ஆடி மாதம் சிறப்பான மாதமா? அல்லது நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்று தள்ளி வைக்கப்பட்ட மாதமா? இந்தக் கேள்வியில் இருக்கும் முரண்பாடுதான் இன்றைய நடைமுறையாகவும் இருந்து வருகிறது. ஒரு பக்கம் நல்ல காரியங்கள் செய்யக்கூடாதெனத் தடை செய்யும் போக்கு, மறுபுறம் பொருளாதார ரீதியான விற்பனைப் பெருக்கம், தள்ளுபடி விற்பனை. இவ்வாறான முரண்பாடுகளுக் கிடையில் ஒரு மாதம் படும்பாடு... அதிசயமானதாய் இருக்கின்றது. அப்படியென்ன காரணம் கிடைத்தது மக்களுக்கு! ஆடி மாதத்தில் நல்ல காரியங்கள் செய்யக் கூடாதென்பதற்கு? மேலும், யார், எதற்கு, எப்போது முதல் இந்த ஆடிமாதத்தை நற்காரியங்கள் செய்யக்கூடாத மாதம் எனப் புறக்கணித்தார்கள்?

பொதுவாக ஆனி மாதத்திற்கு என்ன சிறப்பென்றால், அடுத்து ஆடி மாதம் துவங்கப் போகின்றது என்பது தான். ஆடி மாதம் துவங்கப் போகின்றது என்பதால் ஏறத்தாழ ஆனிக்குள் எவ்வளவு திருமணங்கள் முடிக்க முடியுமோ அவ்வளவு செய்து விடுகிறார்கள். ஆடி மாதத்தில் திருமணம் போன்ற எந்த நல்ல காரியங்களும் நடத்துவது என்பது பழக்கத்தில் கிடையாது. ஆடி மாதம், மாதங்களில் கெட்ட மாதம் என்ற திடீர்ப் பழக்கம் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. ஆடி மாதத்தில், திருமணங்கள் பற்றிப் பேசுவதுகூடக் கிடையாது. பேசினாலே அது தவறான காரியத்திற்கு ஆரம்பமாகி விடும் என்கிறார்கள். நல்ல காரியத்தை இம்மாதத்தில் தொடங்கவே கூடாது. இது இன்றைய தமிழர் கலாச்சாரங்களில் ஒன்றாகவே வந்து விட்டது. சொந்த வீட்டிற்கோ அல்லது வாடகை வீட்டிற்கோ இந்த மாதத்தில் குடிபோகக் கூடாது!

tamilnadu womenநல்லவைகளைச் சிந்திக்கும் எல்லா நாட்களும், உழைக்கும் எல்லா நாட்களும் நல்ல நாட்களே! உழைக்காமல் பணம் சேர்க்க நினைப்பவர்களுக்கு மட்டும்தான் நல்ல நேரம், நல்ல நாள், நல்ல மாதம் எல்லாமே! எனக்கு எல்லா மாதமும் உழைக்கும் மாதம்தான். எனவே தான் நான் இதையெல்லாம் நம்புவது கிடையாது.

“மேலும் ஆடிமாதம் கெட்ட மாதம் என்ற சிந்தனையும், பழக்கமும் சமீபத்தில் ஏற்பட்டதா?” இப்போது தான் ஆடி மாதத்தை தவிர்க்கின்றார்களா என்றால், இல்லை! ஆடி மாதத்தை நல்ல காரியங் களுக்காகத் தவிர்த்தது என்பது இன்று நேற்றல்ல, அது காலம் காலமாகத் தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற ஒரு நிகழ்வு. அன்று தவிர்த்ததற்கான காரணம் அறிவுப்பூர்வமானது. தேவையின் பாற்பட்டது. ஆனால் இன்று தவிர்ப்பது தேவை யில்லாதது. பகுத்தறிவிற்குப் புறம்பானது. வெறும் சடங்காகி ஒரு மூடப்பழக்கமாகி, உழைக்கும் மக்களின் சிந்தனையை மழுங்கடித்து விட்டது பார்ப்பனீயம்.

