பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளை சட்ட விரோத அமைப்புகளாக அறிவித்து ஒன்றிய அரசு உபா சட்டத்தின் கீழ் ஐந்தாண்டுகள் தடைவிதித்து இருக்கின்றது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் மாநில போலீசாரால் கடந்த மாதம் 22ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் இதுவரை ஒன்றிய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டதாகவும். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டதாகவும், இதற்காக பயிற்சி முகாம் ஒன்றை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வகையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரிப்பதில் அந்த அமைப்பு ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ள அமலாக்கத்துறை, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிரான மோடி அரசின் செயல்பாட்டை எதிர்த்து அந்த அமைப்பினர் இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்கள்.
இஸ்லாமிய மக்களுக்காக இந்தியா முழுவதும் போராடும் பெரிய அமைப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இருப்பது சங்கிகளின் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்தது. அதன் வெளிப்பாடாகத்தான் இன்று அந்த அமைப்புக்கு திட்டமிட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகளுக்கு எதிராவும் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றது. இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு, இஸ்லாமியத் தனிநபர் சட்ட நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் முஸ்லீம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றுக்காகவும் குரல்கொடுத்து வருகிறது. 2012 இல் அப்பாவி இஸ்லாமியர்களை உபா சட்டத்தில் கைது செய்யப்படுவதாகப் போராட்டங்கள் நடத்தியுள்ளது.
தமிழ் நாட்டில் கொரோனா காலகட்டத்தில் இறந்தவர்களின் உடல்களின் அருகே அவர்களின் உறவினர்களே செல்லத் தயங்கிய போது இறந்தவர்கள் இந்துவா, முஸ்லிமா, கிருஸ்தவரா என வேறுபாடு பார்க்காமல் அடக்கம் செய்யும் பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஈடுப்பட்டனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுசேரி, கேரளா, மகாராஸ்டிரா, பீகார், கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களிலும் இந்தப் பணிகளை செய்தனர்.
அப்படிப்பட்ட அமைப்பின் மீதுதான் இன்று இந்தியாவுக்கு எதிராக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், கடத்தல், கொலை, மிரட்டல், வெறுப்புப் பேச்சு, மதக்கலவரம், லவ் ஜிகாத் போன்றவற்றில் ஈடுபடுவதாகவும் சங்கிகளால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன.
மோடி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடைவிதித்து நூற்றுக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்களை மோடி அரசு வேட்டையாடி இருக்கின்றது. மோடி மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறி இஸ்லாமியர்கள் வேட்டையாடப்படுவது இது முதன்முறை அல்ல.
ஏற்கெனவே இஷ்ரத் ஜகான், ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை, அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நான்கு பேர்களை லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் மோடியைக் கொல்வதற்காக குஜராத்துக்கு வந்ததாகவும் பொய்யான குற்றம் சாட்டி போலி என்கவுண்டர் செய்யப்பட்டனர். இதைத் தலைமையேற்று நடத்தியவர் வன்சாரா என்ற காவல்துறை அதிகாரி ஆவார்.
இந்த வன்சாரா, சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கிலும் முக்கிய குற்றவாளியாவர். குஜராத் கலவரத்தில் மோடிக்கு உள்ள தொடர்பு பற்றிய உண்மைகளை மோடி அரசில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பண்டியா என்பவர் ‘ மக்கள் நீதி மன்றம்’ என்ற அமைப்பு நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்டதால் அவரை அமித்ஷாவுக்காக கொலை செய்த ரவுடி சோராபுதீன் ஆவான்.
வன்சாரா சோராபுதீனை மட்டும் கொல்லவில்லை. அவனது அடியாளாக இருந்த துளசி ராம் பிரஜாபதியை போலி என்கவுண்டரிலும், சோராபுதீனின் மனைவி கவுசர் பீ யையும் விச ஊசி போட்டும் கொல்லக் காரணமாக இருந்தவன்.
இவ்வளவு கொலைகளும் நரேந்திர மோடி என்ற ஒற்றை நபரை குஜராத் கலவர வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காகவே செய்யப்பட்டன.
வன்சாரா சிறையில் இருந்த போது குஜராத் அரசுக்கு 10 பக்க ராஜினாமா கடிதத்தை அனுப்பி இருந்தார் அந்தக் கடிதத்தில் வன்சாரா, தான் நடத்திய அனைத்து போலி என்கவுண்டர் கொலைகளும் மோடிக்காக நடத்தப்பட்டது என்பதையும், மோடி எப்படி காவல்துறையைத் தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டார் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார். அது மட்டும் அல்லாமல் ‘குஜராத் தலைநகர் காந்திநகரில் செயல்பட்டு வரும் மோடியின் அரசை சபர்மதி மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று வன்சாரா வெளிப்படையாக கோரிக்கை வைத்தார்.
