பாஜகவின் பாசிசம் ஊடுருவியுள்ளது அதிகார அமைப்பில் மட்டுமல்ல, பெரிய பல்கலைக்கழகங்களிலும் தான்...
இந்தியாவில் பாஜகவின் ஆட்சிக்கு முந்தைய காலம் வரையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) என்றால், மிகச் சிறப்பானது; பல ஆளுமைகளை உருவாக்கியது என்ற பேச்சு தான் அடிபடும். ஆனால் இன்று பாஜகவின் ஆட்சியில் JNU என்று சொன்னதும் நினைவுக்கு வருவது சாதி பாகுபாடுகளால் தற்கொலை செய்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மற்றும் காணாமலாக்கப்பட்ட நஜீப்.
இவர்கள் தான் இன்றைய JNUவின் அடையாளம். இவர்களை ஒரு புள்ளி இணைக்கிறது. அதுதான் பாசிச எதிர்ப்பு. ஆர்.எஸ்.எஸ்னுடைய மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பை அமைத்ததும் தங்களது பாசிச சிந்தனைகளை வெளிப்படையாகவே செயல்படுத்த ஆரம்பித்தனர்.
பாஜகவை எதிர்த்துப் பேசும் மாணவர்களில் தொடங்கி அனைவருக்கும் தேசத்துரோகி பட்டம் கொடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள், தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் அல்லது ஒதுக்கப்படுகிறார்கள்.
பத்திரிக்கைகளிலும் பாசிசம்! ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் கல்லூரி மாணவரை தொடர்புபடுத்தி பொய்ச் செய்திகள்.
இன்றைய தேசிய ஊடகங்களில் தொடங்கி மாநில ஊடகங்கள் வரை பாஜக, இந்துத்துவ இயக்கங்கள் எதைச் சொல்கிறதோ அதை மக்களுக்கு ஆராயாமல் செய்தியை வெளியிடும் அளவுக்கு ஊடகங்கள் இன்று தனது நிலையை மறந்து அரசியல்வாதிகளின் அடிவருடிகளாய் செயல்படுகிறார்கள். JNU கல்லூரி விசயத்திலும் ஊடகங்கள் தொடர்ச்சியாக பொய்யை வெளிப்படையாகவே வெளியிடுகிறார்கள்.
16, பிப்ரவரி 2016ல் JNU மாணவர் உமர் காலித்துதுக்கு ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தில் தொடர்பிருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் கூறுகிறது என ஒரு செய்தியை தேசிய ஊடகம் வெளியிட்டு பரபரப்பாக்கியது. ஆனால் அப்படி எந்த அறிக்கையும் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை, செய்தி தவறானது என பின்வந்த நாட்களில் தெரிய வந்தது. ஆனால் இன்று வரை, உமர் காலித் என்றதும் பாஜக, இந்துத்துவ சக்திகள் பயன்படுத்தும் வார்த்தை “தேசத்துரோகி”, "தேசவிரோதி".
15 அக்டோபர் 2016ல் JNU கல்லூரி மாணவர் நஜீப் அஹ்மத் மாயமானார். இதற்குக் காரணம் ஏபிவிபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என்று JNU கல்லூரி மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காணாமல் போன நஜீப்பைக் கண்டுபிடித்து தரக் கோரி தொடர்ச்சியாக போராடுவது என JNU கல்லூரி மாணவர்களும் நஜீப் தாயாரும் பங்கெடுத்து வருகின்றனர். இந்நிலையில் 21.03.2017 அன்று முக்கிய தேசிய ஊடகங்களான Times Of India மற்றும் The Hindu போன்ற ஊடகங்கள் காணாமல் போன நஜீப்பிற்கு தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புள்ளது எனவும் உளவுத்துறை அதை கண்டுபிடித்ததாகவும் செய்திகளை வெளியிட்டன. Times Now என்ற பிரபலமான செய்தி காணொளி ஊடகத்திலும், zee news என்ற செய்தி தொலைக்காட்சியிலும் “நஜீப் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டாரா” என்ற தலைப்புடன் விவாதங்கள் நடந்தன. இந்த நிலையில் டெல்லி காவல்துறை ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது. இதில் நஜீப்பிற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என தெளிவுபடுத்தப்பட்டது.
JNU மாணவர் நஜீப் அஹ்மத்தை கண்டுபிடித்து தரக்கோரி போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்தவர் என்ற பொய்ப் பிரச்சாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டன ஊடகங்கள். டெல்லி காவல்துறை, அவருக்கும், அந்த இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென சொன்ன பிறகும் சமூக வலைதளங்களில் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துவிட்டதாகவே பிரச்சாரத்தில் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றனர்.
பாஜகவின் பொய் பிரச்சாரத்தின் தொடர்ச்சியான சூழ்ச்சிகள்!
