தமிழ் இலக்கிய வகைகளில் நாவல் என்பது மேற்கத்தியர்களின் தாக்கத்தால் கிளர்ந்து எழுந்தவையாகும். ஐரோப்பியர்களின் காலனியச் சூழலால் உரைநடையின் போக்கு இந்திய மரபில் தலையெடுத்துள்ளது. அண்மைக்கால தமிழ்ச் சூழலில் நாவல் இலக்கியம் துரிதமாகவே வளர்ந்து வந்துள்ளதை அறியமுடிகிறது. நீர்த்துப்போன அரசகுலம், சமீந்தார்கள், இடம்பெயர்ந்தோர்கள், புலம்பெயர்ந்தோர்கள், இனக்குழு, மதம், மொழி வகுப்புவாதம், மற்றும் வட்டாரவழக்கு, பாலினம், பெண்ணினம் என்ற வகையில் தமிழ் நாவல்கள் அமைந்துள்ளன. மேற்படியான இலக்கியங்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பற்றிய வாழ்வியல்களை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 மாற்றுத்திறனாளிகள் குறித்த படைப்புகள் இருதன்மையில் அமைந்துள்ளன. ஒன்று மாற்றுத்திறனாளியாக இருந்துகொண்டு தன்நிலை பற்றி எழுதுவது, மாற்றுத்திறனாளி அல்லாதோர், மாற்றுத்திறனாளிகள் குறித்துப் படைப்பது மற்றொன்றாகவும் அமைந்துள்ளன. (நா.கதிரைவேற் பிள்ளை, தமிழ் மொழி அகராதி ஆசியன் கல்வியியல் சேவை நியூடெல்லி மெட்ராசு 1998) மாற்றுத்திறனாளியாக வாழ்ந்து தன்நிலையைப் பற்றி எடுத்துரைப்பும், தன்நிலைப் பாட்டை மாற்றுத்திறனாளி அல்லாதோர் எடுத்துரைக்கும் வாழ்வியலின் வலிகளை விளக்குவதாகவும் இக்கட்டுரை அமைய உள்ளது.disabled person with familyஎஸ்.ராவின் சஞ்சாரம் நாவலில் மாற்றுத்திறனாளிகளின் விழுமியங்கள்

சஞ்சாரம் நாவல் சாகித்திய விருதுபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சஞ்சாரம் நாவலில் ரத்தினம், பக்கிரி, பழனி, தண்டபாணி, மீனாட்சி முதலானவர்களை தவில், நாதசுவரம், இசையில் தேர்ந்தவர்களாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. மூதூர் பகுதியில் சூலக்கருப்பன சாமியின் திருவிழாவின் போது நாதசுவரக் கலைஞர்களுக்கும் மூதூர் பகுதியினர்க்கும், கைகலப்பு ஏற்பட்டு சாதியின் பேரில் கலவரங்களாக சஞ்சாரம் நாவலில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாவல் படைப்பிலக்கியத்தில் சாதி, மதம், உயர்வு, தாழ்வு என்பதானக் கருத்தியல்களின் படி நாவல்கள் உருவாக்கம் பெற்றுள்ளன. அத்தகைய சமூகக் கட்டமைப்புகளை உள்வாங்கிக்கொண்டதாக சஞ்சாரம் நாவல் அமைந்துள்ளது. வேதமரபுகளிலும் தெய்வீக மரபுகளிலும் கீழானவை, மேலானவை என்பதில் கடவுள் உருவாக்கம் பெற்றுள்ளன. ஆகம விதிக்கு உட்பட்டு பெருந்தெய்வம், சிறுதெய்வம் கோவில் விழாக்களில் இசைக்கப்படும் நாதசுவரம் தவில், பறை, உடுக்கை என்பதான இசைக்கருவிகளை உயர்வுதாழ்வு பேதமின்றி பொதுவுடைமையாகவே இசைத்து வருவதை சஞ்சாரம் நாவலில் காணமுடிகிறது.

சஞ்சாரம் நாவலில் சூலக்கருப்பசாமி, கருப்பனசாமி சவுந்தராசப் பெருமாள், முதலான கோவில்களில் உயர்வான நாதசுவரம், தவில் முதலான இசைக்கலையை நிகழ்த்தப்பட்டுள்ளன. கடவுள் என்ற பேதம் மனிதனை உயர்வு தாழ்வு என்பதான வகையில் விலக்களிக்கப் படவில்லை. கடவுள் உயர்வாக இருக்கலாம், ஆனால் கடவுளுக்கு முன் இசையை இசைக்கும் போது` இசைதான் மானுடத்தில் உயர்வாகப் போற்றப்பட்டுள்ளது.

சஞ்சாரம் புனைகதையில் வரும் ரத்தினம், பழனி, பக்கிரி, மீனாட்சி முதலானவர்கள் சாதியால் கீழானவர்கள். ஆனால், அவர்கள் இசைக்கும் இசை மேலானதாக ஓதியூர், மூதூர் மற்றும் பிற சமூக மக்களும் புகழ்ந்துள்ளனர். கோவில் திருவிழாவின் போது சாதியின் பெயர்சொல்லி ரத்தினம், பழனி, பக்கிரி ஆகியோரை, கட்டிவைத்து உதைத்துள்ளனர், அதனால் கலவரங்களும் நிகழ்ந்ததாக சஞ்சாரம் நாவல் எடுத்துரைத்துள்ளது. மனிதன், இசை, கடவுள் என்ற முக்கோண வடிவத்தை மனித குலமே கட்டமைத்துள்ளதாக விளங்குகிறது. நந்தனார் சரித்திரம் நாடகநூல், மற்றும் புதிய நந்தன் கதையில் வரும் இசைமரபு, ஈசனுக்கு முன் சாதியால் புறந்தள்ளப்பட்ட மனிதனின், இசையையே முதன்மைப் படுத்தப்படுகிறது.

பக்கிரியும் பார்வையிழந்த தன்னாசியின் வாழ்வியலும்

சஞ்சாரம் நாவலில் புனைந்துள்ள கதைமாந்தர்களில் பார்வையற்ற தன்னாசி, சங்கரசுப்புவான ஊமை ஐயர், போலியோவால் பாதிக்கப்பட்ட அபு ஆறுமுகம் முதலானவர்களை வாசகர்கள் முதன்மைக்கதை மாந்தராக முன்வைப்பதில் தவற விட்டதாக உணர முடிகிறது. மேற்படியான மூவரையும் மாற்றுத்திறனாளிகளாக சஞ்சாரம் நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

பார்வையற்ற தன்னாசி குழந்தைப் பருவத்திலே பெற்றோரையும் தன்னை வளர்த்துள்ள மூதாட்டியையும் இழந்து மருதப்ப ஆசாரிகுலத்தில் சரசுவதியின் அன்பினால் உலகை அறிந்ததாகவும் காதல் பாலியத்தின் போது மருதப்பனின் மகள் சரசுவதியும் தன்னாசியும், பழகினதில் தன்னாசியின் பிரிவினால் இறந்து விடுகிறாள். சரசுவதியின் நினைவில் சுடுகாட்டில் வாழ்கிறான். சில நாட்களுக்குப் பின் நாதசுவர கலைஞர் தென்படியாரின் உதவி பெற்று நாதசுவர கலையில் வித்துவானாகத் தேர்ந்து தென்படியாரிடம் பல பாராட்டுப் பெற்று பொதுவெளியில் செல்வந்தனாகவும் வாழ்ந்துள்ளனர், பார்வையற்ற தன்னாசி மக்களிடம் புகழையும் ஆதரவையும் பெற்று வாழ்ந்து இறுதியில் கொடுமுடி சௌந்திரம் பெண்ணாள் மணமுடிக்கப் பெற்றுள்ளன என்பது சஞ்சாரத்தின் புனைவுகளாகவும் அமைந்துள்ளன.

