வட்டமேசை மாநாட்டின் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி  அம்பேத்கர் அவர்களும், ராவ்பகதூர் இரட்டை மலை  ஸ்ரீநிவாசன் அவர்களும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர்கள் சிறப்புப் பிரதிநிதித்துவத்திற்கான உரிமைக் கோரிக்கை  யின் மீது அளித்த பிற்சேர்வான மகஜர்.

Ambedkar Tribeசுயாட்சியுடைய இந்தியாவிற்கான அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் பாதுகாப்பிற்கான அரசியல் நடவடிக்கைக் குறிப்புகளின் அச்சிடப்பட்ட பாகத்திற்கு 111-வது பிற்சேர்க்கையாக அமைந்துள்ளதுமான கடந்த ஆண்டு எங்களால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில், ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் சிறப்புப் பிரதிநிதித்துவம் என்பது அத்தகைய பாதுகாப்புரிமைகளில் ஒன்றாக அமையவேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம்.

ஆனால் நாங்கள் அம்மக்களுக்கு அவசியமானதாகக் கோரிய அந்தச் சிறப்புப் பிரதிநிதித்துவத்தின் விவரங்களை அப்பொழுது நாங்கள் விளக்க வில்லை. அந்த விஷயம் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாகவே, சிறுபான்மையினர் துணைக்குழுவின் நடவடிக்கைகள் முடிந்து விட்டன என்பதுதான் அதற்கான காரணம் ஆகும்.

சிறு பான்மையினர் துணைக்குழு இந்த ஆண்டின் இவ்விஷயத்தைப் பரிசீலிக்குமானால், அது தேவையான விவரங்களை அளிக்க வேண் டும் எனும் நோக்கத்தில் இந்தப் பிற்சேர்வான மகஜரைச் சமர்ப்பிப் பதன் மூலம், விட்ட குறையைச் சரி செய்திட நாங்கள் எண்ணுகிறோம்.

1. சிறப்புப் பிரதிநிதித்துவத்தின் அளவு

. மாகாணச் சட்டமன்றங்களில் சிறப்புப் பிரதிநிதித்துவம்

1. வங்காளம், மத்திய மாகாணங்கள், அசாம், பீகார், ஒரிசா, பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாகாணங்களில் சைமன் குழுவினாலும் இந்திய மத்தியக் குழுவினாலும் மதிப்பிடப்பட்டுள்ளவாறு ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தங்களின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்றவாறு பிரதிநிதித்துவம் பெற வேண்டும்.

2. சென்னையில் உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 22 சத வீதம் பிரதிநிதித்துவம் பெற்றிட வேண்டும்.

3. பம்பாயில்:

(i) பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாகச் சிந்து தொடர்ந்து இருக்குமானால் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 16 சதவீதம் பிரதிநிதித் துவம் பெற்றிட வேண்டும்.

(ii) பம்பாய் மாநிலத்திலிருந்து சிந்து பிரிக்கப்படுமானால், அம்மாநிலத்தில் உள்ள முஸ்லீம்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் மக்கள் தொகையில் சமமாகயிருப்பதால், முஸ்லீம்கள் அனுபவிக்கும் பிரதிநிதித்துவ அளவிற்கு நிகரானப் பிரதிநிதித்துவத்தினை ஒடுக்கப் பட்ட வகுப்பினர் அனுபவிக்க வேண்டும்.

ஆ. மையக்கூட்டாட்சிச் சட்டமன்றத்தில் சிறப்புப் பிரதிநிதித்துவம்

 மையக் கூட்டாட்சிச் சட்ட மன்றத்தின் இரு சபைகளிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் இந்தியாவில் உள்ள தங்களின் மக்கள் தொகை விகிதத்திற்கேற்றவாறு பிரதிநிதித்துவம் பெற்றிட வேண்டும்.

1. இடஒதுக்கீடுகள்

சட்ட மன்றங்களில் பிரதிநிதித்துவ விகிதத்தினைக் கீழ்க் காணும் ஊகங்களின் அடிப்படையில் நிர்ணயித்துள்ளோம்:

1. சைமன் குழுவினாலும் (பாகம் 1, பக்கம் 40) இந்திய மத்தியக் குழுவினாலும் (அறிக்கை, பக்கம் 44) குறிப்பிட்டபட்டுள்ள தாழ்த் தப்பட்ட மக்கள் தொகைக்கான எண்ணிக்கையை, இடங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான ஒரு அடிப்படையாகக் கொள்வதற்குப் போதிய அளவில் சரியென்று ஏற்றுக் கொள்ளத்தக்கதென நாங்கள் ஊகித் துள்ளோம்.

