இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை-1 திரைப்படம் வெளியாகி திரைப்படப் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெற்றிமாறனுடைய முந்தைய மூன்று படங்கள் போலவே, இத்திரைப்படமும் அரசியல் தளத்தில் காத்திரமான உரையாடல்களையும் நிகழ்த்தத் தவறவில்லை. மிகக் குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், கதாபாத்திரங்கள் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியின் ஒரு பிரிவாக இருந்த தமிழ்நாடு விடுதலைப் படை மற்றும் அந்த அமைப்புகளின் முன்னணித் தலைவர்களான தோழர்கள் புலவர் கலியபெருமாள், தமிழரசன் ஆகியோரைத் தமிழர் மக்கள் படை என்றும், பெருமாள் வாத்தியார் என்றும் சித்தரித்துப் படமாக்கப்பட்டுள்ளது. இதன் காரனமாக வெகுமக்கள், திரைப்பட விரும்பிகள் மற்றும் வலையொலி உள்ளிட்ட சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களிடையே தமிழ்நாடு விடுதலைப் படையும், தோழர்கள், புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகியோரும் பேசுபொருளாயினர்.

தோழர்கள் தமிழரசன் மற்றும் புலவர் கலியபெருமாள் ஆகியோரின் தமிழ்த் தேசப் போராட்ட வாழ்க்கை வரலாற்றை இக்கால வெகுமக்கள் தரப்பு அறிந்து கொள்வதற்கு விடுதலை 1 திரைப்படம் பயன்பட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகது. இது இத்திரைப்படம் உருவாக்கியுள்ள முக்கியமான நேர்மறை விளைவு ஆகும். மேற்சொன்ன நேர்மறை விளைவைத் தவிர்த்துப் பார்த்தால், இத்திரைப்படம் குறித்தான திறனாய்வுகளும் எழாமல் இல்லை. தமிழ்நாடு விடுதலைப் படை மற்றும் அதன் முன்னணித் தோழர்கள் பற்றிப் பேசப்படுவதற்குரிய வாய்ப்பமைந்ததை நேர்மறை விளைவாகப் பார்க்கின்ற தோழர்கள் கூடப் படத்தின் முதல் காட்சியான தொடர்வண்டி விபத்துக் காட்சி மற்றும் காவல் நிலைய அரசியல் கொலைக் காட்சியில் பெருமாள் வாத்தியார் சித்தரிக்கபட்ட வகை குறித்துத் தங்களது வருத்தத்தையும், விமர்சனத்தையும் பதிவு செய்திருந்தனர்.vijay sethupathi in viduthalaiவிடுதலை பேச விழைவது என்ன?

விடுதலை 1 இன் கதை என்பது, அருமபுரி மலைப்பகுதியில் கனிமவளச் சுரங்கம் அமைக்கப்படுவதைப் பெருமாள் வாத்தியார் தலைமையிலான தமிழர் மக்கள் படை எதிர்க்கிறது. சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் படையால் தொடர்வண்டிப் பாலத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து மக்கள் இறக்கிறார்கள் (முதல் பாகத்தின்படி.. இரண்டாம் பாகத்தில் தொடர்வண்டி குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மையான பின்னணி விளக்கப்படுவதாகத் தெரிகிறது). சுரங்கப் பணிக்கான முயற்சியைத் தொடரவும், அதற்கு எதிர்ப்பாக உள்ள மக்கள் படையையும், பெருமாள் வாத்தியாரையும் பிடிக்க அரசால் சிறப்புப் படை அமைக்கப்படுகிறது. சிறப்புப் படையின் ஒரு பிரிவில் பணிக்கு வரும் குமரேசன் எனும் கடைநிலைக் காவலர், மக்கள் படையைப் பிடிக்க தன்னாலான பங்களிப்பை வழங்குவதற்காகப் பணி செய்கிறார்.

உயர் அதிகாரியின் கொடுமைகள் மற்றும் கடைநிலை ஊழியர்களை இரண்டாம்தர ஊழியர்களாக நடத்தும் மோசமான காவல்துறை பணி சூழலுக்கு இடையில் வேலை செய்யும் குமரேசனுக்கான ஒரே ஆறுதலாக இருப்பது தமிழரசியுடனான காதல் மட்டுமே. மக்கள் படையினரைப் பிடிப்பதற்கான காவல்துறை சிறப்புப் படையினரின் தேடுதல் வேட்டையால் தமிழரசி வசிக்கும் மலைக்கிராமம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறது. நிர்வாணப்படுத்தப்பட்டுச் சித்ரவதைக்குள்ளாக்கப்படும் தமிழரசி உள்ளிட்ட மலைக்கிராமப் பெண்கள், மக்களைக் காவல்துறையின் கொடுமைக ளிலிருந்து காப்பாற்ற, பெருமாள் வாத்தியார் இருக்கும் இடத்தை அறிந்த குமரேசன் காவலர்களின் பெரும் படையுடன் சென்று பெருமாள்வாத்தியாரை பிடிக்கிறார்.. இதுதான் கதை!