ஆடி மாதம் என்பது பார்ப்பனீயம் சித்தரிப்பது போல மோசமான மாதம் அல்ல. ‘புனிதமானது என்றும் நாம் சொல்லவில்லை!’ மற்ற மாதங்களுக்கு என்ன மதிப்பு உள்ளதோ அது தான் இதற்கும், அவ்வளவேதான் நம் வாதம். ஆனால் இது மோசமானது என்று சித்தரிக்கப்பட்டு வருவது முற்றிலும் தவறானதாகும். சிந்தித்துப்பார்த்தால் இதன் காரணம் புரியும். தமிழகத்தைப் பொருத்த வரை (சித்திரை முதல் பங்குனி வரை தமிழ்நாட்டில் உள்ள மாதங்கள். வேறு மாநிலங்களில் இந்த மாதங்கள் வழக்கத்தில் இல்லை) ஆடி மாதத்தில் இயன்ற வரை நல்ல காரியங்கள் செய்வதும் இல்லை, தொடங்குவதும் இல்லை. இதைப் பற்றித் தான் நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமானது உணவு. அந்த உணவை உற்பத்தி செய்வதற்கு நம் மூதாதையர்கள் தெரிவு செய்த மாதம் ஆடி. (‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற முதுமொழி இன்னமும் உண்டு) காய்கறித் தோட்டம் போடுபவன் கூட ஆடியில்தான் விதைக்கிறான். மறு முளைப்புத் திறன் கொண்ட விதைகள் உடைய பயிர்கள் எல்லாம் ஆடியில்தான் இன்னமும் பயிர் செய்யப்படுகின்றது. அப்படி மனிதனின் உணவுத் தேவையை உற்பத்தி செய்யத்துவங்கும் மாதம் ஆடியாக உள்ள போது அது எப்படி கெட்டமாதமாக இருக்க முடியும்?

அடுத்தது, மனிதன் மனிதனாக வாழ வேண்டுமென்றால் அறிவு பெற வேண்டும். ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்றார் தந்தை பெரியார். உணவு மனிதனுக்கு எப்படி வாழ்வாதாரமாக உள்ளதோ அதைவிட, அவசிய மானது அறிவு. அந்த அறிவு என்பதைக் கல்வியின் மூலம் பெறுகிறோம். அந்தக் கல்வியைக் கற்க நாம் தொடங்குவது ஆடி மாதத்தில் தான். ஆடி 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு. விவசாயம் தொடங்குவதற்கு ஏதுவாக காவிரி ஆற்றில் புதுப்புனல் பெருக் கெடுத்து வரும். புதுப்புனல் பெருக்கெடுத்து வருவது போல் அந்த நாளில் படிக்கத் தொடங்கினால் கல்வியும் பெருக்கெடுத்து வரும் என்று நம் முன்னோர்கள் நம்பினார்கள்.

எனவே அந்த தினத்தில் குழந்தைகளை இன்றும் கல்விக் கூடங்களில் சேர்க்கின்றார்கள். ஆடி 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தால் தொடக்கப் பள்ளிக்கூடங்களில் இன்றும் கூட மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றது. ஞாயிற்றுக்கிழமைகூட வேலை நாளாகக் கருதப் படுகிறது. இது காலம்காலமாக நடந்து வருகின்ற நிகழ்ச்சி. என்னை புதுக்கோட்டை காந்திநகர் பள்ளியில் என் தந்தை 1 ஆம் வகுப்பில் சேர்த்து விட்டதே ஆடி 18ல் தான்.

தமிழ்நாடு, விவசாயத்தையே முழுமுதற் தொழிலாகவும், பொருளாதாரமாகவும் நம்பி யிருக்கும் தேசம். அதற்கான புவியியல் அமைப்பும், விவசாயத்திற்கு சாதகமாகவே இருந்தது. அந்த விவசாயத்தை ஆடி மாதத்தில் துவங்கி விடுவதால் மக்கள் அனைவரும் முழுமையாக விவசாயத்திற்குள் தங்களைப் பிணைத்துக் கொள்வார்கள். விவசாயத்தில் முழுமையாக ஈடுபடாத மேல்தட்டு வர்க்கம் கூடக் கீழ்நிலையில் உள்ள விவசாயிகளின் உடல் உழைப்பையே முழுமையாக நம்பி இருப்பதால், அவர்களும் ஆடிமாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொள்வதில்லை. மேலும் அந்நாளைய விவசாயம் என்பது, உழைப்பைப் பணமாகப் பெறாத காலம்.

