kuthoosi gurusamy 263ஓர் இயந்திரத்தைப் பழுது பார்த்தவுடனே அந்த இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை யென்றால் நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது?

“ஓய்! வேலைக்காரரே! உம் மூஞ்சிக்கு போர்டு வேறே வேண்டி யிருக்கோ? இதோ பாரும்! கார் (அல்லது கடிகாரம்) ஓடவில்லை! என்ன ரிப்பேர் காணும் செய்தீர்?” - என்று அதட்டிக் கேட்கிறோம்!

இதே மாதிரி சலவைத் தொழிலாளியைக் கேட்கலாம்! இன்னும் சில தொழிலாளிகளையும் கேட்கலாம். ஆனால் ஒரு சிலரைக் கேட்கவே முடியாது!

“ஓய்! உபாத்தியாயரே! என் பையன் 10 மாதம் சுமந்து (அதாவது புத்தகத்தை!) உம்மிடம் கற்றுக் கொண்டதன் லட்சணம் இதுதானா?

பரீட்சையில் தவறி விட்டானே! ஓய் சம்பளம் செரிக்குமாங்காணும்?” - என்று கேட்க முடியாது!

இடிந்துபோன பாலத்துக்காக எஞ்சினியரைக் கேட்க முடியாது!

செத்துப்போன நோயாளிக்காக அவனைப் பழுது பார்த்த டாக்டரைக் கேட்க முடியாது!

தோற்றுப்போன வழக்குக்காக, வாதாடிய வக்கீலைக் கேட்க முடியாது!

இளமையில் விதவையாகிவிட்ட பெண்ணுக்காக, சோதிடனையோ, புரோகிதனையோ கேட்க முடியாது!

துயரத்தில் சிக்கிய குடும்பத்துக்காக அதன் சார்பில் லட்சார்ச்சனை செய்த அர்ச்சகனைக் கேட்க முடியாது!

இந்த மாகாணத்துக்கு மழை வேண்டுமென்று படாத பாடுபட்டார்கள், சிலர்! கோவில்களில் அர்ச்சனைகள் நடந்தன, அறநிலைப் பாதுகாப்பு அதிகாரிகள்(அதாவது சர்க்கார்) உத்தரவுப்படி!

வருண ஜெபம் செய்தார்கள், பிராமணோத்தமர்கள், தங்கள் தங்கள் வயிறுகளின் உத்தரவுப்படி!

எல்லோரையும் ஏமாற்றிவிட்டது, இந்த மழை!

ஆனாலும் இந்த விஞ்ஞானிகள் உண்டே! அவர்கள் சும்மாயிருப்பதில்லை! வாயில் வந்தபடி உளறிக் கொட்டுகிறார்கள்!

“ஆஸ்ட்ரேலிய விஞ்ஞானிகள் தூதுக்கோஷ்டியைச் சேர்ந்த புரோஃபஸர் போவன் பேசுகையில், உலர்ந்த அய்ஸ் துண்டுகளை மேகங்களின்மேல் தூவினால் செயர்க்கை முறையில் மழை பெய்யச் செய்ய முடியுமென்றும், தாமே பரீட்சை நடத்தியதாகவும் கூறினார்.” - இச்செய்தி வருண ஜெப இனத்தின் பத்திரிகையான “சுதேசமித்திரன்” ஏட்டிலேயே வந்திருக்கிறது!

ஜனவரி 8-ந் தேதி பெங்களூரில் நடந்த இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் இப்படிப் பேசியிருக்கிறார்! இந்த விஞ்ஞானிகள் இருக்கிறார்களே! சுத்த நாஸ்திகர்கள்! மழை பெய்யக் கூடாது, பஞ்சம் வந்து மக்கள் சாகட்டும் என்று கருணைக் கடலாகிய கடவுளே முடிவு செய்திருக்கும்போது அய்ஸ் துண்டுகளை வீசுவதாம்! செயற்கை மழையை வரவழைப்பதாம்! இதெல்லாம் நியாயமா? - என்று ‘சவுரி மலை’ அய்யப்பன் ஆணையாகக் கேட்கிறேன்!

சரி! முன்பு வருணஜபம் செய்தார்களே! அந்த ஆசாமிகள் எங்கே? மழை வராததற்கு அவர்கள் என்ன சமாதனம் சொல்கிறார்கள். ஏமாற்றிப் பொருள் பெற்றதற்காக ஏன் அவர்களைத் தண்டிக்கக்கூடாது?

“நான் சொன்னபடி நடக்காவிட்டால் என்னைத் தூக்குப்போட்டு விடலாம்,” - என்று எழுதித் தந்தாலொழிய எந்த சோதிடனோ, அர்ச்சகனோ, புரோகிதனோ, மந்திரவாதியோ, ஆண்டகையோ, அவதாரமோ,- இனி வாய்திறக்க அநுமதிக்கக் கூடாது!

அந்த மாதிரியான ஓர் ஆட்சி அவசரமாகத் தேவை! இல்லாவிட்டால், 100க்கு 99பேர் பித்தலாட்டப் பிழைப்பிலேயே இறங்கி விடுவார்கள்! அதாவது, பத்திரிகைகளில் விளம்பரம் வருகிறதே, அந்த மாதிரிப் பிழைப்புக்கள்! -ஆகையல், எங்கே அந்த வர்ண ஜெபக்காரன்? கொண்டுவா, அவன் காதைப் பிடித்து இழுத்து!

“ஏண்டா, வஞ்சகனே! ஏமாற்றினாய்?” - என்று கேள்!

“ஏண்டா! மடையா? ஏமாந்தாய்?” - என்று அவனும் திருப்பிக் கேட்பான்! அதையும் வாங்கிக்கொள்!

ஆஸ்திகரையும், ஆரிய விசுவாசிகளையும் நோக்கி நான் கூறவில்லை! பொதுவாகவே கூறுகிறேன்!

மந்திரிகள் தங்களை நோக்கிக் கூறுவதாக எடுத்துக் கொண்டு என்மீது கோபப்படக் கூடாது!

- குத்தூசி குருசாமி (17-1-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It