மேற்சொன்ன கதையினூடாக, மக்களுக்காகச் சேவை செய்யத் தானே காவல்துறை இருக்கிறது என நம்பும் காவலர் குமரேசன் கதாபாத்திரம், தமிழர் மக்கள் படை, பெருமாள் வாத்தியார் மற்றும் காவல்துறை பற்றிக் கொண்டிருந்த பொதுவான மதிப்பீடு, பணிக்காலத்தில் எதிர்க்கொள்ளக்கூடிய நேரடி அனுபவங்களின் யதார்த்தத்திலிருந்து என்னவாக மாற்றமடைகிறது; என்பதின் வழி பார்வையாளர்களிடத்தில் ஒரு அரசியலைப் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர். காவல்துறை மக்களுக்கானதாக என்றுமே இருந்ததில்லை. மக்களின் நியாயமான அரசியல் குரலுக்கு எதிரானதாகவே, அதை வன்முறை கொண்டு ஒடுக்கக் கூடியதாகவே காவல்துறை இருந்திருக்கிறது என்பதைப் படம் பேச விழைந்த அரசியலாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விடுதலை 1
அதனைப் பேசியிருக்கிறதா?

விடுதலை 1 இன் திரைக்கதையானது ஒரு காவலரை முதன்மைப் பாத்திரமாகக் (Protagonist) கொண்டு, அவரின் பார்வையிலிருந்து கதையை விவரித்திருக்கிறது. 'காவல்துறை எதிர் (Vs) மக்கள், மக்கள் போராட்ட இயக்கம்’ என்கிற முரண்பாட்டில் காவல்துறைக்குள்ளாக இருக்கின்ற துறை ரீதியான
பிரச்சனைகள் மற்றும் மக்களுக்கு எதிரான காவல்துறையின் வன்முறைகள், கொலைகள் குறித்து தெளிவாகப் பதிவு செய்துள்ள விடுதலை 1, மக்கள் போராட்ட இயக்கமான தமிழர் மக்கள் படையின் அரசியல் குறித்து ஒரு தடுமாற்றத்தையே கொண்டிருக்கிறது.

படத்தின் பார்வையாளருக்குத் தொடக்கத்திலே தொடர்வண்டி விபத்தின் கோரத்தையும், அதற்குக் காரணமானவர்களாகத் தமிழர் மக்கள் படையையும் சித்தரித்துக் காட்டிவிட்டு, அதன் பிறகான கதையின் போக்கினை குமரேசன் என்ற கடைநிலைக் காவலரின் பார்வையிலிருந்து விவரிக்க முயன்றதானது, கதையில் பார்வையாளர் தரப்பு மக்கள் படை மற்றும் பெருமாள் வாத்தியார், TA குறித்து என்ன விதமான முடிவுக்கு வருவதென்கிற தடுமாற்றம்; படத்தின் இறுதிவரையிலுமே தொடரக்கூடிய வாய்ப்பை விடுதலை-1 கொண்டிருக்கிறது. கதையினை விவரிக்கின்ற முதன்மை பாத்திரமான குமரேசன், மக்கள்
படை, பெருமாள் வாத்தியார் பற்றிக் கொண்டிருக்கும் தடுமாற்றமே பார்வையாளர்களுக்கும் கடத்தப்பட்டிருக்கிறது.

படத்தில் காவலர் இரகு என்பவர் கொல்லப்படுகிறார். அதற்கு எதிர்வினையாக மலைக்கிராமத்தில் நடத்தப்படும் காவல்துறை வன்முறையில் பழங்குடியினப் பெண் காவல்துறையால் சுட்டுப் படுகொலை செய்யப்படுகிறார். ஊடகங்களில் அந்நிகழ்வானது, மக்கள் படையைச் சாந்தவர் கொல்லபட்ட செய்தியாக வெளிவருகிறது. அதேபோல் காவல்துறையின் வதை முகாமிலிருந்த ஒரு முதியவரும், பெண்ணும் காவல்துறையினரால் படுகொலை செய்யப்படுகையிலும் அமைச்சரின் வருகையை எதிர்த்து அவரைக் கொல்ல திட்டமிட்ட மக்கள் படையினர் ராகவேந்தர் தலைமையிலான ஈ-கம்பெனியினால் சுட்டுக் கொலை என்கிற செய்தியாக வெளிவருகிறது. மக்கள் படையோடு தொடர்பில்லாத அப்பாவிகளான அவர்களைக் காவல்துறை சுட்டுக் கொன்றுவிட்டு, மக்கள் படையினரைச் சுட்டுக் கொன்றதாக மக்களிடம் செய்தி பரப்புகிற அநீதியைக் குமரேசன் உணருகிறான்.

