தீண்டாமை வலுவாகக் கடைப்பிடிக்கப்படும் இடங்களில் முக்கியமானது பள்ளிக்கூடம். அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளிக் கூடங்கள். சாதி ஏற்றத்தாழ்வை கடக்காமல், எந்த தலித் மாணவராவது பள்ளிப் படிப்பை முடித்திருப்பாரா என்பது சந்தேகமே! உட்காரும் இருக்கை தொடங்கி, குடிக்கும் தண்ணீர், உணவு என அனைத்து நிலைகளிலும் சாதி ஆதிக்கத்தின் வடிவங்களை காண முடியும். பிள்ளைகளுக்கு சமத்துவத்தை கற்றுத் தர வேண்டிய பள்ளிக்கூடங்கள், சாதியைக் கட்டிக் காக்கும் கூடாரங்களாக இருப்பது ஜனநாயக நாட்டின் பெரும் அவலம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திலிருந்து சேத்துப்பட் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கடலி பஞ்சாயத்து. இங்கு முஸ்லிம், வன்னியர், ரெட்டியார், மீனவர், தலித் எனப் பல்வேறு சமூத்தினரும் வசித்து வருகின்றனர். 59 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வன்னியர்கள் வாழும் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி இருந்து வந்திருக்கிறது. அங்கு வழக்கம் போலவே தலித் மாணவர்களை தனியாக உட்கார வைத்துப் பாடம் நடத்துவதில் தொடங்கி பல்வேறு கொடுமைகள் நடந்துள்ளன.

Chinnasami
இந்நிலையில், 1948இல் வெளிநாட்டைச் சேர்ந்ததாரா என்பவர் புனித அன்னாள் ரோமன் கத்தோலிக்க பள்ளியை 13 தலித் மாணவர்களைக் கொண்டு தொடங்கினார். இங்கு தரமான கல்வி அளிக்கப்பட்டதால் முஸ்லிம் மாணவர்களும் இந்தப் பள்ளிக்கு வந்து சேரத் தொடங்கினர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகக் காரணம் காட்டி, பள்ளியை மூட கல்வி அதிகாரி முடிவெடுத்தார். இந்நேரத்தில் ஆசிரியர் சின்னச்சாமி அதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கினார். கடலூர் பாண்டிச்சேரியின் ஆயராக இருந்த அம்புரோஸ், ஆர்.சி. கோவிலின் மேலாளர் நெல்லிக்குணம் மற்றும் டி.இ.ஓ. ஆகியோரை அணுகி பள்ளியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, அவர்களின் முழு அனுமதியோடு பள்ளியை மீண்டும் செயல்பட வைத்தார். ஆசிரியர் சின்னச்சாமியின் அயராத உழைப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் அய்ந்து ஆசிரியர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.

சின்னச்சாமியின் முயற்சியால் 1993 இல் தொடக்கப் பள்ளியாக இருந்தது, பிறகு நடுநிலைப் பள்ளியாக வளர்ச்சியடைந்தது. அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களின் விருப்பத்திற்கேற்பவும் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை கிடைக்கும் என்ற நல்லெண்ணத்துடனும் இதே பள்ளி உயர் நிலைப் பள்ளியாக்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதே தவிர, அரசிடமிருந்து இதற்கு எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. ஆசிரியர் பணி நியமனமும் செய்யப்படவில்லை. சின்னச்சாமி தனது ஓய்வூதியப் பணத்தையும் தனது நிலத்திலிருந்து பெறும் சொற்பப் பணத்தையும் வைத்தே -உயர்நிலைப் பள்ளிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதைப் போராடி பெற்றாரே தவிர, அரசிடமிருந்து இதற்கு எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. சின்னச்சாமி தனது ஓய்வூதியப் பணத்தையும் தனது நிலத்திலிருந்து பெறும் சொற்பப் பணத்தையும் வைத்தே தற்பொழுது உயர்நிலைப் பள்ளியை நடத்தி வருகிறார்.

1982 கல்வியாண்டில் சத்துணவுத் திட்டம் இப்பள்ளிக்கு அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு தலித் பெண் சமைப்பதற்காக அமர்த்தப்பட்டார். 5.10.1982 அன்று "சக்கிலிச்சி சமைக்கிற சாப்பாட்ட யாரும் சாப்பிடக் கூடாது; யாரும் பள்ளிக்குப் போகக் கூடாது' என்று ஷேக் தாது என்பவரின் தலைமையில் முஸ்லிம் மாணவ, மாணவிகளும், வன்னியர் மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வருவதிலிருந்து நிறுத்தப்பட்டனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தது. ஆசிரியரின் எண்ணிக்கையும் 5லிருந்து 2ஆகக் குறைக்கப்பட்டது. இப்பொழுது 1 முதல் 10 வகுப்புகள் வரை உள்ள இந்தப் பள்ளியில், இரண்டு அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

