தீண்டாமையை ஒழித்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் அரசு -தீண்டாமை ஒழிப்புக்காகவே தனி காவல் பிரிவை வைத்துள்ள அரசு -அதற்கென கோடிக்கணக்கில் சம்பளம் அளிக்கும் அரசு மற்றும் அதைப் பெறும் காவல் துறை அதிகாரிகள், நவம்பர் 26 அன்று தீண்டாமையை நடைமுறைப்படுத்தும் சாதிவெறியர்களைப் பாதுகாப்பதற்காக, ஒட்டன்சத்திரம் ‘பண்டு’ கிராமங்கள் அனைத்திற்கும் சேர்த்து 500 காவலர்களை நியமித்திருந்தனர். ‘வஜ்ரா' போன்ற வாகனங்களும் வரவழைக்கப்பட்டிருந்தன. ஒரு மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர், ஆறு காவல் ஆய்வாளர்கள், 10க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் என ஒட்டன்சத்திரம் தொகுதி முழுக்க காவல் துறையினரால் சூழப்பட்டிருந்தது.

எத்தனை நாட்களுக்குதான் மென்மையாகப் போராடுவது? சாதி வெறியர்களுக்கு அழுத்தமாக உணர்த்தும் வகையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்” -என தமிழகத்தின் கிராமங்களில் இன்றுவரை நிலவி வரும் இரட்டைக் குவளை முறைக்கு எதிராக களமிறங்கிப் போராடிய பெரியார் திராவிடர் கழகம், கடந்த ஏப்ரலில் நடத்திய முதல் கட்டப் போராட்டத்திற்குப் பிறகு அதன் தலைவர் கொளத்தூர் மணி மேற்கூறிய அறிவிப்பை வெளியிட்டார். அதற்கேற்ப கடந்த நவம்பர் 26 அன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில், ‘பண்டு' கிராமங்கள் என்ற பெயரில் சாதியையும் தீண்டாமையையும் பாதுகாத்து வரும் கிராமங்களில் பெரியார் திராவிடர் கழகத்தினர் நேரடியாகக் களமிறங்கி, இரட்டைக் குவளை மற்றும் இரட்டை இருக்கைகளை உடைத்து நொறுக்கி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினரும் பெரியார் தி.க.வினரோடு கைக்கோத்து களம் இறங்கிப் போராடியுள்ளனர்.

Kolathur Mani
இந்தப் போராட்டத்திற்கு அடித்தளமாக கடந்த ஆறு மாத காலமாகவே பெரியார் தி.க.வினர் பல்வேறு வகைகளில் செயல்பட்டுள்ளனர். முதல் கட்டமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டைக் குவளை முறையைப் பின்பற்றும் கிராமங்களின் பட்டியலை வெளியிட்ட பெரியார் தி.க. தொடர்ந்து தமிழகம் முழுவதும் சென்று இரட்டைக் குவளை, இரட்டை இருக்கை முறை உள்ள பல்வேறு கிராமங்களின் பட்டியலையும், தீண்டாமையைப் பின்பற்றும் கடைகளின் பெயர்களையும் முகவரியோடு வெளியிட்டது.

தமிழக அரசிற்கும், உள்ளூர் ஆட்சியர் மற்றும் காவல் துறை தலைவர்களுக்கும் முறையாக அந்தப் பட்டியலை அனுப்பினர். அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவில்லையெனில், அக்டோபர் 2 அன்று தாங்களே நேரடியாகச் சென்று இரட்டைக் குவளைகளையும் இரட்டை இருக்கைகளை யும் அடித்து நொறுக்கப் போவதாகவும் அறிவித்தனர். அதோடு நில்லாது, தீண்டாமையை கடைப்பிடிக்கும் சாதி இந்துக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கூட்டங்கள் மூலம் இடையறாத பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். இதன் விளைவாக, தீண்டாமைக்கு எதிராக அரசின் நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என காத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

