நமது நாட்டில் சிறிது அரசியல் உரிமை கிடைத்ததன் பலனாகவும், அரசியல் கிளர்ச்சிகள் கொஞ்சம் அதிகப்பட்டதன் பலனாகவும், கல்வி, அரசாங்க உத்தியோகம், ஸ்தல ஸ்தாபன பதவிகள் முதலியவைகளில் முன்னேறாமல் இருந்த ஒவ்வொரு ஜாதியினரும் விழித்துக் கொண்டனர். கல்வி, பட்டம், பதவி முதலியவைகளில் முன்னேறி இருக்கும் வகுப்பாரைக் கண்டு தாமும் அவர்களைப் போல் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் வகுப்பு மகாநாடுகள் கூட்டவும் தங்களுக்குரிய பங்கைக் கொடுக்க வேண்டு மென்று அரசாங்கத்தைக் கேட்கவும் ஆரம்பித்தனர். பல வகுப்புகள்- அதாவது பல ஜாதிகள் உள்ள ஒரு தேசத்தில் அதிகாரம், பட்டம், பதவி முதலியவைகளில் எல்லா வகுப்புகளுக்கும் சம பங்கு இருக்க வேண்டும் என்று கேட்பதும் அதற்காகப் போராடுவதும் நியாயமேயாகும்.

இந்தக் காரணங்களுக்காக நமது நாட்டில் வகுப்பு மகாநாடுகள் கூட ஆரம்பித்த காலத்தில், எல்லாவற்றிலும் முன்னேற்றமடைந்து தேசத்தில் ஆதிக்கம் பெற்று மற்ற வகுப்புகளை எல்லாம் தாழ்ந்த வகுப்புகளாக வைத்து தமது வகுப்பை மாத்திரம் உயர்ந்த வகுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் சிறுபான்மைக் கூட்டத்தாராகிய பார்ப்பனர்கள் இம்மகா நாடுகளைக் கண்டித் தனர். பார்ப்பனர்களின் பேச்சை நம்பிய பார்ப்பனரல்லாதார் சிலரும் இந்த வகுப்பு மகாநாடுகளைக் கண்டித்தார்கள். வகுப்பு மகாநாடுகள் கூட்டுவது தேசத் துரோக மென்றும் வகுப்பு வாதத்தை வளர்ப்பதாகுமென்றும், தேசீய ஒற்றுமைக்கு விரோதமென்றும் பலமாகப் பிரசாரம் பண்ணினார்கள். ஆனால் எந்த ஜாதியினரும், இந்த பிரசாரத்தைக் கண்டு ஏமாறாமல் இப்பிரசாரம் அரசாங்கத்தின் அதிகாரம், பட்டம், பதவி இவைகளைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு கூட்டத்தார் தங்கள் ஆதிக்கத்திற்குக் கெடுதிவராம லிருக்க, அதாவது இவைகளில் மற்ற சாதியினர்களும் பங்குக்கு வராமலிருக் கச் செய்யும் சுயநலப்பிரச்சாரம் என்பதை அறிந்து கொண்டனர். ஆகையால் இத்தகைய பிரச்சாரத்தைக் கண்டு ஏமாறாமல் தங்கள் தங்கள் வகுப்பு முன்னேற்றத்தில் கவலைக் கொண்டு மகாநாடுகளைக் கூட்டி, அவர்களைக் கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலியவைகளில் முன்னேறி மற்ற உயர்ந்த வகுப்பினரைப் போல ஆகவேண்டுமென பிரச்சாரம் பண்ணினார்கள்.

periyar mgr 358இவ்வாறு முயற்சி செய்ததின் பலனாக ஒவ்வொரு வகுப்பினரும் விழிப்படைந்து, நாகரீகம் பெற்று தேசத்தில் எல்லா விஷயங்களிலும் தங்களுக்கும் சமஉரிமை இருக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். வகுப்பு மகாநாடுகள் தேச ஒற்றுமைக்கு விரோத மானவை என்று கூறிக் கொண்டிருந்த பார்ப்பனரல்லாதார்களும், இப்பொழுது இவைகளை ஆதரிக்கவும், வகுப்பு முன்னேற்றத்தில் கவலைக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். வகுப்பு மகாநாடுகளைக் கூட்டுவோர் தேசத் துரோகிகள் என்று சொல்லிப் பலமாகக் கிளர்ச்சி செய்த பார்ப்பனர்களும், இதுவரையிலும் தாங்கள் அனுபவித்து வந்த ஏகபோக உரிமைகளுக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதை அறிந்து, பார்ப்பன மகாநாடுகளும், வருணாச்சிரம தரும மகாநாடுகளும், சனாதன தரும மகாநாடுகளும் கூட்டித் தங்களுடைய ஆதிக்கம் குறையாமல் இருப்பதற்கு வழியும், பாதுகாப்பும் தேடுகின்றனர். சுருங்கக் கூறினால் தற்சமயத்தில் நமது நாட்டு அரசியல் வாதிகளில் ‘ஜாதி’ அபிமானம் இல்லாத தலைவர்களே இல்லை யென்று கூறிவிடலாம்.

