நாட்டின் தேவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதில் கொள்கை முடிவுகள் இல்லாமல் அவ்வப்போது முடிவுகளை எடுத்து குழப்பி வருகிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள். ஆட்சியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு மக்களின் உணர்வுகளைவிட பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித் தர முயற்சிப்பதிலேயே நேரம் சரியாகி விடுகிறது. மக்களின் உணர்வுகளோ, பல்வேறு நில அமைப்பு கொண்ட இந்தியாவின் நிலவியல் அறிவை வளர்த்துக் கொள்வதிலோ அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

may17 hydrocarbon

காரணம் அவர்கள் தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கான பிரம்மான்ட வித்தைகளைச் செய்வதற்கு பன்னாட்டு - உள்நாட்டு பெரிய நிறுவனங்களோடு கைகோர்க்க வேண்டியுள்ளது. இந்நிறுவனங்களால் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் நலன்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றத் துடியாய் துடிக்கிறார்கள். தனியார் துறை வளர்ச்சிக்காக இந்தியாவின் பெருமைமிகு பொதுத்துறை நிறுவனங்களைகூட தனியாருக்கு விற்றுவிட தயங்காமல் செயல்படுகிறார்கள். இக் கொள்ளைக்கார ஆட்சியாளர்கள் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பத்திற்காக பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தைச் சீர்கெடுக்கவும் தயாராகி வருகிறார்கள்.

பெருகி வரும் மக்கள் தொகையால் இயல்பாகவே இந்திய மக்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. அடிப்படைத் தேவைகளையும் தாண்டி மக்களிடம் நுகர்வு மனப்பான்மையைத் தூண்டிவிட்டு, கொள்ளை ஆதாயம் தேடும் வணிக நிறுவனங்களால்தான் நவீன இந்திய நாடு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்திய மக்களிடம் தொற்றிக்கொண்டுள்ள நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவுதான் அளவுகடந்த எரிசக்தித் தேவை. இந்த எரிசக்தித் தேவையை நிறைவேற்ற நாட்டைக் குதறி, கொள்ளையடிக்கும் வேளையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியோடு இணைந்து இறங்கியுள்ளது பன்னாட்டு - உள்நாட்டு வணிகக் குமுகம்.

இந்திய ஆட்சியாளர்களின் தேச வளக் கொள்ளையின் ஓர் அங்கம்தான் அவர்கள் வகுக்கும் திட்டங்கள் என்றால் அது மிகையில்லை. கார்ப்பரேட் ஆதரவு ஆட்சியாளர்களால் தற்போது தேச நலனுக்காக(?) அறிவிக்கப்பட்டுள்ள திட்டம்தான் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம். இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் வளங்கள் நிறைந்து காணப்பட்டாலும், இயற்கையை அழித்து ஆற்றலைப் பெறும் முயற்சியை இந்திய அரசு கைவிடுவதாக இல்லை. இயற்கை எரிவாயு என்னும் இந்த ஹைட்ரோகார்பனை மாட்டுக் கழிவுகள், மக்கும் குப்பைகள் மூலம் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், இயற்கையை அழித்து இத்திட்டத்தை நிறைவேற்ற துடியாய் துடிக்கிறது இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி. இந்திய அரசு ஆயில் நிறுவனத்தால் அதிக செலவுபிடிக்கும் என்று கைவிடப்பட்ட இயற்கை எரிவாயு எடுப்புத் திட்டத்தை ஏலத்திற்கு விட்டு பெங்களூரில் உள்ள ஒரு பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது பாரதிய ஜனதா அரசு.

மக்கள் நலனைப் பின்னுக்குத் தள்ளும் தேர்தல் அரசியல் கட்சிகளின் இப்போக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு பல்வேறு காரணிகளை நாம் ஆராய வேண்டியுள்ளது. மக்கள் போராட்டங்களைவிடவும் கட்சி, தனிமனித, பெருநிறுவங்களின் நலன்கள் முன்னிருத்தப்பட இந்தியத் தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

தனிமனிதத் தேவைகளை குறிவைத்து நாட்டின் வளங்களைச் சூறையாடும் ஆட்சியாளர்கள்:

நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் டி.வி., மிக்சி, கிரைண்டர், லேப்டாப், சைக்கிள் போன்ற தனிமனிதத் தேவைகளுக்கான திட்டங்களை உருவாக்கி, அத்திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்களிடம் தரமற்ற பொருட்களை தங்களின் கொள்ளைக்காக அதிக விலை கொடுத்து வாங்கி, மக்களின் வரிப் பணத்தை விழலுக்கு இறைத்த நீராய் இறைக்கிறார்கள். நிலைபெற்ற திட்டங்கள் மக்களிடம் கொடுக்கப்படவில்லை. மக்களும் கிடைத்தது ஆதாயம் என்ற எண்ணத்தில் தரமற்ற பொருட்களைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்பொருட்களை வழங்கும் ஆட்சியாளர்களின் திருமுகங்களைக் கொண்டாடுகிறார்கள். வறட்சி காலங்களிலும், வெள்ளப் பெருக்கு காலங்களிலும் மக்களுக்கு குறைந்த அளவில் நிவாரணங்களை வழங்குவதையே பெருமையாகக் கருதும் ஆட்சியாளர்களும், அவர்களைக் கொண்டாடும் மக்களும் அதிகரித்துள்ளனர்.

ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தரமான மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், நியாயவிலை நுகர்வுப் பொருட்கள் இவையனைத்தும் எட்டாத உயரத்திலேயே உள்ளது. கொள்ளையடிப்பது தெரிந்தே நடக்கிறது. உன்னால் என்ன செய்யமுடியும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும் மிரட்டப்படுகிறார்கள் - கொல்லப்படுகிறார்கள். சமூக நலத் திட்டங்கள் அனைத்தும் கொள்ளையடிப்பதற்காகவே கொண்டு வரப்படுகிறது என்ற எண்ணம் சமூக செயல்பாட்டாளர்களால் இப்போது பேசப்படும் பொருளாக மாறிவருகிறது.

போலியான சாதி - மத - பண்பாட்டு அரசியல் செய்து நாட்டின் வளங்களைச் சூறையாடும் ஆட்சியாளர்கள்:

இந்தியாவோடு இணைந்தே பயணிக்கிறது சாதியும் மதமும். இந்திய மக்கள் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், சமற்கிருத திணிப்பு என்ற பெயரிலும் இந்துமதப் பற்றாளர்கள் என்ற போர்வைக்குள் மனச்சலவை செய்யப்படுகிறார்கள். ஆட்சியாளர்கள் தங்களை மதக் காவலர்களாகவும், சாதிக் காவலர்களாகவும் காட்டிக் கொண்டு தனது சொந்த இன, மத. சாதி மக்களை காவு கொடுக்கத் தயங்காமல் பணி செய்கிறார்கள். இந்தியாவில் எந்த இன அடிப்படையிலான, மத அடிப்படையிலான, சாதி அடிப்படையிலான அரசியல் கட்சியும் தங்களது சொந்த இன, மத, சாதி மக்களின் வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்ததாக வரலாறு இல்லை. அரசியல் கட்சிகளை நடத்துபவர்கள் தங்களை அடையாளப்படுத்த மக்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஓட்டு வங்கியாக மட்டுமே மக்கள் தொடர்ந்து பயன்பட்டு வருகிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய சாதியக் கட்டுமானத்தில் அரசியல் சட்டப்படி இந்து மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகளே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்துத்துவக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் இடஒதுக்கீட்டை காலி செய்ய தனியார் துறை ஊக்குவிப்பும், பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை அதிகரிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

பாரதிய ஜனதாக் கட்சியைப் போன்ற இந்துத்துவ அமைப்புகள் இந்துக் கலாச்சாரத்தைக் காப்பதாகக் கூறிக்கொண்டு சாதிய உள் கட்டமைப்புகளை உறுதிப்படுத்தும் அகமண முறையை தொடர்ந்து வலியுறுத்துகின்றன. ஒரே இந்து மதத்திற்குள்ளேய சாதிகளுக்குள் வன்மத்தைத் தூண்டிவிட்டு குடும்பங்களுக்குள் ஆணவக் கொலைகள் நடக்கும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இந்து மக்களுக்கான நலன்களைக் காப்பதாகக் கூறிக்கொண்டு இந்துக்களின் வளங்களை, இந்துக்களின் பொதுத்துறை வேலைவாய்ப்பு உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் பன்னாட்டுக் கொள்ளைக்கு கொல்லைப்புற ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்று வார்த்தை சாலத்தில் திடீர் இந்து மதக் காவலர்களாக மக்களை நம்பவைத்து இந்தியாவின் பெரும்பான்மையான இந்துமத மக்களின் வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், உள்நாட்டு பெரும் வணிக நிறுவனங்களுக்காகவும் தொடர்ந்து பலியிடுகிறார்கள்.

