கீற்றில் தேட...

இலக்கியத்தின் விழுமியங்களுக்குள், யதார்த்தங்கள் வேரூன்றிவிட்டன. வாழ்வியல் தாண்டிய சில கருத்தியலை படைப்புகளில் முன் வைக்கிறபோது கணநேர சிலாகிப்புகளுக்குள் அதன் கற்பனை சுருங்கிப் போகிறது. சிறுகதைக்கும் நாவலுக்குமான வரலாறு என்பது, காலத்தை முன்வைப்பது. 21 ஆம் நூற்றாண்டின் முன்னெடுப்புகளில் ஒன்று மற்றொன்றை வீழ்த்துவதாகக் கருத்தில் கொள்ள இயலாது.

நவீன இலக்கியத்திற்கான எல்லைக்கோடுகளில் இரண்டும் சரிசமமாகவே தன் இருத்தலைக் கொண்டுள்ளன. சமகால நடப்பியலில் பொருள் குறித்த போராட்டத்தோடு இலக்கியத்தையும் உள்வாங்க வேண்டி இருக்கிறது. அதற்கான கால அவகாசத்தில் சிறுகதைகள் தங்களுக்கான அடையாளத்தை ஆழப் பதித்திருக்கின்றன.

எழுபதுகளில், ஏழ்மை, பசி, சாதியக் கட்டமைப்புகள், மதக்கலவரங்கள், உரிமை மீறல்கள், தீண்டாமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்ற சமூகச் சிக்கல்கள் வெடித்துச் சிதறின. இவைகளை, இலக்கி யங்கள் வழி, சாமானிய மக்களுக்கு வெளிப்படுத்தி யதோடு அதைத் தகர்ப்பதற்கான போராட்ட வழிமுறை களையும் படைப்புகள் ஊடாக தீர்வாக்கியவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள்.

அவர்களுள் அதிமுக்கிய ஆளுமையாகத் திகழ்பவர் எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள். புதிய தரிசனங்கள், மறுபக்கம் போன்ற நாவல்களால் படைப்பிலக்கியத்தில் பெரும் புரட்சி செய்து கொண்டிருப்பவர். காமம் செப்பாது (1996) நித்தியமானது (1998)போன்ற அவரது சிறுகதைகளுக்குப் பிறகு, ‘சக்தித் தாண்டவம்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில், மரு.அழகுநீலாவின் நேர்த்தியான தொகுப்புரையோடு கீரனூர் ஜாகிர் ராஜாவின் அணிந்துரையுமாக 18 சிறுகதைகள் அடங்கியுள்ளன.

‘வசக்குதல்’ எனும் முதல் கதை, இன்றைய பள்ளிக்கல்வியின் நிலை குறித்துப் பேசுகிறது. இளங்காளைக் கன்றுகளுக்கு மூக்கணாங்கயிறு மாட்டுகிற கொடுமையையும் பணக்காரப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தரதரவென இழுத்து வந்து பள்ளி வாகனத்தில் ஏற்றிவிடுவதையும் ஒப்புமைப்படுத்தி இருக்கிறார். இயல்பு நிலையில் இருப்பதை மக்கள் தன்வசப்படுத்துவதற்காக வசக்குகிறச் சூழலை வேப்ப மரத்தின் சாட்சியாக ஆசிரியர் வேதனைப்படுகிறார்.

புராணக் கதையில் வரக்கூடிய அகலிகை, தான் அறியாமல் செய்த தவறுக்காக தன் கணவர்  கௌதம முனிவரிடம் கூனிக் குறுகி மன்னிப்புக் கேட்டும், சிலை யாகும் சாபம் பெற்றாள். அந்த நேரம் அகலிகையின் மனம் எத்தனை பாடுபட்டிருக்கும்.

ஒருவேளை கௌதமன் சந்தேகப்படாமல் அகலிகையை ஏற்றிருந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இன்பமாக இருந்திருக்கும் என்ற முற்போக்குக் கேள்விகளின் பதிலாக எழுந்திருக்கிறது ‘மாடப்புறா’. மூன்று கதாபாத்திரங்களும் மூன்று புறாக்களாக இக்கதையில் வலம் வருகின்றன. தந்தைப்பாசத்தை மையப்படுத்தி பெண்ணியத்தை நுண் இழைகளாகப் பாவுகிறார்.

