va vu chiவரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை (2)

05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.

தமிழக வரலாற்றில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் வீரியம் கொண்டதற்கு சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் ஒரு காரணம். அந்த சேரன்மாதேவி குருகுலத்திற்கு 31 ஏக்கர் நிலத்தைத் தன் சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்தவர் கானாடு காத்தான் வை.சு. சண்முகம். ஆனால் குருகுலத்தில் பார்ப்பனரல்லாதார் குழந்தைகளை பாகுபடுத்தி நடத்துகிறார்கள் என்ற செய்தி தெரிந்தவுடன் கடுமையான எதிர்ப்புகள் கிளம்புகிறது.

வரதராஜுலு நாயுடுவும், பெரியாரும் கடுமையாக எதிர்க்கிறார்கள். வைக்கம் போராட்டமும் சேரன்மாதேவிப் போராட்டமும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான கலந்துரை யாடல்களெல்லாம் கானாடுகாத்தான் சண்முகம் இல்லத்தில் தான் தொடந்து நடைபெற்றது.  சுயமரியாதை இயக்கத்தில் இயங்கியவரும்கூட. 1935இல் அவரது மகள் பார்வதி, அவரது திருமண மேடையிலேயே, பெரியாரிடம் நான் தாலிக் கட்டிக் கொள்ளமாட்டேன்; எனக்குக் தாலி கட்டுவதாக இருந்தால் நானும் மாப்பிள்ளைக்குத் தாலிகட்டுவேன் எனக் கூறி தாலியை மறுத்தவர்.

சேரன்மாதேவி குருகுலத்துக்கு எந்த சண்முகம் நிலத்தை வாங்கிக் கொடுத்தாரோ அவரேதான் ஞான சூரியன் என்ற ஒரு புத்தகத்தையும் தன்செலவில் வெளியிட்டார். அதற்கு முன்னுரையை வ.உ.சி எழுதுகிறார். ஞான சூரியனைப் பற்றி கூறுகிறார், அவன் வடமொழி வேதங்களிலும், மனுதர்ம சாஸ்திரங்களிலும், காமிகாகமம் முதலிய ஸ்லோகங்களை எடுத்துக் கூறி பொருத்தமான கதைகளைக் கூறியும் ஆரியரின் இழிதகைகளையும், சாதிய வேறுபாடுகளையும் நன்கு விளக்குகின்றான்.

அவ்வேதம் முதலியவற்றைத் தமவெனக் கொள்வோரும், அவற்றில் மதிப்பேனும் விருப்பேனும் உடையோரும் ஞானசூரியனைப் படிப்பாராயின் அவற்றைத் தமவெனக் கொள்ளார், மதியார், விரும்பார் ;

“பிராமணர்களின் யாகங்களிலும் விருந்துகளிலும் பன்றியூன், எருமையூன், பசுவூன் முதலிய  பலவகை ஊன்களை உண்டும், பனங்கள் முதலியபலவகைக் கள்களைப் பானஞ் செய்து வந்தவர்களென்றும், சகோதரன் மனைவியிடத்தும், விதவையிடத்தும், குதிரை யிடத்தும், குழந்தைகள்பெற்றுச் சந்ததி விருத்தி செய்து வந்தவர்களென்றும்,மேற்படி வேதம் முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் காட்டி காட்டி, ருஜு செய்திருக்கிறான்.

தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக்கொள்ள விரும்புவாராயின், பிராமணர், மேற்படி வேதம் முதலியவற்றை அக்கினி பகவானுக்கு ஆகுதி செய்வது இன்றியமையாதது” என்று எழுதியுள்ளார். பார்ப்பனர்கள் அனைத்தையும் தீயில் போட்டு எரிப்பார்கள், யாகம் என்ற பெயரால். அதை குத்தூசி குருசாமி ளுயீசைவரயட ஞடிளவ டீககiஉந என்பார்.. யாகத் தீயில் போட்டால் அவையனைத்தும் நேரடியாக கடவுளுக்கும், முன்னோருக்கும் போய் சேரும் என்று பார்ப்பனர்கள் கூறுவதால். அதுபோல வடமொழி வேதங்களையும் மனுசாஸ்திரம் ஆகியன இரண்டையும் தீயில் போட்டு எரிப்பதே நமது முதல் கடமை என்கிறார் வ.உ.சி .

