கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்த இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை 1858இல் பிரித்தானியப் பேரரசு தன் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டு வந்தது. இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்த பல்வேறு மத, சமூகப் பிரிவினரும் ஆட்சி அதிகாரத்தில் தமக்குரிய பங்கைப் பெற முயன்றனர்.

இத்தன்மையில், 1906இல் தொடங்கப்பட்ட முசுலீம் லீக் 1909இல் இடஒதுக்கீடு பெற்றது. 1916-இல் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி டி.எம். நாயரின் தலைமையிலான குழுவினரின் பெருமுயற்சியால் 1919இல் மண்டேகு-செம்சுபோர்டு சீர்திருத்தத்தின் மூலம் 1920இல் சென்னை மாகாணத்தில் நடந்த முதலாவது தேர்தலில் பார்ப்பனர் அல்லாதாருக்கான இட ஒதுக்கீடு பெற்று, ஆட்சியை அமைத்தது.

தலித்துகள் இந்துக்கள் அல்லர்; அதனால் அரசியல் உரிமை பெறுவதில் தலித்துகளைத் தனிப்பிரிவினராகக் கருதவேண்டும் என்று புரட்சியாளர் அம்பேத்கர் 1918 முதலே வலியுறுத்தி வந்தார். 1931இல் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் காந்தியாரைக் கடுமையாக எதிர்த்து இக்கருத்தை நிலைநாட்டினார். தலித்துகளுக்குத் தனி வாக்காளர் தொகுதியைப் பிரித்தானிய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து காந்தியார் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை மேற் கொண்டார், சமரச முயற்சியாக புனா ஒப்பந்தம் மூலம் தற்போது மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் நடப்பில் உள்ள தலித்துகளுக்கான தனித் தொகுதி இட ஒதுக்கீடு முறை உருவானது. பட்டியல் பழங்குடியினருக்கான தனித்தொகுதி 1950இல் நடப்புக்கு வந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது.

மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்கள் உலக அளவில் மதக்கட்டளை என்கிற பெயரால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு வந்தனர். ‘அரசு’ என்கிற ஆட்சிமுறை ஏற்படுவதற்கு முன்பே, சொத்துரிமை மறுக்கப்பட்டதன் மூலம் பெண்கள் அடிமைகளாக்கப்பட்டனர். நவீன காலத்தில் சனநாயக ஆட்சி முறை ஏற்பட்ட பிறகு பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு பெற்று பல துறைகளில் இடம்பெற்று வருகின்றனர். இந்தியாவில் பெண்களின் முன்னேற்றம் மிகவும் பின்தங்கியுள்ளது.33 reservation for womenசட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த நாடாளுமன்றத் திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று 1980-களின் இறுதி வரையில் கூட பெண்ணுரிமை அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கோரிக்கை வைக்கவில்லை. தற்போது மக்களவையில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் 82 பேர் பெண்கள். இது 15 விழுக்காடாகும். ஆனால் உலகளவில் நாடாளு மன்றங்களில் சராசரியாக 26 விழுக்காடு அளவில் பெண்கள் இடம்பெற்றுள்ளார். இதில் உலகில் 193 நாடுகளில் இந்தியா 141ஆவது இடத்தில் உள்ளது. பாக்கித்தான், தென்னாப் பிரிக்கா, கென்யா போன்ற நாடுகளில் பெண்கள் பிரதி நிதித்துவம் இந்தியாவைவிட அதிகமாக இருக்கிறது. இந்தியா வில் சட்டமன்றங்களில் பெண்கள் பத்து விழுக்காடு அளவில் உள்ளனர்.

