தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார் அலகாபாத் பாகம்பரி மடத்தின் தலைவர் 'நரேந்திர கிரி'. அவர் சாதரண மகான் அல்ல அரசியல் தலைவர்களுக்கெல்லாம் ஆசி வழங்கியவர். பிரதமர் நரேந்திர மோடியே இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். உ.பி முதல்வர் ஆதித்யநாத் நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார். தனது சீடர்கள் மூன்று பேரை குறிப்பிட்டு அவர்கள் தந்த குடைச்சலால் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன் என்று, நரேந்திர கிரி எழுதிய கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

பல கோடி ரூபாய் சொத்துக்களை கொண்டது அவரது மடம். சில பாஜக புள்ளிகள் ஆட்டையப் போட நினைத்ததாலேயே மகான் இந்த முடிவுக்கு வந்து விட்டார் என்று குற்றம் சாட்டுகிறது சமாஜ்வாடி கட்சி. கைது செய்யப்பட்ட மூன்று சீடர்களும், 'இது தற்கொலை அல்ல மரணத்தில் மர்மம் இருக்கிறது மாநில காவல்துறை விசாரிக்கக் கூடாது, உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

சொத்துப் பிரச்சனை மட்டுமல்ல பெண் பிரச்சனையும் இதில் வருகிறது. தன்னை, ஒரு பெண்ணின் படத்துடன் மார்ஃபிங் செய்து இணைத்து அதை வெளியிடப் போவதாக தனது சீடர்கள் மிரட்டியதாகவும் அப்படி ஒரு அவமானத்தை தாங்கிக் கொண்டு தான் உயிருடன் இருக்க முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் மகான் எழுதி வைத்த தற்கொலை கடிதம் கூறுகிறது. சரி பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் போலி என்றால் அதை அறிவியல் சோதனையில் கண்டுபிடித்து விடலாமே? எதற்காக மகான் தூக்கில் தொங்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் கேட்கிறார்கள்.

வாழ்க்கைப் பிரச்சனை, அரசியல் நெருக்கடி, மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்களுக்காக சராசரி மனிதர்கள் நரேந்திர கிரியை நாடி வரும் நிலையில் மகானோ இதே பிரச்சனையில் தானும் சிக்கி தவித்துக் கொண்டிருந்திருக்கிறார். அனைத்தையும் துறந்து ஆன்மீகத்தின் உச்ச நிலைக்கு போக வேண்டிய மகான்கள் சராசரி மனிதர்களின் பிரச்சனைகளுக்குள்ளேயே உருண்டு கொண்டிருக்கிறார்களே இது தான் ஆன்மீகமா?

தான் நம்பும் இறைவன் தனது நியாயத்தின் பக்கம் நிற்பான் என்று மகானே நம்பவில்லையா? தவறு செய்த சீடர்களை, தான் நம்பும் இறைவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கையும் அவருக்கு இல்லையா? நீதி மன்றம் தான் இவர்களை தண்டிக்க வேண்டுமென்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்க வேண்டுமா? ஆக மகான்களே இறைவனை நம்பவுமில்லை ஆன்மீக வாழ்க்கையை வாழவும் இல்லை என்பதே நரேந்திர கிரி நாட்டு மக்களுக்கு தனது தற்கொலை வழியாக எடுத்து சொல்லியிருக்கிற செய்தி என்று நாம் நம்புவோமாக. கடவுளை புண்படுத்துகிறார்கள், மதத்தை புண்படுத்துகிறார்கள், ஆன்மீகத்தை இழிவுபடுத்துகிறார்கள் என்று கூச்சல் போடுவோருக்கு ஒரு கேள்வி - மகான்களுக்கெல்லாம் தலைவரான மகான் நரேந்திர கிரியை இவற்றையெல்லாம் நம்பாமல் தூக்குக் கயிற்றையும், தற்கொலை கடிதத்தையும் நீதிமன்ற தண்டனையையும் நம்பியிருக்கிறாரே இதற்கு என்ன பதிலை சொல்லப் போகிறீர்கள்?

- விடுதலை இராசேந்திரன்

Pin It