மேலும் கதாநாயகி வழியாக அவளது பெற்றோர் எதிர்கொண்ட காவல்துறைக் கொடுமைகளைப் பற்றியும், மக்கள் படையும், பெருமாள் வாத்தியாரும் அவர்களைக் காப்பாற்றியது பற்றியும், அதன் காரணமாக கதாநாயகியின் சித்தப்பாவான இஞ்சினியர் ரமேஷ் மக்கள் படையுடன் இணைந்தது பற்றியும் குமரேசன் அறியும் பொழுது மக்கள் படை பற்றியும், பெருமாள் வாத்தியார் பற்றியும்; அவன் கொண்டிருந்த நிலைப்பாட்டில்மாற்றம் வருகிறது.

குமரேசனின் நிலைப்பாட்டில் இப்படியாக மாற்றங்கள் உருவாகும் சமயத்திலே, அவனது காதலி உள்ளிட்ட மலைக்கிராம பெண்களை நிர்வாணப்படுத்தி காவல்துறை சித்ரவதை செய்கிறது; இதற்குக் காரணமாக இருப்பது பெருமாள் வாத்தியார் என நம்பி அவரைத் தேடிப் பிடிக்க ஒடுகிறான். அவரைப் பிடித்துவிட்டால் மக்களை இன்னல்களிலிருந்து மீட்டுவிடலாம் எனப் பெரு முயற்சியில் இறங்குகிறான்.

படம் பார்க்கிற பார்வையாளர் தரப்பும் குமரேசனுடன் இணைந்து பெருமாள் வாத்தியாரைப் பிடித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நம்புகிற இடம் ஏற்படுகிறது; அதன் காரணமாக மக்கள் படையினரைச் சுட்டு வீழ்த்த, குமரேசன் துப்பாக்கியைக் கையில் எடுக்கும் பொழுது கைத்தட்டி ஆர்ப்பரிக்கிறது. பின்னணி இசையும், ஒளிப்பதிவின் அம்சங்களும் குமரேசனுடனான ஒன்றுதலைப் பார்வையாளருக்கு வழங்குகின்றன. இறுதியில் பெருமாள் வாத்தியாரைப் பிடித்துவிடும் குமரேசன் சாதித்த பெருமிததத்துடன், சக காவலர்களின் பாராட்டைப் பெறுகிறான். இனி காவலர்களெல்லாம் ஊருக்குப் போய் அவுங்க, அவுங்க குடும்பத்தோட மகிழ்ச்சியாக இருக்கலாம் எனப் பூரிப்படைகிறான்.

சாமானியக் கடைநிலைக் காவலனொருவன் அரசுக்கும் (காவல்துறைக்கும்), மக்களுக்கும் (?) மிகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போராட்டக் குழுத்தலைவரை வெற்றிகரமாகப் பிடிக்கின்ற போலீஸ் கதையின்; இயல்பிலேதான் விடுதலை 1 இருக்கிறது. ஆனால் முற்போக்கு அரசியல் தளத்தில் இயங்குகின்ற தோழர்கள் சிலர் விடுதலை 1ல் உள்ளீடாக ஆங்காங்கே பேசப்படுகின்ற அரசியலை வைத்தும், இயக்குநர் வெற்றிமாறனது முற்போக்கு அரசியல் நிலைப்பாட்டின் மீதான நம்பிக்கையில் இருந்தும் விடுதலை-1 ன் கதை காவல்துறை சார்பானது என்கின்ற விமர்சனத்தை ஏற்க, பொருட்படுத்த
மறுக்கின்றனர்.

அவர்கள் குறிப்பிடுவது போலவே விடுதலை-1 உள்ளீடாக, வெவ்வேறு அடுக்குகளில், வெவ்வேறு அரசியலைப் பேசியிருக்கிறது. குறிப்பாக, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவைகளின் மூலம் கிடைப்பதாகக் கூறப்படும் வேலைவாய்ப்புகளின் பேரில் நமது வளங்கள் அந்நிய முதலாளிகளால் சுரண்டப்படுகின்ற அரசியலைப் பேசுகிறது.

