ஒரு சங்கிலியில் கோர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு இணைப்புச் சங்கிலித் துண்டும் வலுவாக இருந்தால்தான் சங்கிலி உறுதிமிக்கதாக இருக்கும். சங்கிலித் தொடரில் உள்ள ஏதாவது ஒரு சங்கிலித் தொடர்பு வலுவற்று இருக்குமேயானால், சங்கிலி உறுதியற்றதாக அமைவதுடன் அதன் பயனை முழுமையாகப் பெறவும் முடியாது. அது போலவே, ஒரு வன்கொடுமை நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்டோர் தரப்பு செயல்பாடு தொடக்கம் முதலே ஒவ்வொரு கட்டத்திலும் உறுதியுடன் அமைய வேண்டும். இல்லையெனில், வன்கொடுமை வழக்கு வன்கொடுமையாளருக்கு சாதகமாகவே முடிய வாய்ப்பமைந்துவிடும்.

இந்த சங்கிலி எடுத்துக்காட்டிற்கும்/குற்றவியல் வழக்குகளுக்கும் ஒரு முக்கியத் தொடர்பு உண்டு. எந்த ஒரு குற்றத்தையும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் நிரூபிக்கும்போது, அக்குற்ற நிகழ்விற்கும் அதை நிகழ்த்திய நபருக்குமான தொடர்பு, சங்கிலித் தொடர் போல நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட வேண்டும். அதில் ஏதாவது ஒரு தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் சூழலில், தொடர்பில் இணைப்பு இல்லை என்ற குறைபாட்டை காரணம் காட்டி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு சந்தேகத்தின் பலனை அளித்து நீதிமன்றம் விடுவித்துவிட அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே, பாதிக்கப்பட்டோர் சார்பாக இயங்கும் சமூக செயல்பாட்டாளர்களும், அவர்களுக்கு உறுதுணையாக உள்ள சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர்களும்-வன்கொடுமை வழக்குகளில் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கேற்று, வழக்கு சரியான முறையில் கையாளப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். "எப்போதும் விழிப்புடன் இருப்பதே உரிமைக்கு அளிக்கப்படும் விலையாகும்' என்று கூறப்படுவதை முழுமையாக மனதிலிருத்தி செயல்பட வேண்டும்.

உரிமையியல் வழக்குகளில் ஆவண சாட்சியம் (Documentary Evidencce) கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததைப் போலவே, குற்றவியல் வழக்குகளில் வாய்மொழிச் சாட்சியத்தை (Oral Evidence) கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக சட்டம் கருதுகிறது. இப்படிச் சொல்வதால், உரிமையியல் வழக்குகளில் ஆவணச் சாட்சியத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றும் கருதிவிட முடியாது. இரு வகை வழக்குகளிலும் இருவித சாட்சியங்களும் ஒத்திசைவுடன் அமைதல் வேண்டும். இந்த ஒத்திசைவுதான் ஒரு வழக்கின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்வதாக சட்டமும் நீதிமன்றமும் கருதுகின்றன.

