தமிழகத்தின் மையமான மதுரை மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது. 2011 செப்டம்பர் 11 பரமக்குடி துப்பாக்கிச்சூடு தொடங்கி ஓரிரு ஆண்டுகள் சல சலப்பாக இருந்த தென் மாவட்டங்கள் சாதிவெறி கௌரவக் கொலைகள் மற்றும் பரவலாக சாதியப் படு கொலைகளைச் சந்தித்து வருகின்றது. கள்ளுக் குடித்த குரங்கைத் தேள் கொட்டினால் எப்படி இருக்குமோ அதுபோல சாதி அரசியலுடன் மதவாத அரசியலும் கரம் கோர்க்கும்போது சனநாயகத்திற்கான அச்சுறுத்தல் தலை தூக்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களையும், சிறுபான்மை மத மக்களையும் குறி வைத்த சாதிய-காவி பயங்கரவாதக் கூட்டணி உருவாகி வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாதிவெறி இராமதாசுடன் இயல்பாகக் கூட்டணி கண்ட பா.ச.க.வருகிற 2016 தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் தனக்கான செல்வாக்கை உருவாக்க மோடி வித்தை செய்த பா.ச.க சாதி வித்தைச் செய்யத்தொடங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் சின் தத்துவக்குரு தமிழகத்தின் அவதாரம் குருமூர்த்தியின் முயற்சியால் ஜுலை 15 வாக்கில் முக்குலத்தோர் கலந்துரையாடல், ரெட்டி சங்க மாநாடு, தேவேந்திர அமைப்புக்கூட்டம், விருதுநகரில் நாடார் மகாசன சங்க கல்வித் திருவிழா என அமித்ஷா கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பா.ச.க வின் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மற்றும் குருமூர்த்தி கலந்துகொண்டனர். ஆகஸ்ட் மாதம் பா.ச.க தலைவர் அமித்ஷா வரவழைக்கப்பட்டு தேவேந்திர குல அமைப்பு எனும் பெயரில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு சாதிச் சங்கத் தலைவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். தேடிப்பார்த்தால் நிகழ்ச்சி ஏற்பாடே ஆர்.எஸ்.எஸ்சின் சதியா லோசனையின் படி தேவேந்திரக் குலச் சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.
தேசியம், தெய்வீகம் எனும் முழக்கத்தின்படி கள்ளர்-மறவர்களை குறிவைத்த பா.ச.க., ஆர்.எஸ்.எஸ், நாடார் சமூகத்தின் மத்தியில் கிறித்தவர்களுக்கு எதிராக மத வெறியைத் தூண்டி கலவரத்தை உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ் கோவைக் கலவரத்தை உருவாக்கியதன் மூலம் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களைக் குறிவைத்து ஓரளவு வெற்றி கண்ட ஆர்.எஸ்.எஸ் கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலமடைந்த சக்திகளுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். தந்தை பெரியாருக்கும் அவரது சிந்தனைகளுக்கும் எதிரான செயற்பாடுகள் இடஒதுக்கீடு மறுப்புக் கருத்துக்கள் பா.ச.க ஆட்சியேறிய பின் அதிகரித்து வருகின்றன.
திராவிடக் கட்சிகளின் துரோக அரசியல் பா.ச.கவை நோக்கி ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. சாதிக் கட்டமைப்புகள் மேல் நோக்கிய பயணத்தில் பட்டியல் சாதிகளிலிருந்து நீக்கவும், தனி ஒதுக்கீடு கோரியும், ஒரே சாதிப் பெயரில் அழைக்கக் கோரியும் வலியுறுத்தி வரும் தேவேந்திர குல சமூகத்தில் வளர்ந்த பிரிவினரைக் குறிவைத்து காவிப்படை களம் இறங்கியுள்ளது. திராவிடக் கட்சிகளின் வரலாற்றுத் துரோகமும், இடதுசாரி அமைப்புகளுக்கு மக்கள் அடித்தளமின்மையும் தமிழகத்தின் பொருளாதாரத் தளத்தில் முன்னெடுத்து வரும் சமூகத் தன்மைகளுக்கு பாச.க தன்மைப் பிரதிநிதியாக முன்னிறுத்தி முயற்சிக்கிறது. காலங்காலமாககல்வி,அரசுவேலைமறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின், தலைவர்களின் போராட்டங்களின் காரணமாக, இடஒதுக்கீடு சட்டப்படி அமலாக்கப்பட்டது.
கடந்த காலங்களில் நீண்டகாலமாக பதவி சுகங்களை அனுபவித்து வந்த முன்னேறிய பிரிவினர் தங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி குரல் எழுப்பி வந்தனர். மாநிலங்களிலும், மத்தியிலும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டுச் சலுகைகளுக்கு எதிராக எப்போதும் இயக்கம் தூண்டப்பட்டு வந்தது. இடஒதுக்கீடு என்றாலே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் என்பது போன்ற தோற்றமளிக்கும் விவாதங்கள் திட்டமிட்டு நடைபெற்று வந்தன. மத்தியில் ஓ.பி.சி மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் 30+20= 50 சதவீதம் இடஒதக்கீடு அனுபவித்து வருவதை எளிமையாக மறைக்கின்றனர். வடக்கே தற்பொழுது எங்களை ஓ.பி.சி பட்டியலில் இணை இல்லையேல் இடஒதுக்கீட்டை இரத்து செய் என தூண்டப்பட்ட சாதியத்தின் குரல் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எழுந்து வருகிறது. ‘எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம்’ எனும் குரல் தமிழகத்தில் ஆர்.எஸ். எஸ் பின்னணியில் எழுப்பப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் திட்டமிட்டு தவறு செய்யும் அரசுகளுக்கு எதிராக உரிய போராட்டங்கள் நடைபெறுவதில்லை. எங்களுக்கு சாதி வேண்டும். ஆனால் இடஒதுக்கீடு வேண்டாம் எனும் முன்னேறிய பிரிவினரின் குரல் திட்டமிட்டு
எழுப்பப்பட்டு வருகிறது-அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வரும் சூழலில் இடஒதுக்கீட்டு உரிமைக்கான போராட்டம் புதியவகையில் எழ வேண்டிய தேவை உள்ளது.
சாதிய- காவி பயங்கரவாத கூட்டுக்கு எதிராக தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபும், சாதி ஒழிப்புப் போராட்டமும், சனாதன எதிர்ப்பும், காவிப்படை அரசியலுக்கு எதிரான சனநாயகப் போராட்டமும் ஓரணியில் அணி சேர வேண்டிய தேவை எழுந்துள்ளது. பெரியார்- அம்பேத்கர்- மார்க்சிய சிந்தனையாளர்கள், இயக்கங்கள், ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள், மதச் சிறுபான்மை இயக்கங்கள் இணைந்து சனநாயகம், மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு முனைப்பு கொண்ட பரந்த மேடை உருவாக்க வேண்டிய தேவை நம் முன்னே சவாலாக உள்ளது. மக்கள் சனநாயகத்திற்கான போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுப்போம்.