மரணம் வரை, கங்காகக் கனன்று கொண்டிருக்கும் கைவரப்பெறாத முதல் காதலைப் பேசுகிறது ‘ஒட்டு’. 92 வயது செல்லப்பெருமாள் பாட்டா உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். மகள்கள், மகன், பேரக்குழந்தைகள் எல்லாம் ஒவ்வொருவராக கடை வாயில் பால் ஊற்றுகின்றனர். உயிர் இழுத்துக் கொண்டே இருக்கிறது. கடைசியாக குலதெய்வம் காளி கோவிலுக்கு பூசை வைப்பதாகக் கிளம்புகிறார்கள். ஊர் அடங்கிய நேரம். சாதிச் சிக்கலால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் ஊரை விட்டுப்போன 80 வயது லட்சுமி டீச்சர், பெரியவரைப் பார்க்க வருகிறார்.

காதலியின் கைகளைப் பிடித்து பாட்டா முத்தமிடு கிறார்.  டீச்சர் விடைபெறுவதைப் பார்த்துக்கொண்டே இருந்த பெரியவரின் கண்கள் அப்படியே நிலைகுத்தி விடுகின்றன.  “பாவி மவ, இவரு இப்படி கிடக்கிறாருன்னு எப்பிடி அறிஞ்சா? எப்படி இந்த ஊருக்குத் துணிஞ்சி வந்தா? ஆளில்லாத நேரம் பார்த்து எப்பிடி வீட்டுக்குள்ள நுழஞ்சா? பூப்போல அவர் உயிரப் பிடுங்கித் தன் நெஞ்சில செருகிகிட்டு, எப்பிடி வெளியேறினா? அப்போது அண்ணன் கண்ணுல பொங்கி நின்னதே பொலிவு” எனப் பெரியவரின் தங்கையான பஞ்சிப்பழம் பாட்டியின் உருக்கம், காதல் உள்ளுணர்வின் உச்சம்.

விளம்பரப் புகழுக்கு பழகிப்போன ஒருவரின் அரசியல் வாழ்க்கைதான் ‘அரசு’ கதை. அரசு என்பவன் பேருக்கும் பதவிக்கும் அடிமையாகிறான். கிராமத்தில் நடக்கும் சின்னச் சின்ன விசயங்களில் எல்லாம் தலையிட்டு தன்னைப் பெரியஆளாகக் காட்டி போஸ்டர் அடித்துக் கொள்கிறான். அதற்காக ஊரார் கொடுக்கும் அடி உதையையும் வாங்குகிறான். இறுதியில், அடிபட்டதையும் போஸ்டர் அடித்து, அனுதாப அலையில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறுகிறான். அரசியலின் துவக்க நிலையை புடம்போடுகிற எள்ளலான கதை.

சாதி, மதம் எனும் விஷச்செடிகள் வேரூன்றிய காலம். தீண்டாமை எனும் விலங்கு அறுபடவேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி என மதத்தில் புரட்சி செய்தவர்கள் ராமானுஜரும், நாராயண குருவும். இந்த மகான்களை மையப்படுத்தி அமைந் துள்ளன ‘துணிவு’ மற்றும் ‘குரு’ கதைகள்.

‘துணிவு’ கதையில், ராமானுஜரின் குருநாதர், திருக் கோட்டியூர் நம்பி. பதினெட்டு முறை அலையவைத்து, ஒருமாத காலம் உண்ணா நோன்பிற்குப் பிறகு, சொர்க்க வாசலுக்காக, ராமானுஜருக்கு ரகசியமாக நாராயண மந்திரத்தை உபதேசிக்கிறார். இந்த மந்திரத்தை பிறருக்குச் சொன்னால் கடு நரகு அடைவாய் எனவும் எச்சரிக்கிறார். பெரிய நம்பி, திருக்கச்சி நம்பி போன்ற ஆச்சாரியர்களை இழிவுபடுத்தியதால் துறவறம் பூண்டவர் ராமானுஜர். கடவுளின் மீது கொண்டிருக்கும் ஏழை மக்களின் நம்பிக்கையை நினைத்து வேதனை அடைகிறார். ‘என் அழிவில் வழி பிறக்கும் என்றால் உத்தமம். மக்கள் விடுதலைக்கான வழி, மக்கள்

நலமோடு வாழவேண்டும்Õ என்கிற உயர் சிந்தனையில், திருக்கோட்டியூர் கோபுரத்தில் ஏறிநின்று நாராயண மந்திரத்தை உச்சரிக்கப் போவதாகச் சொல்கிறார்.