கடலி பஞ்சாயத்தில் "கடலி' என்ற கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இருக்கும் நிலையில், எந்தவொரு அனுமதியுமின்றி வன்னியர்கள் தங்களது பகுதியில் ஏற்கனவே தொடக்கப் பள்ளியாக இருந்ததை நடுநிலைப் பள்ளியாக உயர்த்த முயன்றனர். சட்டப்படி நடுநிலைப் பள்ளியாக்க வேண்டுமென்றால், ஒரு நடுநிலைப் பள்ளியிலிருந்து புதிதாகத் தொடங்கப்படும் பள்ளி 3 கிலோ மீட்டர் அளவு தூரத்தில் இருக்க வேண்டும்; பள்ளி மாணவ, மாணவிகளுக்கென்று தனியாக குறைந்தது மூன்று கழிப்பிட வசதிகளாவது இருத்தல் வேண்டும்; ஆறாம் வகுப்பில் சேரும்போது குறைந்தது 25 பிள்ளைகளாவது இருக்க வேண்டும்.

ஆனால், வன்னியர் சமூகத்தினர், ஏற்கனவே சின்னச்சாமி ஆசிரியர் நடத்தி வந்த பள்ளியிலிருந்து 438 அடி தூரத்திலே மற்றொரு நடுநிலைப் பள்ளிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தனர். இப்படி விண்ணப்பித்தவுடன் உதய சூரியன் என்பவரின் (வன்னியர்) தூண்டுதலால், சுமார் 50 பேர் கூட்டமாக மது அருந்திவிட்டு சின்னச்சாமியிடம் சென்று, “எங்கள் பிள்ளைகளின் கல்விச் சான்றிதழ்களைக் கொடு” என்று கேட்க, சின்னச்சாமியோ “நாளை வாருங்கள்” என்று கூறி அவர்களை அனுப்பியுள்ளார். அவர் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மறுநாள் காவலர்கள் எல்லாரையும் வரவழைத்து, அந்தந்த பெற்றோர்கள்தான் அவரவர்களுடைய குழந்தைகளின் கல்விச் சான்றிதழ்களைப் பெற வேண்டும் என்று கூற, சாதி இந்துக்களும் சரி என்று கூறி தலையாட்டிச் சென்றுள்ளனர்.

சட்டத்தின் விதிமுறைகள் தனது பக்கமே உள்ளது என்பதை மிகத் தெளிவாக உணர்ந்த ஆசிரியர் சின்னச்சாமி, நீதிமன்றம் சென்று 438 அடிக்கு அருகில் மற்றொரு நடுநிலைப் பள்ளிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதி, “தகுதி அடிப்படையிலும், சட்டத்தின் விதிமுறை அடிப்படையிலும்தான் பள்ளியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தங்கள் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்த சட்டத்தில் இடமில்லை என்பது தெரிந்தவுடன் வன்னியர் சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர நினைத்த மாவட்ட அதிகாரிகள், அவர்களுக்கு அனுமதி வழங்க உதவி செய்வதாக உறுதி அளித்தனர்.

2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் நடுநிலைப் பள்ளிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறி தடை ஆணை வாங்கினார் சின்னச்சாமி. இருப்பினும், 2007 ஆம் ஆண்டு இத்தனை விதிமுறைகளையும் மறைத்து (சரி செய்யாமல்) விண்ணப்பம் செய்து, நடுநிலைப் பள்ளிக்கு அனுமதி வாங்கிக் கொண்டனர். இத்தகையதொரு அநீதிக்கு, மேல்மலையனூர் தொகுதி பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் துணை போயிருக்கிறார். ஆனாலும் இவ்வளவு எதிர்ப்புகளையும் கண்டு அஞ்சாமல் சின்னச்சாமி மீண்டும் தடை ஆணைக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், ஒப்புதல் சான்றிதழ் கிடைக்காததால் உதயசூரியன் என்பவர் பல ஆட்களை அழைத்துக் கொண்டு 48 ஆண்டுகளாக சின்னச்சாமி பாடுபட்டு நடத்திக் கொண்டிருந்த (புறம்போக்கு நிலத்தில்) தொடக்கப் பள்ளியை சீரமைத்து நடத்தக் கூடாது என்று சொல்லி வேலையை நிறுத்திவிட்டார். இந்நிலையில் ஆதரவற்ற சிறார்கள் தங்கிப் படிப்பதற்காக கதர் கிராம கைத்தொழில் வாரியத்திடமிருந்து கல்வித் துறை ஒரு கட்டடம் விலைக்கு வாங்கி கொடுத்தது. இந்த விடுதியில் 25 பேர் இருந்தனர். அந்தக் கட்டடத்தையும் சீரமைத்து கட்டக் கூடாது என்று உதய சூரியனும் அவரை சார்ந்தவரும் மிரட்டி நிறுத்தியதோடு, சின்னச்சாமி ஆசிரியரை இரண்டு முறை கன்னத்தில் அறைந்து, எட்டி உதைத்துள்ளனர்.

