மாற்றுத் திறனாளிகளுக்கான ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின கருத்தரங்கம் மற்றும் முதலாம் ஆண்டு உரிமை முழக்க விழா 9.1.2016 காலை 10 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் புத்தன் கலைக் குழுவினர் பறை இசையுடன் தொடங்கியது. முதல் நிகழ்வாக, ‘சுயமரியாதை பார்வையில் மாற்றுத் திறனாளிகள் - மானம் - மாண்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தலைமையேற்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சுயமரி யாதைக்கான விளக்கங்களை முன் வைத்து உரையாற்றினார்.

அவர் உரையில் குறிப்பிட்டதாவது: “உலகிலேயே சுயமரியாதை என்ற சொல் இந்த மண்ணில்தான் அறிமுகமானது. அதை அறிமுகப்படுத்தி, சுயமரியாதைக்காக மக்களை திரட்டியவர் பெரியார்.

உலகம் முழுதும் ஒடுக்கப்பட்ட இனங்கள் சமத்துவத்துக்கும் உரிமைக்கும் போராடின. அதற்கான நியாயங்களை அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் இந்த நாட்டில்தான் ஒடுக்கப்பட்ட ஜாதிக் காரனாகவும், உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் உயிர் வாழ்வதை ‘தர்மமாக’ ஏற்றுக் கொண்டார்கள் - அதுவே கடவுள் விதித்த கட்டளை - பூர்வ ஜென்மத்தின் பயன் என்று உண்மையாகவே நம்பி, அடிமை வாழ்வில் ஆறுதலடைந்து கிடந்தோம். எனவேதான் தமிழ்நாட்டில் சுயமரியாதை என்ற உணர்ச்சியை, மான உணர்ச்சியை ஊட்டுவதற்கான இயக்கம் வரலாற்றுத் தேவையாக இருந்தது.

சமத்துவம் மற்றும் உரிமைக்கான போராட்டங் களுக்கே இந்த மண்ணில், சுயமரியாதை என்ற முழக்கம்தான் முன் நிபந்தனையாக இருந்தது. உலகின் எல்லா மதங்களுமே  கடவுளின் முன் அனைவரும் சமம் என்றுதான் கூறியது. ஆனால், நமது நாட்டில் தான் “கடவுள் முன் அனைவரும் சமமாக முடியாது” என்று மனித சுயமரியாதையை குழிதோண்டி புதைக்கும் நம்பிக்கைகளை பொதுப் புத்தியில் ஏற்றி அதை சமூகக் கட்டமைப்பாகவே மாற்றினார்கள்.  பெரும் பகுதி மக்கள், சுயமரியாதை மறுக்கப்பட்டவர் களாக உழலும் நாடு இது. அதே பார்வையில்தான் மாற்றுத் திறனாளிகளையும் இந்த சமூகம் பார்க்கிறது.

மாற்றுத் திறனாளிகளை உலகம் முழுதும் மாண்புக்குரியவர்களாக உரிமைக்குரியவர் களாக மதிக்கப்படும்போது, இந்த நாடு இவர்களை மனிதர்களாகக்கூட மதிக்கத் தயாராக இல்லை. இதற்கான காரணத்தை சரியாகக் கண்டறிந்து ‘சுயமரியாதை’ உணர்வை ஊட்ட வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயமரியாதை எந்தத் துறைகளில் மறுக்கப்படுகிறது என்பதை இங்கே பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் விளக்கிப் பேச இருக்கிறார்கள்.

நீங்கள் ஒன்றில் உறுதியாக இருக்க வேண்டும். சமூகம் காட்டும் பரிவு உணர்ச்சியோ இரக்க உணர்வோ அதன் வழியாக பெறப்படும் உதவிகளோ நிச்சயமாக சுயமரியாதையைப் பெற்றுத் தந்து விடாது. மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை அங்கீகரிப் பதில்தான் சுயமரியாதை அடங்கியிருக்கிறது.

“ஒரு மனிதன் தனது பொருளை எந்த இடத்தில் இழந்து விட்டானோ, அந்த இடத்தில் தேடினால் தானே கிடைக்கும்? பொருளை இழந்த இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் தேடினால் கிடைக்குமா? அதேபோலத் தான் நமது மக்களை மானத்தை சுயமரியாதையை எந்த இடத்தில் இழந்து விட்டார்களோ, அந்த இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார் பெரியார். அப்படி இழந்துவிட்ட இடங்களை  அடையாளம் காட்டி அங்கே சுயமரியாதையை மீட்டெடுக்க மக்களை திரட்டினார். சுயமரியாதைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் என்போர் யார் என்பதையும் பெரியார் விளக்குகிறார்.

“சுயமரியாதைக்காரர்கள் அறிவுக்கு பூரண சுதந்திரம் கொடுத்த பகுத்தறிவுவாதிகள், சகலத்தையும் நடுநிலை நின்று ஆழமாய் பார்ப்பவர்கள், படித்த அறிவாளிகள், பண்டிதர்கள் முதலிய யாரையும் பகுத்தறிவு கொண்டு அவர்கள் திறனைச் சீர்தூக்கிப் பார்ப்பவர்கள் என்பதோடு அதில் அனுபவம் பெற்று அறிவார்ந்தவர்கள்” என்று கூறுகிறார்.

