கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இப்போது நாம் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சி, கோயிலில் கர்ப்பக்கிருகம் இருக்கிற இடத்திலே நீ சூத்திரன்,- இழிசாதிக்காரன், நீ உள்ளே நுழையக்கூடாது என்று பார்ப்பான் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கின்றதை மாற்ற வேண்டும் என்று போராட இருக்கிறோம். இதற்கு முன் தெருவிலே மனிதனை நடக்கக் கூடாது, புனிதம் கெட்டுவிடும் என்று சொன்னான்; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று வைத்திருந்தான்; ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு ஜாதியார் கோயிலுக்கும் போகக்கூடாது என்று வைத்திருந்தான், அதுபோல, சாப்பிடும் பொது இடங்களில் பார்ப்பனருக்கு வேறு இடம், நமக்கு வேறு இடம் என்று வைத்திருந்தான்; இதையெல்லாம் மாற்றி விட்டோம்.

periyar 480அதனால் ஒன்றும் புனிதம் கெட்டுவிடவில்லை. எந்த மனிதனின் மனமும் புண்படவில்லை. மதம், சம்பிரதாயம் அழிந்து பாழாகி விடவில்லை. மிகப் பெரிய புண்ணிய ஸ்தலங்களாகக் கருதப்படும் காசி, ஜெகநாத், பண்டரிபுரம் ஆகிய இடங்களிலிருக்கிற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை யார் வேண்டுமானாலும் தொட்டு வணங்கலாம் என்றிருக்கிறது. அதுபோல இங்கேயும் கர்ப்பகிரகத்திற்கு வெளியே இருக்கிற உருபரிவாரங்களை யார் வேண்டுமானாலும் தொடலாம். அதே சிலை கர்ப்பகிரகத்தில் இல்லாமல் வெளியே இருந்தால் நாய்கூட நக்கிவிட்டுச் செல்லலாம். அதனால் அந்தச் சிலையின் புனிதம் ஒன்றும் கெட்டு விடுவதில்லை. கர்ப்பக்கிரகத்திற்குள் இருப்பதைத் தொட்டால் மட்டும் எப்படிப் புனிதம் கெட்டுவிடும்? வெளியேயிருக்கிற சிலைக்கு இல்லாத புனிதம் அதற்கு மட்டும் எப்படி வந்தது என்று கேட்கின்றேன்? பார்ப்பான் ஆக்கிய சோற்றை நம் கண்ணால் பார்த்தால் அதைக் கீழே கொட்டிவிடுவான். இன்று நம்முடன் வந்து உட்கார்ந்தே சாப்பிடுகின்றான்,- நாம் சமைப்பதைச் சாப்பிடுகின்றான்.

இப்படி உண்பதில்- பழகுவதில் எல்லாம் ஒன்றான பின் எல்லோருக்கும் பொதுவான கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் இந்தப் பேதம் எதற்காக என்று கேட்கின்றேன்? சாதி இழிவை, சூத்திரத் தன்மையை நிலைநிறுத்த அல்லாமல் வேறு எதற்காக? வேறு என்ன அவசியத்திற்காக இங்கு மட்டும் நாம் போகக் கூடாது என்பது என்று நம் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். சிலர் நகை இருக்கிறது அதனால் தான் எல்லோரும் வரக்கூடாது என்று சமாதானம் சொல்கிறார்கள். உன் சாமிக்கு நகை போட்டிருக்கிறாய் என்பதற்காக நான் சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்வதா? இடம் சிறிதாக இருக்கிறது, அதிகம் பேர் உள்ளே போக முடியாது என்றால், ஒவ்வொருவராகச் சென்று தொட்டுக் கும்பிட்டு வருகிறார்கள். நகை இருக்கிறது என்றால் இரண்டு போலீசைப் போட்டுப் பாதுகாத்துக் கொள். இவற்றிற்காக நாங்கள் எங்கள் மானத்தை இழக்கத் தயாராக இல்லை.

