ஆயிரமாண்டுக் காலமாக ஆதிக்க மரபினரால் சமூக ரீதியிலுல், பொருளாதார நிலையிலும் பிற்படுத்தபபட்ட மக்களின் வாழ்வு சுதந்திரமடைந்த பின்னரும் தொடரக் கூடாது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்ட “மண்டல்” கமிசன் பரிந்துரைகளை நீர்த்துப்போக செய்திட செய்யப்படும் சூழ்ச்சிகளுக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் ஆளாகக் கூடாது.
காகா கலேல்கர் ஆணையத்தினை நிராகரித்த அதிகார வரம்பினர் நாடு முழுவதிலும் அன்றிருந்த 406 மாவட்டங்களில் 405 மாவட்டங்களில் உள்ள மாவட்டங்கள் நேரிடையாக பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையினை ஆய்வு செய்தவர் பிகாரின் முதல்வராகவும். வழக்கறிஞராகவும் இருந்த ‘பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல்’ எனப்படும் பி.பி.மண்டல்.
1979ல் சரண்சிங் உள்துறை அமைச்சராக இருந்த போது நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் யார்? அவர்களை எப்படி வரையறுப்பது? அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? போன்ற ஆய்வுகளை இந்தியா முழுமைக்கும் செய்திடவேண்டும் என்ற காரணத்தால் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர்களுக்கான ஆணையத்தினை அமைத்திட முன்முயற்சிகளை மேற்க்கண்ட போது அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அதனை ஏற்றார் அப்பொழுது அமைக்கப்பட்டது தான் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையமான மண்டல் கமிசன்’.
அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பிற்ப்படுத்தப் பட்டோர்களை சமூக ரீதியிலும் – கல்வி ரீதியாகவுமே வகைபடுத்தியிருந்த நமக்கு மண்டல் அவர்களின் பொருளாதாரரீதியான அளவுகோலும் வகைப்படுத்திட உபயோகப்பட்டது, பல்வேறு விடயங்களில் மாநில அளவைக் காட்டிலும் அதிகமான அளவில் இருக்கும் சாதிகளை குறித்துக் கொண்டார்.
உதாரணத்திற்கு பொருளாதார ரீதியாக தரமாக இருப்பவர்களை வகைபடுத்தும் போது ஓலைக் குடிசையில் வசிப்போர்கள், குடிநீருக்காக அரை கிலோமீட்டருக்கும் மேலான தூரம் நடந்தே செல்பவர்கள், மாநில சராசரியை விட அதிகக் கடன் பெற்றவர்கள் என்ற அளவுகளையும் இணைத்துக் கொண்டார்.
இவ்வாறான அளவீடுகளின் அடிப்படையில் நாட்டில் 3734 சாதிகள் இன்னும் பிற்படுத்தப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் அதனைக் கலைவதற்கு ஏற்கனவே அட்டவனை மற்றும் பட்டியலினச் சாதிகளுக்கு வழங்கபடும் 22.5% இட ஒதுக்கீட்டுடன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் 27% கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைச் செய்தது.
பரிந்துரைகள்
மண்டல் அவர்கள் தனது அறிக்கையில் ஆறு வித பரிந்துரைகளை அரசிடம் முன் மொழிந்தார்
1. கல்வியில் 27% இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
2. வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
3. வங்கிக் கடன் வழங்களிலும் 27% பின்பற்றபடல் வேண்டும்.
4. ஆதிக்கச் சாதிகளின் கைகளில் இருக்கும் நிலவுடமை விடுவிக்கப்படல் வேண்டும்.
5. அரசு உதவிபெரும் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கபடல் வேண்டும்.
6. மீனவர்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பட்டியலுக்கு மாற்றி அவர்களுக்கு தனித் தொகுதிகள் வழங்க வேண்டும்.
அரசியல் கட்சிகளிடம் புரையோடியோயிருக்கும் மனநிலை!