உத்திரப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசியது “கான்பூர் ரயில் தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர். நம் எல்லையைக் கடந்து வந்து தைரியமாக தாக்கிவிட்டுச் செல்கின்றனர்.” கான்பூர் ரயில் விபத்தை பயங்கரவாதிகளின் தாக்குதலாகவும் அதனை பாகிஸ்தான் முன்னிறுத்தி செய்ததாகவும் பிரச்சார மேடையில் ஒரு பிரதமர் பேசுகிறார். ஆனால், கான்பூர் ரயில் விபத்தில் எந்த விதமான தாக்குதலும் நடைபெறவில்லையென ரயில்வே காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
ஒரு பிரதமர் ஓட்டு கேட்பதற்காக நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேசுகிறார். இன்று வரை இதற்கு பாஜகவின் சார்பாகவும் மறுப்பு வரவில்லை. எந்த அதிகாரிகளும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் நினைப்பதை எங்கும் செயல்படுத்த முடியும் கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையை இன்று உருவாக்கியுள்ளனர். (The Hindu 01/03/17)
அதே போல், கார்கில் போரில் உயிரிழந்த ஒரு ராணுவ வீரரின் மகள், லேடி ஸ்ரீராம் கல்லூரியில் முதலாமாண்டு படித்து கொண்டிருந்த குன்மெஹர் சமூகவலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார். “நான் டெல்லி பல்கலைக்கழக மாணவி. எனக்கு ஏ.பி.வி.பியைக் கண்டு பயமில்லை, நான் தனியாள் இல்லை. என்னுடன் ஒவ்வொரு இந்திய மாணவரும் இருக்கிறார்.” மேலும் ஏ.பி.வி.பிக்கு எதிரான பேரணியிலும் கலந்து கொள்கிறார் அம்மாணவி. அதன் தொடர்ச்சியாக மாணவி குன்மெஹருக்கு மிரட்டல்கள். உன்னை கற்பழித்துவிடுவோம், கொன்று விடுவோம் என பாலியல் ரீதியான மிரட்டலகள் வருவதாக காவல்துறையில் புகார் கொடுக்கிறார். இந்த இடைவெளியில் ஏ.பி.வி.பியினர் குன்மெஹரின் Youtube பக்கத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான “அமைதியை வலியுறுத்திய நான்கரை நிமிட காணொளியில்” ஒரு சிறு பகுதியை அதாவது, என் தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல, போர் தான் என்ற வாசகத்துடன் குன்மெஹர் நிற்கும் சில நொடி காணொளியை மட்டும் பிரித்து சமூக வலைதளங்களில் பரவலாக்கினார்கள்.
அடுத்த நிமிடம், அந்த பெண்ணுக்கு பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸிடமிருந்து தேசத்துரோகி முத்திரை வந்து குவிகிறது. அப்பெண் தான் குடியிருந்த வீட்டை விட்டும் வெளியேறி வேறு இடம் செல்கிறார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு “அந்த பெண்ணின் மனதை யார் கெடுத்தது” என அப்பெண்ணை குற்றவாளியாக்குகிறார். பாஜக எம்.பி பிரதாப் சின்ஹா, தீவிரவாத குற்றவாளியான தாவூத் இப்ராஹிமுடன் இம்மாணவியை தொடர்புபடுத்தி பேசுகிறார். கிரிக்கெட் வீரர் சேவாக் இந்தப் பெண்ணுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்கிறார். இறுதியில் இப்பெண்ணுடைய குற்றச்சாட்டுகள் முடக்கப்பட்டு, இப்பெண்ணே தேசத்துரோகியாக்கப்பட்டு செய்திகள் மறைக்கப்பட்டது. (தி இந்து மார்ச்-03, 2017)
காவல்துறை, பத்திரிக்கை, நீதிமன்றம் யாரை நம்புவது?
நாட்டின் மிக உயரிய அதிகாரம் கொண்டது நீதிமன்றம்! இந்த நீதிமன்றங்களிலும் பாசிசமே ஊடுருவியுள்ளது என தொடர்ச்சியான தீர்ப்புகள் தெரிவிக்கிறது. கரசேவை என்ற பெயருடன் 500 ஆண்டு கால பழமையான பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. காவல்துறையும் இராணுவமும் இடித்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார்கள். பத்திரிக்கை இந்த செய்திகளை மறந்தே விட்டது. நீதிமன்றமோ இடித்தவர்களுக்கு 2 பங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பங்கு என கொஞ்சமும் யோசித்துப் பார்க்க முடியாத அநியாயமான ஒரு தீர்ப்பை வழங்குகிறது. மொத்தத்தில் நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் நீதி கிடைக்கப்போவதில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நாட்டின் உளவுத்துறை, காவல்துறை, இராணுவம், நீதித்துறை என அனைத்தும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. மத்திய ஆளும் அரசை கேள்வி கேட்கும் ஒரு மாணவனோ சாமானியனோ யாராக இருந்தாலும் இல்லாமலாக்கப்படுவார்கள்! தேசத்துரோகிகளாக, மாற்றப்படுவார்கள் என்பதே இன்றைக்கு நிதர்சனம்.
- அபூ சித்திக்