அவற்றைக் காட்டித்தான் “இந்து சமயம் என்பதன் பொய்களையும் புரட்டுகளையும், ஆபாசங்களையும் நம்பவைப்பதோடு, அச்சமயப் பெயரால் செய்யப் படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லா தார்கள் தாழ்த்தப்படுவதையும் கூறுகிறது” என்று எழுதுகிறார். மேலும், “ வடமொழி யாகமங்களிற் சிலவற்றைத் தமவெனக் கொண்டு, பிறப்பால் சாதி வேற்றுமைகள் கற்பித்தும், சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிற சைவர்களும் ‘ஞான சூரியன்’ கிரகணத்திலிருந்து தப்பவில்லை.

தாம் மதிக்கப்படுகிற ஒரு சாதியார் என்று சொல்லிக் கொள்ள விரும்புவாறாயின், அச்சைவர் வடமொழி ஆகமங்களைத் தமவெனக் கொள்ளும் தவறை ஒழித்தலும் சிவாலயங்கள் சிலவற்றில் காணப்படும் சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை” என்கிறார். மற்றொரு கருத்தாக சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்திலும், சிவஞான போத சித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்திலும் ஞான சூரியன் செல்லாதிருப்பது தகுதியே” என்கிறார். இவ்வணிந்துரையின் வாயிலாக இந்து மதம், வடமொழி வேதங்கள் ஆகியவற்றை மட்டுமின்றி, தாம் பிறந்த சைவ சமயத்தையும் சாடுகிறார் வ.உ.சி.

1927 இல் திராவிடர் கழகம் என்று ஒரு அமைப்பு விருதுநகரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரியார் 1944 இல் தான் திராவிடர் கழகம் என நீதிக் கட்சியின் பெயரை மாற்றினார். ஆனால், 1927இலேயே விருதை சிவஞான யோகி என்ற ஒருவர், 1927இல் கோவில் பட்டியில் அவர் நடத்திவந்த திராவிடர் கழகத்தின் 18ஆவது ஆண்டுவிழா மாநாட்டை நடத்தியுள்ளார்.

அந்த மாநாட்டிற்கு பெரியார், வ.உ.சி.,  இராவணப் பெரியார்  என்ற நூலை ஆங்கிலத்தில் படைத்தளித்த ஆங்கிலப் பேராசிரியர் எம்.எஸ். பூரணலிங்கப் பிள்ளைஆகியோரெல்லாம் அந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.. வ.உ.சி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.

சுயமரியாதை இயக்கம் போன்றவற்றைப் பற்றி வ.உ.சி அந்த மாநாட்டில் பேசுகிறார். பெரியாரும் கூட ஆரியர், திராவிடர் பற்றிப் பேசுகிறார். எப்போது ஆரியர்கள் சங்கம் ஆரம்பித்தார்களோ அப்போதே திராவிடர் சங்கமும் தேவையாகிவிட்டது என்பதையெல்லாம் கூறிப் பெரியார் பேசுகிறார். அவ்வுரையின் தொடக்கத்தில், “எனது நண்பரும், அரசியல் தலைவருமான திருவாளர் வி.ஓ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் சொல்லியவைகள் யாவும் என்னிடமுள்ள அன்பினால் அல்லாது அவ்வளவும் உண்மையென்று தாங்கள் நம்பிவிடக் கூடாது.

என்னை அவர் தலைவர் என்று சொன்னதற்காக நான் மிகுதியும் வெட்கப் படுகிறேன். அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில், சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராய் இருந்து நடத்திய பெரும் கிளர்ச்சியின்போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரையும், அவர் போன்றோரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன்” என்றும் பெரியார் கூறியுள்ளார். எனவே, வ.உ.சி தொடர்ந்து சுயமரியாதை இயக்கத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறார்.

பெரியாரும் அவர்மீது கொண்டிருந்த அளவு கடந்த நம்பிக்கையின் காரணமாகவே, வ.உ.சி சுதேசிக் கப்பல் முயற்சியில் இறங்கியபோது, தமது குடும்பத்தின் சார்பாக ரூ.5,000உம், ஈரோடுவாழ் இஸ்லாமியர்கள் சார்பாக ரூ.5,000உம், மேலும் தனது தொடர்புகள் வழியாக  மேலும் ரூ.20,000உம் திரட்டி மொத்தம் ரூ.35,000த்தை பங்குத் தொகையாக அளித்துள்ளார் என்பதை மற்றொரு உரையில் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

