‘தருமபுரி எதிரொலிகள்’

ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: வெண்மணி அரிநரன்

தர்மபுரியில் நிகழ்விடத்திலிருந்து எனது நண்பர் பேராசிரியர் சி.லக்சுமணன் இன்று என்னை அழைத்தார். நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் இருந்த பயங்கர நிலைமைகள் குறித்து தழுதழுத்த குரலில் விவரித்தார். நவமபர் 7 அன்று அங்கு தலித்துக்களின் ஏறத்தாழ 500 வீடுகள் வன்னியர் (ஒரு பிற பிற்பட்டோர் சாதி -OBC) கும்பலால் கொள்ளையிடப்பட்டன, எரிக்கப்பட்டன. அந்தப் பேரழிவின் நிகழ்விடத்திற்குச் சென்று சேர்ந்திருந்த ஓர் உண்மையறியும் குழுவில் அவர் பங்கேற்றிருந்தார். நவம்பர் 8 அன்று ஒரு செயல்வீரர் ஒருவரின் குறுஞ்செய்தி மூலமாகவும் அதைத் தொடர்ந்து செய்தித்தாள்களில் வந்திருந்த சிறிய அளவிலான செய்திகள் மூலமாகவும் அதை நான் அறிந்திருந்தேன். இன்னும் கூட அந்த அதிர்ச்சியை நான் தீவிரமாக உணர்கிறேன்.

இளவரசன் என்ற ஒரு 23 வயது பறையர் பையனுக்கும் திவ்யா என்ற 20 வயது பெண்ணுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த காதல் திருமணமே இந்த சாதி வன்முறைக்கு உடனடிக் காரணமாக இருந்தது. அந்தப் பெண்ணின் குடும்பம் காவலதுறையை அணுகியது. அந்தத் திருமணம் சட்டப்படி செல்லத்தக்கது என்று காவல்துறையினர் இரு தரப்புக்கும் ஆலோசனை தெரிவித்தனர். இதற்கிடையில் 30 ஊர்களைச் சேர்ந்த வன்னியர்கள் ஒரு கூட்டம் நடத்தி, இந்த விடயம் பற்றி விவாதித்தனர். முந்திய வாரம் அவர்கள் ஒரு ‘கட்டப்பஞ்சாயத்து’ நடத்தி, அந்த தலித் குடும்பத்திடம் புதன் கிழமை அந்தப் பெண்ணை கொண்டுவந்து ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர். ஆனால் திவ்யா அதற்குக் கீழ்ப்படிய மறுத்து, தான் இளவரசனுடன் தான் வாழப்போவதாக தெளிவுபடுத்தி விட்டார். தருமபுரி காவலதுறைக் கண்காணிப்பாளருக்கு இது அனைத்தும் தெரியும். மேலும் அதில் பங்கெடுத்துக் கொண்டவர்களை காவல்துறையினர் தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

நவம்பர் 6 அன்று, பெண்ணின் தந்தை ஜி.நாகராஜன் (வயது 48) திடீரென்று செல்லன்கொட்டாயிலிருந்த அவரது வீட்டில் இறந்துவிட்டார். அவருடைய வீட்டுக்கும் நத்தம் தலித் குடியிருப்புக்கும் தூரம் அதிகம் இல்லை. தன்னுடைய மகள் ஒரு பறையர் பையனைத் திருமணம் செய்து கொண்டதை சீரணிக்க முடியாமல் அவர் இறந்துவிட்டதாக வன்னியர்கள் கூறிக் கொண்டனர். ஆனால் தங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஒரு காரணம் கற்பிப்பதற்காக, அவர் வன்னியர்களால் கொலை செய்யப்பட்டதாக தலித்துகள் நினைத்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் முதலாவது அவதாரமான வன்னியர் சங்கத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.குரு சமூகக் கூட்டம் ஒன்றில் சாதியிடைத் திருமணத்தை தடை செய்து அறிவித்தது இன்னும் நினைவில் மங்கிவிடாமல் இருந்தது. பின்விளைவுகள் எதுவாக இருந்தாலும், பிற பிற்பட்ட சாதிப் பெண்கள் தலித் பையன்களைத் திருமணம் செய்வதற்கு எதிராகத் தீர்மானம் செய்ய இந்தப் பொதுக் கூட்டம் தமிழ்நாட்டில் பிற பிற்பட்ட சாதியினரைத் தூண்டியது. தமது சமூகத்தைப் பிரநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொள்ளும் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை சாதியிடைத் திருமணங்களை எதிர்ப்பதற்கு சமூக உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டுவதற்கு செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிட்டது, மேலும் அதற்கு எதிராக ஒரு இயக்கத்தையும் தொடங்கியது. இது அனைத்தும் அரசுக்குத் தெரியும். எனவே இந்த நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நடந்துள்ள சாதிக் கட்டமைப்பின் தருணத்தோடு சேர்த்துக் காணப்படவேண்டும்.