பொதுவாக இந்திய சமூகம் சாதி ரீதியாகப் பிளவுகொண்ட சமூகமாக பன்னெடுகாலமாக வாழ்ந்துவருவதால் அதன் தாக்கம் அரசியல் கட்சிகளிடமும் இல்லாது இல்லை. இதன் காரணமாக நல்ல பலத் திட்டங்களும் பல நேரங்களில் கரை சேதாதிருக்கின்றன. அந்த வகையில் மண்டல் கமிசனின் அறிக்கை 1980களிலே முடிவுற்ற நிலையிலும் அதனைச் செயலாக்கம் புரிவதற்குக் காலநிலை கைகூடவில்லை அல்லது கைகூட விடவில்லை.
1980 ஜனதா கூட்டணி ஆட்சிக் கவிழ்க்கப்பட்டிருந்தன, அதன் பின் ஆட்சிக்கு வந்த இந்திராவும் அவர் கொலையுண்டபின் ராஜிவும் மண்டல் கமிசன் என்றொரு அறிக்கை ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது என்று அறியாமலேயே ஆட்சி நடத்தியது, இடையே ஆர்.எஸ்.எஸ், பாஜக என்றொரு கட்சியைத் தன் இந்துத்துவா அஜண்டாவினை நிலைநிறுத்த, தக்க சூழலை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது.
பொதுவாக பாஜகவிற்கும் அதன் சித்தாந்தத்திற்கும் இட ஒதுக்கீட்டை குறித்தோ தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றங்களைக் குறித்தோ எந்த வகையிலும் முக்கியமும் இல்லை! தன் பார்ப்பன முன்னேற்றமே பிரதானமாக எடுத்துச் செயல்படும். அந்த வகையில் அரசியல் அதிகாரத்தில் அன்றிலிருந்த பாஜக அதனுடைய கூட்டணி ஆட்சியான ‘தேசிய முன்னணியின்’ பிரதமராக இருந்த ‘வி.பி.சிங்’, ‘மண்டல் கமிசன்’ பரிந்துரையினை தூசித்தட்டி 1990 ஆகஸ்டு 7 அன்று உயிர் கொடுத்தது. அதற்காக வி.பி,சிங் அரசாங்கம் கொடுத்த விலை ஆட்சிக் கவிழ்ப்பு.
வடமாநிலமும் – தென்னகமும்
இட ஒதுக்கீட்டிற்கான கருத்தியலும் – சமூக நீதியினை நிலை நிறுத்துவதற்கான அவசியமும் தமிழகத்தினை தாண்டி (தென் மாநிலங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்) இந்தியா முழுமையிலும் படராமல் பார்த்துக் கொண்டன காங்கிரஸும் – பாஜகவும், காரணம், இவ்விரண்டு கட்சிகளிலும் இந்த வகையில் ஒர் ஒன்றுப்பட்ட மனநிலை தான் நிலவிய காரணத்தால், ஏனென்றால் உயர் வகுப்பினர் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் அரசியல் ஆதிக்கங்களை இவ்விரண்டிலும் நின்று செயல்படுத்தியதினால் ஏற்பட்ட விளைவு!!.
போராட்டங்களும் கலவரங்களும் இடஒதுக்கீடு விளைவாக உருவாக்கப்பட்டன. பின்னணியில் காங்கிரஸும் – பாஜகவும் ஒழிந்துக் கொண்டன அத்துடன் இந்துத்துவத்தின் இராமர் கோயில் பிரச்சாரமும் சூடுபிடிக்க பாஜக தனது அவப்பெயரை ராமர் கோயில் மீட்பு என்னும் பிரச்சாரத்தால் இந்துக்களிடம் அரசியல் ஆதாயங்களைப் பெற்றது மாறாக யாதவ சமூகத்தின் ஆதரவுப் பெற்றிருந்த முலாயம்சிங் யாதவ் – லல்லு பிரசாத் யாதவ் போன்றோரின் எழுச்சி அந்த பிராந்தியங்களிலேயே காங்கிரