கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

muslim women agitation 1

“என் கணவர் முகமது அலி கைது செய்யப்பட்டபோது எங்களுக்குத் திருமணம் நடந்து ஐந்து மாதங்கள்கூட நிறைவடைந்து இருக்கவில்லை” என கண்ணீரை மறைத்துக் கொண்டே கூறுகிறார் சகோதரி முபீனா.

முபீனா கோவை பாஷா பாயின் மகள். 1997 டிசம்பர் 21-இல் திருமணம். 1998 மே-யில் கணவர் கைது. ஐந்தே மாதங்களில் தனது வாழ்வை இழந்துவிட்ட முபீனாவின் துன்பம் அத்தோடு முடியவில்லை. அவரது குடும்பத்து ஆண்கள் எல்லோரையும் ஏதோ ஒரு வழக்கில் கைது செய்து சிறையிலடைத்து வைத்திருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

சிறையிலிருக்கும் 49 பேரில் முபீனாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 5 பேர். ஆண்கள் துணையில்லாது இந்த குடும்பங்கள் அனுபவிக்கும் வேதனைகளை சொல்ல வார்த்தைகளே கிடையாது.

“என் தந்தை கோவை பாஷா பாய், என் கணவர் எஸ்.கே முகமது அலி, என் சித்தப்பா நவாப் கான் ஆகியோர் 18 ஆண்டுகளாக குண்டுவெடிப்பு வழக்கில் சிறையிலிருக்கிறார்கள். இன்னொரு சித்தப்பா முகமது கான் மற்றும் என் தாய்மாமன் முகமது சுபைர் ஆகியோர் இரட்டை கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள் .

என் சகோதரன் சித்திக் அலி பனிரெண்டு ஆண்டுகள் சிறைக் கொடுமைகளுக்குப் பிறகு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

என் தந்தை 1983 முதலே பல்வேறு வழக்குகளில் சிறைப்பட்டு வருகிறார் என்பதை நாடறியும். ஆனால் எங்கள் குடும்பத்து ஆண்களெல்லாம் சிறைக்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது யாருக்கேனும் தெரியுமா?” என கேட்கிறார் சகோதரி முபீனா.

“1989-இல் இந்து முன்னணியைச் சேர்ந்த கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். கணேசன் 1988-இல் நடந்த லத்தீப் கொலை வழக்கிலும், 1989-இல் நடந்த திமுக தொண்டர் அக்கீம் கொலை வழக்கிலும் சம்பந்தமுடையவர் என்று கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்தார். இப்படியான கணேசனை யாரோ கொலை செய்ததிலிருந்துதான் தொடங்கியது எங்கள் குடும்பத்தினரை வழக்குப்போட்டு பழிவாங்கும் நடவடிக்கை. கணேசன் மரணமடையும் முன், தன்னை பாஷாவின் தம்பி, அவரது மைத்துனர் மற்றும் இருவர் சேர்ந்து தாக்கியதாக வாக்குமூலம் கொடுத்தாராம்!

உண்மையில் இதற்கும் எம் உறவினர்களுக்கும் சம்பந்தமில்லை. இறந்தவர் உண்மையிலேயே இப்படியொரு வாக்குமூலம் அளித்தாரா என்பதும் தெரியவில்லை?

இந்த வழக்கில் சிறுவர்களாக இருந்த என் மாமா சுபேரும், என் சித்தப்பா முகமது கானும் கைது செய்யப்பட்டனர். இதன் பிறகு கோவையிலும், தமிழ்நாட்டில் எங்கேனும் இந்துத்துவவாதிகள் மேலான எந்த தாக்குதல் நடந்தாலும் எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது வாடிக்கையாயிற்று.

1991-இல் இந்து முன்னணி பேச்சாளர் சிவக்குமார் கொலை வழக்கில் சம்பந்தமேயில்லாமல் என் மாமா முகமது சுபைர் சேர்க்கப்பட்டார்.

