தமிழ்நாட்டில் பக்தர்கள் அதிகம் கூடும் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோயில். அதிக வருமானம் வரக்கூடிய கோயிலும் கூட!

இந்தக் கோயிலில் 32 பார்ப்பன அர்ச்சகக் குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் பூஜைகளையும் சடங்குகளையும் நடத்தி வருகின்றன. 32 பார்ப்பன அர்ச்சகர்கள் யார்? அவர்கள் பெயர் என்ன? முகவரி என்ன? என்பது குறித்து தங்களிடம் எந்தப் பதிவேடுகளும் இல்லை என்று கோயில் நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது பதில் அளித்துள்ளது. அருண்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களைக் கேட்டார்.

இந்த 32 அர்ச்சகப் பார்ப்பனர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதற்கான அரசு ஆணைகளும் இல்லை. ஒரு அர்ச்சகர் முதுமை அடைந்து விட்டால் தனது குடும்பத்தின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு அவரே அர்ச்சகர் உரிமை வழங்கி விடுகிறார். அர்ச்சகர் பதவி, பரம்பரை அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் 1971ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் மீதான வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் பழனி கோயிலில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன.

அர்ச்சகர்கள் பக்தர்களிடம் ‘தட்சணை’ (புரோகித இலஞ்சம்) வாங்கலாம் என்று விதி ஏதும் இல்லை. ஆனால் தட்சணை வாங்குகிறார்கள். ‘அபிஷேகம் மற்றும் ஆராதனை’க்காக விற்கப்படும் டிக்கட்டுகள் வழியாக வரும் வருமானத்தையும் இந்த 32 குடும்பங்களும் பங்கு போட்டுக் கொள்கின்றன.

எதற்கெடுத்தாலும் ஆகம விதிகளை மீறக்கூடாது என்று உச்சநீதிமன்றம் போகும் பார்ப்பனர்கள், கோயில் அர்ச்சகர்கள் ‘ஆகம விதிகள்’ வேத சாஸ்திரங்களை அறிந்தவர்கள்தானா என்பதற்கு உரிய தகுதியோ, அதற்கான தேர்வுகளோ சான்றுகளோ தேவையில்லை என்கிறார்கள். ‘பிராமணராக’ இருப்பது மட்டுமே ஒரே தகுதி.

பழனிமுருகன் கோயில் வேத பார்ப்பனர்களைக் கடுமையாக எதிர்த்த சித்தர்களின் கோயில். முருகனின் சிலையை ‘நவபாஷாணங்களை’க் கொண்டு, அதாவது நோய் தீர்க்கும் மூலிகை மற்றும் படிமங்களைக் கொண்டு முருகன் சிலையை உருவாக்கியவர், சித்தர் மரபில் வந்த ‘புலிப்பாணியார்’.

1623ஆம் ஆண்டு திருமலைநாய்க்கர் ஆட்சிக் காலத்தில் தளபதியாக இருந்த ராமப்பைய்யர் என்ற பார்ப்பனர், பழனி கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்தார். அங்கே சித்தர் மரபினர்கள் வழிபாடு நடத்தியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஒரு ‘பிராமணனாகிய’ நான் ‘பிராமணரல்லாத’ சித்தர்களிடமிருந்து விபூதியை வாங்க மாட்டேன் என்று கூறி ஊர் திரும்பி, அவர்களை கோயிலிலிருந்து வெளியேற்றி, சில ‘பிராமண’ புரோகிதர்களை அர்ச்சகர்களாக்கினார். அன்று முதல் சித்தர் கோயில் பார்ப்பனர் கோயிலானது. பழனி கோயிலுக்கான திருத்தல வரலாற்று நூலிலேயே இத்தகவல் பதிவாகியுள்ளது.

மூலிகைகளால் உருவாக்கப்பட்ட முருகன் சிலையை அகற்றி, தங்கத்தாலான முருகன் சிலையை நிறுவ இறந்து போன காஞ்சி மடத்தின் ஜெயேந்திரன் ஏற்பாடுகளை செய்தார். இதற்கு ஜெயலலிதா ஆட்சியும் துணை நின்றது. அப்போதே கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பெரியார் திராவிடர் கழகம், அப்போது சங்கராச்சாரியை எதிர்த்து பழனியிலேயே கண்டனக் கூட்டம் நடத்தியது. கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன் உள்ளிட்ட பலரும் பேசினர். புலிப்பாணியார் மரபில் வந்த பழனி கோயிலுக்குரிய சித்தரும் அதே கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

தங்கத்தால் செய்யப்பட்ட முருகன் சிலையில் 200 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டது. தங்கத்தில் வேறு உலோகங்கள் கலக்கப்பட்டன என்று சென்னை ‘அய்.அய்.டி.’ ஆய்வகத்தில் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டது. இந்த மோசடிகள் குறித்து சிலை திருட்டுகளை தடுக்கும் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைகளை நடத்தி வருகிறது. மோசடிக்கு பழனி கோயில் பார்ப்பன அர்ச்சகர்களும் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ள நிலையில் கோயில் அர்ச்சர்கள் பற்றிய விவரங்களோ பதிவுகளோ கோயில் நிர்வாகத்திடம் இல்லை என்று இப்போது கூறுகிறார்கள். குற்றவாளிகளைத்தப்பவிடுவதே இதன் நோக்கம் என்று சிறப்புக் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

‘ஆகமம்’, ‘ஆச்சாரம், ‘சாஸ்திரம்’ என்று புனிதங்களைப் பேசும் பார்ப்பனர்கள், எத்தகைய நேர்மையானவர்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

Pin It