1989இல் இராசிவ் காந்தி தலைமையமைச்சராக இருந்த போது ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார். இச்சட்டம் மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்கள் அவையில் ஏழு வாக்குகள் வேறுபாட்டில் தோல்வியடைந்தது. 1993இல் காங்கிரசு ஆட்சியில் பி.வி. நரசிம்மராவ் தலைமையமைச்சராக இருந்த போது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 73ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தமும், நகர உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 74ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறின. இச்சட்டங்கள் மூலம் அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது. தற்போது இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் பிறகே நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங் களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. 1996இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தேவகவுடா தலைமை அமைச்சராக இருந்த போது இதற்கான சட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால் நிறைவேறவில்லை. பா.ச.க. தலைமையிலான ஆட்சியில் வாஜ்பாய் தலைமையமைச்சராக இருந்த காலத்தில் 1998, 1999, 2002, 2003ஆம் ஆண்டுகளில் இச்சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நிறைவேறவில்லை. 2010இல் மன்மோகன் சிங் ஆட்சியில் இச்சட்டம் மாநிலங்கள் அவையில் நிறைவேறியது. மக்களவையில் வாக்கெடுப்பிற்கே எடுத்துக் கொள்ளப்பட வில்லை. பெண்களுக்கு 33 விழுக்காடு அளிப்பதற்கான சட்டமுன்வரைவு 1996இல் அறிமுகப்படுத்தப்பட்டது முதலே சமாஜ்வாதி கட்சியும் இராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியும் பெண்களுக்கான ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. காங்கிரசுக் கட்சியும் பா.ச.க.வும் இதை ஏற்க மறுத்தன.

பா.ச.க.வின் 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்போம் என்று வாக்குறுதி தரப்பட்டுள்ளது. 9.5 ஆண்டுகளாக இதைக் கிடப்பில் போட்டிருந்த நரேந்திர மோடி திடீரென நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரைக் (செப்டம்பர் 18-22) கூட்டி, பெண்களுக்கு மக்கள வையிலும் சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான 128ஆவது அரசமைப்புச் சட்டத்திருத் தத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளார். இச்சட்டத் திருத்தத்திற்கு ‘நாரிசக்தி வந்தன் அதினியம்’ (பெண் சக்திக்கு வணக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. பெண்ணடிமைத் தனத்தை இன்றளவும் போற்றுகின்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் அரசியல் கட்சியான பா.ச.க. பெண் சக்திக்கு வணக்கம் என்று பெயரிட்டிருப்பது 2024 தேர்தலில் பெண் வாக்காளர்களை ஈர்ப்பதற்கேயாகும்.

மாநிலங்களவையில் எங்களுக்குப் பெரும்பான்மை இல்லை; அதனால் எதிர்க்கட்சியில் மனமுவந்து இதை ஆதரிக்க வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறே எதிர்கட்சியினர் அனைவரும் ஆதரித்தனர். மக்களவையில் ஓவைசி உள்ளிட்ட இருவர் எதிர்த்து வாக் களித்தனர். காங்கிரசுக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த இடஒதுக்கீட்டை 2024 தேர்தலிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்; பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. மோடி ஆட்சி இதை ஏற்கவில்லை. புதிய நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முதலாவது சட்டம் நிறைவேற்றப் பட்டது வரலாற்றுப் பெருமையாகும் என்று மோடி கூறுகிறார். “இந்தியப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று கருதுகிறேன்” என்று நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் சொன்னார். அப்படியானால் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு அதிகாரம் வழங்க இராசிவ் காந்தியைக் கடவுள் தேர்ந்தெடுத்தாரா?

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு தான் மட்டுமே காரணம் என்கிற பரப்புரையை மோடி தொடங்கி விட்டார். வரும் திசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்ட பா.ச.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் 25.9.2023 அன்று பேசிய மோடி, “முப்பது ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த மகளிர் இடஒதுக் கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றினேன். காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருந்த போது இதை ஏன் நிறைவேற்றவில்லை. இப்போதுகூட காங்கிரசுக் கட்சி வேறு வழியில்லாமல் கட்டாயத்தின் பேரில் இச்சட்டத்தை ஆதரித்தது” என்று கூறினார். வரலாற்று உண்மையைத் திரிக்கும் பித்தலாட்டப் பேச்சல்லவா இது!

பெண்களுக்கு இடஒதுக்கீட்டின் மூலம் அதிகாரமளிப்பதில் இவ்வளவு தீவிரம் காட்டும் மோடி, இச்சட்டத்தை 2014 நாடாளுமன்றத் தேர்தலிலேயே நடைமுறைக்கு ஏன் கொண்டு வரவில்லை? 2014 தேர்தலில் நடைமுறைப்படுத்த முடியாத ஒரு சட்டத்தை நிறைவேற்ற-எதற்காகக் கூட்டப்படு கிறது என்றும் தெரிவிக்காமல் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது ஏன்? குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறை வேற்றியிருக்கலாமே! மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்குத் திசம்பர் மாதத்திற்குள் நடைபெறும் தேர்தலில் பரப்புரைக்கான ஆயுதமாக இச்சட்டத்தைப் பயன்படுத்துவதே பா.ச.க.வின் நோக்கம்.

நிறைவேற்றப்பட்ட 128ஆவது அரசமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு, அடுத்து நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப் படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்த பின்பே நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ச.க.வுக்கு உள்ளார்ந்த விருப்பம் இருந்திருந்தால் 2014 தேர்தலிலேயே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.

இந்தியாவில் 1881 முதல் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021ஆம் ஆண்டு இதை எடுத்திருக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு 2021 முடிய நீடித்ததால் இப்பணி ஒன்றிய அரசால் தள்ளிவைக் கப்பட்டது. கொரோனா தொற்று முடிவுக்கு வந்து நீண்ட காலமாகியும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பது தெரியவில்லை. ஜி-20 நாடுகளில் இந்தியா மட்டுமே மக்கள் தொகைக் கணக்கு எடுக்கவில்லை. பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் அமித்ஷா, 2024 தேர்தலுக்குப்பின் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவித்தார். எப்போது என்று திட்டவட்டமாகக் கூறவில்லை. எனவே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகே தொகுதிகள் மறுவரை யறை செய்யும் பணிகள் தொடங்கும்.

கடைசியாக தொகுதி வரையறை, 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 1973ஆம் ஆண்டு நடைபெற்றது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கை அமைகிறது. மக்களவைத் தொகுதி பத்து இலக்கம் வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 1973 தொகுதி வரையறையின்படி தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 42-லிருந்து 39 ஆகக் குறைந்தது. தமிழ்நாடு மக்கள் தொகையைக் கட்டுப் படுத்த குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தியதால் மக்கள் தொகை குறைந்தது. அதே சமயம் வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகமானதால் அவர்களுக்கு மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்தது. குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகச் செயல் படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களும் மற்றும் சில மாநிலங்களுக்கும் மக்களை உறுப்பினர் எண்ணிக்கை குறைப்பு நடைமுறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதனால் 1976ஆம் ஆண்டு ஒன்றிய அரசு 42ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் வழியாக 2021ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கு எடுக்கப்படும் வரை தொகுதி மறுவரையறை செய்யும் பணியை நிறுத்தி வைப்ப தாக முடிவு செய்தது. அதற்குள் வடக்கு-தெற்கு மாநிலங்களுக் கிடையிலான மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு நீங்கி சமநிலை அடையும் என்று எதிர்பார்க் கப்பட்டது. எதிர்பார்த்த அளவில் இதில் முன்னேற்றம் இல்லாத தால் 2002ஆம் ஆண்டு 82ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் 2026 வரையில் தொகுதி மறுவரையறை செய்யும் பணியை நிறுத்தி வைப்பது என்பது நீட்டிக்கப்பட்டது.

இதன்படி, 2026க்குப் பின் எடுக்கப்படும் மக்களை தொகைக் கணக்கின் அடிப்படையில்தான் தொகுதிகள் வரையறை செய்ய முடியும். தொகுதிகள் வரையறை செய்யும் பணி முடிய மூன்று நான்கு ஆண்டுகளாகும். அதனால் 2029இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலின்போதுகூட பெண்களுக் கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வராது என்பது திண்ணம். மேலும் காலமுறைப்படி 2031இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதன்பின் தொகுதி வரை யறை செய்தால்கூட 2034இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருமா என்பது அய்யமே! மேலும் தொகுதி வரையறை செய்வதில், தொகுதி எண்ணிக்கையை அளவிடலில் ஏற்படக் கூடிய சிக்கல்கள் காரணமாக இச்சட்டம் எப்போது நடை முறைக்கு வரும் என்பதை அறுதியிட்டு எவராலும் கூறமுடியாது. ஆயினும் இந்த உண்மை நிலையை மறைத்து, பா.ச.க. திசம்பரில் நடைபெறும் 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்த லிலும், 2024 ஏப்பிரல்-மே மாதம் நடைபெறும் நாடாளு மன்றத் தேர்தலிலும் பெண்களின் வாக்குகுளை ஈர்க்க பெண்கள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும்.

2026க்குப்பின், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் வரையறை செய்யப்படும் போது உறுப்பினர் எண்ணிக்கை உயரும் என்பதால்தான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் 800 பேர் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. எனவே, தொகுதிகள் வரையறை செய்யும் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியுள்ள மாநிலங் கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டும். தற்போது மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களில் தமிழ்நாட்டுக்கு 39 உறுப்பினர்கள் என்றுள்ள விகிதம் ­அதாவது 14 விழுக்காடு என்பது எதிர்காலத்திலும் அப்படியே நீடிக்கும் வகையில் தொகுதி வரையறை இருக்க வேண்டும். இது ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் உரிமையாகும். இதுவே கூட்டாட்சிக் கோட்பாட்டின் முறையுமாகும்.

1937 முதல் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் அவர்கள் இந்திய அரசியலில் தீர்மானிக்கக் கூடிய ஆற்றலாக வளர முடியவில்லை. இதற்குக் காரணம் வருணாசிரம சாதியக் கட்டமைப்பே ஆகும். அதேபோல் பெண்கள் 33 விழுக்காடு அளவிற்குச் சட்டமன்றங்களிலும் மக்களவையிலும் உறுப்பினர்களாக இடம்பெற்றாலும் அமைச்சர்களானாலும் அரசியலில் திசைவழியைத் தீர்மானிப் பவர்களாக உயர்நிலைப் பெறுவார்களா? மனு ஸ்மிருதியில், ஒரு பெண் இளமையில் தந்தைக்கும், திருமணத்திற்குப்பின் கணவனுக்கும், கணவன் இறந்தால் மகனுக்கும் கட்டுப்பட்ட வளாக இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதே இந்திய சமூகத்தின் வாழ்வியலாக இன்றும் நீடிக்கிறது.

திருமணம், பிள்ளை வளர்ப்பு, குடும்பப் பொறுப்பு, மதம்-சாதி-பண்பாடு சார்ந்த சடங்குகளைச் செய்தல் முதலானவை பெண்கள் சுதந்திரமாக ஆண்களைப் போல் செயல்படுவதற்குத் தடையாக உள்ளன. இப்பொறுப்புகளை ஆண்கள் விருப்பமுடன் பகிர்ந்து கொள்ளும் நிலை ஏற்படும் போதுதான், பெண்கள் அரசியலில் ஈடுபட முன்வருவார்கள். பா.ச.க. தொலைநோக்குடன் 2007 முதலே 18-35 அகவையில் உள்ள பெண்களுக்கு அரசியல் பயிற்சி அளித்து வருகிறது.

பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். விரைவில் செயல்படுத்த மக்கள் குரல் கொடுக்க வேண்டும். 2024 தேர்தலுக்குப் பின் ஒன்றிய அரசில் யார் ஆட்சி அமைத்தாலும் பிற்பட்ட வகுப்பு பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு முழு உரிமை கொண்டாடும் பா.ச.க.வின் போலித்தனத்தை மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும்.

- க.முகிலன்

Pin It