எனினும், குற்றவியல் வழக்குகளில் சாட்சிகள் விசாரணை என்பது மிக மிக முக்கிய கட்டமாக-நீதிமன்றம், வழக்குரைஞர்கள், வழக்குத் தரப்பினர், சாட்சிகள் என அனைத்து தரப்பினராலும் கருதப்படுகிறது. வன்கொடுமை வழக்குகளைப் பொருத்தவரையில், வன்கொடுமை தொடர்பான புகாரை காவல் நிலையத்தில் தெரிவித்தல் என்ற தொடக்க கட்டத்திலிருந்தே பாதிக்கப்பட்ட நபர்களின் நீதிக்கான போராட்டம் தொடங்கி விடுகிறது. புகார் பதிவு, சட்டமுறையிலான புலன் விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல் போன்ற கட்டங்களைக் கடந்து வழக்கு விசாரணை வரை வரும் வழக்குகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவானவையே. இந்நிலையில், சாட்சிகள் விசாரணை என்ற கட்டத்தை ஒரு வழக்கு அடைவதற்கு என்று குறிப்பிட்ட கால அளவு சட்டத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இக்காலகட்டத்திற்குள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களை எப்படியாவது-பணம் அல்லது சலுகைகள் வழங்கியோ, மிரட்டல் விடுத்தோ-வன்கொடுமை வழக்கைத் தொடர விடாமல் செய்வது என்பது வன்கொடுமையாளர்களின் கைவந்த கலை. அவர்களுக்குள் சமூக, அரசியல், அடியாள் மற்றும் பண பலம் ஆகியவை முழுமையாகப் பயன்படுத்தப்படும் கட்டம் இது. பாதிக்கப்பட்டோரின் உரிமைகள் பேரம் பேசப்படும் கட்டமும் இதுதான். எனவேதான், இக்கட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர், வன்கொடுமை நிகழ்வைக் கண்ணுற்றோர் ஆகிய சாட்சிகளைப் பாதுகாத்தல் என்பது, மிக மிக முக்கிய பொறுப்பாக சமூக செயல்பாட்டாளர்களுக்கு அமைகிறது.

பொதுவாகவே, இன்றைய நிலையில் இந்தியாவில் உள்ள சட்டங்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, குற்ற நிகழ்வால் பாதிக்கப்பட்டோரின் (Victims of Crime) அக்கறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்துப் போதுமான சட்ட வடிவுகள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவான ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்பட்ட நபர், அக்குற்ற நிகழ்விற்கு சாட்சி என்ற அளவில் மட்டுமே அணுகப்படுகிறார். குற்றவியல் விசாரணை முறைமையில் அவரது இடம் மிக குறுகலானதாக அமைந்துள்ளது. அவரது உரிமைகள் குறித்து ஒரு முழுமையான புரிதல் சட்டத்திற்கே இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள சில சட்டப்பிரிவுகளை விளக்கி, நீதிமன்றங்கள் வழங்கியுள்ள மிகச் சில தீர்ப்புகளே கலங்கரை விளக்காக அமைந்துள்ளன.

உண்மை என்னவெனில், வன்கொடுமை நிகழ்வைப் பொருத்தவரையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும், அதனடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள விதிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து ஒவ்வொரு கட்டத்øயும் நெறிப்படுத்தியுள்ளன. வன்கொடுமை நிகழ்வை முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்தல், நிகழ்விடத்தைப் பார்வையிட்டு பொருள், பணம், இன்ன பிற தீருதவிகளை வழங்குதல், பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களுக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நல்குதல், புலன் விசாரணையை 30 நாட்களுக்குள் முடித்தல், பாதிக்கப்பட்டோர் விரும்பும் மூத்த வழக்குரைஞரை அவ்வழக்கை நடத்த சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞராக அரசு செலவில் நியமித்தல் எனப் பல்வேறு உரிமைகளை வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் விதிகளும் பாதிக்கப்பட்டோருக்கு அளித்துள்ளன.

ஆனால், இவற்றின் பயனை முழுமையாகப் பெற வேண்டுமெனில் பாதிக் கப்பட்டோருக்கும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கும் இந்த விதிமுறைகளும் அவற்றைப் பெறும் வழிமுறைகளும் தெரிய வேண்டியது அவசியம். இல்லையெனில், இந்த விதிகள் பயனற்றவையாகவே தொடரும் ஆபத்து உள்ளது. இது குறித்த முழுமையான புரிதல் உள்ள ஒரு குழு, சமூக அக்கறையாளர்களால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இவ்விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள்-பெயரளவிலும், ஆட்சியதிகார அமைப்புக்கு முற்றிலும் சாதகமாகவும் செயல்பட்டு வருவது வேதனைக்குரியது.