2. மையக்கூட்டாட்சிச் சட்டமன்றம் இந்தியா முழுவதை யும் உள்ளடக்கி இருக்கும் என்றும், அந்நிலையில் இந்திய மாநிலங்களிலும், மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பிரதேசங் களிலும் விலக்கப்பட்டப் பிரதேசங்களிலும் மேலும் ஆளுநரின் மாகாணங் களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை, கூட்டாட்சி சட்ட மன்றத்தில் ஓடுக்கபட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவ அளவினைக் கணக்கிடுவதற்கு மிகவும் சரியான தொரு கூடுதல் விவரமாக அமையும் என்றும் நாங்கள் ஊகித் துள்ளோம்.

3. பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களின் நிர்வாக எல்லைகள் இன்றுள்ளபடியே தொடரும் என்று நாங்கள் ஊகித்துள்ளோம்.

ஆயின், சில தன்னலக்கட்சியினர் பயமுறுத்துவது போல, ஒடுக்கப்பட்ட மக்கள் தொகை குறித்து நாங்கள் ஊகித்த எண்ணிக்கை கள் சரியில்லை என்று சொல்லப்பட்டால் மற்றும் புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கீழ் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் குறைந்த விகிதத்தில் காட்டப்படுவார்களானால் அல்லது மாகாணங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு, அது தற்போதுள்ள மக்கள் தொகை அளவினைப் பாதிக்குமானால், பிரதிநிதித்துவ விகிதத்தை மாற்றியமைப்பதற்கும், முக்கியத்துவத்தினைக் கோருவதற்கும் கூட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் உரிமை பெற்றிருக்கிறார்கள். அதே போன்று அனைத்திந்திய கூட்டமைப்பு நடைமுறைக்கு வரவில்லை யென்றால், கூட்டாட்சிச் சட்ட மன்றத்தில் அந்த அடிப்படையில் கணக்கிடப்படும் அவர்களின் பிரதிநிதித்துவ விகிதத்தினை மீண்டும் சரிபடுத்திக் கொள்வதற்கு நாங்கள் சம்மதிக்க விருப்பம் தெரிவிப்போம்.

2. பிரதிநிதித்துவ முறை

1. மாகாண மற்றும் மத்திய சட்டமன்றங்களில் ஒடுக்கப் பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகளை அவர்களின் தனிவாக்காளர் தொகுதி மூலமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

கூட்டாட்சி அல்லது மத்திய சட்டமன்றத்தின் மேல்சபைக்குப் பிரதிநிதிகளை மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் மறைமுக தேர்தல் மூலம் தெரிவு செய்ய முடிவெடுக்கப்படுமானால், விகிதாச் சாரப் பிரதிநிதித்துவம் எவ்வகைப்பட்டதாயிருப்பினும் தாழ்த்தப் பட்டோரின் பங்கினை அவர்களுக்கு வழங்கிட உத்தரவாதமுள்ள ஏற்பாடு செய்யப்படுமேயாயின் தங்களின் மேல்சபைப் பிரதிநிதித்துவத்தைப் பொருத்தமட்டில் தனி வாக்காளர் தொகுதி கோரும் உரிமையைக் கைவிட அவர்கள் சம்மதிப்பார்கள்.

2. கீழ்க்காணும் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாலொழிய ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கானத் தனி வாக்காளர் தொகுதிகள் கூட்டு வாக்காளர் தொகுதிகளாக மாற்றியமைக்கப்படக் கூடாது.

அ. சம்பந்தப்பட்டச் சட்டமன்றங்களில் உள்ள ஒடுக்கப் பட்ட வகுப்புப் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் கோரிக்கை யின் பேரில் அந்த மக்களில் வாக்குரிமை பெற்றுள்ள வாக்காளர் களிடையே நடத்தப்படும் வாக்கெடுப்பு அறுதிப்பெரும்பான்மையில் முடியும்போது தனி வாக்காளர் தொகுதி முறை மாற்றியமைக்கப் படலாம்.

