கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை :
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் என்ற கிராமத்தில் தாழ்ந்தப்பட்ட மக்கள் மீது, அங்கிருக்கிற ஆதிக்க ஜாதியினர், தொடர்ச்சியாக பொதுக் கோயிலில் இருந்து பால்குடம் எடுப்பதையும், இறந்த பிறகு பொதுப் பாதையில் இறந்தவர்களைக் கொண்டு செல்வதையும் அனுமதிக்காமலே உள்ளனர்.
இறந்த உடலை ஊராட்சிப் பாதை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றால் அரை கிலோமீட்டர் மட்டுமே. ஆனால் வயல்வெளி, வாய்க்கால், வரப்பு என எடுத்துச் சென்றால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றாக வேண்டும்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் குஞ்சம்மாள் என்கிற தாழ்த்தப்பட்டப் பெண் ஒருவர் இறந்தபோதும் பொதுப்பாதையில் எடுத்துச் செல்லத் தடுத்ததால் பல்வேறு இயக்கங்கள், கட்சியினர் ஆதரவோடு, ஊராட்சிப் பொதுப் பாதை வழியாக எடுக்க அனுமதித்தால் மட்டுமே உடலை எடுப்போம் என அப்பகுதி இளைஞர்கள் போராடினர்.
மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரை விட்டு பலவந்தமாக உடலை வயல், வாய்க்கால், வரப்பு வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
3-1-2016 அன்று அந்த குஞ்சம்மாளின் கணவரான செல்லமுத்து இறந்து போனார். இவரது உடலையாவது பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
உயர்நீதிமன்றமும் பொதுப்பாதையில் உடலை எடுத்துச் செல்ல அனுமதியும் பாதுகாப்பும் அளிக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் ஆதிக்க ஜாதியினர் அனுமதிக்க மறுத்துத் தங்கள் பகுதியில் 50 கேன் மண்ணெண்ணெய், தடிகளுடன் பொது சாலையில் கூடி நின்றனர். நூற்றுக்கணக்கில் கூடி நின்ற காவல்படை யினர் இருக்கும்போதே இந்த அநியாயம் நிகழ்ந் துள்ளது.
தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும், “உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்காத வரை இறந்தவரின் உடலை நாங்கள் அடக்கம் செய்யப் போவ தில்லை” என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்நிலையில் பொதுப் பாதையில் தாழ்த்தப் பட்டவரின் உடலை எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டிய மாவட்ட நிர்வாகம், தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாததோடு மட்டுமின்றி, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதை செயல்படுத்தாமல் ஆதிக்க ஜாதியினருக்கு ஆதரவாக, போராடிய தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே இதய நோயாளியாய் இருந்த, இறந்த செல்ல முத்துவின் மருமகள் மல்லிகாவையும், பேத்தி ஜெகதாம்பாளையும் அடித்ததோடு காலில் போட்டு மிதித்ததால், நாகை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நிலைமை மோசமாக இருந்ததால் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தாக்கியதோடு நில்லாமல் ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களையும் அடித்து ஐந்து காவல்துறை வண்டிகளில் ஏற்றி காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்ல, தடுக்கப்பட்ட பஞ்சாயத்து சாலையில் சென்ற காவல்துறை வண்டிகளையே ஆதிக்க ஜாதியினர் கல்வீசித் தாக்கியுமுள்ளனர்.
இதற்கிடையில் இறந்தவரின் உடலை காவல்துறையினரே எடுத்துச் சென்று, உயர்நீதி மன்ற ஆணைக்கு முரணாக, வயல், வாய்க்கால், வரப்புவழியாகவே எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளார்கள்
காவல்துறையின் கொலைவெறித் தாக்கு தலில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பலர் காயமுற்று மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுமுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையைக் கூட நிறைவேற்ற கையாலாகாத நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் அரசு பயங்கரவாதம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது ஆகும்.
தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதில் தமிழக அரசு இயந்திரம் ஆதிக்க ஜாதிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது; இதில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி இரண்டுமே ஒரே மனநிலையுடன் தான் செயல்படுகின்றன தாமிரபரணி, மாஞ்சோலை படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்றவற்றின் தொடர்ச்சியாக இன்று நாகை மாவட்டத்தில் காவல்துறையினரின் அரசு பயங்கரவாதம் என, தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதில் தொடர்ந்து ஆதிக்க மனப்பான்மையுடனே செயல்படுகின்றது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இயக்கங்கள், கட்சிகள் களத்தில் இறங்கி போராடினால் அவர்கள் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் போன்ற கருப்புச் சட்டங்களை ஏவி அவர்களை ஒடுக்குகிறது; ஆதிக்க ஜாதியினருக்கோ ஏவல் பணியாற்றுகின்றன அரசு நிர்வாகமும் காவல்துறையும்.
இந்த நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னமும் தாழ்த்தபட்ட மக்கள் தொடர்ந்து ஆதிக்க ஜாதி யினரால் வன்கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கிராமங்களில் இன்னும் இரட்டை குவளை முறை இருந்துதான் வருகிறது பொதுப் பாதையில் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல முடியவில்லை. பொது கோவில்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது
இந்த அவலங்களை ஜாதி ஒழிப்புக் களத்தில் வாழ்நாள் முழுதும் போராடிய பெரியார் பெயரைச் சொல்லி ஆட்சியில் அமர்ந்துள்ள அதிமுக, திமுக போன்றவை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன என்பது தான் வேதனைக்குரிய செய்தி.
இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுக்குப் போகிறார்களே என்று அங்கலாய்க்கும் அரசுகளும், ஆளும் வர்க்கத்தினரும், தங்களின் சட்டவிரோத நடவடிக்கைகள்தாம் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளிவிடும் காரணிகள் என்பதை ஏனோ வசதியாக மறந்துவிடுகின்றனர்.
வழுவூரில் நடந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் ஆகியோரின் சட்டவிரோத அராஜகப் போக்கை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. உயர்நீதி மன்ற ஆணையைக்கூட மீறி செயல்பட்டோர் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாட்டரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறது.
நாகை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக வும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தமிழ் அறியாதவர் என்பதால் அவருக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ளவரும், அரசு சாலையையே தடுத்து அராஜகம் செய்யும் அதே ஆதிக்க ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள்.
அந்தந்தப் பகுதியின் ஆதிக்க ஜாதிப் பிரிவுகளைச் சேர்ந்தோரை அந்த பகுதிகளில் அதிகாரிகளாக, குறிப்பாக காவல் துறை அதிகாரிகளாக நியமிக்கலாகாது என்று தொடர்ந்து எழுப்பிவரும் கோரிக்கையை மீண்டும் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.
ஆனால், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையும் ஊட்டும்வண்ணம் அந்தந்தப் பகுதி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகளை அந்தந்தப் பகுதிகளிலேயே பணியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் தமிழக அரசை என்றும் வலியுறுத்துகிறோம்.