கடவுளைக் காப்பாற்ற, கடவுள் ஒருவரோ, பலரோ, உருவமாகவோ, அருவமாகவோ, மற்றெப்படியாகவோ கடவுள் இருக்கிறார் என்பதாக மக்களுக்கு மக்கள் எடுத்துச் சொல்ல வேண்டியதும், பிரச்சாரம் செய்ய வேண்டியதும் அவசியம்தானா? கடவுள் எண்ணம் மக்களுக்கு மறைந்து போய்விட்டது. அதை ஞாபகப்படுத்த பிரச்சாரக்காரர்களைச் சம்பளத்திற்கு வைத்து – பாதிரிகளை, குருமார்களை ஏற்படுத்தி, கடவுள் தத்துவத்தைப் போதிக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியந்தானா? மற்றும், நாத்திகர்கள் பலர் தோன்றி, கடவுள் இல்லை என்று நாத்திகப் பிரச்சாரம் செய்து வருவதால் கடவுள் கரைந்து வருகிறார். ஆதலால் கடவுளைக் காப்பாற்ற வேண்டியது மிக மிக அவசியம் என்று பலர் கருதி, ஆத்திகப் பிரச்சாரம் செய்து கடவுளைக் காப்பாற்ற வேண்டியது அவசியந்தானா?
மற்றும், கடவுளுக்குக் கோயில் வேண்டுமா? கடவுளுக்குப் பொண்டாட்டி வேண்டுமா? கடவுளுக்கு காம விகாரம் உண்டா? கடவுளுக்கு குழந்தைகள் வேண்டுமா? கடவுளுக்கு தாசி, போக மாதர்கள் வேண்டுமா? கடவுளுக்கு படைப்பு, சாப்பாடு, நகை, துணி, மணி, கல்யாணம், உற்சவம், ஊர்வலம் வேண்டுமா? இவை ஒருபுறம் இருக்க, கடவுள் சக்திக்கு – செய்கைக்கு ஏதாவது அளவு உண்டா? அல்லது அவர் எல்லாம் வல்லவரும் எல்லாவற்றிற்கும் பொறுப்பானவருமா? அவருடைய சக்திக்கும் செயலுக்கும் எல்லை உண்டா? இல்லையா? கடவுள் சக்தியை உணர்ந்தவன் கடவுளைக் காப்பாற்றக் கவலை கொள்ளுவானா? உண்மையிலேயே, "சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்று மனப்பூர்வமாய் நம்பி இருக்கும் ஒருவன் கடவுளைக் காப்பாற்ற முற்படுவானா?
இந்தப்படி கடவுளைப் பற்றிக் கவலைப்படுகிறவர், கடவுள் பிரச்சாரம் செய்கிறவர்களில் யாராவது தங்களது எண்ணத்தில், நடத்தையில் கடவுள் சித்தப்படி நடப்பவர்களாகவோ, கடவுளுக்குப் பயந்து நடப்பவர்களாகவோ அல்லது கடவுள் தன்மையில் மதிப்பும் நம்பிக்கையும் பயமும் கொண்டவர்களாகவோ எங்காவது காணப்படுகிறார்களா? கடவுள் நம்பிக்கை உடையவன் எவனாக இருந்தாலும் அவன் கடவுளைத் தொழ வேண்டுமா? பூசிக்க வேண்டுமா? தொழுதாலும், பூசித்தாலும் அதற்கு ஒரு நேரம், ஓர் இடம், ஓர் உருவம், ஒரு வாக்கியம், பாட்டு வேண்டுமா? மற்றும் அதற்குப் பண்டம், படைப்பு வேண்டுமா? உண்மையாகக் கடவுள் இருப்பதானாலும், இருப்பதாக நம்புவதானாலும் பல மதக்காரர்களும் இன்று கடவுள் சம்பந்தமாய் நடந்து கொள்ளும் நடத்தைகள் அவசியமா? – என்பனவாகியவை ஒருபுறம் இருக்க, தங்களைப் பெருத்த அறிவாளிகள் என்றும், எல்லாம் அறிந்த மேதாவிகள் என்றும் கருதிக் கொண்டிருக்கும் சிலர் கூறுகிறபடி, அதாவது – "கடவுள் இருக்கிறதோ, இல்லையோ அது வேறுவிஷயம்; கடவுள் என்பதாக ஒரு சர்வ சக்தி உள்ளவர் ஒருவர் இருக்கிறார் என்று மக்கள் நம்பும்படி செய்தால்தான் மக்கள் யோக்கியமாய், பிறருக்குத் தீங்கிழைக்காமல் நடந்து கொள்ளுவார்கள்; ஆதலால், கடவுள் பயம் மக்களுக்கு இருக்க வேண்டும்; அந்தப் பயத்தைத் தெளிய வைக்கக் கூடாது' என்று சொல்லுகிறார்களே – அதைப் பற்றிச் சிறிது சிந்தித்தால்...
