இந்துத்துவ பாசிசம் முழு அதிகார பலத்தைப் பெற்று இருக்கும் இந்த காலகட்டத்தில், கண்ணுக்கு எதிரே மனிதர்கள் மதம், சாதி காரணமாக அடித்துக் கொல்லப்படும் போது கண்டித்து, அல்ல, அதற்காக கண்ணீர் சிந்த கூட வெகு சொற்பமான மனிதர்களே இருக்கிறார்கள்.
ஆனால் இந்திய அளவில் இந்தப் பாசிச சக்திகளின் உயிர் நாடியான 'பார்ப்பனியத்தை' வெளிப்படையாக விமர்சிக்கும் முதுகெலும்புள்ள மிக அரிதான கலைஞராக இருக்கிறார் கன்னட நடிகர், சமூகச் செயல்பாட்டாளர் 'சேட்டன் குமார்'. அதன் காரணமாகவே அவர் மீது தொடர்ந்து இந்துத்துவ சங்கிகள் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக வழக்கு தொடுத்தும், அவரது படங்கள் வெளியாவதற்கு முட்டுக்கட்டை போட்டும், மேலும் பல்வேறு வகைகளிலும் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள்.
அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் தன்னைப் பற்றிய குறிப்பாக கொடுத்திருந்த வார்த்தைகள் இவை.
'நான் மனிதன்: சமத்துவத்துக்காக, நீதிக்காக, பகுத்தறிவுக்காக, கலைக்காக போராடும் கலைஞன் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்'
இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவருடைய செயல்பாடுகள் இருப்பதையும், சங்கியர் அவர் மீது எத்தனை வஞ்சம் கொண்டுள்ளனர் என்பதையும் மனிதரின் ட்விட்டர் பக்கத்தை சிறிது உருட்டினால் நமக்கு புரிந்து விடுகிறது…
சங்கிகளை கதறவிட்ட ட்வீட்டுகள்…
இந்தியாவிற்கு என்று தனியொரு தேசிய மொழி இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்.
பெரியாரிடமிருந்து உத்வேகம் பெற்ற திமுக என்னும் கட்சி கர்நாடகாவின் கார்ப்பரேட் பார்ப்பனியக் கட்சிகளை விட கன்னட மொழி உரிமைக்காக போராடுகிறது.
இன்று சேட்டன் அறக்கட்டளை மோலகள்முரு , சித்ரதுர்கா பகுதிகளைச் சார்ந்த தேவதாசி குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கியதோடு அவர்களுக்கான அரசியல் அமைப்புச் சட்ட உரிமைகளை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
தேவதாசிகள் எனப்படுபவர் பார்ப்பன மற்றும் நிலவுடமை சக்திகளால் சுரண்டலுக்கு உள்ளான தலித் மற்றும் பழங்குடியின பெண்கள் ஆவர்.
வரலாற்றில் மேல் ஜாதிகள் எனப்படுவோர் உற்பத்தித் திறன் அற்றவர்களாகவும், அறிவியல் அறிவற்றவர்களாகவும், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் முற்போக்காளர்களாகவும், ஜனநாயகத் தன்மை உடைய உற்பத்தி பிரிவினராகவும் உள்ளனர்.
இன்றைக்கு இருக்கும் சமூக முரண்பாடுகளுக்கான காரணங்கள் மறுக்க இயலாதவை.
குடிமைச் சமூகத்தில் உள்ள முரண்பாடுகள் மாற்று அரசியலாக உருமாறும்போது பார்ப்பனியம் வேரறுக்கப்படும்.
இருபதாம் நூற்றாண்டின் உலக அளவிலான சமத்துவத்திற்கான போருக்கு அம்பேத்கரும் , டூ போயஸ்ம் தலைமை தாங்கினர்.
1940களில் அண்ணல் அம்பேத்கர் அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களின் நிலைக்கும் இந்தியாவில் உள்ள தீண்டப்படாதவர்கள் நிலைக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து டூ போயஸ்க்கு கடிதம் எழுதி அவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
பார்ப்பனியம் மற்றும் அனைத்து வகையான சமத்துவமின்மைக்கும் எதிரான போரை நாம் தொடர வேண்டும்.
'நான் ராபர்ட் இங்கர்சாலின் பல கருத்துக்களை ஏற்றுக் கொண்டுள்ளேன் ' என பெரியார் பேட்டி ஒன்றில் கூறுகிறார்.
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க சுதந்திர சிந்தனையாளரான இங்கர்சால் மாபெரும் அறியொணாமைக் (Agnostic) கொள்கையாளர்.
அறியொணாமைக் கொள்கை என்பது கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதை மனித அறிவு அறுதியிட்டுக் கூற முடியாது என்ற பார்வையை கொண்டது.
அறியொணாமைக் கொள்கை உண்மையில் முற்போக்கானது.
என்னடா இது ஒரு கன்னட நடிகர் பார்ப்பனிய எதிர்ப்பு பெரியார் அம்பேத்கர் என இப்படி கலக்குகிறாரே அவரது பின்னணியை கொஞ்சம் அறிந்துக் கொள்ளலாம் என பார்த்தால். அவரது தாய் தந்தையர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்றாலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.
சேட்டன் குமார் தனது 23 வயது வரை அமெரிக்காவில் வாழ்ந்திருக்கிறார். அந்த புகழ்பெற்ற ஏலே (yale) பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். 2005இல் இந்தியா வந்தவர், சிறிது காலம் நாடக நடிகராக பயிற்சி பெற்று, திரைப்படத் துறையில் 2007 ஆம் ஆண்டு கால் பதித்திருக்கிறார் முதல் படமே பெரிய வெற்றி.
நடிகராக மட்டும் இருந்துவிடாமல் கர்நாடகாவில் இயங்கும் பல்வேறு மாணவர் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், தலித் மற்றும் பழங்குடியின இயக்கப் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
இப்படி இவரைப் பற்றிய தகவல்களை தேடிக் கொண்டிருந்தபோது சமீபத்தில் டெக்கன் ஹெரால்ட் இதழில் வெளியான அவரது ஆழமான கட்டுரை ஒன்று தென்பட்டது, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவருக்கு எப்படி சாதி எதிர்ப்பு உணர்வு உருவானது என்பதைப் பற்றி மிக அழகாகவும் ஆழமாகவும் விளக்கியிருக்கிறார் அதனை மொழிபெயர்த்து இங்கு வழங்கியிருக்கிறோம்.
நான் ஏன் சாதியை பற்றி பேசுகிறேன்…
ஆம் நான் தீண்டப்படாதவன் தான், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நீக்ரோவும் தீண்டப்படாதவர்கள் தான்
- மார்ட்டின் லூதர் கிங்
இந்தியாவில் ஜோதிபா பூலே மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் அமெரிக்காவில் மார்டின் லூதர் கிங் மற்றும் வெப் டூ போயஸ் ஆகியோர் இன மற்றும் ஜாதி போராட்டங்களுக்கு இடையேயான பொருத்தப்பாடுகளை உணர்த்திய தலைவர்கள்.
அமெரிக்காவில் நான் சந்திக்க நேர்ந்த இனப்பாகுபாடுகளையும் கர்நாடகா மற்றும் இந்திய முழுவதும் நடைபெறும் சாதிக்கு எதிரான போராட்டங்களையும் இணைத்துப் பார்க்க விரும்புகிறேன்.
சிகாகோவில் எனது வாழ்நாளில் முதல் 20 ஆண்டுகளில் நேரடி வன்முறை தாக்குதல்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் பாகுபாடுகள் என பல்வேறு கட்டங்களில் இனப்பாகுபாட்டால் பாதிக்கப் பட்டிருக்கிறேன். எனது இனவெறிக்கு எதிரான சிந்தனையால் 15 வயதிலேயே நான் தேசத்துரோகி என்று அழைக்கப்பட்டிருக்கிறேன்.
அமெரிக்காவில் ஒரு இந்திய நிறத் த்தவனாக நான் பெற்ற அனுபவங்கள் மற்ற எந்த வெள்ளையரல்லாத எனது தலைமுறையினரின் அனுபவத்தில் இருந்து ஒன்றும் வேறுபட்டதல்ல. அதே சமயம் மனித மாண்பும் அறிவார்ந்த விவாதங்களுக்கான சரியான சூழ்நிலையை சிறப்பான வகையில் உருவாக்கியிருந்த கல்வி நிறுவனமான ஏலே பல்கலைக்கழகத்தில் பயின்ற நான்காண்டுகளில் எனது அனுபவம் வேறு வகையாக இருந்தது அங்கு நான் எந்த பாகுபாடுகளையும் சந்திக்கவில்லை.