பார்வையற்ற தன்னாசி நாதசுவர வித்துவானாகவே மாய்ந்துவிட்டதாகவும் சௌந்திரம் பெண்ணாள் கொடுமுடியில் பார்வையற்ற தன்னாசிக்குச் சமாதிகட்டி வழிபட்டுள்ளதாக நாவல் வழியாக அறிய முடிகிறது. நாதசுவர இசையில் வித்துவானான, பார்வையற்ற தன்னாசியின் சமாதியினைக் கண்டு, பக்கிரியும், ரத்தினமும் ஆசிபெற்று நாதசுவர இசையில் வித்துவானாக பட்டம் பெறுவதே தனது குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்ததாகச் சஞ்சாரம் நாவல் புனைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சங்கரசுப்புவான ஊமை ஐயரின் ஆளுமையும் - பக்கிரியின் தேடலும்

சங்கரசுப்புவான ஊமை ஐயர், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சமையல் வேலைசெய்து குடும்பத்தை நகர்த்தி வந்தவர். சங்கரசுப்புவான ஊமை ஐயர் திருமண வீடுகளில் சமையல் செய்கையில் பலமுறை நாதசுவர இசையினைக் கேட்டுக் கொண்டதில் இசைஞானம் பெற்றுள்ளார். ஒரு முறை நாதசுவர வித்துவான் ஏ.என்.எஸ் திருமண வீட்டில் உணவு உண்டுவிட்டு நாதசுவரத்தை இசைக்கத் தொடங்கினார். ஏ.என்.எஸ் நாதசுவர இசையை இசைத்து முடித்தபின் நான் இசையால் சிறுவனைக் கூட முதல் வருசையிலே அமரவைத்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த வேளையில் சங்கரசுப்புவான ஊமை ஐயர், தான் மறைத்து வைத்திருந்த கழுதை விட்டையை மேடையேறி ஏ.என்.எஸ் விடம் கொடுத்துவிட்டுக் கிழே இறங்கி விட்டார். ஏ.என்.எஸ்-க்கு அவமானமும் கோவமும் உண்டாயிற்று. மேடை முன்னிருந்த மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

பொதுவெளியில் சங்கரசுப்புவான ஊமை ஐயர்க்கு திருமண வீடுகளில் சமையல் வேலைசெய்வதிலும், இசையில் அறிவு பெற்று நேர்த்தியானவர் என்பதான மதிப்புரையுண்டு. இசையைத் திறம்பட நிகழ்த்தியவர்க்கு கற்கண்டும் தான் வைத்திருந்த பொருளையும் பரிசளிப்பதுண்டு என்பதாக நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படியான விடயங்களைக் கேட்டறிந்த பக்கிரி ஊமை ஐயரான சங்கர சுப்புவிடம் நாதசுவரத்தை இசைத்து பாராட்டு பெற்று, தான் இசையில் தேர்ந்து விட்டேன் என்ற மகிழ்ச்சியை, அபு ஆறுமுகத்திடம், பக்கிரி சொல்லிவிட்டு நகர்ந்தாக சஞ்சாரம் நாவல் புனைவுகளாவே எடுத்துரைத்துள்ளது.

அபு ஆறுமுகமும் - இசைமேதை கண்ணையாவும்

அபு என்பவன் நடுக்கோட்டை கிராமத்தில் போலியோவால் கால் முடமாகி சிறு வயதிலேயே சக்கர நாற்காலியில் அமர்ந்து வீட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்து உளவியலுக்கு ஆட்பட்டதை உணரமுடிகிறது. சில நாட்களாக அபு தன்வீட்டின் அருகே உள்ள முருகன் கோவிலின் நாதசுவர இசையைக் கேட்டுக் கேட்டு, ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அத்தகைய சூழலில் முருகன் கோவிலின் படியருகே சென்று நாதசுவர இசைக்கலைஞரான கண்ணையாவிடம் நீங்கள் இசைத்த இசை எனக்கு மன ஆறுதலைத் தருகிறது. அதனால் எனக்கு நாதசுவர இசையை கற்றுக் கொடுக்க வேண்டினான். கண்னையாவும் மதவேறுபாடு பாராது இசையைக் கற்றுக்கொடுத்துள்ளார் என்பதை உணரமுடிகிறது. அபு ஆறுமுகம் சில நாட்களில் திறம்பட இசையைக் கற்றுகொண்டு பொருள்வளம் பெற்றுள்ளான். ஒரு நாள் நடுக்கோட்டை முருகன் கோவில் விழாவில் நேர்த்தியாக இசையை நிகழ்த்திவிட்டும் முருகன் கோவில் விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு கோவிலின் பட்டுத்துணியை பரிசாகப் பெற்றும், ஊரே பெருமூச்சுவிடும்படி காரில் சென்று நேராக கண்ணையாவின் வீட்டிற்கே சென்று காலில் விழுந்து வணங்கியுள்ளான் என்பது எதார்த்தமாக அமைந்தாலும், படைப்பாளியின் புனைவுகளின் மரபிற்கே வித்திட்டதாக விளங்குகிறது.

கண்ணையா, உடல் நலமின்றி படுக்கையில் கிடந்தவாறே போலியோவால் கால்கள் பாதித்துள்ள அபு ஆறுமுகத்தைப் பார்த்து ஊரே உன்னைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதை எடுத்துக்கூறி, வாழ்த்துவதற்கு வைத்திருந்த விபூதியை அபுஆறுமுகத்தின் நெற்றியில் திலகமிட்டு, அந்த முருகன் எப்போதும் உமக்குத் துணையிருப்பான் என்று பெருமூச்சுவிட்டமர்ந்தார். அதற்கு அபுஆறுமுகம் கண்ணீர் விட்டு தான் வைத்திருந்த பணத்தை பாதியளவு கண்னையாவிற்கு கொடுத்த போது மறுத்துவிட்டதாகவும், அதற்குப்பின் அபுஆறுமுகம் உங்கள் மருத்துவச் செலவுக்காவது இப்பணத்தை பெற வேண்டி அழுத்தம் கொடுத்ததாகவும் சஞ்சாரத்தின் கதையமைப்பு நகர்ந்துள்ளதை அறியமுடிகிறது. வயதான கண்ணையா இச்சமூகத்திற்கு தன்னால் முடிந்த ஒரு ஆளுமையை உருவாக்கிவிட்டதாகவும் உணரமுடிகிறது.

மேலும் சஞ்சாரம் நாவலில் வரும் ரத்தினம், பக்கிரி, பழனி முதலானோர், சாதியால் புறந்தள்ளப்பட்டவர்கள். பார்வையற்ற தன்னாசி, சங்கரசுப்புவான ஊமை ஐயர், இசுலாம் மதத்தைச்சார்ந்த அபுஆறுமுகம், முதலான மூவரும் மாற்றுத்திறனாளிகளாக இருந்து தன்னுள் உள்ள ஆளுமையை சமூகத்திற்கு வெளிப்படுத்தி பெரும் புகழ்பெற்றதாக சஞ்சாரம் நாவல் புனைந்துள்ளன. முகமது அபு ஆறுமுகத்திற்கு கிடைத்த வாய்ப்புகள் போல் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது நடப்பியலில் முரண்படுவதாகவே விளங்குகிறது.