சைவர்களுக்கு வ.உ.சி மீதும் கோவம் இருந்தது. ஏனென்றால் சுயமரியாதை சைவர்கள் என்றே சில பேரை அவர்கள் விலக்கி வைத்திருந்தார்கள். பெரியாரோடு தொடர்பு கொண்டிருந்தவர்களை அப்படி விலக்கி வைத்திருந்தார்கள். வ.உ.சியை மட்டுமல்ல; சொ. முருகப்பா, கி.ஆ.பெ.விசுவநாதம், கே.ஆர்.பாலசுப்பிரமணியம், மணி திருநாவுக்கரசு முதலியார், கா.அப்பாதுரை போன்றவர்களையும் சுயமரியாதை சைவர்கள் என்று சைவர்கள் ஒதுக்கி வைத்திருந்தார்கள். வ.உ.சி.அவர்கள் எழுதிய சிவஞான போது உரையைக் கூட அவர்களெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

வ.உ.சி. அவர்கள் 1928இல் தேவக்கோட்டையில் மாணவர் சங்க ஆண்டு விழா ஒன்றில் பேசுகிறார்,  மனுநீதி கண்ட சோழனைப் பற்றி கூறியபொழுது "இப்போதிருக்கும் மனுஸ்மிருதியை நடத்திக் காட்டியமைக்காகவே ’மனுநீதி கண்ட சோழன்’ என்று பெயர் வந்ததென்ற பொருள்படும்படியே சேக்கிழார் கூறினாரென்று கூறினார்கள். அவர் அப்பொருட்படி கூறியிருப்பாராயின் அவர் மனுஸ்மிருதியைப் படிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

எந்த நூலானாலும் குற்றமிருக்குமானால் அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது. பிழையிருக்குமானால் ... வள்ளுவரல்ல, சிவபெருமானே கூறினாலும் தள்ள வேண்டியது தான். கடவுளே எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழை இருக்குமானால் அதனையும் தள்ள வேண்டியதுதான். வேதத்தில் பிழை இருக்குமானால் திருத்த வேண்டியது தான்.

சைவத்திலும் அப்படியே தான். எந்த நூலில் பிழைகள் காணப்படுகின்றனவோ இருக்கிறதோ அவைகளைச் சீர்திருத்த வேண்டுவது இன்றியமையாததாகும்" என்று அக்கூட்டத்தில் பேசுகிறார். வேடிக்கையாகவும் சிலவற்றைப் பேசியிருக்கிறார், திருவள்ளுவரைப் பற்றி,

“திருவள்ளுவர் ஒரு கவி, ஒப்பற்ற அறிஞர், நானும் அவரைக் கடவுளென்றே போற்றுகிறேன். அவர் நூலில் வாளென்றும், வில்லென்றும், வேலென்றும் இருக்கிறதேயன்றித் துப்பாக்கியென்றாவது, பீரங்கி யென்றாவது இல்லை. இப்பொழுது யுத்தத்திற்கு சாதனங்களாக துப்பாக்கியும், பீரங்கியுமே இருக்கின்றன. யுத்தத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் நேரிடின் என் செய்வது? வள்ளுவர் துப்பாக்கியைப் பற்றியும், பீரங்கியைப்பற்றியும் எதுவும் சொல்லவில்லை. எனவே இச்சாதனங்களைக் கொண்டு போர் புரிய மாட்டேன்.

வள்ளுவருக்கு என்ன புத்தி இல்லையா? அவரைவிட நாமெல்லாம் மேதாவிகளாகி விட்டோமா! என்று ஒருவன் இப்போது கூறிக் கொண்டு இருப்பானானால் அது எவ்வளவு பெரிய மூடத்தனம்என்பதை நீங்கள்n யாசித்துப் பாருங்கள்.” என்று கூறுகிறார். சைவர்களுக்கு ஏன் கோபம் வந்தது என்று புரிகிறதா?

 மற்றொன்று, “தென்புலத்தார் கடன் ஓம்புதல் என்பதற்கு பிதுர்க்கடன் செய்தல் என்றே பொருள் வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் குறிப்பிட்ட வகுப்பாருக்கு வெள்ளி லோட்டா, தங்கத் தட்டு கொடுக்க வேண்டும் என்று காணப்படவில்லையே? சபிண்டி, திதி முதலியவை செய்ய வேண்டும் என்று சொன்னால், ‘அய்யா, இது எங்கள் அப்பனுக்குப் போகாது; நாங்கள்இப்போது விழித்துக் கொண்டோம்; இனி ஏமாற்ற முடியாது’ என்று கூறி விடுங்கள்.

கொசு யானையை விழுங்கி விட்டது என்று சொன்னால் அதை நம்ப முடியுமா?” என்று பார்ப்பன சடங்குகளை விலக்குங்கள் என்று காரைக்குடி சொற்பொழிவில் பேசுகிறார். பார்ப்பனர்கள் நம்மை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று ஒரு எடுத்துக்காட்டையும் கூறுகிறார், “நண்பர் தியாகராஜ செட்டியார் மனைவியுடன் பர்மாவிற்கு சென்று வந்திருக்கிறார். அதற்காக அவரை ஜாதியை விட்டு விலக்க வேண்டும் என்று சில இடங்களில் கூறப்படுகிறதாம்.

