தனியார் துறையில் இடஒதுக் கீட்டை வலியுறுத்தியும், இடஒதுக் கீட்டுக்கு எதிராக பார்ப்பனியம் கூக்குர லிடுவதைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.இராசா, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ டில்லி பதிப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவம்:

ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக் கிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பட்டியல் இனப்பிரி வினருக்கான இடஒதுக்கீட்டில் கிரிமிலேயரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இவர்களில் பலரின் விருப்பம். குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்டுப் போராடுவதையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்தக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யதையும் தொடர்ந்து இடஒதுக்கீடு தொடர்பாக கட்டுரைகள் ஏராளமாக குவிந்து கொண்டிருக் கின்றன.

சமூகத்தின் ‘மேல்தட்டு அறிவாளி’ப் பிரிவினருக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு உறுத்திக் கொண்டே இருக்கிறது. சமூகநீதி என்ற கருத்தே அவர்களுக்கு கசப்புதான். இடஒதுக்கீட்டின் பயன், சமூகத்தில் ஏழை மக்களுக்குக் கிடைக்கவில்லை என்றும், ஒரே சமூகத்தில் வசதி படைத்த பிரிவினர் தான் பயன் பெற்று வருகிறார்கள் என்றும் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இப்படி அடித்தளத்து மக்களுக்காகக் கவலையோடு கண்ணீர் விடுவோர் எல்லாம் பிரபலமான தொழில் கல்வி நிறுவனங் களில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படித்தவர்கள். இவர்கள் சமூகத்தில் பிரபல மானவர்களாகவும் மதிக்கத்தக்கவர்களாகவும் இருக்கும் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், தொழிலதிபர்களாக இருந்தாலும்கூட இவர்களிடம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீதான சமூகப் பொருளாதாரச் சுரண்டல்களைப் பற்றிய தெளிவான சமூகப் பார்வை இருப்பது இல்லை. சமூகநீதிக் கொள்கையை வெறுப்பாகவே பார்க்கிறார்கள். குறிப்பாக, பொதுத் துறை நிறுவனங்களில் இப்போது பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்பதே இவர்களின் விருப்பம்.

குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன், 2000ஆம் ஆண்டிலேயே இது குறித்து எச்சரித்தார். சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அதற்கு எதிரான எதிர்ப்புரட்சி எந்த நேரத்திலும் வரக்கூடும் என்றார் அவர். உரிய தகுதி இல்லாதவர்கள் எல்லாம் அரசுப் பதவிகளின் அதிகாரமிக்க இடத்தை ஒதுக்கீடு கொள்கை வழியாகப் பிடித்துக் கொண்டு விட்டதாக கூறி வரும் இந்த “மேல்மட்ட அறிவாளிகள்” ஒரு உண்மையை மட்டும் பேசுவதே இல்லை. இப்போது வேலைகளுக்கான வாய்ப்புகளே அரசுத் துறைகளில் இல்லை. தனியார் துறைகளில் தான் உருவாகிறது என்பதே அந்த உண்மை. இதில் மவுனம் சாதிக்கிறார்கள். தனியார் கட்டுப்பாட் டிலுள்ள 500 தொழில் நிறுவனங்களில் (பி.எஸ்.ஈ. கம்பெனிகள்) அண்மையில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சியான தகவல்கள் வந்துள்ளன. மக்கள் தொகையில் 14 சதவீதம் உள்ள முஸ்லிம்கள் இந்த நிறுவனங் களில் 2.67 சதவீதம் பேர் மட்டுமே மூத்த நிர்வாகிகளாக உள்ளனர். எண்ணிக்கையில் சொல்ல வேண்டுமானால், 2324 இயக்குனர்களில் முஸ்லிம்கள் 62 பேர் மட்டுமே. இதேபோல் தலித் பிரிவினர் பற்றிய ஆய்வு நடத்தப்படுமானால், அது இதைவிட மிக மோசமானதாகவே இருக்கும்.

தனியார் நடத்தும் தொழில் கல்வி நிறுவனங்களில் என்ன நடக்கிறது? கூடுதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன் தனக்கு இடம் கிடைக்காத நிலையில் தன்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவருக்கு இடம் கிடைக்கும்போது ஆத்திர மும், விரக்தியும் வந்து விடுகிறது என்று இந்த ‘ஆய்வாளர்கள்’ வாதிடுகிறார்கள். இந்த ‘ஆய்வாளர்களிடம்’ நாம் ஒரு கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது. இந்த தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை எப்படி நடக்கிறது? சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து ஏழ்மைப் பின்னணியில் உழலும் ஒரு மாணவன் அதை எப்படிப் பார்க்கிறான் என்பது இவர்களுக்குத் தெரியுமா? உதாரணத்துடன் விளக்குவோம். ஒரு அரசு மருத்துவக் கல்லூரி யில் திறந்த போட்டியில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு ‘கட் ஆப்’ மதிப்பெண் 98; பிற்படுத்தப்பட்டோருக்கு 97; பட்டியல் இனப் பிரிவினருக்கு 90. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்ச மதிப்பெண்

40 பெற்றிருந்தாலே பல கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து, இதே மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட முடியும். இந்த நிலையில் 97.7 சதவீத கட் ஆப் மதிப்பெண் பெற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத ஒரு மாணவன், 40 மதிப்பெண்கள் பெற்று, தனியார் கல்லூரிக்குள் நுழையும் மாண வனைப் பார்த்து ஆத்திரப்பட மாட்டானா? ஆத்திரம் வராதா? இந்த ‘ஆத்திரம் பற்றி’ இடஒதுக்கீட்டு ஆய்வாளர்கள் பேசுகிறார்களா?