அடிக்கடி மின்வெட்டு காரணமாக நாகராஜனின் உடலின் சடலக் கூராய்வு தாமதப்பட்டது என்று கூறப்பட்டது. அவரது உடல் வியாழக்கிழமை மாலை தான் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க‌ப்பட்டது. ஏறத்தாழ அதேநேரத்தில் 2500 பேர் கொண்ட ஒரு கும்பல் நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய ஊர்களில் தலித் வீடுகளைத் தாக்கியது. இந்தச் சிக்கலை எதிர்பார்த்து, 300 பேர் கொண்ட வலிமையான காவல் படையை நிர்வாகம் நிறுத்தியிருந்தது. ஆனால் கும்பல் அதைவிடப் பெரிதாக இருந்தது என்று எளிதாக கூறப்படுகிறது. காவல்துறையின் இந்த செயலற்ற தன்மைக்கு கூறப்படும் விந்தையான தர்க்கம் இதுவரை யாராலும் கேள்விக்குள்ளாக்கப் படவில்லை. இத்தனைக்கும் தாக்கியவர்களைக் காவல்துறை ஒருபோதும் தடுத்ததாக சாட்சியம் ஏதுமில்லை. காவல்துறை தரப்பில் யாராவது காயமடைந்திருந்தால் கூட இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

காவல்துறையின் இந்த அபத்தமான தர்க்கம், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டுமானால் நாட்டின் மக்கள் தொகை அளவுக்கு காவலர்கள் இருக்கவேண்டும் என்று கூற விரும்புவது போல இருக்கிறது. உண்மை என்னவென்றால், தலித்துக்கள் சொல்வது போல, அந்தக் குமபல் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையிட்டு விட்டு, வீடுகளுக்குத் தீ வைத்த போது, காவல்துறையினர் வழக்கம் போல அமைதியான பார்வையாளர்களாக இருந்தார்கள். இளைஞர்கள் அனைவரும் பெங்களூருவுக்கும் திருப்பூருக்கும் வேலைகளுக்குச் சென்று விட்டிருந்ததால், வீடுகளில் வயதானவர்களும், பெண்களும் குழ்ந்தைகளும் தாம் இருந்தனர்,. அவர்கள் வயல்களுக்கும் காடுகளுக்கும் அல்லது அருகாமையில் இருந்த கிராமங்களுக்கும் ஓடினர். அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்டு நடந்தது. காவல்துறையும் இதை அறிந்திருந்தது. அந்த சட்டவிரோதக் கும்பல் மரங்களை வெட்டி சாலைகளின் குறுக்கே போட்டு தடுத்திருந்தது. எனவே தீயணைப்பு வண்டிகள் அந்தக் கிராமங்களைச் சென்று சேரவில்லை. அந்தக் கும்பல் வன்முறை ஏறத்தாழ ஐந்து மணிநேரம் நடந்து, அனைத்தும் சாம்பலான பிறகு 9.30 மணி வாக்கில் முடிவுக்கு வந்தது.