மேற்படியாக ‘கரித்துண்டு' நாவலில் வரும் நிர்மலா, மோகன் என்பவரை மணம் முடித்துக் கொண்டு வாழ்ந்து வருகையில் எதிர்பாராது ஒரு விபத்தின் காரணமாக மோகன் முடமானார். அதனால் சில காலம் நிர்மலா மோகனை விட்டுப் பிரிந்து ஒரு பேராசிரியரோடு சேர்ந்து மும்பையில் வாழ்கிறாள். மோகன் முடமானதோடு கரித்துண்டுகளால் ஓவியம் வரைந்துள்ளதை மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டும், பரவலாகப் பேசப்பட்டும் உள்ளனர். சில காலத்திற்கு பின்பு ஒரு நாள் நிர்மலா சென்னை வருகையில் மோகனைக்கண்டு சேர்ந்து வாழ்கிறாள். மேற்படியாக மு.வரதராசனார் முடமானவன் முடங்கிவிடாமல், தன்னுள், தன்னுணர்வை தன்வயமாகக் கொண்டு தன் ஆளுமையை பெரும் மாற்றத்திற்கானதாக உருவாக்கி இருப்பதும், முடமானவர் வாழ்வை எதிர் நோக்கி வாழ வேண்டும் என்பதாகவும் இப்படைப்பின் வழியாக அறியமுடிகிறது. (மு.வரதராசன் கரித்துண்டு நாவல் பாரி நிலையம், வெளியீடு.பக்.89)

இசையால் பல சமூகம் சாதிகளாகப் பிளவுண்டு வாழ்வதும், அதே இசையால் பிளவுண்ட சமூகத்தை ஒன்றுகூடி தேரிழுத்துச் செல்வதையும் சஞ்சாரம் நாவலில் உணரமுடிகிறது. கரித்துண்டு நாவலில் வரும் கால்முடமான மோகன் சமூகத்தினால் புறந்தள்ளப்பட்டதை எதிர்த்து, கரித்துண்டினால் சுவர்களில் ஓவியம் வரைந்து புறந்தள்ளப்பட்ட மக்களே அங்கீகாரம் அளித்துள்ளதாக கரித்துண்டு நாவல் எதார்த்தங்களை முன்வைத்துள்ளதாக உணரமுடிகிறது.

ஆர்.அபிலாசு கால்கள் நாவலில் மாற்றுத்திறனாளியின் எதார்த்தங்கள்

கால்கள் நாவலில் மது என்பவள் குழந்தைப் பருவத்திலே, போலியோவால் பாதிக்கப் பட்டு கால்முடமாகி, பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி வாழ்வியலின் சூழலை, முன்வைப்பதாக கால்கள் நாவல் அமைந்துள்ளது. காலுக்கான காலிப்பரை பயன்படுத்திக் கொண்டு மது கல்லூரி சென்று வருகிறாள். காலிப்பரினால் கால்கள் அழுத்தம் பெற்று வீக்கமாகி வேதனைக்குள் ஆட்பட்டும் அம்மாகாரி விசாலம், தந்தை பிரேமானந், வைத்தியர் மற்றும் கல்லூரித் தோழமை கார்த்தி, பாலு, பாலுவின் தந்தை ஆங்கிலத்துறைப் பேராசிரியர் மதுசூதனன் முதலானவர்களோடு கல்லூரி வாழ்வைக் கடந்து வருகிறாள். பிரேமானந் வங்கியில் பணிபுரிகிறான். விசாலத்தை சந்தேகக் கண்கொண்டு அடிப்பதும், சண்டையிடுவதும் மதுவிற்கு அவலத்தையும், துன்பத்தையும், சுமந்து கல்லூரிக்குச் சென்று வருவதே பெரும் அபத்தங்களுக்கு ஆட்பட்டுள்ளதாக கால்கள் நாவல் எடுத்துரைத்துள்ளது.

மது கல்லூரியில் ஆங்கில மொழிப்பாடத்தை கற்றுக் கொண்டு சேக்சுபியர் கதையாடல்கள், தமிழின் ஆன்மீகச் சொற்பொழிவுகள், முதலானவைகளை பேராசிரியர் மதுசூதனிடம் விவாதித்துக் கொண்டும் தன்னை அறிவுசார்தளத்தில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளதையும் அறிய முடிகிறது. மதுசூதனன் மகன் பாலுவிடம் கடவுள் குறித்தப் பொருளினை நடப்பியல் வாழ்க்கையோடு மது விவாதித்ததும் உண்டு.

மதுசூதனன் மகன் பாலுவிற்கு இளம்பருவத்தில் இளம்பிள்ளை வாதநோய் ஏற்பட்டு உடல்நலம் குன்றி மருத்துவமனையிலும், வீட்டிலும் முடங்கி வாழ்வின் அர்த்தங்களை தேடமுற்படுகிறான். மது, கார்த்தி ஆகியோர் பேராசிரியர் மதுசுதனன், ஆலோசனையோடும் கல்லூரியில் இலக்கிய இதழ் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட பாலு மதுவிடம் கடவுள் குறித்து பொருள் பற்றி விவாதித்த போது, நம் உடல் குறைபாடுடையதற்குக் காரணமும் உண்டு என்றும், முன் பிறவியில் கர்ம வினையின் காரணமாகவே நமக்கு இப்படி உடலில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளான். அதற்கு மது என் கால்கள் வற்றிப் போனதற்கு, எனது குற்றமும் இல்லை பெற்றோர்கள் குற்றமுமில்லை நவீன வாழ்வியல் உணவின் தாக்கமாகக் கூட இருக்கலாமில்லையா? என்று, பாலுவின் மறுமொழிக்கு ஏற்ப மது விவாதித்துள்ளதாக, கால்கள் நாவல் எடுத்துரைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பாலுவின் இளம்பிள்ளை வாதநோய்க்கு, மதுசூதனன் தன்வீட்டின் அருகேயுள்ள கோவிலுக்கு வழிபாடுசெய்வதும், திருவிழாக் காலங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதும் ஒருவகையில் கடவுளுக்கான பரிகாரமாக உணரமுடிகிறது. அதனால் பாலுவின் சிந்தனைக்கு கடவுள் குறித்த பார்வை ஆலமாக வேர்விட்டதாகவும் அதற்கு எதிர்துருவத்தில் மதுவின் கருத்தியல் அமைந்துள்ளதை அறியமுடிகிறது. மதுவுக்கு கடவுள் மீது எந்த நம்பிக்கையும் வைப்பதில்லை, மாறாக மதுவின் பெற்றோர் வைத்தியரின் ஆயுர்வேதத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்திருந்தன. மேலும் மதுவின் கால்கள் போலியோவால் பாதிக்கப்பட்டதற்கு ஊட்டச் சத்துக்குறைவின்மையே காரணமென்று பாலுவிடம் வாதம் செய்துள்ளதை கால்கள் நாவல் வழி அறியமுடிகிறது.