‘நாரணா, மேலோரும் கீழோரும் தோளோடு தோள் சேர வேண்டாமா? எல்லாச் சாதியினரும் உன் திருவடிவங்களாய் உன் திருமந்திரத்தால்  உன் திரு முன்னர் ஒன்றுபட வேண்டாமா? ஆளுக்கொரு சாதி, சாதிக்கொரு நீதி என்னும் வர்ணச் சதி ஒழிய வேண்டாமா? என் திருமாலே, இழி குலத்தார் எனப் பழித்துச் சொல்லப்படுவோரையெல்லாம் உன் முன்னே

உயர் குலத்தார் ஆக்கிட வல்லமை கொடு! என்ற ராமானுஜரின் மத நல்லிணக்கத் தத்துவத்தை அப்படியே பறைசாற்றுகிற மற்றொரு கதை ‘குரு’. நாராயண குருவும், ‘நீயே பிரம்மம், நீயே கடவுள்’ எனும் வேதச் சிந்தனையை மூலமாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆசிரமம் அமைத்து கல்வி போதித்திருக்கிறார்.

கதைகளுக்கு இறுதியில், ராமானுஜர் மற்றும் நாராயண குரு குறித்த தகவல்கள் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. நமக்காக வாழ்ந்த மனிதர்களை மீட்டெடுப்பது இலக்கியத்தின் பயன் என்றால் இந்தக் கதைகள் அதைச் சிறப்பாகச் செய்திருக்கின்றன.

வாழ்தலின் தொடர் ஓட்டத்தில், தீராத வலி ஒன்று நச்சரித்துக் கொண்டே இருக்கும். சொல்லி முடிக்க முடிக்கத் துவங்குகிற இரணமாக மண்டைக்காடு கலவரம் எழுத்தாளர் மனதில் இருக்க வேண்டும். நாவலோ சிறுகதையோ தன்னியல்பாக அதன் தாக்கம் வந்து விழுகிறது. இருளை விழுங்கியவர்கள், ஒளி தேடியவர்கள், கருணை மறவர் இந்த மூன்று  கதைகளும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடத்து எழுகின்ற மனித நேயத்தைக் காட்டுகிறது.

‘இருளை விழுங்கியவர்கள்’ கதையில், மண்டைக் காடு கலவரத்தால் கிறித்துவ மக்கள் அதிகம் வாழ்கிற பள்ளம் கடற்கரைப் பகுதி முற்றிலுமாக பாதிக்கப் படுகிறது. பக்கத்து ஊர் குறுஞ்சாலியன் விளை. இஸ்லாமியர்கள் பகுதி.  பள்ளம் கடற்கரை மக்களுக்கு உதவக் கூடாதென பள்ளிவாசலில் எதிராளிகள் மிரட்டுகிறார்கள்.

பசியில் துடிக்கும் குழந்தைகளின் கூக்குரலை சகிக்காமல், பாத்திமாபீவியும் மதினாவும் உயிரைப் பணயம் வைத்து இரவு நேரத்தில் அம்மக்களுக்கு அரிசி கொடுக்கிறார்கள். “ஊர்க்கட்டுப்பாட்ட மீறி, இப்படி ரெண்டு பேரும் துணிஞ்சி வந்திருக்கியளே, உங்கள் இந்த இடத்திலேயே வெட்டி கபுர்குழி தோண்டிப் புதைக்கப் போகிறோம்” என அல்லாப்பிச்சையும் மொய்தீன் கண்ணுவும் ஆத்திரப்படுகிறார்கள்.

“ஏன், பள்ளம் ஊரையே பலி கொடுத்துட்டு நம்ம அண்ணந் தம்பி, அக்கா, தங்கச்சிக ஊரூரா அலையலியா? நமக்கும் அப்படியரு விதி வந்தா நாமும் அலையுவோம். அதுக்காக, அடுத்த வீட்டுக்காரன் யூதனா இருந்தாலும் கொடுத்துத் தின்னுன்னுதான நம்ம நபிகள் நாயகம் சொல்லித்தந்தாங்கோ... இங்க அண்டை வீட்டுக்கார பட்டினி கிடக்க, நாம வவுத்த நிரப்புறது என்ன நியாயம்? இப்படிச் செய்யவா படைச்சவன் நமக்குச் சொல்லிக் கொடுத்தான்?” என இரண்டு பெண்களும் வேதனைப்படுகிறார்கள். சாதி மதம் பாராமல் மனித நேயத்தால் கட்டுண்ட நிகழ்வுகள் கதையாக்கப் பட்டுள்ளன.

