காலங்காலமாக மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை அப்பாவி ஏழைகளுக்கும், உழைக்கும் வர்க்கத்தினருக்கும் பொருளாதார இழப்பையும், உயிரிழப்பையும் கொண்டுவந்து சேர்த்து வருகிறது. நாகரிகம் வளர்ச்சி அடைந்த 21ம் நூற்றாண்டிலும் மக்கள் மூடநம்பிக்கைக்கு பலியாகிக் கொண்டுதான் இருக்கின்றனர். குறிப்பாக வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ மதவெறி அமைப்பு பரப்பி வரும் இந்து மதவெறியை பயன்படுத்திக் கொண்டு உருவாகும் சாமியார்களும், பாபாக்களும் இத்தகைய துயர சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர்.
அந்த வரிசையில் தற்போது பாஜக ஆளும் மாநிலமாகிய உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஜூலை 2, 2024, அன்று ‘சாகர் விஸ்வ ஹரி போலே பாபா’ என்று அழைக்கப்படும் சுரஜ் பால் என்கிற இந்துத்துவ சாமியாரின் உரையை கேட்கக் கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் மூச்சு முட்டியும், மிதிபட்டும் இறந்து போனார்கள். இந்த சாமியாரின் காலடி மண்ணை எடுத்து சென்று வீட்டில் வைத்தால் நல்லது நடக்கும் என்று நம்பிய மக்களின் மூடநம்பிக்கை அவர்களின் உயிரைக் குடித்துள்ளது.சத்சங் என்று அழைக்கப்படும் பஜனை கூட்டத்திற்கு தயாரான மைதானத்தின் உள்ளே மட்டுமே 80,000 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மொத்தமாக ஏறத்தாழ 2,50,000 பேர் சாமியாரைப் பார்க்க வந்திருந்தனர். சேறும் சகதியும் நிறைந்து, வழுக்கும் தன்மையில் இருந்த பகுதியில் இவ்வளவு பெரிய கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் உத்திரப் பிரதேசக் காவல்துறை அனுமதி அளித்திருந்தது.
சாமியார் பஜனை கூட்டத்தில் இருந்து கிளம்பி வந்து வாகனத்தில் புறப்பட்டதும் அவரது காலை தொடவும், காலடி மண்ணை எடுக்கவும் கூட்டம் நெரிக்கத் தொடங்கியுள்ளது. வழுக்கும் சேற்றுப் பகுதியில் நெரிந்த கூட்டத்தால் தவறிவிழுந்தும், மூச்சு முட்டியும் இந்த பெரும் அவலம் நடந்துள்ளது.
இறந்து போன 121 பேரில் 112 பேர் பெண்களே. மீதமுள்ளவர்களில் 7 குழந்தைகளும் அடங்கும்.இந்தியாவின் பல அறிஞர்கள் இது போன்ற மதநிகழ்வுகளில் ஏற்படும் கூட்ட நெரிச்சல் குறித்து பின்வருமாறு தெரிவிக்கின்றனர்.
“இந்தியாவில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு இதுபோன்ற நெரிசல் சம்பவங்களை சமாளிக்கும் அளவிற்கு ஆட்களை கொண்டதாக இல்லை. இது போன்ற மத நிகழ்வுகளில் ஏற்படும் அதீத கூட்ட நெரிசல் சம்பவங்களை பார்க்கும்போது நிர்வாகத்தின் தயாரிப்பின்மை, திட்டமிடுதல் மற்றும் ஒழுங்குபடுத்துதலில் உள்ள குறைபாடுகள், அரங்கம் மற்றும் பொருளாதார போதாமைகள் மற்றும் இது போன்ற மத நிகழ்வுகளை நடத்திட வேண்டிய சமூக-மத நெருக்கடிகள் ஆகிய குறைபாடுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.”
“இந்தியாவில் தனியார் மத நிறுவனங்கள் இது போன்ற கூட்டங்களை நடத்தும் வல்லமையும், தயாரிப்பு மேலாண்மையும் இல்லாமல் இருந்தாலும் தொடர்ச்சியாக கண்மூடித்தனமாக அனுமதி கொடுக்கப்படுகின்றன. மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவேண்டிய அல்லது கட்டுப்படுத்த வேண்டிய அரசு நிர்வாகங்களாகிய காவல் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவ உதவி துறை ஆகியவை மத நிகழ்வுகளை பயன்படுத்தி வாக்கு வங்கியை அதிகமாக்கும் நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் தலையீட்டால் பெரும் கூட்டங்களை அனுமதிக்கின்றன.”
உத்திரப் பிரதேசத்தில் இது போன்று நடப்பது முதல் முறையல்ல. கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில் ஏறத்தாழ 10 கோடி பேர் கூடினார்கள். இதில் ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் உத்திரபிரதேசம் குண்டா நகரில் உள்ள கிரிப்பாலு மகராஜ் என்ற சாமியாரின் ஆசிரமத்தில் இருக்கும் ராம் சீதா கோயிலில் சாமியாரின் இறந்துபோன மனைக்காக முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்திய போது இலவச சேலையும், உணவும் தரப்பட்டது. இதற்காக அருகில் இருந்த கிராம மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்கே குவிந்தனர். சரியாக கட்டப்படாமல் இருந்த ஆசிரம நுழைவாயில் இடிந்து விழவே, அதில் சிக்கி சிலர் மாண்டு போனார்கள். அந்த பதட்டத்தில் நெரிசல் அதிகமாகி பலர் உயிரிழக்க நேர்ந்தது. இந்த சம்பவத்தில் 63 பேர் பலியானார்கள். அதில் 37 பேர் குழந்தைகள். மீதம் 26 பேர் பெண்கள் ஆவார்கள்.