TA, சுரங்கத்திற்காக சாலைப் போடும் பணியில் பணியாற்றுகின்ற உழைக்கும் மக்களிடத்திலே தோன்றி,உலகெங்கிலும் பாசிச அரசாங்கங்களால் போடப்படுகிற பெரும் சாலைகளெல்லாம் மக்களின் வளங்களை முதலாளிகள் கொள்ளையடித்துக் கொண்டு செல்வதற்காகவே பயன்படுகிறது. நமது நிலமும், வளமும் முதலாளிகளுக்கானதாக இருக்கக்கூடாது. நமது எதிர்காலச் சந்ததியினருக்கானதாக இருக்க வேண்டும். உங்கள் வளத்தை அழிக்க
நீங்களே துணைப் போகாதீர்கள் எனப் பேசுகிறார்.

படத்தில் தலைமைச் செயல் அதிகாரி பாத்திரம் பேசுகின்ற வசனங்களின் மூலம், சுரங்கத் தொழிலில் ஈடுபடும் முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் போக்கை படம் பேசுகிறது; ’காவல்துறையால் பழங்குடியினப் பெண் கொல்லப்பட்டதையடுத்து நீதி கேட்டுப் போராடும் மக்கள், மக்கள் படையுடன் மேலும் நெருங்கிடாமல் இருக்க, மக்கள் படையிடமிருந்து மக்களைத் தனிமைப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சிகளைப் போராட அனுமதிக்க வேண்டும்’ என்கிறார்
தலைமைச் செயலாளர். தமிழர் மக்கள் படை போலல்லாது சமூகப் பிரச்சனைகளுக்கான எந்தவொரு மக்கள் நடவடிக்கையும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக (Constitution Ambit) இருந்திட வேண்டுமென்று அதிகார வர்க்கம் கவனமாக இருப்பதைப் படம் குறிப்பிட்டு காட்டுகிறது.

அதேபோல் பொதுப்பணித்துறை அமைச்சராக வரக்கூடியவர் அந்நிய, அமெரிக்க முதலீட்டிற்கு ஆதரவாகப் பேசக்கூடிய காட்சியும் இடம்பெற்றுள்ளது. மக்கள் போராட்டக் குழுக்களை ஒடுக்குவதற்கான எதிர் நடவடிக்கையாக (Counter Insurgency) அதிகார வர்க்கம் கையாளும் உத்திகளை சுனில் மேனனது கிராமத் திருவிழா பங்கேற்பின் வழி குறிப்பிட்டுக் காட்டுகிறது. இத்தகைய அரசியல் காட்சிகளினூடே தான் காவல்துறை சார்பான காட்சிகளையும் விடுதலை-1 கொண்டிருக்கிறது என்பதையும் பேசியாக வேண்டியிருக்கிறது.

விடுதலை 1 பல்வேறு அடுக்குகளில் வெவ்வேறான அரசியலை பேசியிருந்தாலும் தொடக்க மற்றும் இறுதிக் காட்சிகளோடு மேற்சொன்ன காட்சிகளும், காட்சியமைப்புகளும் விடுதலை-1 ஐ ஒரு காவல்துறை கதையாக மாற்றியிருக்கிறது. விடுதலை, இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக உருவாகி யிருக்கிறது. விடுதலைத் திரைப்படத்தின் முதல் பாகத்தை ஒரு காவலர் பார்வையிலிருந்து சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குநர். முதல் பாகமானது காவல்துறைப் போக்கில் அமைக்கப்பட்டிருப்பதை ஒரு திரைக்கதை உத்தியாகக் கூட இயக்குநர் பயன்படுத்தியிருக்கலாம்.

முதல் பாகமான விடுதலை-1 இன் இறுதியில் வரும் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டம் போன்று அமைக்கப்பட்டுள்ள காட்சித் தொகுப்பில், பெருமாள் வாத்தியார் பாத்திரம் தன் பார்வையிலிருந்து இரண்டாம் பாகத்தின் கதையை விவரிப்பதாக அறிய முடிகிறது. ஒரே சம்பவத்தை இருவேறு பார்வைகளிலிருந்து இருவர் கூறுவதாகச் சொல்லப்படும் திரைக்கதை உத்தியினை இருவேறு பாகங்களாக இயக்குநர் உருவாக்கியிருக்கக் கூடும். ஆகவே விடுதலை திரைப்படத்தின் முழுமையான அரசியல் விமர்சனம் என்பது இரு பாகத்தையும் பொறுத்தே முன் வைக்க முடியும்.