சாதி இந்துக்கள் சிலரின் ஆணவப் போக்கால் பல மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று உணர்ந்த சின்னச்சாமி, சைக்கிளில் அவர்களது வீட்டுக்கே சென்று பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகளை அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் செருப்பு போட்டு சைக்கிள் ஓட்டுவதைப் பொறுத்துக் கொள்ளாத சாதி இந்துக்கள், அவரை செருப்பு போட்டு சைக்கிள் ஓட்டக் கூடாது என்று சொல்லி அவரைத் தடுத்து நிறுத்தி கேள்வி மேல் கேள்வி கேட்டு அவமானப் படுத்தியுள்ளனர். “நீ பிராமணனா? செருப்பு போட்டு சைக்கிளில் போவியோ, சக்கிலியன் வாத்தியாரா வந்துட்டா சைக்கிளில் போகணுமா?” எனக் கேட்டு அவரை இழிவுபடுத்தியுள்ளனர்.

இது குறித்து சின்னச்சாமி, தனது ஊருக்கு அருகில் உள்ள செஞ்சி வட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய, காவலர்கள் சாதி இந்துக்களைக் கண்டித்தனர். அதிலிருந்து சாதிக் கொடுமை சற்று குறைந்து காணப்பட்டது. ஆனாலும் அவருடைய போராட்டத்துக்கு ஆதரவாக யாரும் இல்லாததால் -மாணவர்கள் படிக்க சரியான கட்டடம் கட்ட முடியாமலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒழுங்கான தங்கும் விடுதி அமைத்துக் கொடுக்க முடியாமலும் தவிக்கிறார் சின்னச்சாமி.

வன்னிய சமூகத்தினரால் நடத்தப்படும் 1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளுக்கு, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் 3 பேர். ஆனால், சின்னச்சாமி 1 முதல் 10 வகுப்புகள் வரை நடத்தும் பள்ளிக்கு அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் 2 பேர். இது என்ன நியாயம்? எல்லோரும் சரிசமமாக கல்வி பெற வேண்டும் என்கிற சின்னச்சாமி ஆசிரியருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஏழைகளின் கல்வியைக்கூட தட்டிப் பறிக்கும் சாதி இந்துக்களான உதய சூரியனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் அரசு உதவுகிறது.

ஒவ்வொரு நாளும் தலித் மக்களுக்காக அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் தலித் தலைவர்களே! தலித் மக்களின் விடுதலை விரும்பிகளே! ஒவ்வொரு நாளும் சமத்துவக் கல்விக்காக தன்னுடைய வாழ்க்கையைப் பணயமாக வைத்துப் பேராடும் சின்னச்சாமி பக்கம் யாருமே இல்லாத நிலையில், நீங்களாவது அவர் பக்கம் நிற்பீர்களா? ஒரு சமுதாயம் விடுதலை பெற வேண்டும் எனத் துடிப்போடு போராடும் உங்களுக்கு -ஒரு தனி மனிதர் ஒரு கிராமத்தின் விடுதலைக்காகப் பேராடுகிறார் என்பதில் எழுச்சி பெற்று, அவரின் விடாமுயற்சியில் பங்கெடுத்து வெற்றியை நிலைநாட்ட ஆதரவுக் கரம் நீட்டுங்கள்.

தலித்துகளுக்காக தனிமனிதராய் போராடி சாதனைகள் பல செய்து வரும் புரட்சியாளர் சின்னச்சாமியிடம் உரையாடிப் பெருமூச்சு விட்டு நன்றியோடு விடைபெறும்போது, அவர் எம்மை நிறுத்திப் பணிவோடு கேட்டுக் கொண்டார் : “சார் எனக்காக ஜெபம் செய்து கொள்ளுங்கள். இந்த விரோதிகளால் எனக்கு சாவு வரக் கூடாது. நான் வாழும் இந்த சமூகமும் முன்னேற முடியும் என்பதை நான் உலகத்திற்குக் காட்டிய பிறகு தான் எனக்கு சாவு வரவேண்டும்.”

- எஸ். மகிக்குமார், எஸ்.எ. துரை
Pin It