இது எவ்வளவு அறியாமை. மனைவியுடன் கப்பலேறிச் சென்றதற்காக ஒரு வகுப்பாருக்கு 2000, 3000 கொடுத்து பிராயச்சித்தம் செய்து கொள்வதா? பிராயச்சித்தம் என்பதெல்லாம் நமக்குத்தான், அவர்களுக்கென்றால் வேதப் பிரமாணம் இருக்கிறது; அந்த நாயனார் அப்படிச் சொல்லியிருக்கிறார், இந்த நாயனார் இப்படிச் சொல்லியிருக்கிறார்களென்று கூறிவிடுவார்கள்.

பொதுக் கோயில்களில் அனைவருக்கும் சம உரிமை வேண்டும்; லஞ்சம் வாங்காத நீதிபதியிடம் தரகர்கள் வேண்டாம்”. என பார்ப்பனர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்று கிறார் வ.உ.சி. காங்கிரஸை விட்டு வெளியேறியதன் அடுத்த ஆண்டு 1926 டிசம்பரில் பெரியாரோடு ஒரு மாநாட்டிற்கு செல்கிறார்.

பிராமணர் அல்லாதோர் மாநாடு என்று அந்த மாநாடு மதுரையில் கூட்டப்படுகிறது. அதில் வ.உ.சி பங்கேற்கிறார். பெரியார் அப்போது, நீதிக்கட்சியை மட்டுமல்லாமல் காங்கிரசில் இருந்த பார்ப்பனரல்லாதோரையும் வாருங்கள் என்று அழைப்பு கொடுத்திருந்தார்.

அந்த அழைப்பில், நீதிக் கட்சிக்காரர்களைக் கிண்டல் செய்வதைப் போல  நீங்கள், பிராமணரல்லாதார் என்றால் 5 விழுக்காடு கூட இல்லாத இராஜாக்களையும், மிராசுதாரர்களையும், ஜமீன்தார்களையும் நினைத்துக் கொண்டு வராதீர்கள். 95 விழுக்காடு உள்ள ஏழைகளும், உழைப்பாளிகளும், பாமரர்களும் சேர்ந்துதான் பிராமணரல்லாதார். இதனை மனதில் கொண்டு வாருங்கள்; அதற்கான திட்டம் தீட்டுவோம்  என்று அந்த நிகழ்விற்கு முன்பான அறிக்கையில் பெரியார் எழுதுகிறார்.

அந்த மாநாட்டில்,  “இந்து கோவில்களில் இந்துக்கள் என்று சொல்லப்படும் எல்லா வகுப்பாருக்கும் பிரவேசத்திலும், பூஜையிலும், தொழுகையிலும் சம உரிமை உண்டு என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது” என்றும், சென்னை சட்டசபையில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட  இதுமத தர்மபரிபாலன  மசோதாவை இம்மாநாடு முழுமனதோடு வரவேற்று ஆதரிப்பதோடு, சட்டப்படிக்குண்டான சம்மதம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று வைசிராய் பிரபுவிற்குத் தெரிவித்துக் கொள்கிறது  என்றும் தீர்மானம் போடுகிறார் பெரியார்.

அதற்கு முன்பே நீதிக்கட்சி 1925இல் மசோதா ஒன்றினை நிறைவேற்றுகிறது; அதற்கு வைசிராய் ஒப்புதல் அளிக்கவில்லை அதனால் பெரியார் 1926 இல் அம்மாநாட்டில் தீர்மானம் போடுகிறார். ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று. மற்றொரு தீர்மானம்,  தங்களை விட பிறவியில் உயர்ந்த வகுப்பார் என்ற எண்ணத்தின் பேரில் வேறு வகுப்பாரைக் கொண்டு செய்து கொண்டிருப்பது, நாமே நம்மை தாழ்ந்த வகுப்பாரென்று ஒப்புக் கொள்வதாய் இருப்பதாலும் இவ்வித மனப்பான்மையே நமது சுயமரியாதையை அழிப்பதற்கு ஆதாரமாய் இருப்பதாலும் இனி இவ்வழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது  என்று தீர்மானம் போடப்படுகிறது. இந்த மாநாட்டில் தீர்மானங்களை ஆதரித்து விளக்கி வ.உ.சி பேசுகிறார்.

(தொடரும்)

- கொளத்தூர் மணி

Pin It