தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆட்சியே போனாலும், சனாதன எதிர்ப்பை கைவிட மாட்டோம், திராவிட இயக்கம் தோன்றியதே சனாதன எதிர்ப்புக்காகத்தான் என்று உறுதியுடன் அறிவித்து விட்டார். இந்த கொள்கை உறுதியை நாம் பாராட்டி வரவேற்கிறோம். தேர்தல் வாக்கு வங்கி அரசியல் என்று வந்துவிட்டால், பல நேரங்களில் கொள்கைகளை பின்வாங்கச் செய்துவிடும். இதுதான் பொதுவான தமிழகத்தின் அரசியல், ஆனால் உதயநிதி என்ற இளைஞர் அதில் மாறுபட்டு தனது கொள்கை அடையாளத்தைப் பற்றி நிற்பது அரசியலில் ஓர் அதிசயம் என்றே கூறுவோம்.

பத்திரிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் பண்பும், பாங்கும் கூட மிகவும் மாறுபட்டதாகவே இருக்கிறது. போகிறப் போக்கில் ஊதித்தள்ளிவிடுகிறார்.

இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் சூட்டிய மோடியின் முயற்சி குறித்த கேள்விக்கு ‘9 ஆண்டுகளில் இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்றார் மோடி, இதோ மாற்றிவிட்டார்’ என்று பதிலளிக்கிறார். தனது தலைக்கு 5 கோடி விலை நிர்ணியிக்கும் துறவி முற்றும் துறந்த சாமியாரா? அல்லது போலிச் சாமியாரா? சாமியாருக்கு இவ்வளவு கோடி பணம் எப்படி வந்தது என்று திருப்பிக் கேட்டார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதியை மட்டும் குறிவைத்து சங்கிகள் அரசியல் காரணங்களுக்காக சனாதன ஒழிப்பு என்று அவர் பேசியதை, இந்துக்களை படுகொலை செய்யச் சொன்னதாக திரித்துப் பேசுகிறார்கள். நாட்டின் பிரதமரே அமைச்சரவையைக் கூட்டி சனாதனத்தை எதிர்ப்போரை அமைச்சர்கள் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்று மிகவும் தரம்தாழ்ந்து பேசியுள்ளார். அதன் விளைவாக ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் என்பவர் சனாதனத்தை எதிர்ப்பவர்கள் நாக்கை வெட்ட வேண்டும், கண்களை பிடுங்க வேண்டும் என்று ‘மனுசாஸ்திர வழியில்’ பேசியிருக்கிறார்.

சனாதன வாழ்க்கை முறை என்பது பட்டாக்கத்திகளுடன் திரியும் வன்முறை வாழ்க்கை முறை தான் என்று அமைச்சர் இந்த பேச்சு மூலம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோயிலுக்குள் தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்த நந்தனை சிவபெருமான் உள்ளே அழைக்காமல் நந்தியை விலகச் சொல்லி தரிசனம் செய்தது தான் சனாதனப் பெருமை என்று தீண்டாமைப் பெருமை பேசுகிறார். சதி என்பது பெண்கள் கற்பை காப்பாற்றிக் கொள்ள பிரிட்டிஷ் படை வந்த போது உருவானது என்றும், அதற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பில்லை என்றும் அண்ணாமலை கூறுகிறார். சதியை ஒழித்துக்கட்ட சட்டம் கொண்டுவந்ததே பிரிட்டிஷ் ஆட்சி தான். 1828ல் வில்லியம் பெண்டிங் சதியை ஒழித்து ஆணை பிறப்பித்தார். அப்போது சதி எனும் இந்து சனாதன பண்பாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி தலையிடக்கூடாது என்று வழக்கு போட்டு லண்டன் பிரிவி கவுன்சில் வரை கொண்டு சென்றதே ரதா கந்தா தேவ் என்ற பார்ப்பனர் தான். ராஜாராம் மோகன் ராய் பிரிவி கவுன்சிலில் எதிர் மனு போட்டு வழக்காடினார் என்பது வரலாறு.

உதயநிதி ஸ்டாலின் உரை இத்தகைய ’வெட்டுக்குத்து’ அமைச்சர்களையும், வரலாறு தெரியாத அண்ணாமலைகளையும், கீழ்த்தர அரசியல் நடத்தும் மோடிகளையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி இருக்கிறது. அதற்காகவே உதயநிதியை பாராட்ட வேண்டும்.

இத்தகைய கொள்கை உறுதி கொண்ட துடிப்பும், செயலாற்றலுமிக்க தலைமை திமுகவுக்கு கிடைத்திருப்பது திராவிடத்தின் வெற்றியையும் சனாதனத்தின் வீழ்ச்சியையும் விரைவுபடுத்தி இருக்கிறது என்பதாகவே நாம் கருதுகிறோம். உதயநிதியின் இலட்சியப் பயணம் தொடரட்டும், கோடானு கோடி இளைஞர்கள் அதில் இணைந்து நிற்க தயாராக இருக்கிறார்கள்.

கொலைகார சாமியாரை கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

சென்னை : “டெங்கு, மலேரியா, காலரா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி நிர்ணயித்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்க கோரி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் இராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சனாதன சக்திகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது, சனாதனத்திற்கு எதிரான கருத்தில் உறுதியாக நிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் துணை நிற்கும் என்று கூறினார்.

கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் காட்டூர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழக அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் திண்டுக்கல் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

திருப்பூர் : 06.09.2023 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத் தலைவர் முகில் இராசு, தோழமை அமைப்புத் தோழர்கள் ஆகியோர் மாநகரக் காவல் துறையினர் இடத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

சேலம் : தாரமங்கலம் ஒன்றியக் கழகம் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைக்கு 10 கோடி என கொலை மிரட்டல் விடுத்த உத்திரபிரதேச சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சார்யாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 09.09.2023 சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கே.ஆர்.தோப்பூர். அஜித்குமார் தலைமை வகித்தார்.

சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கு.சூரியகுமார், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் பொ. கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சி. தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.ஆர்.தோப்பூர் கண்ணன் தொடக்கவுரையாற்றினர்.

தலைமைக்குழு உறுப்பினர் அ.சக்திவேல், தலைமைக்குழு உறுப் பினர் காவை ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் மாவட்ட அமைப்பாளர் பாலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவா, விசிக கொளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சேட்டு குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சேலம் மாவட்ட துணை தலைவர் சந்தோஷ்குமார், ஆத்தூர் மகேந்திரன், இளம்பிள்ளை கோ.திவ்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன் அவர்களுக்கு பரம்ஹன்ஸ ஆச்சார்யா வேட மணிந்து கைவிலங்கு போட்டு செருப்பு மாலை அணிவிக்கபட்டு, தோழர்கள் சாமியார் பாரம்ஹன்ஸ ஆச்சார்யா வின் படத்தை கிழித்தும், தீயிட்டு கொளுத்தியும் எதிர்ப்பை பதிவு செய்தனர். நிறைவாக குடந்தை பாலன் நன்றி கூறினார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It