இது தவிர 2022ம் ஆண்டு ஜனவரியில் ஜம்மு காஷ்மீர் விஷ்ணுதேவி கோயிலின் குறுகிய பாதை வழியே செல்ல முயன்ற மக்களில் 12 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய பிரதேசத்தில் ரத்தன்கர் கோயிலில் நவராத்திரி கொண்டாட்டத்தில் வந்த கட்டுக்கடங்காத 1,50,000 மக்களின் நெரிசலில் 115 பேர் மாண்டார்கள், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் சாமுண்டகர் கோயிலில் நவராத்திரி கொண்டாட்ட நெரிசலில் 250 பேர் மாண்டனர். 2005ம் ஆண்டு ஜனவரியில் மகாராஷ்டிரா மந்தர்தேவி கோயிலின் படிக்கட்டுகள் வழுக்கியதால் 265 பேருக்கு மேல் இறந்து போனார்கள். 1992ம் ஆண்டு தமிழ்நாட்டில் கும்பகோணம் மகாமகம் நிகழ்வில் நெரிசலில் 50 பேர் இறந்தனர்.
இப்படியாக இந்தியாவின் உச்சி முதல் அடிவரை கடவுள், சாமியார், மூடநம்பிக்கை என்ற காரணங்களால் கோயில்களிலோ அல்லது ஆசிரமங்களிலோ நெரிக்கப்பட்டு இறந்து போகும் மக்களின் எண்ணிக்கை ஏராளம். இது தவிர புனித யாத்திரை என்ற பெயரில் பயணப்பட்டு விபத்து, இயற்கை பேரிடர், உடல்நிலை பாதிப்பு, மிருகங்களின் தாக்குதல் ஆகிய காரணத்தாலும் உயிர்விடும் மக்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாதது. “பிள்ளை வரம் கேட்டு காசிக்கு போய் பொண்டாட்டியை தொலைத்து விடாதே” என்று சொல்வடை உருவாகும் அளவிற்கு மூடநம்பிக்கைகள் மக்கள் மனதில் ஊறிப் போயிருக்கின்றன.
இதில் எல்லா நேரங்களிலும் மரணமடைவது ஏழை மக்களே. அதுவும் 8 லட்சம் சம்பாதிக்கும் EWS ஏழை மக்கள் அல்ல, வறுமைக்கு கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்களே. இந்த ஒன்றியத்தின் அரசுகளால் கைவிடப்பட்ட அப்பாவி உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கை சிரமங்களை போக்கிட வழிதேடி இல்லாத கடவுளின் ஆலயங்களிலும், இவர்களின் உழைப்பைத் திருடி வாழும் சாமியார்களின் ஆசிரமங்களிலும் கால்கடுக்க நின்று கண்ணீர் விடுகின்றனர். ஆனால் அந்த இடங்களோ அவர்களின் உயிரையும் சேர்த்து பறித்துக் கொண்டிருக்கிறது.
மக்களின் மூடத்தனம் என்று மட்டுமே இதை கடந்து விட முடியாது. அரசுகள் அனைத்து மக்கள் விரோதத் திட்டங்களின் மூலம் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, வறுமை உள்ளிட்ட பல இன்னல்களை உருவாக்குகிறது. அந்த மக்கள் தங்களது பிரச்சனைக்கான உண்மையான காரணமான அரசுகளின மீது கோவம் கொண்டு விடக் கூடாது என்பதற்காக, அதனை மடைமாற்ற இதுபோன்ற மதவெறி கூட்டங்களை அரசுகளே திட்டமிட்டு உருவாக்குகிறது. அதன் வெளிப்பாடுதான் 80 ஆயிரம் பேர் கூடுகிற இடத்தில் 2 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கூடுகிறார்கள். ஆக இந்த பிரச்சனைக்கும் அரசுதான் பொறுப்பு.
கடவுள் நம்பிக்கைக்கும் வெறித்தனத்திற்கும் உள்ள இடைவெளியையும் இது காட்டுகிறது. சுமார் பத்து லட்சம் பேர் கூடும் மதுரை அழகர் கோயில் திருவிழாவில் இதுவரை சின்ன சலசலப்பு கூட ஏற்பட்டதில்லை. ஆனால் மதவெறி தாண்டவம் ஆடுகிற இடங்களில் எல்லாம் மக்கள் உயிர்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது பிரச்சனைக்கு தீர்வை தேடி போனவர்கள் தனது வாழ்வையே முடிக்கும் அவல நிலை ஏற்பட்டு விடுகிறது.
“தனிப்பட்ட நபர்களின் நம்பிக்கை எப்போது பொதுவெளிக்கும், பொது சமூகத்திற்கும் சொந்தமாக மாறியதோ அன்றே மனிதன் மனிதனாக இருக்க முடியாத சூழலை உருவாக்கிக் கொண்டான்“ என்ற பெரியாரின் பொன்மொழி, அரசுகளின் ஆதரவால் உருவாகும் போலி மதவாத சாமியார்களால் மக்களிடையே பரப்பப்படுகின்ற மூடத்தனம் மனிதத் தன்மையை கொன்று விடும் தன்மை உடையது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
போலி சாமியார்களிடமிருந்து மக்களை விடுவிக்கும் பரப்புரையை விரிவுபடுத்துவோம். மதவெறி மாய்த்து மனிதநேயத்தை வளர்ப்போம்.
- மே பதினேழு இயக்கம்