தாழ்த்தப்பட்ட வகுப்பையோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பையோ சேர்ந்த நீதிபதி கூட இன்று உயர்நீதிமன்றத்தில் இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதி மேல்சாதியைச் சேர்ந்தவராக ஆகிவிட்டதால், மற்ற நீதிபதிகள் அவர் தயவுக்காக அவர் செய்யக்கூடியதற்கு மேலாகவே செய்து பயனடையப் பார்க்கிறார்கள்.

- தந்தை பெரியார் (விடுதலை,16--.03.-1968)

“சாப்பிடக்கூடாத அல்லது அருவெறுப்பான ஒன்றை உண்ண வற்புறுத்துவது குற்றமாகும்”. உலகம் நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டுவிட்டதாகக் கருதும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் கூட குற்றங்கள் நிகழுமா என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆம்! பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சொல்லும் வன்கொடுமைகளில் முதலாவதாகப் பட்டியலிடப்பட்டு இருப்பதுதான் இது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் 1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது இச்சட்டம். உச்சநீதிமன்றம் அண்மையில் இச்சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக நடைபெற்ற நாடு தழுவிய போராட்டத்தில் தலித்துகள் ஒன்பது பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர்.

பட்டியல் வகுப்பினருக்கு எதிரான குற்றங்கள் இன்றைய பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. 2015-ல், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 38, 670. 2016-ல் இது 40, 801 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் தண்டிக்கப்பட்டவர்களோ வெறும் 15.4 விழுக்காடு மட்டுமே. (தேசிய குற்ற ஆவணக் காப்பகம், 2017 ஆண்டறிக்கை)

NCRB data

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுபாஷ் காசிநாத் என்பவர் தன் மீது அரசியல் காரணங்களுக்காக வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தை நாடியதில், “வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் மீது தொடுக்கப்படும் புகார் மீது உடனடி நடவடிக்கை கூடாது. டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்தி, அதன் பின்னர் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். மேல் அதிகாரி உத்தரவுடன் கைது செய்யலாம்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து போராட்டங்களால் ஏற்பட்ட கலவரங்களில் தான் ஒன்பது பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்டனர். இத்தீர்ப்பின் மீது நடுவண் அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் முக்கியப் பிரிவைப் பலவீனப்படுத்தியதன் மூலம், ஒடுக்கப்பட்டோரின் சமூக நீதிக்கான பயணத்தில் மேலும் ஒரு தடைக்கல்லை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது வேதனைக்குரியது.

Pin It