இதேபோல், ‘ஒளி தேடியவர்கள்’ கதையில், மீட் அய்யர் என்கிற வெள்ளைக்கார பாதிரியாரும் அவர் மனைவி ஜோகன்னாவும் அனைத்து சாதிக் குழந்தை களும் ஒரே இடத்தில் பயில உண்டு உறைவிடப் பள்ளி நடத்துகிறார்கள். குளக்கரை ஓரத்தில், அனாதையான அழுக்கான அடிமைக் குழந்தையைக் கண்டெடுத்து வளர்க்கிறார்கள். இதைப் பொறுக்காமல் பள்ளியில் இருந்த மற்ற குழந்தைகள் ஓடிவிடுகின்றனர். குழந்தை களுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் வந்ததை எண்ணி மீட் அய்யர் புலம்புகிறார்.

வர்ணச் சகதியில் மூழ்கியவர்களை மெல்ல மெல்லதான் கரை சேர்க்க வேண்டும் என முடிவு எடுக்கிறார். அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நிறுவுகிறார். முடிவில், அனைத்து மதத்தினரும் சிகிச்சை மேற் கொள்ளும் திருப்பணியாக அந்த மருத்துவமனை திகழ்கிறது. இன்றைக்கு இருக்கும் நாட்டு நலத் திட்டப் பணிகளுக்கெல்லாம் இத்தகைய சீர்திருத்தங்களே அடிப்படையாக இருந்திருக்கின்றன. நாம் கண்டிராத நல்ல மனிதர்களை இதுபோன்ற கதைகளே ஆவண மாக்குகின்றன. ‘கருணை மறவர்’ என்ற கதையிலும் ரைமெண்ட் என்கிற கதாபாத்திரம்.

மனித நேயத்தின் விஸ்தாரமாக விளங்குகிறார். மீன் வியாபாரம் செய்யும் ரோசம்மா என்ற பெண்ணை ரௌடி ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். ரைமெண்ட், அவனைக் கொன்றுவிட்டு சிறையில் ஏழாண்டு தண்டனை அனுபவிக்கிறார். அத்துடன், கிறித்துவ கடற்கரைப் பகுதியில் திருவிழாவிற்கு வந்த இளைஞனை, நெற்றியில் சந்தனக் குறி இட்டிருந்ததால் இந்து எனப் பழிவாங்க முயற்சிக்கின்றனர். அவனைக் காப்பாற்றி பெண் வேடமிட்டு அவன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.

இந்து, இஸ்லாமியம், கிறித்துவம் எல்லாமும் மனித உறவுகளை அறுக்கின்ற கூர்வாளாக இருக்கக்கூடாது. அன்பும், மனித நேயமும் பின்னிப் பிணைந்த பாலமாக இருந்தால், இப்பிரபஞ்சம் அழகானது என்கிற பேருண்மையை, உண்மைச் சம்பவங்களின் மீதேறி ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

‘வழியனுப்புதல்’ கதை, தாய்க்கும் மகனுக்கும் இடையேயான அபரிமிதமான பாசத்தைப் பேசுகிறது. முதுமையில், இறக்கும் தறுவாயில், ஒரு தாய் தன் மகனுக்கு குழந்தையாகிற நெகிழ்ச்சியை, “தாய் முற்றிக் கனிஞ்சி குழந்தையாகிற உண்மை”, “அப்பா நெஞ்சில பாட்டி குழந்தை மாதிரி ஒடுங்கிக் கிடந்ததப் பார்க்க அதிசயமா இருக்கும்... வயசான தாய் தகப்பன முதியோர் இல்லத்துல கொண்டு விடுகிறாளே... அந்தப் பெரிய உயிருக கடைசி காலத்தில இதுமாதிரி அரவணைப்புக்கு ஏங்கி ஏங்கித்தானே சாகும்...” போன்ற வரிகள் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கின்றன. தன் தாய் இறக்க வில்லை, தன் மகள் வயிற்றில் பேத்தியாய் பிறக்கப் போகிறாள் என்ற நிறைவும் இக்கதையை உணர்வுப் பூர்வமாக்கியிருக்கிறது.

‘கையாட்டிப் பாட்டா’ கதையில், கையாட்டிப் பாட்டா கதாபாத்திரம் தத்ரூபமாக நம் முன்னே நிற்கிறது... ஆறு பேரப்பிள்ளைகளை பாட்டா சுமந்து திரிகிற விதத்தைச் சொல்கிறபோது, “தாய்க்கோழி குஞ்சுகளைக் கூட்டிக்கிட்டுத் திரியிறது போல, எங்களைக் கூட்டிக்கிட்டு அலைவார். பகல் நேரத்தில் எங்களத் தோட்டக்காட்டுக்கு அழைச்சிட்டுப் போவார்.

எங்களுக்குத் தெரியாத பலவிதமான பறவைகளைக் காட்டுவார். செம்போத்தைப் பார்த்துட்டா போதும், உஸ்ஸ்ன்னு தன் வாயில் விரலை வச்சி எங்களை அடக்குவார். அவரோட கைகூட ஒருகணம் ஆட்டத்தை நிறுத்திவிட்டது போலத் தோணும்.” குழந்தைகளோடு பாட்டா வெடித்துச் சிரித்து விளையாடுவதும், தேரி மணற் குன்றிலிருந்து உருண்டு இறங்குவதும், உலகத்தை ரசித்துக் கொண்டாடுவதும் சொல்லாடல் வழி, கண்முன் காட்சியாய் விரிகிறது. பாட்டாவின் இறப்பை மனம் ஏற்றுக் கொள்ளாமல் நாடகமெனச் சிரிப்பது, தாத்தாவுக்கும் பேரனுக்குமான அளவுகடந்த பாசத்தின் வெளிப்பாடு.

‘ஆதித்தாய்’ நம் மண்ணின் உயர்வைச் சொல்லுகிற கதை. இலைகளும் வேர்களும் வித்துக்களும் மருந்தாகிற மண்ணில் பிறந்தவர்கள் நாம். ஆனால், தாயை இழந்த அனாதைகள் போல் ஆதிகுடிகளின் சாரம் இழந்து மண்ணை மலடாக்கி விட்டோம். இந்தத் தகிப்பை ஒரு நிகழ்வாய், உணர்வாய் நம் மனதில் ஆசிரியர் பதிய வைத்திருக்கிறார். “நீங்க பழங்காலத்து மனுஷர் வவுத்துல இருந்து பிறக்கல்ல.

ஆகாயத்தப் பொத்துக்கிட்டுக் குதிச்சிட்டிய. ஏடீ, நம்ம முன்னோர்க்க லெச்சங் கோடி வருசமா இந்த மண்ணையுந் தண்ணியையும் மருந்தாத் தின்னுதானே இன்னுவர சீவிச்சி வந்துருக்காக. பணம் பெருத்துப் போச்சி... திமிரெடுத்து நிக்கிறிய.!”

“நாம புத்தகம் படிச்சா மட்டும் போதாது. நம்ம மண்ணையும் மரபையும் படிக்கணும்... நம்ம மண்ணு என்கிறது நம்ம ஆதித்தாய்” என்ற பெரியம்மையின் குரல் என்றும் மறுப்பதற்கில்லை.

சைவத்தில் தன்னை கரைத்துக்கொண்ட ராம லிங்கம், வாழ்க்கையில் இறை எளிமையை கடை பிடிக்காமல் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கிறார். அவரைத் திருத்துவதற்கான முயற்சியில் இறங்குவதை ‘பூக்கள் சிரித்தன’ கதையும், பணக்கார வாழ்க்கைக்காக ஊழல் செய்து ஏமாற்றும் துளசிதாசனின் படோபகரமான பேச்சுக்களை துளியும் மதிக்காத ராமலிங்கத்தின் எதார்த்தத்தை ‘மதிப்பீடுகள்’ கதையும், வைக்கோல் போரை வைத்துக்கொண்டு, ஏழ்மையை வெளிக் காட்டாமல் சமாளிக்கும் அண்ணாவியின் நிலையை ‘வைக்கோல் போரும் கிழவரும்’ கதையும், அரசாங்கத்தை நம்பி வாழும் ஏழை மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசு இயந்திரங்களின் அலட்சியத்தை உப்பு சாரம் இழந்தால்...? கதையும் எடுத்தியம்புகின்றன.