கூடுதலாக 1000 காவலர்கள் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்ப‌ட்டதாகவும் 90 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை கூறிக்கொண்டது. மேலும் 210 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 300 குற்றவாளிகள் மீது மட்டுமே குற்றம் சாட்டப்படுமானால், அவர்கள் காவல்துறையின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக இருந்தது எவ்வாறு? வீடுகளையும் உடைமைகளையும் இழந்தவர்களுக்கு முதலமைச்சர் தலா ரூ.50,000 இழப்பீடாக அறிவித்துவிட்டு, வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெற்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இடதுசாரி இயக்கம் வலிமையாக இருந்து வந்த சிற்றூர்களில் இந்த வன்முறை நடந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. தருமபுரி மாவட்டம் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் நக்சலைட் இயக்கத்தின் தலைமையகமாக இருந்தது. நக்சலைட் இயக்கம் வீழ்ச்சியில் இருப்பதால் அந்த மாவட்டத்தில் சாதியம் அதன் கோரமான தலையைத் தூக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். வன்னியர்களும் தலித்துக்களும் பொருளாதார ரீதியில் மிகுதியாக வேறுபட்டவர்கள் அல்ல. ஆனால் அவர்களுடைய தலைவர் இராமதாசு விழிப்பூட்டும் அறிக்கைகளை வெளியிட்டும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வந்தபோதிலும் அவர்கள் வன்முறை மோதலில் பலமுறை ஈடுபட்டு வந்ததற்கு நச்சுத் தனமான சாதித் துணிச்சல் தான் காரணமாகும். தென் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது வட தமிழ்நாட்டில் தலித்துக்களும் பிற பிற்பட்ட சாதிகளுக்கும் இடையில் சிறிதளவாவது சமூக நல்லிணக்கம் இருந்தது என்றால் அந்தப் பெருமை இராமதாசுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கும் தான் சேரும் என்று கூறலாம். ஆனால் சாதிகளிடையே அத்தகைய ஒட்டுவேலை சாதி உணர்வின் அழிவைக் குறிப்பதில்லை என்பதை வன்னியர்களிடையே உள்ள பழமைவாத, உக்கிரமான சாதிய சக்திகள் போதுமான அளவுக்கு எடுத்துக் காட்டுகின்றன. அது தற்காலிகமாக அடங்கியிருந்ததை மட்டுமே குறிக்கிறது. அதற்கு மாற்றாக வர்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றுசேர்த்து ஒட்டுமொத்தமாகச் சாதியை அழிப்பதே இந்த நச்சுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு ஆகும். பல நன்கறிந்த மனிதர்களுக்கும் கூட அது கடினமானதாகத் தோன்றினாலும், அந்தப் பிரச்சனைக்கு வேறு எந்தத் தீர்வும் இருப்பதாகத் தெரியவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி தொடங்கிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாட்டில் ஒரு நல்ல பணியைச் செய்து வருகிறது. அது தனது குழுவைத் தர்மபுரிக்கு அனுப்பி, நன்கு நிறுவப்பட்ட தலித் கட்சி கூட வைத்திராத மிகவும் அறிவார்ந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. உண்மையில், தர்மபுரியில் உள்ள பிரச்சனை தலித்துக்களுக்கு சரியான முறையில் மறுவாழ்வை அளிப்பதாகும். வெட்கமற்ற முறையில் தொலைகாட்சிப் பெட்டிகளையும் மடிக்கணினிகளையும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களையும் வழங்கும் போக்கைத் தொடங்கி வைத்திருக்கும் ஆளும்கட்சிகள் அற்பத் தொகையான ரூ.50000த்தை இழப்பீடாக அறிவித்திருப்பதற்கு எஸ்.சி./எஸ்.டி சட்டத்தை சாக்காகப் பயன்படுதத்திக் கொண்டுள்ளன. மற்றபடி அவை அதை மீறககூடியவையாக இருக்கின்றன. அந்த இழப்பீடு வன்கொடுமைத் துன்பத்திற்கானதாகும், மாறாக‌ உடமை இழப்புகளுக்கான இழப்பீடு அல்ல. அவர்களுடைய இழப்புக்களுக்கு மட்டுமல்லாது அவர்கள் அனுபவித்த வேதனைகளுக்கும் இழப்பீடுகள் வழங்க வேண்டியது தலித்துக்களைப் பாதுகாக்கத் தவறிய அரசாங்கத்தின் கடமையாகும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான வீடுகளை அரசாங்கம் கட்டித்தர வேண்டும், உண்மையான இழப்புகளுக்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும், காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், அவர்களுடைய ஆவணங்களை மீட்டுத்தரவேண்டும், அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் ஆகிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கைகள் மிகுதியும் ஆதரிக்கப் படவேண்டியவையாகும். அந்த முன்னணி, கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்பு என்பதால், ஆக்கப்பூர்வமான முறையில் சாதி-எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கும் அதே வேளையில், அவர்கள் தங்கள் முயற்சிகளை மேலும் உயர்த்திக் கொண்டு, மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றுபடுத்தும் வகையில் சிந்திக்க வேண்டும்.