காவல் துறையினர், இரட்டைக் குவளை முறை நிலவிய கடைகளுக்குச் சென்று, தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் பேரில் நடவடிக்கை எடுப்போம் என மிரட்டி, லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர். குறிப்பாக, சக்கம்பட்டி என்ற கிராமத்தில் காவல் துறை ஆய்வுக் குழுவினர் தொடர்ந்து 3 நாட்கள் தங்கியிருந்து கடைக்காரர்களைக் கையும் களவுமாகப் பிடித்து 10,000 ரூபாய் வரை லஞ்சம் வாங்கிச் சென்றுள்ளனர். அந்தத் தொல்லை தாங்காமலேயே இரட்டைக் குவளைகளை எடுத்து விட்டதாக அங்குள்ள தேநீர்க் கடைக்காரர் தெரிவித்தார். காவல் துறையினர் “வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வோம்” என மிரட்டியே பல கிராமங்களில் நல்ல வசூல் செய்துள்ளனர்.

ஒரு சில இடங்களில் மட்டுமே காவல் துறையினரின் நியாயமான நடவடிக்கைகள் இருந்தன. திருப்பூர் அருகே சூலூர் ஒன்றியம் மேற்கு ராசாக் கவுண்டம்பாளையம், செம்மிபாளையம் கிராமங்களில், பெரியார் தி.க.வினர் திட்டமிட்டபடி பல கடைகளில் இரட்டைக் குவளைகளையும், இரட்டை இருக்கைகளையும் அக்டோபர் 2 அன்றே உடைத்தனர். உடுமலை அருகே காரத்தொழுவு, கோவை புறநகரில் வெள்ளி மலைப்பட்டினம் கிராமத்தில் அனைத்துக் கடை உரிமையாளர்கள் சார்பிலும் இரட்டைக் குவளைகளை வைக்க மாட்டோம் என உறுதிமொழி பெறப்பட்டது. தொண்டாமுத்தூர் பகுதியில் 144 தேநீர்க் கடைகள் சார்பிலும் உறுதி மொழி பெறப்பட்டது. 11 வயது சிறுவன் ஒருவன் தந்த துணிச்சலான புகாரின் அடிப்படையில், ஒரு கடையின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இத்தனைக்குப் பிறகும் காவல் துறையின் நடவடிக்கை மேலோட்டமாகவும் அலட்சியமாகவுமே இருந்தது. தீண்டாமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையும் அரசு அலுவலகங்களுமே தீண்டாமையின் உறைவிடமாக இருப்பதே இதற்கு காரணம்.

எடுத்துக்காட்டாக, ஒட்டன்சத்திரம் நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மகாமுனி என்ற பட்டியல் சாதியை சேர்ந்த காவல் சார்பு ஆய்வாளரை, பெருமாள் என்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த சாதாரண காவலர், ஒட்டன்சத்திரம் நகரில் நடுரோட்டில் அடித்து சாதியைச் சொல்லி ஆபாசமாகத் திட்டியிருக்கிறார். சாதியப் படிநிலையில் தன்னைவிட கீழான ஒருவர் தனது உயர் அதிகாரியாக இருந்தபோதும், அவருக்கு எந்த மதிப்பும் தரத் தேவையில்லை என்ற அலட்சியத் திமிரை, இந்த சாதிய சமூகம் அந்த காவலருக்கு அளித்திருக்கிறது. அவமானப்படுத்தப்பட்ட அந்த ஆய்வாளர், நடந்த நிகழ்வு குறித்து தனது மேலதிகாரியிடம் முறையிட்டபோதும் அதற்கு சாட்சியில்லை என்று கூறி விசாரிக்க மறுத்துள்ளார் மேலதிகாரி. நடந்த நிகழ்வை கண்கூடாக கண்ட பெரியார் தி.க. தோழர் பெரியார் நம்பி, அந்த மேலதிகாரியிடம் சாட்சியம் அளித்த பிறகும் இன்று வரை அந்த ஆய்வாளருக்கு நியாயம் கிடைக்கவில்லை.

திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் பல்வேறு தீண்டாமைக் கொடுமைகள் இன்றளவிலும் நிலவி வருகின்றன. இரட்டைக் குவளை, இரட்டை இருக்கைகள் மட்டுமல்லாது, சில ஊர்த் தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணியக் கூடாது; முடிதிருத்தகங்களில் அனுமதி மறுப்பு; தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குப் பள்ளியில் அனுமதி மறுப்பு; இதையெல்லாம் யாராவது எதிர்த்துக் கேட்டால், அவர்களை குடும்பத்தோடு ஊர்விலக்கம் செய்வது என சாதிவெறியும், தீண்டாமைக் கொடுமையும் தலை விரித்தாடும் பகுதியாக, இந்த ‘பண்டு கிராமங்கள்' தன் கொடூர முகத்தைக் காட்டி வருகின்றன.