ஆனால் மோடியின் கூலிப்படையான சிபிஐ திட்டமிட்டு வன்சாராவை விடுவிக்கும் நோக்கத்தோடே செயல்பட்டது. இதனால் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வன்சாராவை விடுவித்தது.
மோடிக்காகவும் அமித்ஷாவுக்காகவும் நடத்தப்பட்ட தொடர் கொலைகள் அத்தோடு நிற்கவில்லை. போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அமித்ஷாவை விடுதலை செய்ய நிர்பந்திக்கப்பட்ட நீதிபதி லோயா மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது தீவிரவாத முத்திரை குத்தி தடைவிதித்து பல அப்பாவி இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டது போலத்தான் 2006 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கிலும் நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஏறக்குறைய 37 பேர் கொல்லப்பட்டனர். முதலில் இந்தக் குண்டுவெடிப்பு தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தால் நடத்தப்பட்டது எனக் கூறி அப்பாவி முஸ்லீம்கள் 9 பேர் கைது செய்யப் பட்டனர். ஆனால் இதை நடத்தியது சங்கிக் கும்பலாகும்.
இந்த குண்டுவெடிப்பு மட்டுமல்லாமல் 2007 ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, ஆஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு போன்றவையும் காவிக்கூட்டத்தால் திட்டமிட்டே நடத்தப்பட்டவைதான். இதை மோடி அரசால் விடுதலை செய்யப்பட்ட ஆசிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்திலேயே ஒப்புக் கொண்டிருக்கின்றார்.
மேலும் இந்தக் குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டது என்பதை கேரவன் ஆங்கில இதழுக்கு அளித்த தன்னுடைய பேட்டியில் ஆசிமானந்தா கூறியிருக்கின்றார். மோகன் பகவத் தன்னை சந்தித்து, “நீங்கள் இதைச் செய்தால் நாங்கள் சற்று இளைப்பாறுவோம். எந்தத் தவறும் அதன் பின் நடக்காது. அது கிரிமினல் வழக்காக மாறாது. இதை நீங்கள் செய்தால் அதன்பின் ஒரு குற்றத்திற்காகவே நாம் இந்தக் குற்றத்தைச் செய்தோம் என்று மக்கள் கூற மாட்டார்கள். இது நமது தத்துவத்தோடு இணைக்கப்பட்டது. இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. தயவு செய்து இதைச் செய்யுங்கள். உங்களுக்கு எங்கள் ஆசீர் வாதங்கள் உண்டு” என்று தன்னிடம் கூறியதாக ஆசிமானந்தா தெரிவித்தார்.
இவ்வளவு சமூகவிரோத தீய சக்திகளான சங்கிக்கும்பல்தான் இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்கள். குண்டுவெடிப்புகளையும் போலி என்கவுண்டர்களையும் மட்டுமா செய்தது சங்கிக் கும்பல்?
கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கவுரி லங்கேஷ், கல்புர்கி என சமூகத்திற்காக தன்வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட எழுத்தாளர்களையும் கொன்றார்கள். ஆர்எஸ்எஸ் கும்பல் பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா, விஷ்வ இந்து பரிசத் என பல பெயர்களில் நாடுமுழுக்க பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
ஆனால் அவை எல்லாம் தீவிரவாத செயல்களாக கருதப்படாததோடு இந்து மதத்திற்கு செய்யும் புனிதப் பணியாகப் பார்க்கப்படுகின்றது. அதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மோடி அரசால் விடுதலையும் செய்யப்படுகின்றார்கள். இன்னொரு பக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற ஜனநாயக ரீதியாக இஸ்லாமிய மக்களுக்காகப் போராடும் அமைப்புகள் திட்டமிட்டு ஒடுக்கப்படுகின்றன.
எப்படி பாபர் மசூதி இடிப்பும், குஜராத் கலவரமும் பல இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாத சிந்தனையை நோக்கித் தள்ளியதோ, அதே போல இன்று திட்டமிட்டு இஸ்லாமிய அமைப்புகள் மீதான மோடி அரசின் அடக்கு முறைகளும் மனித உரிமை மீறல்களும் மீண்டும் அதற்கான வாய்ப்பை உருவாக்கத்தான் போகின்றது. சங்கிக்கும்பலின் நோக்கமும் அதுதான்.
- செ.கார்கி