அதாவது நமது வயலில் பத்து உழவு ஏர் தேவையென்றால், ஊரில் உள்ள இதர 10 வீட்டு ஏர்களும் நமக்கு வந்து உழுது கொடுப்பார்கள். கூலி கிடையாது, மாறாக அவர்கள் வீட்டு உழவுக்கு நமது வீட்டு ஏர் போகும். இப்படியேதான் அன்றைய விவசாயம் நடந்து வந்தது. நாற்று நட வீட்டுக்கு ஒருவர் அண்டை வீட்டாருக்குச் செல்வதும், அறுப்பதற்கும். அடிப்பதற்கும் இப்படி ஒவ்வொன்றுக்கும் விவசாயிகள் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் விவசாயம் செய்து வந்தனர். வாய்க்கால் வெட்டுவதாக இருந்தால் வீட்டுக்கு ஒருவர் மண்வெட்டியுடன் செல்ல வேண்டும். ‘கூலி முறை’ விவசாயம் வருவதற்கு முன்னால் இருந்து வந்த விவசாய முறை இது.

இப்படி இருந்த விவசாயிகள் காலப்போக்கில் ஆரியர்களின் வருகையினால், உழைக்கும் மக்களின் விவசாய நிலங்கள் அனைத்தையும் அதிகாரத் தினாலும், சூழ்ச்சிகளினாலும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கினர். இந்த மக்கள் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். காடுகளையும், புதர்களையும் அழித்து விவசாய நிலமாக மாற்றி, உழுது பயிர் செய்து, ‘உறவு முறை’ விவசாயம் செய்து வாழ்ந்து வந்த மக்கள், நயவஞ்சகப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியினால், தங்கள் உயிரினும் மேலாகப் பாதுகாத்து வந்த நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தனர்.

இறுதியில் நிலமற்ற கூலி விவசாயிகளாக மாற்றப்பட்ட இம்மக்கள், தங்களின் நிலத்திலேயே, பார்ப்பன நில உடைமையாளர்களுக்குத் தினக்கூலி களாக மாற்றப்பட்டனர். ‘உறவுமுறை விவசாயிகள்’ ‘கூலி விவசாயிகளாக’ இவ்வாறுதான் மாற்றப் பட்டனர். உறவுமுறை விவசாயம் இருந்த வரை விவசாயப்பணிகள் என்பது இம்மக்களிடம் தனித் தனியாக இல்லை. ஒன்றாகவே இருந்தது. எனவே தான் இவர்களால் இந்த ஆடி மாத காலத்தில் விவசாயம் தவிர்த்த எந்த நிகழ்ச்சிகளையும் தவிர்த்து வந்தனர். விவசாயிகளின் விழாக்கள் என்பது அந்த நாளில் இரண்டு தான். ஒன்று குடும்ப வைபவங்கள் மற்றது கோவில் திருவிழாக்கள். இப்போதும் கூட கோவில் திருவிழாக்கள் ஆடி மாதத்தில் எந்த கிராமத்திலும் நடைமுறையில் இல்லை.

ஆடி மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகள் அந்நாளில் ஒத்தி வைத்ததற்கு இது தான் காரணம். மேலும் இதற்குள்ளேயே மற்றொரு செய்தியும் அடங்கியுள்ளது. அந்நாளைய கோவில் திருவிழாக் களாக இருந்தாலும், குடும்ப வைபவங்களாக இருந்தாலும் எப்படி நடைபெறும் தெரியுமா?