"மகிழடித் தீவுப்பகுதியில் சிங்களத்தினால் படுகொலை நிகழ்த்தப் பட்டதால், தெய்வயானை முன்னாள் பெண் போராளியானாள். கைதாகியும் கால்யிழந்தும். முள்ளிவய்க்கால் போருக்குப் பின் விடுதலையுமானாள். மேற்படியாக தவக்குல் என்ற இசுலாமியப் பெண்ணின் உதவியால் அச்சகம் ஒன்றை நிறுவி அதன்படி தெய்வயானைக்கு வருமானம் ஈட்ட உதவியதாகவும் அதனால் தெய்வயானையின் குடும்பத்தினரும், தவக்குவின் குடும்பத்தினருக்கும் உள்ள உறவு மதம் தாண்டி, அன்பும் பாராட்டும் செய்வித்துள்ளதை அறியமுடிகிறது. காலப்போக்கில் இசுலாம் சமயத்தினர் தவக்குவிற்கு பெருந்துன்பத்தினை விளைவித்துள்ளனர். சமூக உருவாக்கத்தில் சராசரிப் பெண்ணைப் போல் தவக்குல் என்பவளுக்கு வாழ்க்கைச்சிக்கல் ஏற்பட்டு, வாழமுடியாத சூழலும், இசுலாம் மதத்தினரால் அச்சுறுத்தப்பட்டும் உள்ளன. மேலும் அச்சமூகத்தினரை ஏதும் எதிர்வினை செய்யாது தன் உணர்வை ஊனமாக்கி தன் தந்தையையும் இழந்து தான் செய்வித்த சமூகத்தொண்டு உருவாக்கத்திலிருந்து விலகாது வாழ்ந்துள்ளதாக ஸர்மிளாவின் உம்மத் நாவல்’ எடுத்துரைத்துள்ளது, குறிப்பிடத்தக்கதாகும். மேற்படியாக யோகா, தெய்வயானை மற்றும் தவக்கு, முதலான பெண்கள் எதிர்வினையின்றி இச்சமூகத்தில் எதிர் உளப்போராட்டம் நடத்தி வெற்றிகொண்டதாக ஸர்மிளாவின் ’ஊமத்த’ நாவல் விளக்குகிறது. ஏதோ ஒரு வகையில் சமூகத்தில் மனித குலமும் ஊனப்பட்டு வாழ்ந்துவருவதை படைப்பாளன் வழியாக உணரமுடிகிறது. (ஆ.சிவசுப்பிரமணியன் இனவரைவியலும் தமிழ் நாவலும் .ப.132)

’கால்கள்’ நாவலில் போலியோவால் கால்கள் பாதித்துள்ள மதுவிற்கு கார்த்தி, உதவியது போல் ’உம்மத்’ நாவலில் காலிழந்த தெய்வயானைக்கு உதவியாக தவக்குல் என்ற பெண்ணின் சமூகப் பார்வையும், மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்துள்ளன, என்பது அனுதாபமோ! பரிகாரமாகக்கூட இருக்கலாம். ஆனால் மானுடச்சிந்தனை என்பது எல்லோருக்கும் பொதுவானவைதான். சாரசரி மனிதனுக்கும் முடமான மனிதர்களின் மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாடு என்பது தன்நிலைப் பாட்டையும் தான், சார்ந்த குடும்பத்தினையும் சுமந்து பொதுவெளிச் சமூகத்திற்குள் பயணிக்க வேண்டிய சூழல் மாற்றுத்திறனாளிக்கும் ஏற்பட்டுள்ளதை கால்கள் நாவல் வழியாக உணரமுடிகிறது.

ஏழாம் உலகம் நாவலும் மாற்றுத்திறனாளிகள் பின்புலமும்:

போத்திவேலுப் பண்டாரம், பெரியப் போத்தி, குமரேசன் முதலானவர்களை ஏழாம் உலகம் நாவல் முதலாளிமார்களாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருமாளும், இருளப்பனும் போத்திவேலுப் பண்டாரத்திற்கு எடுபிடியாக வேலை செய்துவருகின்றனர். போத்திவேலுப் பண்டாரத்தின் தொழில், கை, கால், கண், கூனல் முதலான உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களை வைத்தும், தெருவீதிகளில் தனித்துவிடப் பட்டவர்களையும் வைத்துக்கொண்டு கோவில்களில், பிச்சையெடுக்க விட்டு அதன் மூலம் வரும் வருமானங்களையும் பணபலத்தையும் போத்திவேலுப் பண்டாரம் பெற்று வசதிபடைத்துக் கொண்டுள்ளார், என்பதாக ஏழாம் உலகம் நாவல் வழி அறியத்தக்கதாகும்.

ஏழாம் உலகம் நாவலில் முத்தம்மை கை, கால் வளர்ச்சியின்றி வற்றின உடலோடு படுக்கையில் கிடப்பவள். முத்தமையின் குழந்தையும் அவளைப் போலவே பிறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எருக்கு முதுகெலும்பு முறிந்தவள். சணப்பி, குருவிக்காரி, உடல் வளர்ச்சியின்றியும், கூனன், குய்யன், முடமானவர்களாகவும் நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படியாக பெருமாள் என்பவன் முடமானவர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு கோவில் கோவிலாகவும், மனிதர்களை உருப்படிகளாகப் பாவித்து கோவில் நடைபாதைகளில் இறக்கிவிட்டும், பிச்சையெடுக்க வைத்தும், அதன் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பங்கினை முடமானவர்களுக்கு துண்டுப்பீடியும், தேநீரும், பலகாரமும், பெருமாள் மூலம் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். மேலும் மூன்று பங்கினை போத்திவேலுப் பண்டாரம் வைத்து வசதிகொண்டு வாழ்ந்ததாக ஏழாம் உலகம் நாவல் சித்தரித்துள்ளது.

முத்தம்மை கை, கால், வளர்ச்சியின்றி இருப்பதைக்கண்டு, போத்திவேலுப் பண்டாரம், தன் அதிகாரத்தின் கீழ் அதேநிலையில் உள்ள கூனனையும், முத்தம்மையையும், சாக்கடை நாற்றங்களுக்கு இடையே மோதவிட்டு இனவிருத்திக்குப் பயன்படுத்தப் பட்டதாக, நாவலின் மையக்கருத்தியல் அமைந்துள்ளது.

ஏழாம் உலகம் நாவலில் முடமானவர்களை வைத்து வருமானம் தேடும் போத்திவேலுப் பண்டாரத்தின் அதிகாரமும், பணபலத்தால் பழனிமுருகன், குருவாயூர், திருவண்ணாமலை முதலான இடங்களில் கோவிலின் கருவறை முடியச்சென்றுள்ளதாக ஏழாம் உலகம், நாவலில் பதிவு செய்திருப்பது எதார்த்தங்களுக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது.

ஏழாம் உலகம் நாவலில் வரும், அகமது இசுலாமாக பெயர் வைத்துக்கொண்டு கால்முடமாகியும் ஆங்கிலம், மலையாளம் தமிழ், முதலான மொழியில் பேசி கோவில்களில் பிச்சையெடுப்பதையும், சத்தமாக குரல் எலுப்பி நாலுகாசு சேர்த்துபெறுவான் என்பதையும், ஆளுமையான அகமதுவை தேர்ந்த உருப்படிகளாக எண்ணி ஐந்தாயிரம் ரூபாயிக்கு ஒப்பந்த அடிமையாக ஒருவனிடமிருந்து வாங்கிக் கொண்டுள்ளதையும், போத்திவேலுப் பண்டாரம் பெருமையாக அகமதுவின் உழைப்பில், வாழ்ந்துள்ளார். ஜெயமோகன் ஏழாம் உலகம் நாவலில் அகமதுவின் மொழி ஆளுமையை, சுட்டிக்காட்டி இருந்தாலும் பொதுவெளியில் தன்னை கம்யூனிசுட்டு சிந்தனையாக காவல் துறையிடம் ஆங்கிலத்தில் நாலுவார்த்தை பேசியதில் தன் கூடயிருந்த முடமானவர்களுக்கு ஒருவீத ஊக்கம் இருந்ததாக, நாவல் வழியாக உணர முடிகிறது.

