அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடி யதற்காக பெரியார் தொண்டு வீராசாமியை கட்சியை விட்டு நீக்கினார் என்ற இளையபெருமாள் குற்றம்சாட்டுவது அபத்தமானது என்று ‘எஸ்.வி.ஆர்’ எழுதினார். அதற்காக எஸ்.வி.ஆர் மீது கடும் தாக்குதலை தொடுக்கிறார் ஸ்டாலின் இராஜாங்கம்.
அந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவையில்லை என்கிறார் ‘அறிவுஜீவி’ ஸ்டாலின் இராஜாங்கம், ஆனால் தொண்டு வீராசாமி தனிப்பட்ட வெறுப்பால் விலகினார் என்ற எஸ்.வி.ஆர் குற்றச்சாட்டுக்கு மட்டும் ஆதாரம் கேட்கிறார்.
அம்பேத்கரைப் பாராட்டி பெரியார் பல நிகழ்ச்சிகளில் பேசினார். இளையபெருமாள் அவர்களே பெரியாருடன் மேடைகளை பகிர்ந்து கொண்டு - அம்பேத்கர் மீது பெரியார் கொண்டிருந்த மதிப்பை விளக்கியிருக்கிறார்.சென்னை பெரிய மேட்டில் கொண்டாடப்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பற்றிய ஒரு செய்தியை எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். இந்த செய்தி 14.4.1966ஆம் நாளிட்ட ‘விடுதலை’யின் முதல் பக்கத் தலைப்பு செய்தியாகவும் உரை இரண்டாம், மூன்றாம் பக்கங்களிலும் வந்துள்ளதாகும்.
பற்றற்ற பகுத்தறிவாளரே சமூகக் குறைகளை
நீக்க இயலும்!
மனித குலத்தை திருத்திய நான்கு தியாகச்
சீலர்களில் டாக்டர் அம்பேத்கர் ஒருவர்!
அறிவு தெளிவுக்கு புத்த மார்க்கமே சிறந்தது!
தாழ்த்தப்பட்டவர்களின் இரட்சகர் அவரே!
சென்னை அம்பேத்கர் விழாவில் பெரியார் பேருரை
சென்னை: ஏப்ரல் 14 : “டாக்டர் அம்பேத்கர் உலகினரின் சொத்தானவர்; செயற்கரிய செய்த மனித குலத்தை திருத்திய தியாக சீடர்கள் நால்வரில் ஒருவர்; அறிவு தெளிவுக்கு புத்த மார்க்கமே சிறந்ததென கண்டு தானும் புத்தர் ஆனார்; லட்சக்கணக்கில் புத்தர்களை உண்டாக்கினார்; தாழ்த்தப்பட்ட மக்களின் இரட்சகர் ஆவார்; அம்பேத்கர் வகுப்புரிமை வாங்கித் தந்தவர்; மடமையை ஒழித்து அறிவுத் தெளிவடையச் செய்தவர்; லட்சக்கணக்கில் புத்த மார்க்கத்தில் சேர்ந்த மக்கள் வழிகாட்டி ஆவார்” என்று தந்தை பெரியார் அவர்கள் பெரிய மேட்டில் நடந்த டாக்டர் அம்பேத்கர் 75 ஆம் ஆண்டு விழாவில் விளக்கவுரை ஆற்றினார்கள்.
சென்னை பெரிய மேட்டில் 13.4.66 அன்று மாலை 6:30 மணி அளவில் டாக்டர் அம்பேத்கர் நினைவு ட்ரஸ்ட் சார்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவரும் உலகம் போற்றும் ஒப்பற்ற பேரறிஞருமான காலஞ்சென்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 75 ஆம் ஆண்டு விழாவானது மிக்க சீரும் சிறப்புடனும் நடைபெற்றது.
வரவேற்புரை: ஆரிய சங்காரன்
விழாக் குழு செயலாளர் திரு ஆரியசங்காரன் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார். விழாவிற்கு பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு இளைய பெருமாள் அவர்கள் தலைமை வகித்தார்.
திரு இளையபெருமாள் எம்.பி தமது தலைமை உரையில் குறிப்பிட்டதாவது:
“டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நாம் பேசுவதை விட தலைவர் பெரியார் அவர்கள் பேசுவது தான் சாலச் சிறந்ததாகும்.
அம்பேத்கர் விழாவினை ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்ற கேடுகெட்ட நிலை இந்த நாட்டில் ஏற்பட்டு உள்ளது, அம்பேத்கர் அவர்கள் ஒரு தனிப்பட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; இந்த தேசத்தின் பொது சொத்து ஆவார். நான் கூறவில்லை காந்தியாரே கூறியிருக்கின்றார்.நேரு அவர்களும் கூறி இருக்கின்றார்கள்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நினைவுச் சின்னமாக அவர் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிட முன்வந்த சர்க்காரை நாம் பாராட்ட வேண்டும்.
பெரியார் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டவர் ஆவார். அவர்கள் வாயினால் நாம் அம்பேத்கர் அவர்களின் சிறப்புகளை அறிய வேண்டும்.
அம்பேத்கர் நினைவு டிரஸ்ட் என்பது எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தது அல்ல. தேர்தலுக்காக எந்த கட்சிக்கும் பணம் சேர்த்து கொடுக்க இருக்கின்றதும் அல்ல. அப்படிப்பட்ட எண்ணம் உடையவர்கள் யாராவது ட்ரஸ்டில் இருந்தால் தயவு செய்து அவர்கள் விலகி விடுவது நல்லது என்று கூறிக் கொள்ளுகின்றேன்.
அம்பேத்கர் டிரஸ்ட் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது, அவரது நூல்களைப் பரப்புவது, அவரது தீவிர கருத்துக்களை புத்தகங்களாக வெளியிட்டு மக்களிடையே பரப்புவதும் ஆகும்” என்று எடுத்துரைத்தார்.
அடுத்து வழக்கறிஞர் பஞ்சாட்சர மூர்த்தி உரையாற்றியதைத் தொடர்ந்து பெரியார் நீண்டதொரு உரையினை ஆற்றியுள்ளார்.
அறிவர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடுவது, கொண்டாடச் செய்வது, அவரது நூல்களைப் பரப்புவது, அவரது தீவிரக் கருத்துகளை டிரஸ்ட்டே வெளியிட்டுப் பரப்புவது போன்ற நோக்கங்களைக் கொண்ட தேர்தல் அரசியலில் இல்லாமல் கட்சி சார்பற்று அம்பேத்கரியத்தைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு இயங்கிற ஓர் அமைப்பு நடத்திய டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா அது.
1966ஆம் ஆண்டில் நடந்த அவ்விழாவில், “டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நாம் பேசுவதை விட தலைவர் பெரியார் அவர்கள் பேசுவது தான் சாலச் சிறந்ததாகும், என்றும், “பெரியார் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டவர் ஆவார். அவர்கள் வாயினால் நாம் அம்பேத்கர் அவர்களின் சிறப்புகளை அறிய வேண்டும்” என பேசிய இளைய பெருமாள் அவர்கள், அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடியதற்காக ‘தொண்டு’ வீராசாமி அவர்களைக் கழகத்திலிருந்து பெரியார் நீக்கினார் என்று பழி சுமத்தியதை விளக்க தோழர் எஸ்.வி.ஆர் அவர்கள் பயன்படுத்திய சொற்களைப் பிழையானதாகப் பார்க்க முடியவில்லை.
- கொளத்தூர் மணி