1993 ஆகஸ்டில் நடந்த சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக நவம்பர் மாதம் சிபிஐ போலீசாரால் என் தந்தை பாஷா பாய் தடாவில் கைது செய்யப்பட்டார். உடனே நூற்றுக்கணக்கான போலீசார் கோட்டைமேடு பகுதியில் உள்ள இசுலாமியரின் வீடுகளில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட என் சித்தப்பா நவாப் கான், சகோதரன் சித்திக் அலி, என் தாய்வழி சித்தப்பா ஷான் பாஷா உள்ளிட்ட 17 பேரை தடாவில் கைது செய்தனர். இன்னொரு சித்தப்பா முகமது கானையும், மாமா முகமது சுபைரையும் குற்றவாளிகளாக்கி தேடி வந்தனர்.

இந்த நேரத்தில்தான் கோவையில் கோட்டைமேடு பகுதியை சுற்றி ஐந்து செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு நாங்கள் துப்பாக்கி முனையில் கண்காணிக்கப்பட்டோம். இசுலாமிய சமூகமே குற்றப்பரம்பரையினராக ஆக்கப்பட்டது.

என் அப்பா பாஷா பாயின் மைத்துனர் என்ற ஒரே காரணத்துக்காக முகமது சுபைர் மீது கோவை தடா வழக்கு, ராஜகோபாலன் கொலை வழக்கு, பார்சல் குண்டு வழக்கு, திண்டுக்கல் இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட எண்ணற்ற வழக்குகள் போடப்பட்டது. இறுதியாக கோவை குண்டு வெடிப்பு வழக்கும் போடப்பட்டது .

muslim women agitation 2என் சகோதரியின் கணவர் ஒரு ராணுவ வீரர். அவரையும் விட்டு வைக்கவில்லை. ஆறு மாதம் சிறையில் தள்ளி விட்டார்கள்.

ஆனால், இது என் குடும்பப் பிரச்சினையல்ல! சிறையிலிருக்கும் 49 பேர் பிரச்சினை மட்டுமல்ல!! இது எங்கள் சமுதாயப் பிரச்சினை!!! இந்த கொடுமைகள் அனைத்தும் இன்று சிறையில் இருப்பவர்களோடு முடியப் போவதில்லை. எங்கள் சமூக இளைஞர்கள் மீதும், வருங்கால சந்ததியின் மீதும் தொடரும். ஏனெனில் எங்கள்மீது சூழ்ந்திருப்பது மிகப்பெரிய அரசியல் சதி!” என கொதிக்கிறார் சகோதரி முபீனா.

முபீனா தனது தந்தை பாஷா பாயின் போராட்ட ஞாயத்தை ஏற்றுக் கொண்டவர். தனது 12-ஆவது வயதிலிருந்தே போராட்டக்களத்தில் இருப்பவர்.

1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையொட்டி இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் முபீனாவின் தந்தை பாஷா பாய், சகோதரன் சித்திக் அலி, சித்தப்பா நவாப்கான், மாமா முகமது சுபேர், தாய்வழி சித்தப்பா சான்பாஷா உட்பட சுமார் 35 பேர் கைது செய்யப்பட்டனர் .

தடாவை எதிர்த்த சமூக ஆர்வலர்களும் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட காலம். இஸ்லாமிய இயக்கங்களும் செய்வதறியாது திகைத்துக் கிடந்த நேரம்... தமிழக வரலாற்றில் முதல்முறையாக இசுலாமியப் பெண்கள் வீதியில் இறங்கினர். 1994 ஆகஸ்ட் மாதம் நஜ்மா பேகம் அவர்கள் தலைமையில் “புர்காவுக்குள் புதைந்து கிடந்த பூகம்பங்கள் தடாவுக்கு தடை கோரி வருகிறது” என்ற முழக்கத்தோடு கோவையை அதிரச் செய்தனர். சிறுமியாக இருந்த முபீனாவிற்கு அப்போது வயது 12. பெண்களின் ஊர்வலம் கோவை காந்திபுரத்திலிருந்து மாட்ட ஆட்சியர் அலுவலகம் வரைக்கும் சென்றபோது அதில் முன்னணியில் நின்று முழக்கமிட்டவர் முபீனா. அவரது போராட்ட வாழ்க்கை இங்கிருந்துதான் துவங்கியது.

போராளிகளை வரிந்துகொள்ளும் துணிச்சல் மிக்கது முபீனாவின் குடும்பம். சங்பரிவாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஷஹீத் கூரியூர் ஜின்னா சாஹிபின் மகனைத்தான் திருமணம் செய்துகொண்டார் முபீனாவின் சகோதரி. சங் பரிவாருக்கு எதிரான போராட்டத்தில் சிறை சென்று வந்த முகமது அலி என்ற இளைஞரைத்தான் திருமணம் செய்துகொண்டார் முபீனா.

இந்த உறுதிதான் இன்னும் இவரை உடைந்து நொறுங்கிவிடாமல் பாதுகாக்கிறது. அவரிடம் உள்ள தெளிவுதான் “இது இசுலாமிய சமூகத்தின்மீது திட்டமிட்டு திணிக்கப்பட்ட அரசியல் சதி” என்பதை உணரச் செய்துள்ளது.

ஆம்! உண்மைதான். இது திட்டமிட்டு இசுலாமியர்கள்மீது திணிக்கப்பட்ட சதிதான். இதை உணர்ந்து கொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள். http://puduvaisaravanan.blogspot.in/2007/10/blog-post.html

இது இராம.கோபாலனின் 80 வயதை நிறைவையொட்டி அவரிடம் புதுவை சரவணன் என்பவர் தனது வலைதளத்திற்காக எடுத்த நேர்காணல். இந்த நேர்காணல்படி, 1980 பிப்ரவரியில் கரூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்-ஸின் மாநில அளவிலான கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

  • ஆர்.எஸ்.எஸ்-ஸின் தலைவர்கள் யாதவராவ் ஜோஷி, சேஷாத்ரிஜி, சூர்யநாராயணராவ்ஜி ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில்தான் ‘இந்து முன்னணி' என்கிற அமைப்பு உருவாக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
  • அப்போது ஆர்.எஸ்.எஸ்-ஸின் மாநில இணை அமைப்பாளராக இருந்த இராம.கோபாலன் இந்து முன்னணியின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
  • இந்து முன்னணியின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டதும் “இந்து முன்னணி என்றால் என்ன? நான் என்ன செய்யவேண்டும்?” என்று இராம.கோபாலன் கேட்கிறார்.
  • அதற்கு ஆர்.எஸ்.எஸ்-ஸின் மூத்த பிரச்சாரகர் யாதவராவ் ஜோஷி, “நீ வேலை செய்ய ஆரம்பி. என்ன வேலை என்று நீயே தெரிந்து கொள்வாய்” என்று கூறியிருக்கிறார்.
  • இராம.கோபாலன் முதற்கட்டமாக குமரி மாவட்டத்தில் தனதுப் பணியைத் தொடங்குகிறார். அங்கே கிருத்துவர்கள் “கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக” மாற்றப்போகிறார்கள் என்ற பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தமிழகத்தில் முதல் மதக்கலவரமான “மண்டைக்காடு கலவரம்” நடந்தேறுகிறது. குமரி மாவட்டம் இரத்தக்களரியாக மாறுகிறது. இதன் பின்னணியில் அங்கு பி.ஜெ.பி சக்திமிக்க கட்சியாக வளர்கிறது.
  • அடுத்ததாக இராம,கோபாலன் கோவைக்கு பயணமாகிறார். கோவையை இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக இந்து முன்னணியின் பிரச்சாரம் தொடங்குகிறது.
  • கோவையை இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக கூறிய இந்து முன்னணி அது சம்பந்தமான ஆதாரங்களோடு களம் இறங்கவில்லை, மக்களைத் திரட்டி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. மாறாக, “கற்பில் சிறந்தவள் கதீஜாவா? கன்னி மேரியா? மணியம்மையா?” என பட்டிமன்றங்களை நடத்தி பகுத்தறிவாளர், கிருத்துவரோடு இசுலாமியர்களையும் சீண்டியது.
  • குமரியைப்போல் கோவையிலும் மத மோதல்களும், கலவரங்களும் உருவாக்குகின்றன. இரத்த ஆறு ஓடுகிறது. பி.ஜெ.பி வளருகிறது.

ஆர்.எஸ்.எஸ்-இன் துல்லியமான திட்டமிடல்

மேற்கூறிய ஆதாரத்தின்படி ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டில் பி.ஜெ.பி-யை வளர்த்து விடுவதற்கு குறிப்பாக இரண்டு மாவட்டங்களைத் தேர்வு செய்துள்ளது. குமரியில் கிருத்துவர்களையும், கோவையில் இசுலாமியர்களையும் குறி வைத்திருக்கிறது. திட்டமிட்ட மத வன்முறை நடவடிக்கைகளுக்காகவே இந்து முன்னணியை உருவாக்கியிருக்கிறது.

தமிழக அரசு, காவல்துறை, உளவுத்துறை கண்டு கொள்ளாதது ஏன்?

1980 பிப்ரவரியில் கரூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் இரகசிய கூட்டம் மாதிரி தெரியவில்லை. தவிர இவ்வளவு முக்கியமானத் தலைவர்கள் கூடும் கூட்டம் மறைக்கப்படக் கூடியதுமல்ல. இந்த காலத்தில்தான் நக்சலைட் ஒழிப்பு என்றப்பேரில் காவல்துறை மற்றும் உளவுத்துறைகள் அதிகாரத்தோடு செல்வாக்கு செலுத்தின.

இருந்தும் ஏன் ஆர்.எஸ்.எஸ்-இன் கூட்ட முடிவுகளை தடுக்க முடியவில்லை? குமரி மாவட்டத்தை கதிகலங்க செய்தவர்கள் அடுத்து கோவைக்கு பயணமானபோது ஏன் தடுக்கப்படவில்லை?

1982 ஜூன் 20-இல் கோவை வ.உ.சிதம்பரம் பூங்கா மைதானத்தில் நடந்த இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் “கற்பில் சிறந்தவள் கதீஜாவா? கன்னி மேரியா? மணியம்மையா?” என்ற தலைப்பில் பேசப்பட்டப் பேச்சு இசுலாமியரைக் கொதிக்க செய்தது. அப்படிப் பேசியவர்கள்மீது போலீசார் நடவடிக்கைகள் எடுப்பார்கள் என எதிர்பார்த்தனர். தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் திட்டமிட்டு விஷப்பிரச்சாரம் செய்துவரும் ராமகோபாலனை கைது செய்யவேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கையும் வைத்தன.

அன்றைய எம்.ஜி.ஆர் அரசும், அதன் காவல்துறையும் அதை ஏன் உதாசீனப்படுத்தின? மீண்டும் மீண்டும் அதேபோன்ற கூட்டங்களுக்கு ஏன் அனுமதியளித்தன?

இவையெல்லாம் மில்லியன் டாலர் மதிப்புடைய கேள்விகள். இதைத்தான் சகோதரி முபீனாவும் “எங்கள்மீது சூழ்ந்திருப்பது மிகப்பெரிய அரசியல் சதி!” என சொல்கிறார். “இந்த சதிக்குப் பின்னால் இதுவரைக்கும் கிட்டதட்ட 60 இசுலாமிய சகோதரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்காக ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. ஆனால், எங்களவர்கள் 49 பேர் சிறையிலிருக்கிறார்கள்.

நாங்கள் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு உண்மையை நினைவுப் படுத்துகிறோம். நாங்கள் ஒருபோதும் மத வன்முறையைத் தூண்டவில்லை. அனைத்து மக்களோடும் உறவு கொண்டிருப்பதே எங்கள் இயல்பு. இந்து முன்னணி வருவதற்கு முன்பு இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

பிரச்சினையை உருவாக்கியவர்கள் சுதந்திரமாக இருப்பதும், நாங்கள் தண்டிக்கப் பட்டிருப்பதும் என்ன ஞாயம் என்று கேட்கிறோம். இந்துத்துவத்தின் பேராலான பயங்கரவாதம் இசுலாமியர்களுக்கு மட்டுமான பிரச்சினையா? எனக் கேட்கிறோம். அதனால்தான் எங்களின் போராட்டத்தில் சமூக அக்கறையுடையவர்களும், இயக்கங்களும் பங்குபெற வேண்டுமென கோருகிறோம். 49 இசுலாமிய சிறைவாசிகள் விடுதலையை அனைவரும் முன்னெடுக்க வேண்டுகிறோம்” என கோரிக்கை வைக்கிறார் சகோதரி முபீனா.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

- திருப்பூர்  குணா