கீற்றில் தேட...

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் நீண்டகால சிறைவாசிகளையும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட் டோரை அரசியல் அமைப்பு சட்டம் 161வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை, மதுரை, கோவை நகரங்களில் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை பிப்ரவரி 7ஆம் தேதியன்று நடத்தியது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிப்ரவரி 7ம் தேதி மாலை 4 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஐதர்அலி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது, மனித உரிமை அமைப்பு சார்பில் ஹென்றி டிபேன், புகழேந்தி, அருண்சோரி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், “இந்த நாட்டை ஒரு ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். பெரும் பான்மை மக்கள் கருத்துப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு என்று சொல்லிக் கொள்கிறார்கள். யார் பெரும்பான்மையோர்? உரிமை பறிக்கப்பட்டிருக்கின்ற தலித்துக்கள், அவர்களை போல் கிராமங்களில் உழன்று கொண்டிருக்கின்ற விளிம்பு நிலை மக்கள், இஸ்லாமியர்கள் இவர்களை எல்லாம் இணைத்தால் இவர்கள் தான் இந்த நாட்டில் பெரும்பான்மையோர் ஆவர்.

ஆனால், ஆட்சியை நடத்துகின்ற சிறுபான்மை மட்டுமல்ல, மிகவும் சிறுபான்மையாக இருக்கக்கூடிய ஒரு கூட்டம் , தங்களது மதவெறி கருத்துக்களைத்தான் அவைரும் பின்பற்றவேண்டும் என்ற ஆணவத்தோடு, வெறி உணர்வோடு ஒரு பக்கம் திணிக்கிறார்கள், அதிகாரத்தில் அமர்ந்து கொண்ட திமிரால் ஆட்சியில் இருந்துகொண்டு எளியவர்கள் மீது அதிகாரம் செலுத்துகின்ற அதிகாரிகள் மறுபக்கம் திணிக்கிறார்கள். சிறையில் வாழும் கைதிகளை விடுதலை செய்வதற்கு நாம் அரசியல் அமைப்பு சட்டம் 161ஆவது பிரிவை பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறோம். இந்தியாவின் நீதிமுறை என்பது ஒரு வழக்கு முடிந்துவிட்டால் மீண்டும் அதை மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்கின்ற முறை நடைமுறையில் இல்லை. அமெரிக்காவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்ககூடிய சிறைவாசிகளுக்கு ஆதரவாக ஒரு சிறு ஆதாரம் கிடைத்தாலும் அதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவதை அண்மையில் நாம் படித்தோம். தவறாக புரிந்து கொண்டு அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள் என்பதை அங்குள்ள அரசாங்கங்கள் உண்மையை புரிந்து கொண்டு அவர்களை விடுதலை செய்வார்கள்.

ஆனால் நம் நாட்டில் அந்த முறை இல்லை, அப்படிப்பட்ட ஒரு ஆதாரம் நீண்ட கால சிறை வாசிகளுக்கு ஆதரவாக கிடைக்குமேயனால் அதை மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் அதனை கருத்தில் கொண்டு விடுதலை செய்வதற்கு மாநிலத்திற்கு 161வது பிரிவையும் மத்திய அரசுக்கு 72ஆவது பிரிவையும் அளித்து அரசியல் அமைப்பு சட்டம் அதிகாரங்களை வழங்கியுள்ளது.  நாம் அதைத்தான் கேட்கின்றோம். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நீண்டகால சிறைவாசிகளையும், அதுபோல் ராஜீவ்காந்தி வழக்காக இருந்தாலும் அல்லது மற்ற வழக்காக இருந்தாலும் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள். அரசியல் அமைப்பு சட்டம் தந்திருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்துங்கள் என்ற கோரிக்கையைத் தான் வைக்கின்றோம். நீண்ட கால சிறை வாசிகளை பற்றி நாம் பேசுகின்றோம். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கின்ற சிறைவாசிகள் பலருக்கு பலமுறை அரசால் தண்டனை குறைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் இத்தகைய நடைமுறை எல்லோருக்கும் உண்டு என்று சொல்லியிருக் கிறார்கள். 1997இல் எந்த தடையும் இல்லாமல் தண்டனை குறைப்பு வழங்கினார்கள்.

சிறையில் இருந்து விடுமுறைக்கு போய்விட்டு ஒருநாள் காலதாமதமாக வந்தாலும் 224ஆவது பிரிவின் கீழ் ஒரு வழக்கை பதிவு செய்து அவர்களுக்கு முன்விடுதலை இல்லை என்கிறார்கள். இப்படி சின்ன சின்ன காரணங்களுக்கு முன்விடுதலை இல்லை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவர்களை பயங்கரவாதிகளாக சிலர் காட்டுகிறார்கள். ராஜீவ் வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவிட்டார்கள். சிறை என்பது மக்களை திருத்துவதற்கே தவிர அவர்களை பழிவாங்குவதற்கு அல்ல குற்றவாளிகள் என நேரடியாக கருதப்படுவோர் தங்களை மாற்றிக் கொண்டு இந்த சமுதாயத்தில் தொடர்ந்து வாழ்வதற்கும் தன்னுடைய நல்ல ஆற்றல்களை சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தவேண்டும். காந்தியை கொலை செய்த கோபால் கோட்சே போன்றவர்கள் எல்லாம் 15 ஆண்டுகளில் வெளிவந்துவிட்டனர். ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் பொய்யான குற்றச்சாட்டின் மீது சிறையில் இருப்பவர்கள் இன்றுவரை வெளிவரவில்லை.

காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் வெளிவந்தபோது இந்த நாட்டில் யாரும் பயங்கரவாதிகள் வெளியே வந்துவிட்டனர் என கூப்பாடு போடவில்லை. வெளியே வந்தவர்கள் காந்தி கொலையை நியாயப்படுத்திப் பேசுகிறார்கள். காந்தியை ஏன் கொலையை செய்தோம் என புத்தகம் போடுவது; நாடகங்கள் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். அதற்கு இந்த நாட்டில் எதிர்ப்பு எதுவும் எழவில்லை.  மாறாக இந்த அதிகார வர்க்கம் தங்களது வாயை மூடிக் கொண்டிருந்தது. 7 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்தபோது 10 ஆண்டுகள் சிறையில் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்வதில் இவர்களுக்கு என்ன பாகுபாடு இருக்கிறது என்று கேட்கிறோம்.

இந்திய சிறைகளில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிறைகளில் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் கல்வி அறிவு அற்றவர்கள் 40 ஆயிரம்பேர் என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றன. 10ஆம் வகுப்பிற்கு கீழ் படித்தவர்கள் 57ஆயிரம் பேர் உள்ளனர். ஆக இதில் 80 விழுக்காட்டிற்கு மேல் போதிய கல்வி அறிவு இல்லாதவர்கள். நீதிமன்றத்திற்கு சென்று பெரிய வழக்கறிஞர்களை வைத்து வாதிட்டு விடுதலையாக முடியாதவர்கள். அல்லது வேறு வழியில் சென்று நீதிபதிகளை கவனிக்க முடியாதவர்கள் தான் சிறையில் இருக்கிறார்கள். இவர்களை கருணையோடு கவனிக்கவேண்டும் என்றுதான் சொல்கிறோம்.

2007ஆம் ஆண்டு முன் விடுதலைபற்றி சிறைத் துறை ஓர் அறிக்கை கொடுத்தது. சிறைத் துறை தலைவர் சேகர் என்பவர் அறிக்கையில் எழுதுகிறார். 15ஆம் தேதி விடுதலைக்கு 10ம் தேதி கடிதம் எழுதுகிறார். ஜாகீருக்கும் அபுவிற்கும் முன்விடுதலை கொடுக்கக்கூடாது என்று எழுதுகிறார். இவர்கள் எல்லாம் வகுப்புவாத கலவரங்களில் ஈடுபட்டவர்கள். அதனால் கொடுக்கக்கூடாது என்று காரணம் கூறுகிறார். 10ஆம் தேதி கடிதம் எழுதி 12ஆம் தேதி உள்துறை செயலாளர் மாலதி அவர்கள் அக்கடிதத்தை ஏற்றுக்கொண்டார். அப்போதுதான் முதன்முறையாக வகுப்பு கலவரங்களில் இருப்பவர்களுக்கு முன் விடுதலையோ தண்டனை குறைப்போ இல்லை என்று சொன்னார்கள்.

நாம் கேட்கிறோம். எல்லோரும் சட்டத்திற்கு முன் சமம் என்றால் கொலை செய்தவனை துண்டு துண்டு கூறாக வெட்டி போட்டவர்களை விடுதலை செய்யும்போது ஏதோ ஓர் அற்ப காரணங்களைக் கண்டுபிடித்து விடுதலையை தடுப்பது என்ன நியாயம்? அரசியல் சட்டம் அனைவருக்கும் சமத்துவம் கொடுக்கிறது என்று பேசுகிறவர்கள் மதத்தின் பேரால் பிரிவினை காட்டக்கூடாது என்று சொல்கிறவர்கள், அதற்கு மாறாக ஏன் இஸ்லாமியர்கள் மீது மட்டும் இந்த காரணங்களை சொல்லி நீண்டகாலமாக சிறையிலேயே வைத்திருக்கிறார்கள் என்பதுதான் நமது கேள்வி.

எனவே இந்த ஆர்பாட்டத்தின் வழியாக அரசிடம் எழுப்பப்பட்டிருக்கின்ற கோரிக்கைகள் ஜனநாயக உரிமைகளை கேட்கின்ற கோரிக்கைகளாகும். இது அரசின் காதுகளுக்கு செல்லவேண்டும். ஜனநாயக உணர்வுகளை, மக்களின் உணர்வுகளை வெளிபடுத்துகின்ற மக்களின் நியாயமான கோரிக்கைகளை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் வன்முறை வந்துவிடக்கூடாது; மக்கள் வன்முறை பக்கம் சென்றுவிடக் கூடாது; வன்முறை வழியில் இளைஞர்கள் போய் கொண்டிருக்கிறார்கள் என்று வருந்துபவர்கள் இத்தகைய

ஜனநாயக கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தாலே அவர்கள் வன்முறை பக்கம் போக மாட்டார்கள்.

ஏற்கனவே இருந்த அரசு மட்டுமல்ல இப்போது அதிகாரத்தில் இருக்கின்ற அரசும் இப்போது அவர்களை நடத்துகின்ற முறைகளை பார்த்து நாம் அழுத்தமாக பேச வேண்டியிருக்கிறது. இந்த நியாயமான கோரிக்கைக்கு எங்களுடைய முழுமையான ஆதரவினை தெரிவிப்பதோடு, தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களில் எங்களை எப்போதும் இணைத்துக் கொள்வோம் என்ற உறுதியினை கூறி இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டிருக்கின்ற உங்களின் குரல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படுகிறது” என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக மதுரை மாவட்ட செயலாளர் மணிகண்டன், மதுரை தளபதி, மாவட்ட தலைவர் செந்தில், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு நீடா ஒன்றிய செயலாளர் செந்தமிழன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

செய்தி - மன்னை இரா.காளிதாசு