அவர்கள் கருதுவது போல், கடவுள் உணர்ச்சியையும், கடவுள் தன்மைகளையும்; நியாயத் தீர்ப்புகளையும்; பயப்படத்தக்கக் கொடூர ரூபம் உள்ள நரக வேதனைகள், செக்கில் போட்டு ஆட்டுதல் முதலிய பலமான தண்டனைகளையும்; பின் ஜென்மத்தில் பல கஷ்டமான இழிவுகளையும் துன்பங்களையும் தரத்தக்க தலைவிதிகளையும் மற்றும் பலவித மோட்ச சுகங்களையும், உயர் பிறவிகளையும், சுகபோகங்களையும் தரத்தக்க முன் ஜென்ம புண்ணிய கருமங்களையும்; அவை களுக்கு ஏற்ற கடவுள் வாக்கு, வேதம், சாஸ்திரம், புராணம் முதலிய கற்பனைகளையும் எவ்வளவோ கெட்டிக்காரத்தனமாய் கற்பனை செய்து, மக்களுக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் புகுத்தி வந்தும்கூட, இன்று வரையில் மக்களில் பெரும்பாலோர் – ஏறக்குறைய எல்லா மக்களும் யோக்கியமாய், மனிதனை மனிதன் ஆட்கொல்லாமல், சராசரி மனிதனுக்கு மேம்பட்ட பொருளை அனுபவியாமல் இருக்க முடியவில்லையே – அது ஏன் என்றும், கடவுள் உணர்ச்சியை இவ்விதமாக எல்லாம் மக்களுக்குள் ஊட்டியதால் ஏதாவது பயன் ஏற்பட்டு இருக்கிறதா என்றும் பார்த்தால், "மனிதன் ஒழுக்கத்திற்கு கடவுள் உணர்ச்சி வேண்டும்' என்கின்ற வாதமும் அடிபட்டுப் போகின்றதே!
ஏன் எனில், உலகில் அறிவில்லாத பாமர ஏழை மக்கள் மாத்திரந்தான் ஒழுக்கமற்று, நாணயமற்று, உண்மையற்று நடந்து கொள்கிறார்கள் என்பது அல்லாமல், கற்ற மக்கள், செல்வவான்கள், பெரும் பதவியில் உள்ளவர்கள், மிகமிகப் பக்திமான்கள், குருமார்கள் உட்பட எல்லோருமே பெரிதும் விதிவிலக்கு இல்லாமல், கீழ் மக்கள் தன்மையாய் நடந்து கொள்கிறதைப் பார்க்கிறோமே! ஆகவே, கடவுள் உணர்ச்சிக்கும், ஒழுக்கத்திற்கும், உயர் குணத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்று தெளிவாகிடவில்லையா?.
- பெரியார்
‘குடி அரசு’ கட்டுரை-7.5.1949