"உண்ணியம்மை என்ற ஒரு கிழவி. ஒன்றிரண்டு வரிகளில் அங்கங்கே தலை காட்டுவாள். அவள் தலை மயிர் எப்படி இருக்கும்? தெரியாது. என்ன சேலை கட்டியிருப்பாள்? தெரியாது. கூன் விழுந்தவளா? தெரியாது குறைப்பிறவியானவர்களை அடையாளம் கானுபவள். ஆனால் அவளுடைய நறுக்கென்ற சம்பாசணைகள் மூலம் அவளை அறிவோம். உயிர்த்துடிப்பான அவளுடைய சித்திரமும் மனித உணர்வும் மனதையே விட்டு அகலுவதே இல்லை. பண்டாரத்தின் தொழில் யோகிகளையும், குறைப்பிறவிகளையும் வைத்துப் பிழைப்பதும் வண்டியில் ஏற்றிக்கொண்டு கோயில் கோயிலாகச் சென்று பிச்சையெடுக்க விட்டு வசூலிப்பதும். அவர்களைப் பிச்சைக்காரர்கள் என்றுகூட அழைப்பதில்லை. நாவலில் மனித உயிர்களாக அல்லாது உருப்படிகள் என்றும், ஒரு உருப்படிக்கு ஐந்து ரூபா! செலவு செய்தால் வரும்படிகள் ஐம்பது ரூபா என்றும், மேலும் அவர்களை விற்கலாம், வாங்கலாம் ஏன்? என்று கேட்க ஒரு நாதியே கிடையாது என்பதாக நாவல் உணர்த்துகிறது.

இரண்டு உருப்படிகளை இணையவிட்டு இன்னும் ஒரு சிறந்த குறைப்பிறவியை உருவாக்கலாம் என்றும் அதையும் பிச்சையெடுக்க விடலாம் அல்லது விற்றுக் காசாக்கலாம் என்பதாக நாவலின் வழிஅறியமுடிகிறது. உடமைக்காரப் பண்டாரம் தீயவராக சித்தரிக்கப் படவில்லை. தன்னுடைய மகள் ஒருவனோடு ஓடிப்போனதை நினைத்து பஸ்சிலே குலுங்கி குலுங்கி அழுகிறார். ஒரு பொழுதில் கோயில் உண்டியலிலே சர்வசாதாரணமாக 1,200-ரூபாயைத் திணிக்கிறார் என்பதனை, ஒரு அதர்மம்மாகவே அ.முத்துலிங்கம் விமர்சித்துள்ளதை உணரமுடிகிறது. ஏழாம் உலகம் நாவலில் முடமானவர்கள் கோயில் படியேறி வருபவர்களிடம் பிச்சையெடுத்துள்ளதும் அவற்றில் நான்கில் ஒரு பங்கினை போத்திவேலுப் பண்டாரம் கடவுளின் உண்டியலில் செலுத்திவிட்ட செயல்களும் கடவுளூக்கே பிச்சையிடுவதாக அ.முத்துலிங்கத்தின் கருத்து கடவுள் மீதான விமர்சனத்தை வலிமையேடு எடுத்துரைத்துள்ளதாக ஏழாம் உலக நாவலின் வழியாகவும் உணரமுடிகிறது. (அ.முத்துலிங்கம் ஜெயமோகன் ஏழாம் உலகம் நாவலின் நேர்காணல் - மே.07.2007 )

நிறங்களின் உலகம் நாவலில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல்

தேனிசீருடையானின் நிறங்களின் உலகம் நாவல் தன் வரலாற்றுப் பதிவுகளாக உணர முடிகிறது. பாண்டி என்ற கதைமாந்தர் வழியாக சென்னையில் அமைந்துள்ள பார்வையற்றோர் பள்ளியில் கல்விகற்ற மாணவர்களின் சூழலை தேனிசீருடையான் முன்வைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ஆங்கிலேயர் இந்தியாவில் பணிபுரிந்தபோது சென்னைச் சேரித் தமிழ்ப் பெண்னை மணமுடித்து இறுதியில் தம் மனைவி பெயரில் சொத்துடைமைகளை எழுதிவைத்து விட்டு இங்கிலாந்திற்குச் சென்று விட்டார் என்பதை நிறங்களின் உலகம் நாவல் பார்வையற்றோரின் பள்ளியின் வரலாற்றையும் புனைந்துள்ளது. மேற்படியானவரின் வாரிசாக மெக்மோட்ரி என்ற இயற்பெயரைக் கொண்ட மிஸியம்மாவின் வழியாக இப்பள்ளிக்கூடம் அமையக் காரணமாயிற்று என்பதைச் சேரா டீச்சர் வழியாக, பார்வையிழந்த பாண்டி அறிந்துள்ளான் என்பதை நிறங்களின் உலகம் நாவல் எடுத்துரைத்துள்ளது.

மிஸியம்மா, சிறுவயதிலே பார்வை­யிழந்தவள். தாய்மை இறந்துவிட்ட சூழலில் மிஸியம்மா தனிப்பட்ட ஆசிரியர் உதவியுடன் டி.டி.எட் என்ற ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்று, பார்வையற்றோர் பள்ளியில், முதல் பார்வையற்ற ஆசிரியர் பணி வாய்ப்பையும் பெற்றுள்ளார். பாண்டி மிஸியாம்மாவின் உதவியால் தான் ஆங்கிலம் கற்றுக்கொண்டதாகவும் மிஸியம்மாவின் ஆங்கிலப் பாடவேளை என்றால் நீலமும் மஞ்சளும் இணைந்த வண்ணங்கள் உணர்வில் மெய்சிலிர்த்துக் கொண்டதாக தேனிசீருடையான் நிறங்களின் உலகம் நாவலில் பதிவு செய்துள்ளார்.