அந்நாளைய திருமணம் என்பது இப்போது நகரங்களில் நடைபெறும் ஒப்பந்தமுறை (Event Contract) திருமணம் போல் கிடையாது. இப்பொழு தெல்லாம் நகரத்துத் திருமணங்கள் அனைத்திற்கும் ஒப்பந்தக்காரர்கள் இருக்கின்றார்கள். பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது என்பது மட்டும் தான் பெற்றோர்கள் வேலை. அதுகூட தற்போது திருமணத் தரகர்கள், இன்டர்நெட் என வந்து விட்டது.

அந்நாளில், திருமணம் என்ற நிகழ்ச்சிகள் வரும்போது ஒரு கிராமத்தில், ஊரில் உள்ள உறவினர்கள் அனைவருமே இணைந்து செயல்பட்டு வந்தனர். இப்படி அனைத்து உறவினர்களும் நண்பர்களும் திருமண வேலைகளில் பங்கெடுத்து வந்ததனால், விவசாயத் துவக்க மாதமான ஆடியில் குடும்ப நிகழ்வுகளை நடத்தினால், விவசாயப் பணிகள் முற்றாகப் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்திற்காக ஆடி மாதத்தில் விழாக்கள் நடத்து வதை அறிவுபூர்வமாகவும், சூழ்நிலைக் காரணங் களினாலும் தவிர்த்து வந்தனர் நம் முன்னோர்கள்.

ஆனால் காலம் மாற, மாற மனிதனின் அறிவு என்பது சாத்திர, சம்பிரதாயங்களால் பார்ப்பனீயச் சிந்தனைகளால் பின்னோக்கியே செல்கின்றது. அதனால் தான் தேவை கருதி தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்ட நிகழ்வுகளை, சரியாகப் புரிந்து கொள்ளாததோடு, அறிவுக்குத் தொடர்பற்ற வகையில் சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று கூறி ஒரு மாதத்தையே கெட்ட மாதம் என்று மாற்றி விட்டார்கள் பார்ப்பனப் புரட்டுப் புரோகிதர்கள்.

ஆடி மாதத்தில் திருமணங்களைச் செய்யக் கூடாது என்பதால், அவசர அவசரமாக ஆனி மாதத்தில் திருமணங்கள் ஊரெங்கும் நடந்தேறு கிறது. அதனால்தான் எங்கு பார்த்தாலும் நெருக்கடி யான திருமணக் காட்சிகளாகத் தெரிகிறது. ஆனால் இந்தச்செயல்பாட்டிற்கு ஏதேனும் அர்த்தமுள்ளதா என்று சிந்தித்துப் பார்த்தால் ‘இல்லை’ என்ற பதில் தான் உண்மையானது. அன்றைய தேவைக்கும், அவசியத்திற்கும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துச் செயல்பட்டு வந்த நம் முன்னோர்களின் பழக்கங்களை இன்று ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்திக்காமல் நமது சூழ்நிலைக்கு, ஏற்றார்போல் பின்பற்றாததின் விளைவே இந்தத் தேவையற்ற நெருக்கடி நிலை!

ஒரு மாதத்தின் 30 நாட்களும் கெட்டது என்று பதிவு செய்துவிட்ட நிலையும் ஆகும். இது வரலாற்றை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடும் எதிர்மாற்றம் இல்லையா? கண்மூடித் தனமாக கேள்வி கேட்காமலும் அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளாமலும் செயல்படும் அடிப்படை அறிவில்லாத இந்நிலை நாகரீகத்தின் பின்னோக்கிய வளர்ச்சி என்று சொல்வதுதானே சரியாக இருக்கும்.

இதற்குக் காரணம் என்ன? எதன் வழித் தோன்றல்கள் இவை? ஆரியம், பார்ப்பனீயம் என்ற ஆதிக்கச்சக்திகளின் ஆட்டுவிப்புத்தன்மையும், கடவுள், சமயம் என்ற பெயரால் கேள்வி கேட்கக் கூடாத நிலையை உருவாக்கி அதன் மூலம் தான் விரும்பும் எதையும் எதிர்ப்புகளின்றி சாதித்துக் கொள்ளும் தந்திரமும் தான் காரணம்.