தர்மபுரியில் உயிரிழப்பு எதுவும் இல்லையென்றாலும், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கீழ்வெண்மணியில் நடந்த படுகொலையை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்துகிறது. 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நிலப்பிரபுக்களின் அடியாட்கள் அங்கு இதே போல ஒரு தலித் குடியிருப்புக்கு தீயிட்டனர். துரதிர்ஷ்டசாலிகளான 44 தலித்துக்கள், பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள். அதுவே சுதந்திரதிற்குப் பிந்திய இந்தியாவில் தொடங்கிவைக்கபட்ட ஒரு புதுவகை வன்கொடுமை என்று நான் குறிப்பிடுவேன். நேருவிய சோசலிச ஆட்சி என்று அழைத்துக் கொள்ளப்படும் இந்த ஆட்சி, அரைவேக்காட்டு நிலச்சீர்திருத்தம், பசுமைப் புரட்சி ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு பின்பற்றும் வளர்ச்சியின் முதலாளித்துவ மூலஉத்தியால் கிராமப்புறத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் பொருளாதார மாற்றத்தின் விளைவு தான் இது என்று ஒருவர் அறிவார்ந்த முறையில் பகுப்பாய்வு செய்து கூற மூடியும்.

இந்த மூல உத்தி முந்தைய சூத்திர சாதி விவசாயிகளிலிருந்து (இன்றைய பிற்பட்ட/பிற பிற்பட்ட என்று வாசிக்கவும்) ஒரு பணக்கார விவசாயிகளின் வர்க்கத்தை உருவாக்கியது. அதை மத்தியில் ஆளும் வர்க்கங்கள் ஒரு முக்கியமான கூட்டாளியாகவும் அரசியல் அதிர்ச்சி தாங்கியாகவும் ஆக்கிக் கொண்டன. மேலும் பழைய சாதிய சமூக அடிப்படையிலான எஜமானிய முறையின் பாதுகாப்பின்றி, தலித்துக்களை கூலி உழைப்பை சார்ந்து வாழும் தூய பாட்டாளி வர்க்கமாக உருமாற்றியது. பணக்கார விவசாயிகளின் இந்த வர்க்கம் பார்ப்பனியத்தின் அதிகார பாத்திரத்தை ஏற்றுக்கொண்டது. உயர்சாதி நிலப்பிரபுக்கள் கிராமங்களை விட்டு, வளமான வாய்ப்புகள் இருப்பதைத் தெரிந்து கொண்டு அருகாமை நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இந்த வர்க்கம் மின்னல் வேகத்தில் செழிப்படைந்து அதிகாரத்தையும் பெற்றது. ஆனால் அது உயர்சாதிகளின் பாரம்பரிய கலாச்சார நுட்பத்தை இழந்தது. அது தனது சாதிப் பிணைப்புக்களைப் பயன்படுத்தி எண்ணிக்கையில் மிகுதியாக ஆக்கிக் கொண்டது. அவர்களுக்கும் கூலி உழைப்பாளர்களாக ஆகிவிட்ட தலித்துக்களுக்கும் இடையிலான புதிய விவசாயப் பொருளாதாரத்தின் முரண்பாடுகள் பலநேரங்களில் ஆண்டுவிழாக்களைப் போல சாதிகளின் மோதல்கள் மூலமாக சாதி வன்கொடுமைகளாக வெளிப்பட்டன. கீழ்வெண்மணி, பின்னர் வந்த அதன் வகைபட்ட பல நிகழ்வுகளுக்கான தொடக்கமாக இருந்தது.