இந்த மாவட்ட கண்காணிப்புக் குழுவில் இடம்பெறும் அரசு அதிகாரிகளும் மற்ற தனிநபர் உறுப்பினர்களும்கூட உண்மையான அக்கறையுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை. அதிகாரிகள் சொல்லுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு, அவர்கள் காட்டும் இடங்களிலெல்லாம் கையொப்பமிட்டு தங்கள் "சமூகப் பணியை' இந்த உறுப்பினர்கள் ஆற்றி வருகின்றனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பின்பற்றாத காவல் துறை அதிகாரிகளை எந்த ஒரு வழக்கிலாவது இக்குழு குறைந்தபட்சம் கண்டித்த சம்பவம்கூட நாமறிந்த வரையில் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர் தனது சமூகப் பொருளாதார காரணங்களால் வன்கொடுமை புரிந்தவரைச் சார்ந்து இருந்தால், அது வன்கொடுமை வழக்கை கடுமையாகப் பாதிக்கும். எனவே, அவரைப் பொருளாதாரத் தளைகளிலிருந்து மீட்டு வன்கொடுமையை சட்டப்படி எதிர்கொள்ள, வன்கொடுமைத் தடுப்புச் சட்டவிதிகள் விரிவான வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அடிப்படையை சமூக செயல்பாட்டாளர்கள் புரிந்து கொண்டு விதிகளில் குறிப்பிட்டுள்ள தீருதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு முழுமையாகப் பெற்றுத் தருவதில் உதவுவதன் மூலமே-பாதிக்கப்பட்டோரை முழுமையாக வென்றெடுத்து, வன்கொடுமையை சட்டப்படி எதிர்கொள்ள உதவ முடியும்.

இவ்விதிகளில் குறிப்பிட்டுள்ள தீருதவிகளை மாவட்ட நீதிபதியான மாவட்ட ஆட்சியரிடம் அணுகிப் பெறுவதில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ வேண்டும். இதைச் சரியான முறையில் கடைப்பிடிக்காவிடில், வன்கொடுமையாளரின் கை ஓங்கி பாதிக்கப்பட்டோரை நிலைகுலையச் செய்யும் ஆபத்தும் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். சில வன்கொடுமை நிகழ்வுகளில், பாதிக்கப்பட்டோர் வழக்கு விசாரணையில் பங்கேற்காமல் இருக்கச் செய்ய வன்கொடுமையாளர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ மிரட்டல்கள் விடுப்பதுண்டு. இத்தகைய நேர்வு களில், அவ்வாறான மிரட்டல்கள் குறித்த குறிப்பான விவரங்களை அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்கு எழுத்து மூலம் அளித்து பதிவு செய்ய வேண்டும். அதன் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காத சூழலில் அது குறித்து காவல் துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தல் வேண்டும். அப் போதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், நீதிமன்றத்தை அணுகி தக்க ஆணை பெறலாம்.

எடுத்துக்காட்டாக, பாதிக்கப்பட்டோரை வன்கொடுமையாளரோ அவரது ஆட்களோ மிரட்டினால், அது குறித்து குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கோரலாம். ஒரு வேளை, கொலை மிரட்டல் கடுமையானதாகவும் பின் விளைவு களுடன் கூடியதாகவும் இருக்குமானால், பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவருக்கு ஆதரவாக உள்ளோர் ஆகியோருக்கு தக்க காவல் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் ஆணை பெறலாம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த எந்த ஒரு விவாதமும் மேலவளவு வழக்கைப் பதிவு செய்யாமல் நிறைவடைவதில்லை. 30.6.1997 அன்று மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனும் அவருடனிருந்த அய்வரும் சாதிய சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வில், எதிரிகள் தரப்பில் முக்கிய சாட்சிகளை கவர்ந்திழுத்தல் என்பது தொடக்க கட்டத்திலேயே கையாளப்பட்டது.