அப்படியே இது கெட்ட மாதம் என்பதாகக் கொண்டால் இது கழிவு மாதம் என்றால் இதற்கு முன் வாங்கிய பொருட்கள் எல்லாம் இந்த மாதத்தில் விற்றுத் தீர்த்து விட்டுத்தானே புதுப்பொருட்களை அடுத்த வியாபாரத்திற்கு வாங்குகிறார்கள். ஆடிக்கழிவு என்று இந்த உழைக்கும் மக்களை ஏமாற்றி அவர்கள் தலையில் பழைய பொருட்களைக் கட்டிவிட்டு லாபம் சம்பாதிக்கின்றார்கள் வியாபாரிகள், அவர்களுக்கு இது கெட்ட மாதமா? இல்லையே!

இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல வியாபாரி களுக்கும் கூட அமோகமான மாதமாக இருக்கும் போது மக்கள் ஏன் இதைப் புறக்கணிக்கத் துவங்கு கிறார்கள்? ஒருபுறம் மூடத்தனமாகப் புறக்கணிப்பு, மறுபுறம் அதனையே கழிவு வியாபாரம் ஆக்கி லாபம் பெருக்கிக் கொண்ட வியாபாரத்தந்திரம். இரண்டுக்குமிடையே நமது பகுத்தறிவு என்ன செய்கிறது. எதைப் பகுத்துப்பார்த்து முடிவு செய்கிறது? சம்பிரதாயம், சடங்கு, சாஸ்திரம் என்ற மாயைக்குள் நமது விஞ்ஞானிகளும் மாட்டிக் கொண்டு நல்ல நேரம் பார்த்துத்தான் செயற்கைக் கோளினை வான்வெளிக்கு அனுப்புகின்றார்கள்! அங்கேயும் பார்ப்பனீயம்தான் ஆதிக்கம் செய்கின்றது.

அப்படியானால் நாம் மூளையற்றவர்களா? மூடர்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மூடர்களாக முட்டாள்களாக நாம் ஆக்கப்பட்டு விட்டோம். இருபது நூற்றாண்டுகால அடிமைத் தனம் நம் மூளையை அழுக்கேற்றி வைத்துள்ள விதம், நம்மை இவ்விதம் ஆக்கிரமித்துள்ளது. இன்று நாம் எதையும் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாற்றப்பட்டு விட்டோம்.

இதனை மாற்றத்தான், நம் அறியாமையை உணர்ந்து அதனைப் போக்க முயன்றார்கள், அயோத்திதாசப் பண்டிதர், பாபாசாகேப் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார் போன்ற சிந்தனைவாதிகள்.

ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேள். உன் அறிவிற்கு அது சரியானதாக இருந்தால் ஏற்றுக்கொள். நான் சொல்கிறேன் என்பதற்காக தலையாட்ட வேண்டாம் என்றார் தந்தை பெரியார். அவர் எத்தனை பெரிய மாமனிதர் என்று இப்போது உனக்குப் புரியும்.

இஸ்லாமிய சகோதரர்கள் இன்றும் ஆடி மாதத்தில் திருமணம் செய்து கொள்கின்றார்கள். வளமையாகத்தான் வாழ்கின்றார்கள். ஒரே ஊரில் உள்ள மக்களின் ஒரு பிரிவினர் அதே நீரைப்பருகி, அதே காற்றைச் சுவாசித்து சுகமாக இருக்கும்போது, அதே ஊரில் உள்ள இன்னொரு பிரிவினருக்கு அதே மாதமும் நாளும் கெட்டதாக இருக்கின்றது என்றால் - இங்கு இயற்கைச்சூழல் பாகுபாடு காண்பிக் கின்றதா? அல்லது மதங்களின் ஆளுமை மக்களின் செயல்களைக் கூறு போடுகின்றதா?

பகுத்தறிவுக்கு ஏற்புடையதாகாத எந்தச் செயலையும் ஏற்க மறுக்கவேண்டும். மூளைக்குள் வளர்த்து விடப்பட்டிருக்கும் முட்புதர்களை அழித்தொழிப்புச் செய்யவேண்டும். இதை ‘அபெகா பண்பாட்டு இயக்கம்’ தொடர்ந்து செய்யும்.

Pin It