அங்கிருந்த விழிப்புணர்வு மிக்க அறிவார்ந்த நண்பர்களுடன் நான் மேற்கொண்ட விவாதங்கள் என் மனதில் அப்படியே பதிந்து விட்டன ஏனெனில் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அங்கு வாழ்ந்த மெக்சிகோவினர், மத்தியகிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளை சேர்ந்த மக்கள் அரசின் ஒருதலைப்பட்சமான அதீத தேசபக்தி சட்டத்தால் தாக்கப்பட்ட போதும் கொலையுண்ட போதும் அங்கே இனப்பாகுபாடு நிலவுவதை எனது அறிவார்ந்த நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
தெற்காசியாவின் சமூக பொருளாதார கலாச்சார கட்டமைப்பின் இயங்கியலை படித்த கலப்பு அடையாளம் (American Indian) கொண்டவன் என்ற அடிப்படையில் நான் அமெரிக்காவில் இனப் பாகுபாட்டை எதிர்கொண்ட போதிலும் இந்தியாவில் நிலைபெற்றிருக்கும் சாதிய கட்டமைப்பினால் கிடைத்த ஆதாயத்தை பெற்றவன் என்பதையும் உணரத் தொடங்கினேன்.
ஏனெனில் எனது பெற்றோர்கள் இருவருமே மருத்துவர்கள் நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிய அவர்களுக்கு இத்தகைய தொழில் வாழ்க்கை அமைந்ததற்கு காரணம் பல தலைமுறைகளாக அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற கல்வி கற்பதற்கான வாய்ப்பு .
ஏன் என்னுடன் பயின்ற அத்தனை இந்திய அமெரிக்கர்களும் உயர்சாதி அல்லது ஆதிக்க சாதி பின்புலத்தை கொண்டவர்களாகவே இருந்தனர்?
ஏன் எனது பல்கலைக்கழகத்தில் தலித் மற்றும் பழங்குடியின பின்னணி கொண்ட மாணவர்கள் பயில வில்லை?
அப்படியானால் சாதிப்பாகுபாடு இந்தியாவில் இன்னும் இருக்கிறதா அமெரிக்காவில் உள்ள வெள்ளையர்கள் இனப் பாகுபாடு இருப்பதை ஒப்புக் கொள்ள மறுப்பது போல , இந்திய உயர் சாதியினரும் சாதிப்பாகுபாடு நிலவுவதை மறுக்கிறார்களா?
நானும் இளம் பருவத்தில் இருந்தே சமத்துவம், சமநீதி மற்றும் பகுத்தறிவு போன்றவையே எந்த ஒரு சமூகத்திற்கும் கருத்தியல் அடித்தளமாக விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். 2005இல் நான் கர்நாடகவுக்கு வந்த பிறகு இங்கு களத்தில் இயங்கும் அமைப்புகளோடு இணைந்து பணியாற்றுகிறபோது மிக வெளிப்படையாகவே சமூக மற்றும் சாதி பாகுபாடுகள் நிலவுவதை கண்டேன்.
எனவே கடந்த பத்தாண்டுகளாகவே கர்நாடகாவில் சமூக சமத்துவத்திற்கான போராட்டம் தலித், சாதிமறுப்பு இயக்கங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட தலைவர்களுடன் இணைந்து தீவிரமாக இயங்குகின்றேன்.
சாதிய சிக்கலை இங்கே சமூக பொருளாதார கல்வி சார்ந்த விவாத பொருளாக அங்கீகரிக்க மறுப்பthe சாதியக் கட்டமைப்பு நிலைத்திருக்க காரணமாக அமைகிறது. சமூகத்தில் பல்வேறு தளங்களில் சமத்துவமின்மையை உருவாக்கிய இந்த 3500 ஆண்டுகால் தீமை இன்னும் இருப்பதை முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் அதனை ஒழிக்க வேண்டும்.