மொழிக்காகப் போராட்டம் என்கின்றார்கள். இன்றைக்கும் அனேகக் கோயிலில் பார்ப்பான் சமஸ்கிருதம் சொல்லிக்கொண்டு பூசை செய்கிறான். எதற்காகத் தமிழ்நாட்டில் இப்படி நடக்க வேண்டும் என்று இதுவரை எவனுமே கேட்க வில்லை? இந்த அரசாங்கம்- நம் அரசாங்கம் சும்மாவிட்டுவிடும் என்று கருதவில்லை. அவர்கள் கடமையை அவர்கள் செய்வார்கள். அதுபற்றி நாம் அரசாங்கத்தைக் குறை கூறப் போவதில்லை.

காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தனிக் கிணறு, தனிக்கோயில், தனி பள்ளிக்கூடம், தனிக் குளம் வெட்டுவது என்று அதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேல் பணம் ஒதுக்கி அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தார்கள். நான் ஆதிதிராவிடர் மக்களுக்குத் தனியாகப் பள்ளிக்கூடம் கிணறு கட்டுவதை விரும்பவில்லை. அதை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டேன்.

நாம் கர்ப்பக்கிருகத்திற்குள் போக வேண்டுமென்பது கடவுள் நம்பிக்கைக்காக, பக்திக்காக, புண்ணியம் சேர்ப்பதற்காக, போகவில்லை; அதில் உள்ள அவமானத்தை நீக்க வேண்டும் என்பதற்காகப் போகிறோம். திறந்து விட்டுவிட்டால் அதனால் என்ன பலன் என்று கேட்பீர்கள். சாமிக்கு இருக்கிற யோக்கியதையே போய் விடும். பார்ப்பானுக்கிருக்கிற உயர்சாதித் தன்மையும் போய் விடும். பார்ப்பானே வெளியே வந்து அங்குக் கடவுள் இல்லை, கல்தான் இருக்கிறது என்று சொல்வான்.

உனக்குத் தான் சாமி இல்லையே- நீ ஏன் அங்கு போகிறாய் என்று கேட்கிறான். மானம் இருப்பதால் போகிறேன். மானம் இல்லாததால், அறிவு இல்லாததால், இழிவைப்பற்றிச் சிந்திக்காததால் நீ வெளியே நிற்கிறாய்- என்று சொல்வேன். நாம் போவதற்கு உரிமை வந்துவிட்டால், பிறகு பூசை செய்கிற உரிமை நமக்குத் தானாகவே வந்து விடும்.

மொழிக்காகச் சத்தம் போடுகிறாய்; கோயிலிலே சமஸ்கிருதத்திலே மந்திரம் சொல்கின்றான். அதுபற்றி எவனுமே சிந்திப்பது கிடையாது. தமிழில் சொல்லக் கூடாது என்கின்ற ஏற்பாடு பார்ப்பானாகச் செய்து கொண்டதே தவிர சாஸ்திரத்தில் கிடையாது.

இதெல்லாம் வளர்ந்தால் மனிதனுக்கு இருக்கிற மூடநம்பிக்கைப் போய்விடும்; பூச்சாண்டி போய்விடும்.

சமுதாயத் துறைக்காக இந்த நாட்டிலே என்னைத் தவிர எவனய்யா பாடுபட்டான்? பந்தயம் கட்டிக் கேட்கிறேன். எவன் பாடுபட்டான்?

நீங்களெல்லாம் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று பயப்படாதீர்கள்; கடவுள் உண்மையில் இருந்தால் அதை ஒழிக்க யாராலும் முடியாது. அது போன்றுதான் இந்து மதம் என்பதும், இல்லாத ஒரு கற்பனையாகும் என்று தெளிவாக எடுத்துவிளக்கி இழிவு நீக்கிக் கிளர்ச்சியில் எல்லா மக்களும் பங்கேற்க முன்வர வேண்டும்.

26.10.1969 அன்று வேலாயுதம்பாளையம் நாகம்மையார் திடலில் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு "விடுதலை", 7.11.1969

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா