சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வரும் சத்தீஸ்காரின் பிலாஸ்பூரில் 30.09.2023 அன்று நடந்த பாரதிய ஜனதா கட்சி பேரணி ஒன்றில் நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்டவர்களின் எதிரி காங்கிரஸ் என்று பேசினார்.

  • இது அப்பட்டமான பொய். பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கக்கூடிய‌ ஒரு ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. மண்டல் பரிந்துரையை அமுலாக்கிய விபி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த பாஜக நீட் தேர்வைத் திணித்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட விரும்புகிற மாநிலங்கள் அதை பின்பற்றலாம் என்ற முறையை அதில் இருந்தது. ஆனால் குறுக்குவழியில் நீதிமன்றம் சென்று நீட் தேர்வை எல்லா மாநிலங்களிலும் அமுல்படுத்த வேண்டும் என்ற துரோகத்தை செய்தது பாரதிய ஜனதா கட்சி.
  • நீட் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக 7.5% உள் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட போது அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதும் இதே பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தான். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இந்த ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இந்த உள் இட ஒதுக்கீடு நீட் தேர்வின் நோக்கத்தையே சிதறடித்து விடும் என்று மனுத் தாக்கல் செய்தது.
  • உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை அவர்கள் கோரிக்கை வைக்காமலேயே கொண்டுவந்து 4 நாட்களிலேயே நிறைவேற்றியதும் இதே பாரதிய ஜனதா கட்சி ஆட்சி. இன்றைக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பாதியளவு இடங்களை கூட ஆசிரியர் நியமனங்களில், மாணவர் சேர்க்கைகளில் நிரப்பப்படாமல் இருப்பதற்கு காரணமாக இருப்பதும் இதே பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தான்.
  • இப்போது விஸ்வகர்மா என்ற திட்டத்தை கொண்டு வந்து மீண்டும் விளிம்புநிலை மக்களை ஜாதித் தொழிலுக்கு இழுத்துச் செல்லும் ‘குலத் தொழிலை’ அமுல்படுத்தியதும் இதே பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தான்.
  • அகில இந்திய மருத்துவக் கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடே வழங்க முடியாது என்று சொன்னதும், உச்சநீதிமன்றத்தில் வாதாடியதும் இதே ஒன்றிய பாஜக அரசுதான். அதை எதிர்த்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் எதிர் வழக்காடி இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமையை பெற்றுத் தந்தார்.

காங்கிரஸ் கட்சியில் என்ன நிலை?

  • காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்தது என்பது வரலாறு. ராஜீவ் காந்தி கூட மண்டல் குழுவின் பரிந்துரையை எதிர்த்துதான் பேசினார். ஆனால், சோனியா காந்தி அதிகாரத்திற்கு வந்ததற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. கட்சி பதவிகளில் 50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு வழங்க வேண்டும் என்ற முடிவை அவர் எடுத்தார்.
  • மண்டல் கமிஷன் அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வழி செய்தது என்று சொன்னால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அர்ஜுன் சிங்.
  • இன்றும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறும் கட்சிதான் காங்கிரஸ்.
  • எதிர்க்கட்சியாக இருக்கும்போது மல்லிகார்ஜுன கார்கே என்ற தாழ்த்தப்பட்டவரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக்கியது. இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பதும் கூட அதே கார்கே தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
  • இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தை தாண்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வரம்பை மாற்றியமைக்க வேண்டும் தீர்மானம் போட்டுள்ளதும் காங்கிரஸ் கட்சிதான். பாஜக என்பது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரியான கட்சி. காங்கிரஸ் சமூகநீதிக்கு ஆதரவான ஒரு கட்சி என்பதை மக்கள் மன்றத்திற்கு நாம் எடுத்துக்கூற வேண்டும்.

விடுதலை இராசேந்திரன்

Pin It