சமீபத்தில் நடந்த வட்ட மேஜை மகாநாட்டிற்குச் சென்ற இந்திய பிரதிநிதிகளும், ஜாதியின் பேராலும், மதத்தின் பேராலும் சென்று இவைகளை மனதில் வைத்துக்கொண்டே, அதாவது தங்கள் ஜாதிக்கும், மதத்திற்கும் சரியான பாதுகாப்புகள் இருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடனேயே பேசினார்கள்; காரியங்களில் கலந்து கொண்டார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

எல்லா ஜாதிகளும், கல்வியிலும், அறிவிலும், நாகரிகத்திலும் முன்னேற்றமடைந்து சமநிலைக்கு வரவேண்டும். எல்லா ஜாதிகளும் அரசாங்க உத்தியோகப் பதவிகளிலும், கௌரவப் பதவிகளிலும் சமபங்கு பெற்று முன்னேற வேண்டும். மலை உச்சியில் இருக்கிற ஜாதிகளும், மலையின் நடுத்தளங்களில் வாழும் ஜாதிகளும், மலைக் குகைகளில் வாழும் ஜாதிகளும், மலைச் சரிவுகளில் வாழும் ஜாதிகளும், மலை அடிவாரத்தில் வாழும் ஜாதிகளும், சமமான ஒரே இடத்தில் வந்து ஒரே நாகரிகம், ஒரே விதமான கல்வி ஒரே விதமான சுதந்திரம் ஒரே விதமான ஒழுக்கம் முதலியவைகளைப் பெறுவார்களானால், அவர்களிடமிருந்த ஜாதி வித்தியாசம், கொள்கை வித்தி யாசம் முதலியவைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து எல்லோரும் ஒரே சகோதரர்களாக ஆக முடியும் என்ற கருத்தைக் கொண்டுதான் நாம் ஆதி முதல் ஜாதி மகாநாடுகளை ஆதரித்து வருகிறோம். ஒவ்வொரு ஜாதியும் தாம தாம் முயற்சி செய்து சம சுதந்திரம் பெறுவதன் மூலம் ஜாதி ஒழியும் என்னும் நோக்கத்தோடுதான் நாம் ஜாதி மகாநாடுகளுக்கு ஆதரவளிப்பதுமாகும்.

எண்ணற்ற ஜாதிகளும் கணக்கற்ற கொள்கைகளும் உள்ள ஒரு தேசத்தில் இவைகளை ஒன்றுபடுத்துவதற்கு இதுவே சிறந்த வழியாகும் என்பது அறிவுடையவர்கள் ஒப்புக்கொள்ளக் கூடியதேயாகும். இவ்வாறில்லாமல் வகுப்பு வாதம் கூடாது, ஜாதி மகாநாடுகள் கூடாது, வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் உதவாது என்று சொல்லும் தேசாபிமானப் பாசாங்கு பேச்செல்லாம் தற்போது எல்லாவற்றிலும் ஆதிக்கம் பெற்றிருக்கும் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்கள் எப்பொழுதும் ஆதிக்கம் பெற்றிருக்கவும், கொடுமைப் படுத்தப்பட்டிருக்கும் தாழ்ந்த ஜாதிக்காரர் என்பவர்கள் எப்பொழுதும் கொடுமைக்குட்பட்டு அடிமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கவும் செய்யப் படும் சூழ்ச்சிப் பிரசாரமேயாகும். வேறு யோக்கியமான பிரசாரமென்றோ, நா™யமான பிரசாரமென்றோ சொல்லமுடியாதென்றே கூறுவோம்.