இப்போது இடஒதுக்கீடு குறித்து நடக்கும் விவாதங்களில் தனியார் துறைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசுவதே இல்லை. விவாதத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு வரப்படுவதே இல்லை. காரணம் இந்த தனியார் தொழில் நிறுவனங்களில் இடஒதுக்கீடு இல்லை என்பதால் ஒடுக்கப்பட்ட பிரிவினர் உள்ளே நுழைய முடியவில்லை. அனைத்து உயர் பதவி களையும், ‘மேல்தட்டுப் பிரிவினரே’ வளைத்துப் போட்டுக் கொண்டு விடுகிறார்கள். எனவே

ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்பியாக வேண்டும். அரசு தரும் பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த தனியார் தொழில் நிறுவனங்களை இதே போக்கிலேயே செயல்பட அனுமதிக்கலாமா?

‘தனியார் துறை’ நிறுவனங்களில், அவை தனியாருக்கு மட்டுமே உரித்தானைவை என்று கூறக்கூடிய அம்சம் என்ன இருக்கிறது? ‘தனியார் துறை’ என்பதற்கான விளக்கம் என்ன? வரையறை என்ன? இந்தக் கேள்விகளை எழுப்பியாக வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், 2002ஆம் ஆண்டு ‘குடியரசு’ நாள் உரையில் இவ்வாறு கூறினார்:

“இப்போதும் சரி - எதிர்காலத்திலும் சரி; இந்த நாட்டின் பொருளாதார அமைப்பில் தனியார் துறைகள் சமூகப் பார்வையோடு கொள்கைகளை அமுல்படுத்த முன்வர வேண்டும். நாம் கூறும் சமூகக் கொள்கை என்பது, சமூகத்தில் அடித்தட்டில் உழலும் மக்களை கைதூக்கிவிடக் கூடிய முற்போக்கான சமத்துவத்தை நோக்கிய கொள்கை. உரிமைகளும் சமத்துவமும் பறிக்கப்பட்ட மக்களை சமத்துவமான குடிமக்களாகவும் நாகரிக மனிதர்களாகவும் உயர்த்தக்கூடிய கொள்கை. இதன் அர்த்தம் தனியார் நிறுவனங்கள் சமதர்மக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று கேட்பது அல்ல. பல்வேறு பிரிவினரை யும் அங்கீகரித்து, புறக்கணிக்கப்படும் பிரிவினருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்து, அமெரிக்காவில் உள்ளது போல சட்டங்களை இங்கும் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.”

- இது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் வலியுறுத்திய கருத்து.

இடஒதுக்கீட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத்திருத்தங்கள் தனியார் துறைக்கும் பொருந்தாதா? அப்படி, இடஒதுக்கீடு சட்டம் பொருந் தாது என்றால், ஏன் மற்றொரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரக்கூடாது?

இந்தக் கேள்விகள் - ‘நிலவைப் பிடித்துத் தா’ என்பதுபோலத் தோன்றலாம். காரணம், இப்போதுள்ள அரசாங்கத்தை நடத்துவதே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். சமூகத்தின் ‘மேல் தட்டு வர்க்கம்’ நடத்தும் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டங்கள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட கீழ் மட்டத்தில் உழலும் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கூறினாலும் அவர்கள் பின்பற்றுவது இல்லை. தங்கள் வீட்டு மகனும் மகளும் இத்தகைய ஒடுக்கப்பட்ட பின்புலத்துப் பிள்ளைகளோடு சமமாக உட்கார்ந்து படிப்பதையே அவர்கள் விரும்புவதில்லை.

உயர்ஜாதியினருக்கும் கார்ப்பரேட் குழுக்களுக்கும் இடையே உள்ள நேர்மையற்ற உறவுகளை நாம் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் கீழ் நிலையில் தொடர்ந்து நீடிக்கவும், உயர்ஜாதி பணக்கார வர்க்கம் தங்களை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொள்ளவுமான நிலையே நீடிக்கிறது. இந்த நிலையில் இடஒதுக்கீடு கொள்கை அரசு நிறுவனங்களுக்குள் மட்டுமே முடங்கிவிடக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தும் நேரம் வந்துவிட்டது.

தனியார் துறைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையை வலியுறுத்த வேண்டும்; அதற்காகப் போராட வேண்டும். சமத்துவமான சமூகத்தை அமைக்க இது ஒன்றே வழி. ஆம்! நாமும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றே வலியுறுத்து வோம். அது, தனியார் துறைக்கும் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்து என்பதுதான்!

(கட்டுரையாளர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர்.

தமிழில் - விடுதலை இராசேந்திரன்)

Pin It