பாவம் புண்ணியம் என்ற மனிதத் தன்மைக்கு எதிரான கருத்தியல்கள் மீது கட்டப்பட்டுள்ள, பார்ப்பனர்கள் உச்சத்திலும் தலித்துகளை கீழ் நிலையிலும் வைத்திருக்கும் இந்த படிநிலை அமைப்பு எதிர்த்து அழிக்கப்பட வேண்டும்.
தற்பொழுது நடைபெறுகின்ற 95 விழுக்காடு திருமணங்கள் ஒரே சாதி, மதத்துக்கு குள்ளே நடக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே சாதி மற்றும் மதங்களுக்கும் கடந்த காதல் திருமணங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். குவெம்பு, பெரியார் & ராம் மனோகர் லோகியா போன்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் எளிமையான சாதி தலையீடற்ற திருமணங்களை ஊக்குவித்தனர்.
நாம் சரோஜினி மகரிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல தனியார் துறையில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்காக போராட வேண்டும். சாதி, மத, வர்க்க மற்றும் பாலின பிரதிநிதித்துவ அடிப்படையிலேயே தனியார் துறையில் ஊழியர்கள் நியமிப்பதை உறுதிசெய்ய வேண்டும். கர்நாடகாவில் நடைபெறும் தேவதாசிகளின் போராட்டம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நடைபெறும் போராட்டம் போன்றவையும் நமது ஆதரவிற்கு தகுதியானவை.
நில உரிமை, விவசாய சீர்திருத்தங்கள் மற்றும் அனைத்து மக்களுக்குமான பொருளாதார அதிகாரம் ஆகியவை முன்னிலைப் படுத்தப் படவேண்டும் மக்கள் மனம் மாற நேரம் பிடித்தாலும் பரவாயில்லை நாம் தொடந்து மாற்றத்திற்கான ஈட்டி மூளையாக செயல்பட வேண்டும்.
சாதி ஒழிப்புக்காக போராடுபவர்கள் மட்டுமே அண்ணல் அம்பேத்கரும் மற்ற பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் முன்னிறுத்திய இந்தியா எனும் கருத்தியலைஉண்மையில் தாங்கிப் பிடிப்பவர்கள் ஆவர். மாநிலத்திற்குள் சிந்தித்து செயல்பட்டு மக்களை திரட்டுவது போல சமத்துவ உலகை படைக்க உலகளாவிய அளவில் நம் போராட்டங்கள் தொடர வேண்டும்.
சாதி ஒழிப்புப் போராட்டமே உண்மையான சமூக போராட்டம் என்ற தெளிவான புரிதல் கொண்ட இந்த அரிய மாமனிதரின் பார்ப்பனிய எதிர்ப்பு கருத்துக்களுக்காக நாடு கடத்தப்பட வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் கூப்பாடு போடுகிறார்கள் தினம்தோறும் பரப்பன சங்கங்கள் அவர் மீது வழக்குத் தொடுத்து வருகின்றன, அதைத் தொடர்ந்து அவர் காவல்துறையினர் அழைத்து நான்கு மணி நேரம் விசாரிக்கப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து அவர் எழுதிய ட்வீட்டில் "பார்ப்பனியத்திற்கு எதிரான எனது சமூக வலைதள பதிவுகள் குறித்து காவல் நிலையத்தில் 4 மணிநேரம் விசாரிக்கப்பட்டேன்,
உண்மை மற்றும் ஜனநாயகத்திற்காக நான் நிற்கிறேன்.
உலகளாவிய சமத்துவம், நீதி மற்றும் அகிம்சைக்கான போராட்டங்களில் என்னால் முடிந்த சிறிய பங்களிப்பை அளிக்கிறேன் என்பது பெருமை அளிக்கிறது"
எண்ணற்ற எதிர்ப்புகளுக்கு இடையில் தனது கொள்கையில் வேரூன்றி இருக்கிறார் என்பதை அவர் மீதுள்ள மதிப்பை மேலும் தூண்டுவதாக அமைகிறது. அவரது போராட்டத்தை குறித்து சமீபத்தில் விடுதலையை முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிடப்பட்டிருப்பதும் அவரது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வெறும் சினிமா கதாநாயகனாக இல்லாமல் சாதி எதிர்ப்பு களத்தில் போராடும் நாயகனாக விளங்கும் சேட்டன் குமாருடன் துணை நிற்போம்.
- குண சந்திரசேகர்