்ட்களின் இந்த அயோக்கியத்தனமான செயலில் தற்போது அதன் பங்காளியாக உச்சநீதி மன்றமும் சேர்ந்து கொண்டுள்ளது.
- செ.கார்கி