ஜாதி ஒழிப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், சாதியை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதையும் உணராத மக்களே இல்லை.
ஜாதி காரணமாக மக்கள் மனவருத்தமும், தொல்லையும் அடைவதை நாம் காண்கிறோம். அந்தச் ஜாதி இழிவை ஒழிக்க நாங்கள் பாடுபடுகின்றோம். இப்படிச் ஜாதியில் கஷ்டம் (தொல்லை) அனுபவிப்பவன் கூட வருவதில்லை. ஏன் 3000- ஆண்டாக எவனுமே வரவில்லை. நாங்கள் தான் பாடுபடுகிறோம்.
ஜாதி ஒழிப்பு வேலை என்பது மேல் ஜாதிக்காரனுக்கு ஆபத்து. அவன் நம்மை ஒழித்து விடுவான் என்று எண்ணுவதாலும், பயன்படுவதாலும் எவனும் இந்த வேலைக்கு வருவதே இல்லை.
எந்தச் சாதனமும், கருவியும் மேல் ஜாதிக்காரன் கையில் சிக்கி விட்டது. கடவுள், மதம், சாஸ்திரம் ஆட்சி எல்லாம் மேல் ஜாதிக்காரர் என்பவர்கள் கையில் தான் சிக்கி விட்டன.நம் அறிவு வளர்ச்சி அடையும்படியான கல்வியோ மற்ற சாதனங்களோ நமக்கு அளிக்கப்படவே இல்லை. மூவேந்தர் காலத்திலே ஆகட்டும், அடுத்து "நாய்க்கன் முஸ்லிம்கள் மராட்டியன்" ஆட்சியிலும் கூட நமக்கு அறிவு பெறக் கல்வி அளிக்கவே இல்லை. 1961- இல் நாம் 100-க்கு 7- பேர்கள் தான் படித்து இருந்தோம். 1910-இல் ஏழரை பேர், 1920- இல் 9-பேர், 1931- இல் நாம் 100- க்கு 10- பேர்கள் தான் படித்து இருந்தோம். பிறகு அட்வைசர் ஆட்சியின் காரணமாகவும், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் காரணமாகவும் 1951- இல் 100- க்கு 16- பேர்களாகவும் வந்தோம். அதற்கு அடுத்து தமிழகத்தில் பதவிக்கு வந்த ஆச்சாரியார் ஆட்சியில் 16- பேரை 10- பேராகவும் முயற்சியில் இறக்கினார் ஆச்சாரியார்.
நல்ல வேலையாக தமிழ்நாட்டில் ஆச்சாரியார் ஆட்சி ஒழிந்து காமராஜர் ஆட்சி ஏற்பட்டதன் பயனாக 16- பேராக இருந்தவர்கள் இன்று 100- க்கு 32- பேர்கள் படித்த இருக்கும் படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தோழர்களே! இப்படி நமது கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டும் காமராசரை ஒழிக்க வேண்டும் என்று தான் அத்தனைக் கட்சிகளும் பாடுபடுகின்றன.
காமராசர் கட்சியும், எங்கள் கட்சியும் தான் அவர்கள் ஒழியக் கூடாது என்று பாடுபடுகிறோம். மற்றவன் எல்லாம் தாங்கள் எப்படி எதைச் செய்தாவது தாங்கள் பதவி அடைந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு காமராசரை எதிர்க்கின்றார்கள்.
தோழர்களே! இன்று பார்ப்பானை எதிர்த்துக் கொண்டு நாட்டில் வாழ்கின்றவர்கள் என்றால் நாங்கள் தான். மற்ற யாராவது இருக்கின்றார் என்றால் அது காமராசர் தான். மற்றவர்கள் எல்லாம் பார்ப்பானை எதிர்க்காததோடு அவன் கால் அடியில் கிடக்கின்றவர்கள் ஆவார்கள்.
இன்று நாட்டில் அரசியலில் எந்தக் குறையும் மக்களுக்கு இல்லை. 21- வயது ஆன எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், வோட்டுரிமை கொடுக்கப்பட்டு விட்டது. பின் இன்னும் என்ன உரிமை வேண்டும்?
எருமைக்கு குதிரை ஓட்டு வேண்டும் என்கிறீர்களா? புரியனுமே!
நமக்கு இன்று வேண்டியது – சமூதாயக் குறை ஒழிய வேண்டும். ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காகப் பாடுபடுவது தான்.
தோழர்களே! நான் இந்தத் தொண்டை 30- ஆண்டுகளாகச் செய்து கொண்டு தான் வருகிறேன். என்னை "என்ன! ஓட்டைக் குடத்தில் தண்ணீர் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறாயே"? என்று கேலிப் பேசினார்கள். நாங்கள் கவலைப்படாமல் பாடுபட்டுக் கொண்டு தான் வந்தோம். நல்ல வேலையாக காமராசர் பதவிக்க வந்ததன் காரணமாக இன்று கூப்பாடு பயன் அளிக்க ஆரம்பித்துள்ளது.
இன்று நடைபெறும்படியான போராட்டமானது பழமைக்கும், புதுமைக்கும் நடைப் பெறும்படியான போராட்டமாகும். இராஜாஜி பழமையை அலட்சியம் செய்யாது காக்க வைத்துக் கொண்டு பாடுபடுகிறார். அவருக்கு வால் பிடித்துத் திரிவது தானா நமது தமிழர்களின் செயல்? நம் மக்கள் சிந்திக்க வேண்டும்.
பார்ப்பான் கையில் இருந்து வந்த காங்கிரஸ் ஆனது இன்றைக்குத் தான் கைக்கு வந்து தமிழர்களுக்குப் பலன் அளிக்க வல்லதாக இன்று வந்து உள்ளது.
நமக்கு கல்வி, உத்தியோகம் முதலியவைகளில் என்றைக்கும் இல்லாத அளவு நன்மைகள் ஏற்பட்டு உள்ளன.
இன்றைக்கும் ஆள்கள் டாக்டராகவோ, எஞ்சினியர்களாகவோ படித்து வரும்படியாக ஏற்பட்டு உள்ளது. இதற்கு முன் இருந்த ஆட்சியில் இவை நமக்கு இல்லை. இன்றைக்குத் தான் காமராசர் ஆட்சியில் தான் ஏற்பட்டு உள்ளது.
இந்த ஆட்சியானது மீண்டும் ஏற்பட வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் ஓட்டை மட்டும் அளிப்பதோடு மட்டும் இல்லாமல் ஓவ்வொரு கவலை எடுத்துக் கொண்டு பாடுபட வேண்டும். காமராசர் ஆட்சி ஏற்பட அவர் கட்சி வெற்றி பெறவும் பாடுபட வேண்டும்.
---------------------------------------------
22.10.1961- அன்று திருச்சியில் தந்தை பெரியார் 83-ஆம் பிறந்த தின விழாவில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு. "விடுதலை", 25.10.1961
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா