பசு பாதுகாப்புக் குழு என்ற பெயரில் சமூக விரோதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய வன்முறைகளின் தொகுப்பு.

• கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில், உத்தர பிரதேச மாநிலம் தாத்ரி என்ற ஊரில், வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு மாமிசம் வைத்திருந்தார் என்று கூறி முகமது அக்லக் என்பவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து தெருவில் அடித்தே கொன்றது இந்து மதவெறி குண்டர் படை. பின்னர் நடந்த விசாரணையில் அக்லக் வீட்டிலிருந்தது மாட்டுக் கறி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது.

• 2015 அக்டோபர் 9-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் செத்த மாடுகளை எடுத்துச் சென்ற லாரிகளை வழிமறித்த இந்துமத வெறிக் கூட்டம் ஒன்று, லாரி ஓட்டுநர் ஜாகித் அகமது மற்றும் அவருடன் வந்த இன்னொரு இஸ்லாமிய இளைஞரையும் கொடூரமாக தாக்கியது. இதில் ஜாகித் அகமது பத்து நாட்களுக்குப் பின்னர் இறந்து போனார். இத்தாக்குதல் சம்பவம் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, போராட்டங்கள் வெடித்தன. காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க. மக்கள் தேசிய கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. மெகபூபா தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு, இந்துத்துவா கும்பல் வெறியாட்டங்கள் அதிகரித்து உள்ளன.

• 2015, அக்டோபர் 8ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ., ஷேக் அப்துல் ரஷீத், சட்ட மன்ற எம்.எல்.ஏ. விடுதியில் மாட்டிறைச்சி விருந்து தந்தார் என்று, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் களால் தாக்கப்பட்டார். உதம்பூர் தாக்குதல் நடந்த நேரத்தில் இமாச்சல பிரதேச மாநிலம் சகரன்பூர் அருகே மாடுகளைக் கடத்திச் செல்ல முயன்றதாக இருபது வயது இளைஞர் ஒருவரை அடித்தே கொன்றது இந்துத்துவா குண்டர் படை.

• 2016 ஜனவரியில் மராட்டிய மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கிர்க்கியா இரயில்வே நிலையத்தில் பயணிகள் சிலரைக் கண்மூடித்தனமாக தாக்குகிறது, இந்து பரிவார அமைப்பான கோரக்ஷன சமிதியைச் சேர்ந்த குண்டர் படை ஒன்று. மறுநாள் உள்ளூர் பத்திரிகைகள் பசு மாமிசத்தைக் கடத்திய முஸ்லீம் பயணிகளை கோரக்ஷன சமிதி தாக்கியதாக செய்தி வெளியிட்டன. எனினும் பின்னர் நடந்த காவல் துறை விசாரணைகளில் கைப்பற்றப் பட்ட மாமிசம் பசுவினுடையது அல்ல; எருமைக் கறி என்று தடயவியல் சோதனை மூலம் வெளிவந்தது.

• 2016 மார்ச்சு மாதம் ஜார்கண்ட் மாநிலம் லாத்தேகர் மாவட்டத்தில் இரண்டு முஸ்லீம் கால்நடை வியாபாரிகளை இந்துத்துவா மதவெறி யர்கள் அடித்துக் கொன்று மரத்தில் தொங்க விட்டனர். கொல்லப்பட்டவர்கள் மஸ்லூம் அன்சாரி மற்றும் இம்தியாஸ்கான் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் லாத்தேகர் மாவட்டத்தில் நடக்கும் புகழ்பெற்ற கால்நடைச் சந்தையில் இருந்து வளர்ப்பதற்காக ஆடு மாடுகளை வாங்க வந்தவர்கள் என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

• 2016, ஏப்ரல் 5-ஆம் தேதி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்டெய்ன் அப்பாஸ் என்கிற 27 வயது வாலிபர் விவசாயத்திற்காக காளை மாடுகளை வாங்கிவிட்டுத் திரும்பும் வழியில் கோரக்ஷாதள் என்கிற பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

• 2016, ஜூன் மாதம் சுமார் 40 பேர் கொண்ட பஜ்ரங்தள் குண்டர்கள் கர்நாடக மாநிலம் கோப்பா அருகே தலித் குடும்பம் மாட்டுக் கறி வைத்திருப்பதாக குற்றம்சாட்டி கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. கொடூரமான இத்தாக்குதலில் அந்த தலித் குடும்பம் மரணக் காயங்களுக்கு உள்ளானது.

2016 ஜூலை மாதம் குஜராத் மாநிலம் உனாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் எனக் குற்றம்சாட்டி தலித் இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கியது இந்துத்துவ கும்பல். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் குஜராத் மாநிலம் முழுக்க தலித் மக்கள் கொந்தளித்து எழுந்தனர். செத்த மாட்டை சுமக்க மாட்டோம்; உரிக்க மாட்டோம் என்று தீர்மானித்த குஜராத் தலித் மக்கள், அரசு அலுவலகங்களை செத்த மாடுகளால் நிறைத்தனர். பல வாரங்கள் தொடர்ந்த இந்தப் போராட்டங்களால் அதிர்ச்சி அடைந்த இந்துத்துவ கும்பல், தலித் வாக்குகளை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் ஆழ்ந்தன.

• பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில், 2016 ஜூலை மாதத்தில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த குண்டர் படை ஒன்று, மாண்ட்சோர் மாவட்ட இரயில்வே நிலையத்தில் மாட்டுக் கறி வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி இரண்டு இஸ்லாமியப் பெண்களைத் தாக்கியது. 2016 ஆகஸ்டு மாதம், ஆந்திராவில் மோகதி எலிசா, லாசர் எலிசா ஆகிய இரண்டு தலித் சகோதரர்கள் இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருக்கும்போது, கோரக்ஷா சமிதியைச் சேர்ந்த நூறு குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

• 2017 ஏப்ரல் ஒன்றாம் தேதி ஹரியானா மாநிலத்தில் முறையாக அனுமதி பெற்று மாடுகளை ஏற்றி வந்த டெம்போ வாகனங்களை வழிமறித்த பஜ்ரங்தள் குண்டர்கள், மாடுகளை ஏற்றி வந்த 15 இஸ்லாமியர்களைக் கொடூரமாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் பெஸ்லூகான் என்கிற முதியவர் கொல்லப்பட்டார்.

2017 ஏப்ரல் 21-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் கால்நடைகளுடன் இடம் பெயர்ந்த நாடோடிக் குடும்பம் ஒன்றை வழிமறித்த கோரக்ஷக் குண்டர் படை கொடூரமாகத் தாக்கி உள்ளது. இந்த ஏப்ரல் 21-ஆம் தேதி, புதுடெல்லி கால்காஜி பகுதியில் எருமைகளைக் கடத்த முற்பட்டதாகப் பொய்யாகக் குற்றம் சுமத்தி மூன்று முஸ்லீம் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். கடுமையான தாக்குதலோடு இரவு முழுவதும் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞர்களை மறுநாள் எழுப்பி விசாரித்த காவல்துறையினர், அவர்கள் மேல் மிருகவதைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

• ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மார் நகரில் 50 பசுக்களை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் மத்திய அரசின் இனவிருத்தித் திட்டத்துக்காக விலைக்கு வாங்கி இருந்தனர். அவற்றை தமிழகத்திற்கு கொண்டு செல்ல அந்த மாநில காவல்துறையிடம் முறைப்படி தடையில்லா சான்றுகளையும் பெற்றனர். பின்னர் ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 வாகனங்களில் பசுக்களை ஏற்றிக் கொண்டு தமிழகத்திற்குப் புறப்பட்டனர். அப்போது பசுப் பாதுகாவலர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திடீரென வாகனங்களை சூழ்ந்து கொண்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தமிழக அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டனர். வாகனங்களுக்கு தீ வைக்கவும் முயற்சி செய்தனர்.  மேலே கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் அனைத்தும் ஊடகங்களில் பத்திரிகைகளில் வெளி வந்தவை. வெளியே தெரியாத சம்பவங்களின் பட்டியல் மிக நீளமானது ஆகும்.

• உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சிறிதும் பெரிதுமாக சுமார் 317 மதக் கலவரங்கள் நடந்து உள்ளன. இந்தத் தகவலைக் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கான பதிலில், உள்துறை இணை அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ தெரிவித்தார்.

• உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்துத்துவா கும்பல் நடத்திய மதக் கலவரங்கள் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் மாட்டு அரசியல் காரணமாகவே அங்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் வாய்ப்பை உருவாக்கியதாக ஆர்.எஸ். எஸ்., சங் பரிவார் கூட்டம் நினைக்கிறது. தற்போது உ.பி. மாநிலத்தில் ஆர்.எஸ். எஸ்., யோகி ஆதித்ய நாத்தை முதல்வர் பதவிக்குக் கைகாட்டியது. அவரும் திடீரென்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் முதல்வர் பதவியில் திணிக்கப்பட்டுள்ளார். உ.பி.யில் பா.ஜ.க. வெற்றிக்குப் பின்னர், பசுப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட ஆர்.எஸ். எஸ்., பரிவாரங்கள் புதிய உத்வேகம் அடைந்துள்ளன. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை அடுத்த ஃபதேபூர் சிக்ரியைச் சேர்ந்த முஸ்லீம் காய்கறிக் கடையைக் கொள்ளையடித்துள்ளனர்.

காவல்துறையினர் வன்முறைக் கும்பல் மீது வழக்குப் பதிவு செய்ததால் ஆளும் பா.ஜ.க., ஆர்.எஸ். எஸ்.,  கூட்டம் ஃபதேபூர் சிக்ரி காவல்நிலையத்தில் நுழைந்து தாக்கி உள்ளனர்; காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பாளரைக் குறி வைத்து அடித்துள்ளனர். இந்தச் சம்பவம் நடப்பதற்கு இருபது நாட்களுக்கு முன்பு, சகரான்பூரில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவா அமைப்பினர் நடத்திய கலவரத்தின்போது ரோந்து வந்த மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் லவகுமாரைத் தாக்கி உள்ளனர். சகரான்பூரைச் சேர்ந்த தலித்துகளும், முஸ்லீம் களும் இணைந்து கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடி உள்ளனர். இதற்குப் போட்டியாக இந்துத்துவக் கும்பல் நடத்திய ஊர்வலம் வன்முறைக் கலவரமாக வெடித்தது.

• உச்சநீதிமன்றத்தில் ‘ஆதார்’ தொடர்பாக நடந்து வரும் வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மோடி அரசின் ‘மாட்டு அரசியல்’ உச்சத்தைத் தொட்டுள்ளது. “இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாட்டுக்கும், மாட்டு வம்சத்தைச் சேர்ந்த கால்நடைகளுக்கும் ஆதார் எண்” வழங்கப்பட உள்ளது என்று அந்த மனுவில் மத்திய அரசு கூறி உள்ளது. நாடெங்கும் உள்ள சுமார் 8.8 கோடி மாடுகள் மற்றும் எருமைகளின் காதுகளில் ஆதார் எண் பதியப்பட்ட பிளாஸ்டிக்  வில்லைகளைப் பொருத்த சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் கால்நடைகளின் சட்டவிரோத நடமாட்டத்தைக் கண்காணிப்பது சாத்தியமாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதாவது கன்று ஈனும் வயதைக் கடந்த பால் வழங்க முடியாத வயதான மாடுகளைக் கைவிடுவது அல்லது மாடுகள் அறுப்பதற்கு அனுமதிக்கப்பட் டிருக்கும் மாநிலங்களுக்கு அடி மாடாக அனுப்புவது போன்ற முடிவுகளை எடுக்கும் விவசாயிகளையும் கூட இனிமேல் இத்திட்டத்தின் விளைவாக குற்றவாளிகளாக்க முடியும். இந்துத்துவ அரசியலால் மாட்டிறைச்சி உணவுப் பழக்கம் கொண்ட இஸ்லாமியர், தலித் துக்கள் மட்டுமின்றி மற்ற சாதியினருக்கும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களுக்குமே எதிரானது என்பதை மோடி அரசு உறுதிப்படுத்தி உள்ளது.

Pin It