நினைவுகளில் மனம் சட்டெனத் துளிர்ப்பதுபோல், சபாபதிக்கு ஆராயியின் நினைவு வருகிறது. சாரணர் பயிற்சி மாணவனாக சபாபதி, கருவேலக்காட்டில் குடிக்கத் தண்ணீர் இன்றி தவிக்கிறான். அடைக்கலம் கொடுப் பதற்காகத் தாயின் அனுமதி கேட்க ஆராயி தவிப்போடு வீட்டிற்கு ஓடுகிறாள். அவள் வருவதற்குள் சாரணர் வாகனத்தில் சபாபதி கிளம்பிவிடுகிறான். சபாபதிக்கு இப்ப வயசு 75. “ஆராயி ..இப்ப நீ எப்படி இருப்ப, என்னய இப்பவும் தேடுவியா?” ‘ஆராயி’ அன்புத் தேடலின் மெல்லிய சரடு.

‘சக்தித் தாண்டவம்’... தொடக்கம் முதல் முடிவு வரை பெண்களின் உரிமைக்காகக் கங்கணம் கட்டி நிற்கிறது. பெண் சுதந்திரம் என்பது கொடுப்பதல்ல. எடுத்துக் கொள்வது என்பதை சிவன், சக்தி கடவுள்களின் தாண்டவம் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சக்தியா... சிவனா... யார் உயர்ந்தவர்கள் என்கிற போட்டி எழுகிறது. சிகரங்கள் பொடியாக, நட்சத்திரங்கள் உதிர, கைலாயம் நிலைகுலையும் அளவிற்கு அய்யன் உருத்ர தாண்டவம் புரிகிறார். அவருக்கு இணையாக சக்தியும் நவீன ஆடை அணிந்து சுற்றிச் சுழன்று ஆடுகிறார்.

வலதுகால் விரலிடுக்கில் இருந்த ரோஜா மலரைக் கூந்தலில் சூடிக் குஞ்சத்தைத் திருத்துகிறார். “நான் ஆடவன், எங்கும் போவேன்! அது என் விருப்பம்! நீ பெண், கணவனுக்குக் கட்டுப்பட்டவள். அவன் அனுமதி பெற்றுத்தான் வெளியே போக வேண்டும்... அதுமட்டுமல்ல, உன் ஆடை மாறியிருக்கிறது! அலங்காரம் மாறியிருக்கிறது! நம் பண்பாட்டை அழிக்கிறாய் நீ!” என்ற ஆணாதிக்கச் சிந்தனையை மறுத்து, “எங்கே சமத்துவம் மலர்கிறதோ அங்கேதான் காதல் மலரும்”...

போட்டி நல்லது / அடிமைப் படுத்துதல் அருவருப்பானது/ வா/ மீண்டும் நாம் சங்கமிப்போம்/ உன்னில் பாதியாக அல்ல/ நீயும் நானுமான/ இரு முழுமைகளாக... என்ற சக்தியின் பெண்ணியப் புரிதலும், ஒரு இனத்தின் குரலாக ஒலிக்கிறது. புதுமைக்கு ஆட்படுத்திக் கொள்வதினும் முரணான பழைய தர்க்கங்களை உடைத்தெறிந்து அன்பு வழிப்பட்டு, இணக்கமாகப் பேசுவது, சமூக அக்கறை உள்ள ஆசிரியரின் தனித்துவம்.

தொகுப்புக்கு ஏற்ற தலைப்பு. பண்பட்ட அனுபவமிக்க ஒரு ஆன்மா, இப்பிரபஞ்ச உயிர்ப்புக்காக, நம் கைகளை ஆதரவாய் பற்றிக் கொள்கிறது.  கதைக்குள் கதை சொல்கிறது. போகிற போக்கில் லாவகமாக உவமைகள் பேசுகிறது. கிழவனாய் பேரனாய் நம்மோடு குதூகலிக்கிறது. உலகம் அற்புதமானது. எத்தனை விதமான மனிதர்கள். உற்றுநோக்கு. அன்பாலும் மனித நேயத்தாலும் நல்லிணக்கத்தோடு கை கோத்து நில் என வாசகனோடு பயணப்படுகிறது.

பண்பாடு, தொன்மங்கள் ஊடாக, கரிசல் வாசம் குழையக் குழைய. எளிய நடையோடு, மண்ணையும் மரபையும் வாஞ்சையாய் பேசுகிற அந்த ஆத்மா, வாசிப்பின் முடிவில், ஆசிரியர் பொன்னீலனாய் உயர்ந்து நிற்கிறது.

கீரனூர் ஜாகிர் ராஜா அணிந்துரைத்திருப்பதுபோல், உண்மையில், நம் தமிழ்ச் சமூகம் உள்வாங்க வேண்டிய பல சிறந்த கதைகள் கொண்ட அரிய தொகுப்புதான் சக்தித் தாண்டவம்.