பண்பாட்டுக் காவலர்களாகவும் கூறிக்கொள்ளும் இவர்கள், இந்தியாவின் பழம்பெரும் பெருமைகளான யோகா உள்ளிட்ட கலைகளைப் பாதுகாப்பதாகத் காட்டிக் கொண்டு மலைகளையும், வனங்களையும் கொள்ளையடிக்கும் சாமியார்களை உருவாக்கி, அச்சாமியார்கள் வழி மக்களை மயக்கும் மதவாதத்தைக் கட்டமைக்கிறார்கள். இந்தியாவின் வளங்களைச் சூறையாடத் தயாராகும் பன்னாட்டு கார்ப்பரேட் குமுகங்களைக் கொண்டு யோகா நாள் என்ற ஒன்றை உருவாக்கி, உலகமெங்கும் கொண்டாடச் செய்வது, அம்பேத்கர் பிறந்தநாளை உலகமெங்கும் முன்னெடுப்பது போன்ற பண்பாட்டு அடையாள அரசியலைக் கட்டமைத்து மக்களை வெற்றுப் பெருமைகளுக்குள் வைத்திருக்கும் சூழலைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். போலி கார்ப்பரேட் சாமியார்களுக்கு எதிராகவும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் செயல்படும் சமூக செயற்பாட்டாளர்களை தேச விரோதிகளாகவும், யோக போன்ற கலைகளுக்கு எதிரானவர்களாகவும், இந்து மத மக்களுக்கு எதிரானவர்களாகவும் சித்தரிக்கும் பிம்பங்களைக் கட்டியெழுப்புகிறார்கள்.

இந்து மதப் பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களின் போது தங்களை இந்து பக்தர்களாக வேசமிட்டுக்கொண்டு தங்கள் கட்சிகளுக்கும், இயங்கங்களுக்கும் ஆள் சேர்க்கும் பணியைத் திட்டமிட்டுச் செய்கிறார்கள். இக்காலங்களில் பிற மதங்களின் மீது துவேசத்தையும் தூண்டிவிட்டு, இந்து மத மக்களுக்குள் போலியான ஒற்றுமையை உருவாக்கி தங்களுக்குச் சாதகமான வாக்கு வங்கி அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். இவ்வேடதாரிகளால் மக்கள் மயக்கமுற்றிருக்கையில் நாட்டின் வளங்களை நிறுவனப்படுத்தி வியாபாரம் செய்கிறார்கள்.

தேசபக்தி அரசியலுக்குள் மறைந்துபோகும் தேசிய வளக் கொள்ளைகள்

இந்திய தேசியக் கொடியை சட்டைப் பையில் குத்திக்கொள்வதாலும், இந்திய தேசிய கீதத்திற்கு திரையரங்குகளில் எழுந்து நிற்க ஆணையிடுவதாலும் மட்டுமே தேசியம் காக்கப்படுவதாக பொய் பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள். தேசிய வளங்களான மலைகள், ஆறுகள், விவசாய நிலங்கள், கடல் வளங்கள் அத்தனையையும் பாதுகாப்பதில்தான் தேசிய உணர்வு மேலிட வேண்டுமே ஒழிய வெற்று முழக்கங்களாலும், தேசப்பற்று அடையாளங்களை உடலில் பூசிக்கொள்வதாலும் தேசியம் காக்கப்படும் என மக்களை நம்பவைத்து, நாட்டின் சொந்த மக்களுக்குள்ளேயே கலவரத்தைத் தூண்டிவிடுவதை தேசிய ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்.

வளர்ச்சி சித்தாந்தங்களால் மறைந்து போகும் தேசிய வளக் கொள்ளைகள்

தேச வளர்ச்சி, தேச வளர்ச்சி என்று முழக்கமிட்டு நாட்டின் வளங்களை அழிப்பதையே இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இவர்கள் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாட்டில் மக்கள் பசியாலும், பட்டிணியாலும் சாகிறார்கள்... போதிய மருத்துவ வசதியின்றி செத்து மடிகிறார்கள்... தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க தங்களின் உழைப்பால் விளைந்த செல்வங்களையெல்லாம் இழக்கிறார்கள்... உலகுக்கே அச்சாணி என்று வள்ளுவரால் போற்றப்பட்ட உழவர்கள் வயல்களில் வாடிய பயிரைக் கண்டு நெஞ்சடைத்துச் சாகிறார்கள். ஆனாலும் இந்தியாவில் வளர்ச்சிப் பணிகள் நடந்து கொண்டே இருக்கிறது.... இந்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்படும் இந்த வளர்ச்சிப் பணிகள் யாருகானது என்பதுதான் மக்கள் சிந்திக்க வேண்டிய கேள்வி? "விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்" என்பது பட்டுக்கோட்டையாரின் வைர வரிகள்.... விழித்துக் கொள்வோமா?

- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர், பேராவூரணி