selvvendran 450வடவாரிய பார்ப்பன வந்தேறிகளின் சூழ்ச்சியால் திராவிட இன மக்களாகிய மண்ணின் மைந்தர்களுக்கு இடையே நால்வருண சாதி அடுக்குகளை உருவாக்கி, தீண்டாமையை நிலைப்படுத்தி விட்டனர். இந்த மனிதகுல விரோதக் கட்டமைப்பைச் சீர்குலைத்து விடாது மேலும் கெட்டிப்படுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுவிட்டது சூது மதியினரால்!

பிறப்பின் காரணமாக மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வையும், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதத்தையும் கற்பித்துக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை எதிர்த்து மானுடப் பற்றாளரான பெரியார், சாதி-தீண்டாமை ஒழிப்புக்கான பிரச்சாரம் - போராட்டம் என நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த வருண பேதம் கற்பிக்கும் சாஸ்திர-சம்பிரதாயங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்துவேன் என்று போராட்ட அழைப்பை விடுத்து, இன இழிவு நீங்கிட, தீண்டாமை ஒழிந்திடப் போராட்டக் களம் நோக்கி வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார் பெரியார்!

பெரியாரின் போர்க் குரல் கேட்டு, சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள நாடெங்குமிருந்து, பல ஆயிரக்கணக்கான போராளிகள் ஆண்களும், பெண்களும், குழந்தைகளைச் சுமந்த கர்ப்பிணிகளும், கைக் குழந்தைகளுடன் தாய்மார்களுமாகத் திரண்டு 1957, நவம்பர் 26இல், இந்திய அரசியல் சட்டத்தின் சாதியைப் பாதுகாப்பளிக்கும் பிரிவினைக் கொளுத்தி சிறை புகுந்தனர்.

போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டும்கூட, அதனைப் பொருட் படுத்தாது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெரியார் தொண்டர்கள் சிறை புகுந்தனர்.

இந்தியத் துணைக் கண்டத்தையே அதிர வைத்த இந்தச் சட்ட எரிப்புப் போராட்டத்தின் வரலாற்றை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் 2547 பக்கங்களில் 3 தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது.

முதல் தொகுதியில் பெரியார் பங்கேற்று வெற்றி பெறச் செய்த வைக்கம் போராட்டம் முதல், கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டம் வரை பட்டியலிட்டுள்ளது. ‘போராட்ட இலக்கை நிர்ணயித்த பெரியார்’ எனத் தொடங்கும்  அத்தியாயம் முதல், 13ஆம் அத்தியாயம் வரை போராட்டம் நடைபெற்ற தமிழ் நாட்டின் 11 மாவட்டங்கள், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா என பிற மாநிலங்கள் உள்பட 556 இடங்களில் எங்கெங்கு அரசியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது என ஆவணப்படுத்தியுள்ளது.

இரண்டாவது தொகுதியில் சட்ட எரிப்புப் போராட்டம் பற்றி பத்திரிகைகளும், பார்ப்பனர்களும், பிற கட்சித் தலைவர்களும் வெளியிட்டிருந்த கருத்துகளும், போராட்டத்தை அடுத்து, திருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெரியார், பார்ப்பனர்கள் மீது வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக ‘குத்துவெட்டு’ வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலை ஆனது வரையிலான செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.கழகத்தை அறிஞர் அண்ணா உருவாக்கியிருந்தபோதும், சட்டமன்றத்தில் பெரியாரின் போராட்டத்தைச் சட்டவிரோதம் என அறிவிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அதனை எதிர்த்துக் கடுமையாக அண்ணா வாதிட்ட சிறப்பான உரையும் காணப்படுகிறது.

மூன்றாவது தொகுதியில் சட்ட எரிப்புப் போர் வீரர்களான பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் திருச்சி சிறைக்குள்ளேயே வீரமரணம் அடைந்ததும், அவர்களது உடலைப் பெற்று அடக்கம் செய்திட அன்னை மணியம்மையார், நடிகவேள் எம்.ஆர். இராதா உள்ளிட்ட தோழர்கள் மேற்கொண்ட முயற்சிகள், களப்பலியான மாவீரர்கள் பற்றிய செய்திகள் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

மொத்தத்தில், சட்ட எரிப்புப் போரின் முழுமையான ஆவணத் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.

பெரியார் இயக்கப் போராட்டங்கள் ஆவணப்படுததப்படவில்லையே என்ற குறையைப் போக்கி வெளிவந்துள்ளது. பாதுகாக்கப்படவேண்டிய அரிய ஆவணம்.

வெளியீடு:  தந்தை பெரியார் திராவிடர் கழகம்

நூல் தொடர்புக்கு : 9443822256/9442128792    

3 தொகுதிகளுக்கும் சேர்த்து விலை : ரூ.2500

Pin It