ஆனால் தனிப்பட்ட ஜாதியாச்சாரங்களும், மதக் கொள்கைளும் ஒழிந்து, தங்களுக்கு மேற்பட்டவர்களென்றும் இல்லாமல் கீழ்ப்பட்டவர்க ளென்றுமில்லாமல் எல்லா மக்களும் சமசுதந்தரம் பெறவே ஜாதியின் பெயரால் மகாநாடுகள் கூட்டப்படுகிறது என்னுங் கொள்கை கைவிடப் பட்டாலும் பழய ஜாதியாச்சாரங்களையும் கொள்கையாச் சாரங்களையும் புதுப்பித்து தங்கள் ஜாதி எப்பொழுதும் தனிப்பட்ட ஜாதியாகவே இருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் ஜாதி மகாநாடுகள் கூட்டப்பட்டாலும் அது தேசத்தை இன்னும் அடிமை நிலையிலும், ஒற்றுமையற்ற நிலையிலும் கொண்டு போய்ச் சேர்க்குமேயொழிய வேறு ஒரு பலனையும் தராது என்பது நிச்சயம்.

ஆனால் இப்பொழுது நமது நாட்டில் நடைபெற்று வருகின்ற ஜாதி மகாநாடுகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் சீர்திருத்தத்துக்குரிய பேச்சு களும் தீர்மானங்களுமே நடந்து கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஜாதி மகாநாடுகளிலும் ஆண் பெண்கள் எல்லோருக்கும் கட்டாயமாகக் கல்வி போதிக்கப்பட வேண்டுமென்றும், தங்கள் ஜாதிக்குள்ளிருக்கும் உட்பிரிவு களை ஒழிக்க வேண்டுமென்றும், அவர்களுக்குள் கலப்பு மணங்களும். சமபந்தி போஜனங்களும் செய்யப்பட வேண்டுமென்றும் பெண்கள் சுதந்திரத்தை ஒப்புக் கொண்டு அவர்களுக்கு விதவா விவாக உரிமை, சொத்துரிமை, வயது வந்தபின் மணஞ் செய்து கொள்ளும் உரிமை முதலியவை களைக் கொடுக்க வேண்டுமென்றும், கல்யாணம் முதலிய சடங்குகளில் செலவுகளைக் குறைக்க வேண்டுமென்றும் பேசப்பட்டும் இவை சம்பந்தமான தீர்மானங்கள் செய்யப்பட்டுமே வருகின்றன. மதப் பைத்தியமும், ஜாதிப்பித்தும் பிடித்த சில தலைவர்களால் கூட்டப்படும் சில ஜாதி மகாநாடுகளைத் தவிர பெரும்பாலான எல்லா மகாநாடுகளிலும் மேற்கூறியவை சம்பந்தமான தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இம்மாதிரியான தீர்மானங்கள் ஜாதி மகாநாடுகளில் நிறைவேற்றப்படுவதற்கு காரணம் நமது சுயமரியாதை இயக்கமேயாகும்.

ஆனால் சில ஜாதி மகாநாடுகளில் நடைபெறும் சில பிற்போக்கான செயல்களையும், பேச்சுகளையும் பற்றி மாத்திரம் நாம் எடுத்துக் காட்டிக் கண்டிக்காமல் இருப்பதற்கில்லை. அதாவது சில ஜாதி மகாநாடுகளில் அந்த ஜாதிக்காரர்கள் தங்களுடைய பழம் பெருமைகளை எடுத்துப் பேசாமலிருப் பதில்லை. தங்களை க்ஷத்திரியர்களென்றும், வைசியர்களென்றும், பிராமணர்களென்றும் சொல்லிக் கொண்டும் இம்மாதிரி அரசாங்கத்தாரும் தங்கள் ஜாதிகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் பேசுகின்றனர், தீர்மானங் களும் நிறைவேற்றுகின்றனர். இவர்கள் கூற்றுக்கு ஆதாரமாக ஜாதி மதங் களை நிலைநிறுத்தி மக்களைத் தனித்தனி வகுப்பாகப் பிரித்து வைத்து எல்லாரையும் தமக்கு கீழ் அடக்கி வைத்து ஆதிக்கம் செலுத்துவதற்காகப் பார்ப்ப னர்களாலும், பார்ப்பனர்களின் சாவகாசத்தாலும் ஆரியர்களின் நாகரீகமே உயர்ந்தது என்று எண்ணிய தமிழ்ப் புலவர்களாலும் ஏற்படுத்தப் பட்டிருக்கும் புராணங்களையும், கதைகளையும் காட்டுகின்றனர். தங்கள் தங்கள் ஜாதிக்குத் தனித் தெய்வங்கள் உண்டென்றும் தனிக் கொடிகள் உண்டென்றும் கூறி அவைகளையும் அனுஷ்டிக்கும் படியும், அவைகளுக்குப் பூசை, திருவிழா முதலியன செய்யும்படியும் தூண்டுகின்றனர். இவ்வாறு செய்வதனால் அந்த ஜாதிகள் தேசமக்களுடன் சமநிலைக்கு வர முடியுமா? என்றுதான் நாம் கேட்கிறோம்.