வழக்கின் புலன் விசாரணை நிலுவை யிலிருந்த கட்டத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய புகார் அளித்த கிருஷ்ணன் (இவரும் சம்பவத்தில் காயமுற்றவர்) எதிரிகள் தரப்பினரால் கவர்ந்திழுக்கப்பட்டார். பின்னர், சனவரி 1999 இல் கிருஷ்ணன் பெயரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக் கல் செய்யப்பட்டது. அதில், முதல் தகவல் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்ட புகார் தான் அளித்தது அல்ல என்றும்; தன்னிடம் 7 வெற்றுத் தாள்களில் காவல் துறையினர் கையொப்பம் பெற்றுக் கொண்டு குற்றத்தில் தொடர்பற்ற, தலித் குழுக்கள் கைகாட்டிய அப்பாவிகள் மீது வழக்குப் போட்டுள்ளதாகவும், எனவே மாநில காவல் துறையினர் இவ்வழக்கை புலன் விசாரணை செய்யக் கூடாது என்றும், மத்திய புலனாய்வுத் துறைக்கு வழக்கின் புலன் விசாரணையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இம்மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் சாட்சி கிருஷ்ணன், எதிரிகள் தரப்பினரால் எந்ததெந்த வகையிலெல்லாம் பலன் பெற்றுக் கொண்டார் (வழக்கின் முதலாம் எதிரியின் நிலத்தை பயிரிட்டுக் கொள்ள கிருஷ்ணனுக்கு எதிரிகள் தரப்பில் அனுமதிக்கப்பட்டது) என்றும், தனக்கு கிடைத்த எல்லா பலன்களுக்கும் பதிலுதவியாக மேற்படி மனுவை கிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் எதிரிகளுக்கு சாதகமாகத் தாக்கல் செய்திருந்தார் என்பதும் மேலவளவில் உள்ள அனைவரும் அறிந்த செய்தியாக இருந்தது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வன்கொடுமை வழக்கை நீர்த்துப் போகச் செய்யவும் வீணடிக்கவும்-எதிரிகள் தரப்பில் எடுக்கப்பட்டிருந்த இந்த முயற்சியை முறியடிக்க, இச்சம்பவத்தில் எதிரிகளால் காயமுற்ற மற்றொரு சாட்சியான மேலவளவைச் சேர்ந்த காஞ்சிவனம் என்பவர் சார்பில் வழக்குரைஞர் பொ. ரத்தினமும் இக்கட்டுரையாளரும் ஒரு வழக்கிடை மனு தாக்கல் செய்தனர். அதில், கிருஷ்ணன் தனது மனுவில் கூறியிருந்த தகவல்கள் பொய்யானவை என்றும்; எதிரிகள் தரப்பிலிருந்து பணமும், சில ஆதாயங்களும் பெற்றுக் கொண்டு, எதிரிகளைக் காப்பாற்ற கிருஷ்ணன் இம்மனுவைத் தாக்கல் செய்திருப்பதாலும், வழக்கின் புலன் விசாரணை சரியாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், வழக்கின் புலன் விசாரணையைத் தாமதித்து அதன் மூலம் பலனடையவே இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் இம்மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று இடையீட்டு மனுதாரரான காஞ்சிவனத்தின் மனுவில் விரிவாகக் குறிப்பிடப்பட்டது.

இடையீட்டு மனுதாரர்களின் மனுவிற்குப் பிறகு அரசுத் தரப்பும் வேறு வழியின்றி விழித்துக் கொண்டதுபோல், ஏற்கனவே நடைபெற்றிருந்த புலன் விசாரணை சரியானபடி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், மாநில காவல் துறையே மேற்கொண்டு புலன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுதாரரான கிருஷ்ணனின் கூற்று ஏற்கத்தக்கதல்ல என்றும் வாதிட்டது. இவற்றை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், கூடுதலாக, ஒரு வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் (வெற்றுத் தாள்களில் கையொப்பம் பெற்றது, அப்பாவிகளை குற்றவாளிகளாக வழக்கில் சேர்த்தது போன்றவை) உயர் நீதிமன்றத்தால் ஒரு ரிட் மனுவில் விசாரித்து உண்மையை அறிய முடியாது என்று கூறியும், காவல் துறையின் புலன் விசாரணை அதிகாரத்தில் நீதிமன்றத் தலையீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்த தீர்ப்பினை யும் மேற்கோள் காட்டி 15.12.1999 அன்று கிருஷ்ணனின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இவ்வாறு எதிரிகள் தரப்பிற்குச் சென்ற கிருஷ்ணன், சிறிது மனமாற்றத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டோர் தரப்பினரால் வென்றெடுக்கப்பட்டார். பின்னர், பாதிக்கப்பட்டோர் தரப்பினருடன் மிக உறுதியாக நின்றார். அவரது நெருங்கிய உறவினர்கள்-குறிப்பாக மனைவி-பல்வேறு வகைகளில் அவரது சாட்சியத்தை பயனற்றதாக்க முயன்றும், தன் உயிரே போனாலும் தாழ்வில்லை என்ற அளவிற்கு உறுதியுடன் வழக்கில் சாட்சி சொல்லத் தயாராக இருந்தார். அதன் பின்னர், எதிரிகள் தரப்பு தன்னைச் சந்திப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டார். அவரது மனமாற்றமும் உறுதியும் மற்ற சாட்சிகளுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பேரில் சென்னை உயர் நீதிமன்றம் மேலவளவு வழக்கின் விசாரணையை மதுரை நீதிமன்றத்திலிருந்து சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றுதல் செய்தது. வழக்கு விசாரணையின் முதல் நாளாகிய 2.4.2001 அன்று கிருஷ்ணன் அரசுத் தரப்பின் முதல் சாட்சியாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். அவரது முதல் விசாரணை விரிவாக இருந்தது.