பார்வையிழந்த பாண்டிக்கு பார்வையற்றோர் பள்ளியில் சுகுமாரன், சென்னியப்பன், முனியப்பன், மாரியப்பன், முதலான நண்பர்களின் அன்பு கிடைத்தாலும் கன்னியம்மாவின் அரவணைப்பு போல் அமையவில்லை என்றும், கன்னியம்மாவை நினைத்துக் கவிதை எழுதியதாகவும் பார்வையற்றவனுக்கும் பாலியத்தில் பரிணாமம் உண்டு என்பதையும் நிறங்களின் உலகம் நாவல் முன்வைத்துள்ளது. பார்வையற்றோர்களின் உலகமும், பார்வையுள்ளோரின் உலகமும் உணர்வின் அகப்புற சூழல்களின் உலகப்பார்வையும், வெவ்வேறு தளங்களில் அமைந்தாலும், பார்வையற்றோர் பள்ளியில் கட்டுரைப் போட்டி பேச்சுப்போட்டி நாளிதழ்வாசிப்பு முதலான செயல்களில் ஈடுபட்டு பாராட்டினையும், பரிசுப்பொருளையும் பெற்று சமூகச் சிந்தனைகளில் சராசரி மனிதனைக்காட்டிலும் மாற்றுத்திறனாளிகள் தான், அதித்தீவிரமாக செயல்பட்டுள்ளன, என்பதாக நிறங்களின் உலகம் நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 சேராச் டீச்சரின் நீதிபோதனைகளும், கிருட்டிண வாத்தியாரின் சமூகச் சிந்தனையும், பார்வையற்ற பாண்டியின் அறிவுத்தேடலுக்கு உறுதுணையாக நின்றவர்கள், என்று தேனிசீருடையான் தனிமனித வாழ்வியலை தனித்துவத்தோடு எடுத்துரைத்துள்ளதை நிறங்களின் உலகம் நாவலின் வழியாக அறியமுடிகிறது.

மதுரை மனோகர் தேவதாசு சாலை விபத்தினால் பார்வையிழந்தவர். மனோகர் தேவதாசு சாலை விபத்துக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவங்களை தன்னுர்வின் அடிப்படையில் பார்வையிருந்து கண்டுணர்ந்ததை பார்வையற்றபோது ஓவியமாக வரைந்துள்ளார். பார்வையற்றவர் மனக்கற்பனை நேர்த்தியாக ஓவியதை வரைந்து மக்கள் மத்தியில் பாரட்டுக்களை பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் பார்வற்றவர் ஓவியம் திறம்பட வரைந்திருப்பது சமூக வளர்ச்சியில் முரண்பட்டதாக அமையலாம். வளர்ச்சி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக உருவாக்குவதே சமகால ஆய்வுபோக்கின் நோக்கமாகும்.

"மனோகரின் ஓவியங்கள் அடுக்கடுக்காய் ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டதுள்ளது. வலது கண்ணின் பார்வைத்திறன் முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டது என்றும். இடது கண்ணிலோ சிறுநாணயத்தின் அளவில் உள்ள பகுதியால்தான் பார்க்க முடியும். அதுவும் சாதாரண வெளிச்சத்தில் அல்ல ஓவியம் வரையும் நாற்காலியின் அருகில் ஒளி உமிழும் விளக்கை வைத்து, இருபது மடங்கு பெரிதுபடுத்தும் உருப்பெருக்கி கண்ணாடியின் வழியேதான் இவரால் அச்சுக்கோட்டினை இடமுடிகிறது. ஆனால் குறுகியகால அவகாசத்தில் அக்கோடுகளுக்குள் இருந்து ஒரு உலகம் மேலெழுந்து வருகிறது. தன் கைவண்ண ஓவியத்தினால் புற உலகின் வளர்ச்சியை பார்வையற்ற மனோகரின் ஆளுமை எட்டியதாக சு.வெங்கடேசுசன் தனது ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக்காட்டி இருப்பது” மாற்றுத்திறனனுடையோர் எதிர்கொண்டுள்ள சிக்கலை நிறங்களின் மொழி நூல் முன்வைத்துள்ளதாக உணர முடிகிறது. (சு.வெங்கடேசன் அலங்காரப் பிரியர்கள் நூல் விகடன் பிரசுரம் ப.18)

பாண்டியின் குழந்தைப் பருவகாலத்தில் பார்வையற்றும், பார்வையற்றப் பள்ளியில் கல்விகற்று வளர்ந்த சூழலையும், பார்வையற்ற குழந்தைகளுக்கான தமிழ் நாட்டின் முதல் பள்ளியின் வரலாற்றையும் தேனிசீருடையான் நிறங்களின் உலகம், நாவல் முன்வைத்துள்ளதும், இடைக்காலத்தில் பார்வையிழந்தவர் ஓவியம் வரைந்து பொதுவெளியில் பாராட்டுக்களை பெற்றாலும் தனக்குள் ஏற்பட்ட விபரீதமான துன்ப உணர்வுகளை பிறர் அறியாது என்பதாக பார்வையற்ற மனோகரின் நிறங்களின் மொழி என்ற நூலின் வழியாகவும் உணரமுடிகிறது. மேலும் மு.வ.வின் கரித்துண்டு நாவலில் வரும் மோகனின் ஓவியத்தைவிட, மனோகரின் ஓவியம் உணர்வின் உயிர்ப்பாக, அமைந்துள்ளதை எடுத்துரைக்க முடிகிறது.

சுடுகாடும் சில சுந்தரிகளும் படைப்பில் - மாற்றுத்திறனாளியின் விழுமியங்கள்

மெரினாக் கடற்கரையின் தத்துப்பிள்ளை என்று சொல்லப்பட்ட ஒரு முடமானவனின் வாழ்வியல் தான் சுடுகாடும் சில சுந்தரிகளுமான நூல். கடற்கரையில் ஒரு சிறுவன் பொலியோவால் இருகால்கள் பாதித்து தனித்துவிடப்பட்டதை விஜி அறிகிறாள். கால்முடமானவனிடம் விஜி இனிமேல் உனக்கு யாருமில்லை என்று நினைக்காதே நான் இருக்கிறேன், என்பதோடு ஒரு டீயும், ரொட்டியும் வாங்கிக் கொடுத்துவிட்டு இங்கு விஜியின்னு யாரும் தேடிவந்தால் இதைக் கொடுத்து அங்கு அனுப்பிவிடு என்று சொல்லியதும் அச்சிறுவனுக்கு அன்புகிட்டுகிறது என்பதை கதையின் தொடக்கத்தில் உயர்ந்த எண்ணங்களாகக் கூற முனையலாம். ஆனால் பாலியல் தொழில் செய்து காலிழந்த சிறுவனுக்கு காலை உணவும், இரவு ரொட்டியும் கிடைத்திருப்பது சமூகச் சீர்திருத்தமாக அமைந்தாலும் அறம் என்பது எதார்த்தங்களுக்கு முரண்பட்டுள்ளதாக விளங்குகிறது. ஒரு மனிதனை முடமான காரணத்தினாலும், இயலாமை காரணத்தினாலும் ஒருவனை மற்றொரு மனிதன் தன்னுடைய உடைமையாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளதை, கானா விஜியின் படைப்புகளில் பதிவு செய்திருப்பது சமூக நடப்புகளின் எதார்த்தங்களாகவே உணரமுடிகிறது.

ஒரு நாள் காலிழந்த சிறுவன் மண் தரையில் நகர்ந்துள்ளதைக் கண்டு விஜி கட்டை வண்டி ஒன்றைச் செய்து வாங்கி அச்சிறுவனிடம் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டாள். மறுநாள் காலையில் அச்சிறுவன். விஜியைப் பார்த்து அழுதுகொண்டிருந்தசூழலில் அருகே வந்தவர்கள் அவள், இறந்துவிட்டாள் என்று பலர் சொன்னதும் அன்றிலிருந்து விஜி பையன், விஜி பையன் என்பதான பெயரடைக்கு விளக்கம் கொடுத்ததோடு, சுடுகாடும் சில சுந்தரிகளுமான கதையமைப்பு எதார்த்தச் சமூகங்களுக்குப் பொருந்துவதாகவும் விளங்குகிறது.