படமாக விடுதலை-1 திரைப்படத்தின் மீதான விமர்சனத்தைக் கடந்து அதனது மூலக்கதையாகக் குறிப்பிடப்படும் எழுத்தாளர் ஜெயமோகனது தொடர்பிலும் விமர்சனங்கள் எழுந்திருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. ஜெயமோகனது துனைவன் சிறுகதையின் தாக்கத்திலிருந்து விடுதலையின் கதையை உருவாக்கியிருப்பதாக வெற்றிமாறன் கூறுகிறார். படத்திலும் அதற்குரிய அங்கீகாரத்தை ஜெயமோகனுக்குக் கொடுக்க தவறவில்லை. படமாக பார்க்கிற பொழுது ஜெயமோகனது கதையுடன் படம் எவ்வித தொடர்பையும் கொண்டிருப்பதாக உணர முடியவில்லை. ஆனால் படத்தில் காட்டப்பட்டுள்ள காவல்துறை சிறப்புப் படையின் சித்ரவதை முகாம் உள்ளிட்ட பல விடயங்கள் எழுத்தாளர் ச. பாலமுருகனது சோளகர் தொட்டி நாவலை நினைவுப்படுத்துவதாக உள்ளது. அதனைப் பாலமுருகனும் ஏற்கிறார்.

மூலக்கதை என்ற பேரில் (படத்தில் அதனை உணர முடியவில்லை என்றபோதும்) ஜெயமோகனுக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம், பாலமுருகனுக்கு வழங்கப்படாதது விமர்சனத்திற்கு உள்ளானது. இயல்பிலே வலதுசாரியான, இடதுசாரிகள் மீது அரசியல் காழ்ப்பைக் கொண்டுள்ள ஜெயமோகன் விடுதலையின் பேரில் அங்கீகரிக்கப்பட்டதானது, விடுதலை தொடர்பான நேர்காணல்களைப் பயன்படுத்தி இடதுசாரிகள் குறித்து எவ்வித அடிப்படை முதன்மையும் இல்லாத அவதூறுகளை அவர் பேசுவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அரசியலாக, விடுதலையில் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்ட இடமென்பது விடுதலை முன் வைப்பதாக அறியப்படும் அரசியலுக்கு எதிர் அரசியலுக்குரிய வாய்ப்பை உருவாக்கிவிட்டது போல அமைந்துவிட்டது.

திரைப்படங்கள் ஒரு வலிமையான அரசியல் ஊடகங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எதைத் திரைப்படமாக சமூகத்தில் திரையிட்டுக் காட்டப்பட வேண்டும் என்பதில் காலந்தோறும் ஒரு அரசியல் நிலைநிறுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் மேற்சொன்ன திறனாய்வுகளைக் கடந்துத் தமிழர் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த ஒரு முக்கியமான இயக்கத்தையும், அதன் தலைவர்கள் குறித்தும் திரைப்படமாகச் சித்தரிக்கப்பட்ட முயற்சி (இரண்டாம் பாகத்தில் அவர்களது அரசியல் நியாயம் பேசப்படும் என்கிற நம்பிக்கையில்) வரவேற்கத்தக்கது.

தமிழ்த் திரைப்படங்களுக்கான, திரைப்பட ஆர்வலர்களுக்கான கதைக்கூறுகளாக அரசியல் கதைகள் இடம்பெறுவது உள்ளபடியே, ஒரு சமூகம் எதை தனக்கானதாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது என்பதில் நிகழ்ந்த முன்னேற்றமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன் தன் சமகாலத்திய திரைப்படப் போக்கில் சிறப்பான பங்களிப்பைச் செய்வதாகவே தெரிகிறது. தமிழர் வரலாற்றில், தமிழ்த்தேசிய வரலாற்றில் பல்வேறு சம்பவங்கள் திரைப்படத்திற்கான கதைக்கருக்களை கொண்டிருப்பவை. அவை திரையரங்கின் திரைகளில் காட்சிப்படுகையில் ஏற்படுத்துகிற சமூகத் தாக்கம் அரசியல் அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. அத்தகைய முயற்சிகளுக்கான ஒரு வெளி உருவாகி வருகின்ற பொழுது சில நிறை, குறைகள் இருக்கக்கூடும்; இருப்பதும் இயல்பு. அந்தளவிலே விடுதலை 1 தொடர்பான திறனாய்வுகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வோம்.

- பாலாஜி தியாகராஜன், 'மெட்ராசு ரிவ்யூ'

Pin It