மக்களை முட்டாள்களாக ஆக்கி அவர்கள் உழைப்பினால் வரும் செல்வங்களைப் பயனற்ற வழிகளில் செலவு செய்து தரித்திரர்களாக்கி வைக்கும் தெய்வ நம்பிக்கையையும், தெய்வ வழிபாட்டையும் வற்புறுத்து வதனால் என்ன பலன் உண்டாகப் போகின்றது? இதுவரையிலும் நமது நாட்டு மக்கள், தெய்வங்கள், திருவிழாக்கள், பூசைகள் இவைகளுக்காக செலவழித்த பொருள்கள் எவ்வளவு? அவைகளால் நமது நாட்டிற்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்று ஆலோசித்துப் பார்க்குமாறு இப்பிற்போக்காளர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். இத்தகைய கொள்கைகளை அனுசரிக்க முற்படும் ஜாதிகள் இதுவரையிலும் ஒதுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டுத் தனித்துக் கிடந்தது போலவேதான் இன்னும் கிடக்கவேண்டும் என்றும் எச்சரிக்கை செய்கிறோம்.

ஆகையால், உண்மையிலேயே தங்கள் ஜாதி முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எண்ணி ஜாதி மகாநாடுகளைக் கூட்டுகின்ற தலைவர்கள் பரந்த நோக்கமும், சிறந்த கொள்கையும், சுயமரியாதை உணர்ச்சியும் உடையவர்களாய் இருக்க வேண்டும். தனிப்பட்ட ஜாதியாசாரங்களையும், கொள்கையாசாரங்களையும் ஒழித்து உலக சகோதரத்துவத்தை அடைவதற்கு தகுந்த பொதுவான ஆசாரங்களை உண்டாக்க வேண்டும் என்னும் நோக்க முள்ளவராய் இருக்க வேண்டும். தமக்கு மேல் உயர்ந்த ஜாதியார்கள் இருக் கிறார்கள். தமக்குக் கீழ் தாழ்ந்த ஜாதியார்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணத்தைத் தம் ஜாதியினரிடமிருந்து அகற்றவேண்டும் என்னும் கொள்கை உடையவராயிருக்க வேண்டும். பரம்பரையாக நமது ஜாதிக்கு ஏற்பட்ட தொழிலை விட்டுவிடக் கூடாது; நமது ஜாதியினர் அனைவரும் பரம்பரைத் தொழிலையே செய்து வரவேண்டும் என்னும், மூடக் கொள்கை யையும், பிடிவாதமான கொள்கையும் ஒழித்து, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கல்விக்கும், அறிவுக்கும், திறமைக்கும், வசதிக்கும் ஏற்ற எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற கொள்கையையும் எண்ணத்தையும் தமது ஜாதியினர்க்கு உண்டாக்க வேண்டும் என்னும் உறுதியான அபிப்பிராய முடையவராய் இருத்தல் வேண்டும். இத்தகைய கொள்கையும், உறுதியான எண்ணமும் உள்ள தலைவர்களால் கூட்டப்படும் ஜாதி மகாநாடுகளும், ஜாதிகளுந்தான் முன்னேற்றமடைய முடியும்; சமசுதந்தரப் பந்தயப் போட்டி யில் கலந்து கொண்டு செம்மையாக வாழமுடியும் என்று உறுதியாகக் கூறுகிறோம்.

ஆகையால், தங்கள் மதத்தையும் பழய ஆசாரங்களையும், தொழில் களையும் காப்பாற்றிக் கொண்டு சமசுதந்தரமும் பெறலாம் என்று நினைக்கின்ற வைதீக ஜாதித் தலைவர்களின் எண்ணம் பயனற்றதென்பதை உணர்ந்து கொண்டு, காலத்திற்கேற்ப மதாச்சாரம், ஜாதி ஆச்சாரம் எல்லா வற்றையும் மாற்றிக் கொள்ளப் பின்வாங்காத தலைவர்களாலேயே ஜாதிகளும், ஜாதிக் கொடுமைகளும், மதங்களும், மதக் கொடுமைகளையும் ஒழிக்க முடியும் என்று கூறுகிறோம். இத்தலைவர்களின் முயற்சியினால் தான் நமது நாட்டில் ஐக்கியபாவம் ஏற்பட முடியும் என்றும் சொல்லுகிறோம். ஆகையால் ஜாதி மகாநாடு கூட்டுகின்றவர்கள் மேற்கூறிய சில பிற்போக்கான செயல்களும் பேச்சுகளும் இனியும் தங்கள் மகாநாடுகளில் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 24.01.1932)

Pin It