பாபு, சேகர், பீடை முதலானவர்கள் விஜி பெண்மணிக்கு அடுத்து விஜி பையனுக்கு நன்பர்களாகிவிட்டனர். மேற்படியான மூவரையும் சமூகத்தால் புறந்தள்ளப் பட்டவர்கள் என்பது எதார்த்தங்களிலிருந்து உணரமுடிகிறது. விஜி பையனுக்கு கால்கள் முடமானதால் பெற்றோர்கள் மெரினாக்கடற் கரையிலே விட்டுச் சென்றுள்ளனர். பொது வெளியில் தனித்து விடப்பட்ட முதியோரையும் தனித்துவிட்ட குழந்தைகளும் ஒரு வகையில் உணர்வளவில் ஊனப்பட்டதுண்டு என்பதைக் கான விஜியின் படைப்புகளில் இருந்து எடுத்துரைக்க முடிகிறது.

எஸ்.ராமாகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல், இராம நாடு மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ள வேம்பர் கிராம மக்களின் வாழ்வியலையும், நாட்டார் மரபுகளையும், எடுத்துரைக்கிறது. நெடுங்குருதி நாவலில் வரும் ஆதிலட்சுமிக்கு பிறப்பிலே கால்கள் வற்றியும், குச்சிக்கால் போல் அமைந்துள்ளதால் நடக்க முடியாமல் வீட்டின் திண்ணைப்புறத்தையே வாழ்விடமாகக் கொண்டவள் தான் ஆதிலட்சுமியின் வாழ்வியல் என்று எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். ஆதிலட்சுமியை பராமரிக்க அண்ணனும் தாய்மையும் உண்டு. மேலும் ஆதிலட்சுமிக்கு பொழுதுபோக்கு இடமாக வீட்டின் திண்ணைப்புறமும், தெருவீதிகளும், நாகு என்ற சிறுவனும் உண்டு. ஆதிலட்சுமி திண்ணையில் இருந்துகொண்டு ஊர்புறத்து நடப்புகளை அவள் வயதிற்கு ஏற்றார்போல் அறிந்து கொண்டு தரையில் ஊரும் எறும்பின் வழியாக வறுமை. வறட்சி, நல்லது, கெட்டது என்பதையும், மக்களின் வாழ்வியல் கருத்தியலையும், உள்வாங்கிக் கொண்டு ஆதிலட்சுமி, நாகுவிற்கும் சமூகத்திற்கும் நீதிக்கதையைச் செல்லும் திறனை வளர்த்துக் கொண்டதாக எஸ்.ராமகிருஷ்ணன் நெடுங்குருதி நாவலில் பதிவு செய்துள்ளார். மாற்றுத்திறனாளியான ஆதிலட்சுமி இச்சமுகத்திற்கு எதையோ செய்துவிட்டதாகவும் செய்ய நினைத்ததையும் நெடுங்குருதி நாவல் எடுத்துரைத்துள்ளதை அறிய முடிகிறது. மேற்படியாக விஜி போலியோவால் கால்கள் பாதித்தும், நாதியற்று கடற்கரையில் தவழ்ந்து நகர்ந்த சூழலில் நாதியற்றவர்களே நன்பர்களாக கிடைத்ததும், அதன்படி இச்சமுகத்தில் நிகழும் மரணங்களையும், துன்பங்களையும் கானப்பாடல் மூலம் துடைத்தெரிந்துள்ளதை கானவிஜியின் ‘சுடுகாடும் சில சுந்தரிகளும் நூல்’ எடுத்துரைக்கிறது. (எஸ்.ராமகிருஷ்ணன் நெடுங்குருதி உயிர்மைப் பதிப்பகம் - 2005)

காதுகள் நாவலில் மாற்றுத்திறனாளியான மகாலிங்கத்தின் பின்புலம் :

மகாலிங்கத்தின் தகப்பனார் பெரிய அளவில் படிக்கவில்லை. சங்கீத ஞானமும் கிடையாது. பாடல் பாடவும் வராது. ஆனாலும் அவருடைய ஞானம் முழுவதும் செவி வழியே சம்பாதித்தது தான் என்பதாகவும் தன்னைப்போல், மகனும் இருந்துவிடக் கூடாது என்று மகாலிங்கத்தை கல்லூரியில் பெரிய அளவில் படிக்க அனுப்பிவைத்துள்ளதும், குறிப்பிடத்தக்கது. மகாலிங்கம் என்பது மாலி என்று சுருங்கி கல்லூரிப் படிப்பு முடிந்ததும், உறவுக்காரப் பெண்ணான காமாட்சியைத் திருமணம் முடித்து வைத்துள்ளார். மாலியின் பெற்றோர்கள் போதிய வருமானமின்றி வாழ்ந்துள்ளதை, நாவல்வழியாக உணரமுடிகிறது.

எம்.வி.வெங்கட்ராமன் சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். மாலியான மகாலிங்கத்தின் பெற்றோர்கள், நெசவுத் தொழில் செய்து பொருளாதாரத்தை ஈட்டியதாகவும், பிற்காலத்தில் தொழில் நட்டத்தினால் குடும்பம் நலிவடைந்துள்ளதை காதுகள் நாவல், சுட்டிக்காட்டியுள்ளது.

எம்.வி.வெங்கட்ராமன் என்ற மகாலிங்கத்தின் குடும்ப வாழ்வையும், கல்லூரி வாழ்க்கையையும், செவித்திறன் பாதித்துள்ளதையும், மகாலிங்கத்தின் மனைவி வருத்தத்தோடு பயணித்துள்ளதையும் காதுகள் நாவல், தன் வரலாற்றுக் குறிப்புகளையும், இடைச்செருகல்களாக புராணப் படிநிலைகளையும், காதுகள் புனைகதையில் அறியமுடிகிறது. வெண்ணெய் உண்ணும் கண்ணன், பட்டாபிசேக ராமன், முருகன், திருப்பதியான பெருமாள், முதலானவர்களை வழிபடக்கூடியவர்களாக மகாலிங்கத்தின் குடும்பம் வாழ்ந்துள்ளதாக எம்.வி வெங்கட்ராம் தனது படைப்பில் பதிவு செய்திருப்பதும், சமய வழிபாட்டிற்கும், சமூகப் புரிதலுக்கும் சமூக வளர்ச்சியில் முரண்பட்ட கருத்தியலுக்கும், காதுகள் நாவலில் புனைவுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.

காதுகள் நாவலில் வறுமையும், வெறுமையுமாக மாகலிங்கம் வாழ்ந்துள்ளார். மகாலிங்கத்திற்கு நரம்புத் தளர்ச்சியின் காரணமாகவே பள்ளிப்பருவத்திலே செவித்திறன் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதோடு கல்லூரிப் படிப்பை முடித்துள்ளதாகவும், நாவலின் தொடக்கத்தில் அறியமுடிகிறது. (காதுகள் நாவல் பக்.12)

சிறிது காலத்திற்குப்பின் காதுகள் புரட்சி செய்ததுண்டு. மகாலிங்கத்தின் இடது காது, விசில் அடிப்பது போல், ஒய்ங்கு! ஒய்ங்கு! என்று சத்தம் எழுப்பியதாகவும் சில காலம், வலது காதும் புரட்சி செய்தன என்றும், ஓய்வு இல்லாத நேரங்களாக காதுகள் உருமாறிக் கொண்டிருந்தாகவும், தெரு வீதிகளிலும், கடை ஓரங்களிலும் மிகுந்த அபத்தங்களுக்கு மாலியான மாகலிங்கம், சந்தடிச் சத்தங்களுக்குள் அகப்பட்டு உள்ளதையும், காதுகள் நாவலில் ஆசிரியர் நுட்பமாக எடுத்துரைத்துள்ளார். மேலும் பலருடைய காதுகளுக்கு, காதுகள் நாவல் எதார்த்தமான, புனைவுகளாகவே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

"காதுகள் புனைகதையில் வரும் மகாலிங்கத்தின் மனோ நிலை தீர்க்கமுடியாத சிக்கல்களாகவும் ஒரு புதிராகவும் வீதிகளில் உலாவும் பொய்க்கால் குதிரையாட்டமாக மகாலிங்கம் நடமாடுவதும் அவ்வீதிகளில் தனிமனிதனாக வலம் வருவதாகவும் அந்நகரத்தை முற்றிலும் தாங்கி மாளமல் மாண்டு, ஒரு புதுயுக மனிதனாக தனித்த ஆளுமைக்கும், உயர்வுக்கும் வரும் சூழல்தான் மகாலிங்கத்தின் எழுத்தியக்கம் என்றும், அதன்படியே மாலியான, மகாலிங்கம் உலகறிந்தாகவும் காதுகள் நாவல் வெற்றி அடைந்துள்ளதையும், பிற்காலத்தில் மாலிக்கு காதுகேட்கும் திறன்குறைந்தும், அத்தனைச் சிரமங்களுக்கு மத்தியில், காதுகள் ஓய்வு எடுத்துக் கொண்டதாகவும், வாழ்க்கையை எதிர்நோக்கிக் கொண்டு மகாலிங்கம் வாழ்ந்துள்ளதை மவுனச்செயல்பாட்டின்படி அறியமுடிகிறது. என்று சங்கரசுப்புரமணியன் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. (மனிதனின் தனி நரகத்தை சொல்லும் காதுகள் - கட்டுரை - தமிழ் இந்து - 17/05/2020)

நிறைவுப் பகுதி:

தமிழ் இலக்கியங்களில் சஞ்சாரம் நாவல் புதுமையான உரைநடைப் போக்கினை முன்வைத்துள்ளது. சஞ்சாரம் நாவலில் நாதசுவர இசைக் கலைஞர்களின் வாழ்வியலை உணர முடிகிறது. குறிப்பாக சராசரி மனிதர்கள் இசைக்கலையில் திறம்படுவதைவிட முடமானவர்கள் (மாற்றுத்திறனாளிகள்) இசையில் தேர்ந்து பொதுவெளியில் பாராட்டுக்களை பெற்று வாழ்ந்துள்ளதை சஞ்சாரம் நாவல் விளக்குகிறது.

தேனி சீருடையான் நாவல் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் பார்வைற்ற மாணவர்களின் வாழ்வியலையும், பார்வையற்ற பாண்டியின் தனித்துவமான சமூகச் சிந்தனைகளையும், குடும்ப சூழல்களையும் பார்வைற்றோர் கண்கள் மற்றும், உடல்கள் உணரும் தன்மையினை பல்வேறு நிறங்களாக, நிறங்களின் உலகம் நாவல் விளக்குகிறது. பார்வைற்றோர்க்கு ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு பொருளின் தன்மையினை சுட்டிக்காட்டுகிறது. பார்வையற்றோருக்கு பார்வையற்றோர் தான் உணர்வுகளை புரிந்துகொள்ளமுடிம் என்பதை அழுத்தமாக நிறங்களின் உலகம் நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.

கால்கள் நாவலில் வரும் மதுக்ஷரா என்ற மதுவுக்கு, போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்டு தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களையும் இளமைக்கால கல்லூரி வாழ்க்கையின் அனுபவங்களையும் சமூகச் சிந்தனைகளை உள்ளவாங்கிக் கொண்டு சமூக நம்பிக்கைகளை கட்டுடைப்பதாக கால்கள் நாவல் அமைந்துள்ளது. ‘சஞ்சாரம்’ நாவலில் போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட அபு ஆறுமுகத்தின் வாழ்வுபோல் கால்கள் நாவலில் வரும் மதுக்ஷராவின் வாழ்வும் இருவேறு துருவங்களில் பயனித்துள்ளதை அறிய முடிகிறது.

'காதுகள்’ நாவலில் வரும் மகாலிங்கம் செவித்திறன் பாதித்து பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டு, தனது குடும்பம் வறுமையில் வாழ்ந்துள்ளதையும், செவித்திறனால் மகாலிங்கம் உளவியலுக்கு உட்பட்டு வாழ்ந்துள்ளதாக காதுகள் நாவல் விளங்குகிறது.

 ஏழாம் உலகம் நாவலில் பலதரப்பட்ட மனிதர்கள் பல்வேறு வகையில் முடமானவர்களின் வாழ்வினை, பதிவு செய்யப்பட்டுள்ளன. போத்திவேலுப் பண்டரம் முடமானவர்களை வைத்து பிச்சையெடுக்கும் தொழிலை நடத்திவந்துள்ள சூழலையும், ஏழாம் உலகம் நாவலில் வரும் மனிதர்களுக்கு பல்வேறு வகையில் உறுப்புகள் பாதிக்கப்பட்டு முடமாகி கோவில் நூழைவாயின் படிக்கட்டுகள்தான் குடியிருப்பாகவும், வாழ்விடமாகவும் மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்துள்ளதாக ஜெயமோகன் பதிவுசெய்திருப்பது, எதார்த்தங்களாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து கதைசொல்லும் மரபாகவே அமைந்துள்ளது.

சுடுகாடும் சில சுந்தரிகளும் என்ற கானவிஜியின் படைப்பு ஒருவன் கால் முடமாகி நாதியற்று கடற்கரையில் வாழ்ந்து, பல வருடங்களுக்கு பின் கானாப்பாடல் மூலம் தன்னை ஒதுக்கிவிட்ட சமூகத்தை தன் பால் ஈர்த்துக் கொண்டு மக்களிடம் பாராட்டு பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

மேற்படியாக மாற்றுத்திறனாளிகள் குறித்து மாற்றுத்திறனாளி அல்லாதோர் உருவாக்குகின்ற படைப்புக்கும், மாற்றுத்திறனாளியானவர் தன்னிலைப் பற்றி படைக்கின்ற படைப்புக்கும் உள்ள சமூக முரண்பட்ட கருத்துக்களை எடுத்துரைப்பதாக இவ்வாய்வு போக்கு அமைந்துள்ளது.

பார்வை நூல்கள்

1.            எஸ்.ராமாகிருஷ்ணன், சஞ்சாரம், தேசாந்திரி பதிப்பகம், சென்னை.

2.            எம்.வி.வெங்கட்ராம், காதுகள், அன்னம் வெளியீடு, தஞ்சை 1992.

3.            ஆர்.அபிலாசு, கால்கள், உயிர்மை பதிப்பு, சென்னை.

4.            தேனிசீருடையான், நிறங்களின் உலகம், விகடன் பிரசுரம், சென்னை.

5.            ஜெயமோகன், ஏழாம் உலகம், கிழக்குப் பதிப்பகம், சென்னை.

6.            கானாவிஜி, சுடுகாடும் சில சுந்தரிகளும், நக்கீரன் வெளியீடு, சென்னை..

- மா.கருப்பசாமி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகம் திண்டுக்கல்.

Pin It