தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் 2.9.2023 அன்று சென்னையில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடத்தியது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்நாட்டு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதும், தமிழ் நாட்டு அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கலந்து கொண்டதும் 06.09.2023 அன்று தி.க.நடத்திய விசுவகர்மா திட்டத்தின் கண்டன நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா சனாதனம் குறித்து வெளியிட்ட கருத்துகளும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 226ஆவது பிரிவின்படி அவர்கள் அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பின ராகவும் பதவி வகிக்க தகுதியற்றவர்கள்; அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கிஸ்ரோர்குமார், வி.வி. செயக்குமார், டி. மனோகர் ஆகிய மூவர் தனித்தனியே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர்கள் டி.வி.இராமானுசம், ஜி.இராச கோபாலன், ஜி.கார்த்திகேயன் ஆகியோரும் எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி. வில்சன், என்.ஜோதி, ஆர்.விடுதலை, ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோரும் வழக்காடினர்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “’சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானது. சனாதனம் என்பது நால்வருணப் பாகுபாட்டை உருவாக்கி அதை இந்தச் சமூகத்தில் நிலைநிறுத்தி மனித சமத்துவத்திற்கு எதிராக உள்ளது. சமூகத்தில் மேல்-கீழ் ஏற்றத்தாழ்வை மேல்சாதி-கீழ்சாதியை நிலைநிறுத்தி வருகின்றது. குழந்தைத் திருமணம், விதவைத் திருமணம் மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடிய பழக்கவழக்கங்களை இந்த நாட்டில் நிலைநிறுத்தி வந்துள்ளது.

எனவே தொற்று நோய்களை உருவாக்கக் கூடிய மலேரியா, டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும், கொரோனாவுக்குக் காரணமான நோய்க்கிருமிகளை ஒழிப்பது போல சனாதன தருமத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தைக் கடைபிடிக்கும் மக்களை இனப்படுகொலைச் செய்ய வேண்டும் என்று கூறியதாக பா.ச.க.வினர் சமூக ஊடகங்களில் பொய்ப் பரப்புரைச் செய்தனர்.

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால் அவர் மாநாட்டில் சொற்பொழிவு ஆற்றவில்லை; இருந்த போதிலும் கலந்து கொண்டதே தவறு என்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தனர்.

இதையொட்டி 6.9.2023 பெரியார் திடலில் நடைபெற்ற விசுவகர்ம யோஜனா கண்டன நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா,

“சனாதனமும் விசுவகர்மா திட்டமும் வேறு வேறானவை அல்ல. தலைமை அமைச்சர் சனாதனத்தை கடைப்பிடிப்ப தாகச் சொல்கிறார். அவர் அதை பின்பற்றுவதாக இருந்தால் உலகம் முழுவதும் சுற்றிவரக் கூடாது. சனாதனப்படி இந்து என்பவர் கடல் தாண்டிச் செல்லக்கூடாது. ஆனால் உலகம் சுற்றிவரும் பிரதமர் சனாதனத்தைக் காப்பேன் என்று கூறுவது அயோக்கியத் தனமானது. அமைச்சர்களை அழைத்து சனாதனத்தைப் பரப்பும்படி கூறியுள்ளார். நான் தலைமை அமைச்சருக்கும் அமித்சாவுக்கும் நேற்று புதுவையில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் சவால் விட்டேன்.

நீங்கள் நால்வருணத்தைப் பற்றியும், சனாதனத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கருத்துப் பரிமாற்றத்துக்கு நான் தயார். மோடி அவர்களும் அமித்சா அவர்களும் தில்லியில் பத்து இலட்சம் (அ) ஒரு கோடிப் பேரை திரட்டினாலும் உங்கள் சங்காரச்சாரியார் முன்னிலை யில் நான் வாதிடத் தயார். நீங்கள் உங்களுடைய ஆயுதங் களான வில், அம்பு, கத்தி போன்ற எல்லாவற்றையும் பத்திர மாக வைத்திருங்கள். நான் பெரியார், அம்பேத்கர் நூல்களை மட்டுமே கொண்டு வருகிறேன். தில்லியில் திறந்தவெளியில் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம். பிரதமர் மகா விஸ்வகுரு, ஜகத்குருவின் கருத்துப்படி நான் பஞ்சமர் வகுப்பைச் சேர்ந்த சூத்திரன், உதயநிதி பேச்சு மிகவும் மென்மையானது. என்னுடைய பேச்சு அழுத்தமாக இருக்கும். உங்களில் யார் வேண்டுமானாலும் சனாதனம் குறித்து என்னிடம் வாதிடலாம். தில்லியில் எந்த இடத்திலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உங்களை விவாதத்தில் சந்திக்கத் தயாராக உள்ளேன்” என்று அறைகூவல் விடுத்தார்.

உதயநிதி, சேகர் பாபு, ஆ.இராசா ஆகியோர் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்குரைஞர் வில்சன் தன்னுடைய வாதத்தில் காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் 1902ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Sanatana Dharma - An Elementary Text Book of Hindu
Religion and Ethics’ என்ற சனாதன தர்ம நூலிலிருந்து பல பக்கங்களைப் படித்துக் காட்டி சனாதன தருமம் என்பது ஆரியர்களுக்காக எழுதப்பட்ட மநு சட்டமாகும் என்று விளக்கிக் கூறினார்.