ஆ. இருபது ஆண்டுகளுக்குப் பின்பு வயது வந்தோர் எல் லோருக்கும் வாக்குரிமை வழங்குப்படும் வரையில் அத்தகைய வாக்கெடுப்பு செய்யக் கூடாது.

3. ஒடுக்கப்பட்ட வகுப்பினர் யாவர் என்பதை விளக்குவதன் அவசியம்

கடந்த காலத்தில் மாகாண சட்டமன்றங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும் ஒடுக்கப்பட்ட வகுப் பினரல்லாதவர்கள் நியமிக்கப்பட்டதால் அந்தப் பிரதிநிதித்துவம் பெருமளவு மோசடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சாராதவர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகளாக நியமனம் பெற்றது நிகழ்ந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட வகுப்பினரைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களை நியமனம் செய்வதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த ஆளுநர், அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களை மட்டுமே நியமிப்பதற்குப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படவில்லை என்பதுதான் அத்தவறுக்கான காரணம். நியமனமுறை, புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்தல் முறையினால் மாற்றப்படவிருப்பதால் இந்த மோசடிக்கு இடமிருக்காது.

ஆனால் அவர்களின் சிறப்புப் பிரதி நிதித்துவ நோக்கம் பாதிக்கப்படாமலிருக்கச் சட்டத்திற்குப் புறம் பாக ஏதாவது செய்வதற்கு வழியேதும் விட்டுவைக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் கோருவதாவது:

1. ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தனி வாக்காளர் தொகுதிகள் உரிமையை மட்டும் பெற்றிருக்காமல் தங்களினத்தினரால் மட் டுமே பிரதிநிதித்துவம் செய்யப்படும் உரிமையையும் பெற்றிருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் என்போர் யாவர் என்பதை அங்கே நிலவி வரும் தீண்டாமை முறைக்கும், தேர்தல் நோக்கங்களுக்காகத் தயாரிக்கப் பட்ட பட்டியலில் எந்தப் பெயர் மூலம் குறிப்பிட்டிருக்கின்றனவோ அந்த இன்ங்களைச் சார்ந்தவர்கள் என்பதைக் குறிக்கும் வகையிலும் கண்டிப்பாக வரையறுத்து விளக்கப்பட வேண்டும்.

3. சுட்டுப்பெயர் அல்லது பெயர்க்குறிப்பு ஒடுக்கப்பட்ட வகுப்பினரைக் குறிப்பதற்குத் தற்போது வழக்கி லிருக்கும் சுட்டுப் பெயர் தொடர்பான இப்பகுதியை அணுகும்போது, தற்போது நிலவி வரும் சுட்டுப்பெயர் அதனைப் பரிசீலித்த ஒடுக்கப் பட்ட வகுப்பு மக்களாலும், அவர்கள் நலனில் அக்கறை கொண் டுள்ள மற்றவர்களாலும் ஆட்சேபிக்கப்படுகின்றது என்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம்.

இது அவர்களை அவமதிப்பதாகவும், அவமானம் செய்வதாகவும் இருக்கிறபடியால் அரசு அலுவலகக் காரணங்களுக்காக அப்பெயரை மாற்றுவதற்குப் புதிய அரசிய லமைப்புச் சட்டம் வரையப்படுவதற்கான இத்தருணத்தைப் பயன் படுத்திக் கொள்வது நல்லது. அவர்கள் “சாதியற்ற இந்துக்கள்” “இந்து மதக் கொள்கை மறுப்பாளர்கள்” அல்லது “இந்து மதக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்கள்”அவர்கள் “ஒடுக்கப்பட்ட வகுப்பினர்” என்பதற்குப் பதிலாக வேறேதேனும் ஒரு பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஒரு குறிப்பிட்ட பெயரை நாங்கள் வற்புறுத்துவதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை. நாங்கள் அவைகளை யோசனைக்கு வைக்கத்தான் முடியும். உரிய முறையில் விளக்கமளிக்கப்பட்டால் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தங்களுக்கு மிகப் பொருத்தமான ஒரு பெயரை ஏற்றுக் கொள்ளத தயங்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

 இந்த மகஜரில் உள்ள கோரிக்கைகளை ஆதரித்து இந்தியாவின் எல்லா இடங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடமிருந்து ஏராளமான தந்திகளை நாங்கள் பெற்றுள்ளோம். 

("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, பின்னிணைப்பு 2) 

Pin It