கீழ்வெண்மணி 44 ஏழை தலித்துக்களைப் பலி கொண்டது. அந்த நாட்களில் தலித்துகளுக்கு இழப்பதற்கு அவர்களுடைய உயிர்களைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. 2012ல், கீழ்வெண்மணிக்கு இரண்டு தலைமுறைகள் கழித்து, சமுதாயத்தின் நிலை அதே போல இல்லை. 1960களில் கிராமங்களில் நிலப்பிரபுவுக்கும் அவரது உறவினர்களுக்கும் சொந்தமான ஒன்றிரண்டு முழுமையான தரமான வீடுகள் தாம் இருந்தன. ஆனால் இப்போதோ அப்படிப்பட்ட நிறைய வீடுகள் இருக்கின்றன. தலித்துக்களுக்கும் கூட இருக்கின்றன. அவை சமத்துவம் அதிகரிப்பதைக் குறிப்பதாக இல்லாவிட்டாலும் கல்விப் பரவலும் தொலைக்காட்சிப் பரவலும் உறுதியாக கலாச்சார மட்டத்தை உயர்த்தியுள்ளன. தலித்துக்களுக்கும் பிறருக்கும் இடையில் உள்ள ஒப்பீட்டளவிலான இடைவெளி அதிகரித்து இருக்கலாம். ஆனால் தலித்துக்கள் தங்களுடைய அழிந்து போன சுயங்களை தங்களுடைய பெற்றோர்களுடையதைப் போல உறுதியாகப் பார்ப்பதில்லை. அவர்கள் தங்களுடையதும் தங்களுடைய குழந்தைகளுடையதுமான வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள கடுமையாகப் பாடுபட்டு வருகிறார்கள்.

தர்மபுரியில் உள்ள பெரும்பாலான தலித்துக்கள் பெங்களூருவில் கட்டுமானத் தொழில்துறையிலும் திருப்பூரில் தொழிற்சாலைகளிலும் கடினமாக உழைத்து, தங்களுடைய சம்பாத்தியங்களை தாங்கள் விட்டுவிட்டு வந்த குடும்பங்களுக்கு நல்ல வீடுகளைக் கட்டித் தருவதில் முதலீடு செய்தனர். அவர்களுடைய வீடுகளும் அவற்றில் இருந்த பொருட்களும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக்காட்டின. இந்த முதலீட்டை அழிப்பது என்பது எரிக்கப்பட்ட அந்த வீடுகளில் வாழ்ந்த அனைத்துத் தலித்துகளையும் எரித்ததற்குச் சமமாகும். எதிர்த்து நிற்கும் தலித்துக்களுக்கு ஒரு ‘பாடம் கற்பிப்தற்காக’ தலித் உயிர்கள் மீது அல்லாமல் தலித் உடமை மீது அதிகபட்ச சேதத்தை விளைவிப்பது அவர்களுக்கு எளிதாகியுள்ளது. இதுவே சாதி வன்கொடுமைகளுக்குப் பின்னால் உள்ள அடிப்படை நோக்கமாகும்.

இந்தப் பொருளில், கீழவெண்மணியை விட தருமபுரி மோசமானதாக எடுத்துக் கொள்ளப்படவேண்டும். 1960களில் தலித் இயக்கம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறப்பட முடிந்தது. இன்று அது பின்னோக்கிச் சென்று கொண்டிருகிறது. பிரதிநிதித்துவ தர்க்க நியாயம் முழுவட்டத்திற்கு வந்துவிட்டது. பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் தலித் பிரதிநிதித்துவம் நிறைந்திருந்தாலும், நிர்வாகக் கட்டமைப்பின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்று சேர்ந்துள்ள ஒரு கணிசமான நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி வைத்திருந்தாலும், பின்தங்கிவிட்ட தலித் மக்கள்திரளுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை. புதிய தாராளவாதம் ஏற்கனவே அதன் பிரதிநிதித்துவ தர்க்க நியாயத்திற்கு நினைவஞ்சலிப் பாடலை பாடிவிட்டது. மக்களுக்கு முன்னால் உண்மைகளை அச்சமின்றி எடுத்துவைக்க வேண்டிய அறிவுஜீவிகள் எதார்த்த நிலமைகளைக் ‘கேலிச்சித்திரக் கருத்து வேறுபாடுகளுடன்’, இணைத்துக் குழப்புவதில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய கேள்விகளுக்கும், இவை போன்ற பிற கேள்விகளுக்குமான பதில்களைத் தருமபுரி நிகழ்ச்சி தேடிக்கொண்டிருக்கிறது.
 
10 நவம்பர், 2012.

Pin It