அந்நூலின் இயல் 7இல் நால்வருண அமைப்பு முறை ரிக் வேதத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

“பிராமணர்கள் முகத்திலும், சத்திரியர்கள் தோள்களிலும், வைசியர்கள் தொடையிலும், சூத்திரர்கள் கால் பாதத்திலும் பிறந்தார்கள்” என்பதை எடுத்துக்காட்டிச் சாதி அமைப்பு முறை உருவாக்கம் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் அமைந்தது. பல நூற்றாண்டுகளாக மேல் சாதியினரால் கீழ்சாதி மக்கள் ஒடுக்கப்பட்டு வந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை யின்படி ‘திராவிட சிந்தனைப் பள்ளி’ கொள்கைப்படி நூறாண்டுகளாக பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் மக்களிடையே சமத்தவத்தை உருவாக்க சனாதன தருமத்திற்கு எதிராகப் பேசி வந்தனர். ஏனென்றால் சனாதனம் தான் ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்படுத்தி ஒடுக்கப் பட்ட வகுப்பினரைத் தாழ்த்தி வைத்திருந்தது என்று எதிர் வழக்காடினார். வழக்குரைஞர் ஜோதி, வழக்குரைஞர் விடுதலை ஆகியோர், சனாதனத்துக்கும் நால்வருணத் திற்கும் உள்ள தொடர்பை மநுநீதியிலிருந்து மேற்கோள் காட்டி வழக்காடினர்.

பொதுவாக நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வாதங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். இந்த வழக்கில் வழக்குரைஞர்களில் வாதங்களை ஏற்றுக் கொள்ளாமல், நீதிபதி அனிதா சுமந்த், குப்புசாமி சாஸ்திரி பவுண்டேசன் கொடுத்துள்ள விளக்கவுரையை ஏற்றுக் கொண்டு சனாதனம் என்பது இந்து வாழ்வியல் நெறி (Hindu Way of Life) என்றும், நால்வருணத்திற்கும் இன்றைய சாதி அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இன்றைக்கு இருக்கிற சாதி அமைப்பு தோன்றி ஒரு நூறாண்டு காலம் தான் ஆகிறது என்றும் உண்மைக்கு மாறாகத் தன்னுடைய கருத்தை 6.3.2024 அன்றைய தீர்ப்பில் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு 370 பதிவு செய்யப்பட்ட சாதிப் பட்டியல்களைக் கொண்டு இடஒதுக்கீடு கொடுத்து வருகிறது. இந்தப் போட்டியின் காரணமாகவே ஒரு சாதி இன்னொரு சாதியின்மீது பொறாமை கொள்கிற காரணத்தினால் சாதிச் சண்டைகள் உருவாகின்றன என்று கூறியுள்ளார். தீர்ப்பில் சில திருத்தங்களைச் செய்து அடுத்த நாள் வெளியிட்ட பதிவில் 184 சாதிகள் பட்டியலைத் தமிழ்நாடு வைத்திருக்கிறது என்று எழுதியுள்ளார்.

வருணாசிரம தருமம் காரணமாகத்தான் சமூகம் சாதிய அமைப்புகளாக மேல்கீழ் என்று இருப்பதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் பிரிவினைவாதம் பேசுகிறீர்கள். குறிப்பிட்ட சாதியை இழித்துப் பேசுகிறீர்கள் என்று நீதிபதியே ஒரு சனாதனியாக இருந்து தீர்ப்பு வழங்கி உள்ளார். அரசு வேலைகளில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதால் சாதிகளிடையே பொறாமை உணர்வு ஏற்பட்டு சாதிச் சண்டைகள் ஏற்படுவதாக தன்னுடைய சனாதன கருத்தைத் தீர்ப்பில் வெளியிட்டுள்ளார். எனினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படாதவர்கள் என்பதால் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய இயலாது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்குக் கண்டனம் தெரிவித்து உத்திரப்பிரதேசம், மகாராட்டிரா, ஜம்மு-காஷ்மீர், பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளை ஒன்றாக இணைக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா அமர்வில் இந்த மனு 4.3.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “நீங்கள் சாதாரண நபர் அல்ல, மாநில அமைச்சர். சனாதனம் குறித்து உங்களது பேச்சு எந்த அளவுக்குத் தாக்கத்தையும், பின்விளைவையும் ஏற்படுத்தும் என்பதை தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறினர்.

உதயநிதி ஸ்டாலின் தரப்பில் நேர் நின்ற மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி கருத்துச் சுதந்திரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் அர்னாப் கோஸ்வாமி, முகமது ஹுபைர், நுபுர் சர்மா ஆகியோரது வழக்குகளை உச்சநீதிமன்றம் ஒரே வழக்காக விசாரித்ததைச் சுட்டிக்காட்டி அதேபோல இதையும் ஒரே வழக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்பிறகு இவ் வழக்கை மார்ச் மாதம் 15ஆம் நாளுக்கு ஒத்தி வைத்தனர். இப்போது ஏப்ரல் 01 அன்று மீண்டும் இவ்வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன்பே நீதிபதிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுவது அவர்களும் சனாதனிகளாகவே உள்ளனர் என்பதையே காட்டுகின்றது. பாரதிய சனதா கட்சி ஆட்சியில் பெரும்பாலான நீதிபதிகள் சனாதனிகளாகவே உள்ளனர் என்பது சனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரையும் கவலை கொள்ளச் செய்கிறது.

- வாலாசா வல்லவன்

Pin It