நவம்பர் 26 அன்று ஒட்டன்சத்திரத்திலிருந்து ஆறு குழுக்களாகப் பிரிந்து, பண்டு கிராமங்கள் முழுவதும் சென்று இரட்டைக் குவளைகளை உடைப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அன்று காலை முதலே தமிழகமெங்கிருந்தும் ஒட்டன்சத்திரத்தில் பெரியார் தி.க. மற்றும் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் குவியத் தொடங்கினர். ஆனால் காலை 10 மணிக்கே ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் நீலவேந்தன் மற்றும் 90 தோழர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டத் தலைவர் அருந்தமிழரசு, பெரியார் தி.க. மாணவர் பிரிவின் கோவை பன்னீர் செல்வம், பல்லடம் விஜயன், ஒட்டன்சத்திரம் சவுந்தர் ஆகியோர் தலைமையிலான 60 பேர் கொண்ட குழு, ஒட்டன்சத்திரம் நகருக்குள் நுழையாமல் நேரடியாக பண்டு கிராமங்களுக்குள் நுழைந்தது. புது அத்திக்கோம்பை, கம்பிளிநாயக்கன்பட்டி, சட்டையப்பனூர், செம்மடைப்பட்டி, நாலுபுலிக்கோட்டை, புதுச்சத்திரம் ஆகிய ஊர்களில் உள்ள அனைத்து தேநீர்க் கடைகளிலும் இருந்த இரட்டைக் குவளைகளை உடைத்தெறிந்தது. செய்தி அறிந்த மாவட்டத் துணை கண்காணிப்பாளர் தானே நேரில் சென்று தோழர்களைக் கைது செய்தார்.

காவல் துறையின் கெடுபிடிகள் அதிகமிருக்கும் என்பதை எதிர்ப்பார்த்திருந்த போராட்டக் குழுவினர், ஒருவேளை எங்கும் போராட்டத்தை நடத்த முடியாதபடி காவல் துறையினர் தடுத்துவிட்டால், குறைந்த பட்சம் ஒரு ஊரிலாவது காவல் துறையின் பிடிக்குள் சிக்காமல் இரட்டைக் குவளைகளை உடைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர். அதற்கேற்ப கொல்லப்பட்டி என்ற ஊரை போராட்டப் பட்டியலில் குறிப்பிடாமல் விட்டிருந்தனர். எதிர்பார்த்தபடி அங்கு காவல் துறை பாதுகாப்பு போடப்படவில்லை. அந்த ஊரில் சவுந்தர் தலைமையில் 10 தோழர் கள் மாலை 4 மணி யளவில் 3 தேநீர்க் கடைகளில் நுழைந்து உடைத்தனர். ஒட்டன்சத்திரத்தில் ஆதித்தமிழர் பேரவையின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வெள்ளைப் பாண்டியன், பெரியார் தி.க.வின் மதுரை மாவட்டப் பொறுப் பாளர்கள் முருகேசன், மாயாண்டி உள்ளிட்ட 148 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

இரட்டைக் குவளை உடைப்பு என்பது வெறும் அடையாளப் போராட்ட வடிவம் மட்டுமே. இன்றளவிலும் ஒவ்வொரு கிராமமும், ‘ஊர்’ என்றும் "சேரி' என்றும் இரட்டை உருக்கொண்டே நிலைப் பெற்றுள்ளன. அதற்கு அடிப்படையாக உள்ள இந்து சமூக அமைப்பையும் தகர்க்க, தனது தொடர்ந்த பிரச்சாரங்களின் மூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் இடையறாது செயலாற்றி வரும் பெரியார் தி.க.வின் இந்த இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டம், சாதி ஒழிப்புப் போரை அடுத்தக் கட்டத்திற்கு முன்னகர்த்த வழிவகுக்கும்.

- நம் சிறப்புச் செய்தியாளர்
Pin It