விருப்பு வெறுப்பற்ற பகுத்தறிவுக் கண்ணோட்ட மும், அந்த சிந்தனையை செயலாக்குவதன் வழியாக பெறக்கூடிய அனுபவங்களையும் கூடுதலாக பெற்று தலைநிமிர்ந்து நடைபோடக் கூடியவன் சுயமரியாதைக் காரன் என்று கூறும் பெரியார், ஒருவன் சுயமரியாதைக்காரனாக தன்னை வளர்த்தெடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பண்புகளையும் சுட்டிக் காட்டுகிறார்.

“மற்றவரிடம் தனக்கு உதவி பெற அவசியம் உண்டாகாத வகையில் கூடிய வரையில் முயற்சிக்க வேண்டும். இதில் எவ்வளவுக்கெவ்வளவு வெற்றி பெறுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு மானமுள்ள வாழ்க்கையை அடைய முடியும். மற்றவர்களிடம் தம் வாழ்க்கைக்கு எதையும் எதிர்பார்த்து வாழ்வது என்பது மானம் கெட்ட வாழ்க்கை” என்று கடுமையாக சாடுகிறார்.

“தனி மனித சுயமரியாதையோடு ஒரு மனிதன் தன்னை விடுவித்துக் கொண்டால் போதுமா? சமூகத்தின் சுயமரியாதைக்குப் போராட வேண்டாமா? இதில் பங்களிக்க வேண்டாமா?” என்ற கேள்வியை பெரியார் எழுப்பத் தவறவில்லை.

“ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ ஒரு சமுதாயத்தின் சுயமரியாதையைக் காப்பாற்றவோ, ஒரு சிலராவது மானமிழந்தால் அதில் ஒன்றும் குற்ற மில்லை” என்று சமூக சுயமரியாதையை அரவணைத் துக் கொள்கிறார். அதன் காரணமாகத்தான் வள்ளுவர் குறளிலேயே தனக்கு மிகவும் பிடித்தது -

“குடி செல்வார்க்கில்லை பருவம் மடிசெய்து

 மானம் கருதக் கெடும்”

- என்ற குறளை குறிப்பிடுகிறார்.

மிருகங்களுக்கு மான உணர்ச்சி இல்லை. ஆனால், மிருகங்களிலிருந்து மனிதர்களை தனியே பிரித்துக் காட்டுவது மான உணர்ச்சிதான். அதுவே சுயமரியாதைக்கான அடிநாதம்.

1929ஆம் ஆண்டில் செங்கல்பட்டில் பெரியார் நடத்திய முதல் சுயமரியாதை மாநாட்டில், “சுயமரியாதை மறுக்கப்பட்ட தீண்டப்படாத மக்களை மாநாட்டுக்கு அழைத்தார்; அவர்களை மட்டுமல்ல கணவனை இழந்த ‘விதவை’களையும், விபச்சாரத்தைத் தொழிலாகக் கொண்ட பெண் களையும் மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பெரியாரின் அதே கண்ணோட்டத்தோடுதான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகிய உங்களின் சுயமரியாதைக் குரல், உரிமை முழக்கத்தோடு இணைந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது.

சுயமரியாதை உணர்ச்சி வந்து விட்டாலே உரிமைக்கான போராட்ட உணர்வும் வந்துவிடும். உங்களின் உரிமைப் போராட்டத்தில் சமூக சுயமரியாதைக்காகவே களத்தில் நிற்கும் எங்கள் இயக்கம் என்றும் துணை நிற்கும்; குரல் கொடுக்கும்” என்று குறிப்பிட்டார்.

மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் டி.எம்.என். தீபக், எஸ். ராஜா, வரதன் பூபதி, ஈ.வெங்கடேசன், புனிதா சுரேஷ், தீபா, ரோசி சுஜாதா, ‘பாஸ்கட்’ பிரபு மற்றும் பால பாரதி (ஊடகவியலாளர்), ‘ஈக்குவல்ஸ்’ இயக்குனர் மீனாட்சி, பேராசிரியர் நாகராஜன், செந்தில் (ஊடகவியலாளர்) ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். அனைவருக்கும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நினைவு பரிசுகளாக கேடயங்களை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக முனைவர் வசந்தி தேவி, முதுநிலை மண்டல இரயில்வே ஆணையர் கே.கே. அஷ்ரப், சுரேஷ் (டிஜிபி லிட்ஸ் மேலாண்மை இயக்குநர்) உள்ளிட்ட பலரும் சிறப்புரையாற்றி, மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவியோருக்கும் உழைத்தோருக்கும், சாதனையாளர் களுக்கும் ‘தடை உடைத்த போராளிகளுக்கான’ விருதுகளை வழங்கினர். தமிழகம் முழுதுமிருந்தும் மாற்றுத் திறனாளிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.

டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர், டி.எம்.என். தீபக், முன்னின்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து சாதனையாளர்களை உணர்ச்சிபூர்வமாக அறிமுகப்படுத்தினார். ஊடகவியலாளர் விஜி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Pin It