சம்பவத்தின் பின்னணி, சம்பவம் நடந்த விதம், குற்றவாளிகளின் விபரம், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், தான் புகார் அளித்த விபரம் போன்ற வழக்கின் மிக முக்கிய விவரங்களைத் தடுமாற்றமின்றித் தெளிவாக தனது சாட்சியத்தில் அவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார். அவரைத் தொடர்ந்து, சம்பவத்தைக் கண்ணுற்ற மற்ற சாட்சிகளும் சாட்சியம் அளித்தனர். எதிரிகள் தரப்பில் கிருஷ்ணனை குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் கோரப்பட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

கிருஷ்ணனின் சாட்சியம் வழக்கிற்கு வலுவாக அமைந்திருந்ததால், கலக்கமுற்ற எதிரிகள் தரப்பு மீண்டும் அவரைத் தம்வசம் கவர்ந்தது. பின்னர், 26.6.2001 அன்று அவரை எதிரிகள் தரப்பு குறுக்கு விசாரணை செய்தது. தனது முதல் விசாரணையில் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவாகவும் அழுத்தமாகவும் புலன் விசாரணையில் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் ஒத்திசைவுடனும் சாட்சியளித்த கிருஷ்ணன், எதிரிகள் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது எதிரிகள் தரப்புக்குச் சாதகமாகவும் அரசுத் தரப்பு வழக்கை பாதிக்கும் வகையிலும் சாட்சியமளித்ததால், அரசுத் தரப்பால் பிறழ் சாட்சியாக (Hostile Witness) நீதிமன்றம் கருதுமாறு கோரப்பட்டார். எனினும், அவரது முதல் விசாரணையில் அவர் வழங்கிய சாட்சியம் வழக்கின் அடித்தளத்தில் அமைந்திருந்ததால், விசாரணை நீதிமன்றம் அவரது சாட்சியத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட முடியாமல் போனது.

விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதும், கிருஷ்ணனின் சாட்சியத்தை விசாரணை நீதிமன்றம் முழுவதுமாகப் புறந்தள்ளியிருக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. 19.4.2006 அன்று இம்மேல் முறையீடுகளின் மீது தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், குற்றவாளிகள் தரப்பில் வைக்கப்பட்ட இந்த வாதுரையை ஏற்க மறுத்தது. கிருஷ்ணனின் முதல் விசாரணைக்கும் குறுக்கு விசாரணைக்குமான கால இடைவெளி சுமார் இரண்டரை மாதங்கள் இருந்திருக்கின்றன. எனவே, இடைப்பட்ட நேரத்தில் அவர் எதிரிகள் தரப்பால் வெல்லப்பட்டுள்ளார் என்று கருத வாய்ப்புள்ளது. எனவே, அவரது சாட்சியத்தை முழுமையாகப் புறந்தள்ளிவிட முடியாது என்பதை உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் சுட்டிக் காட்டி, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

Pin It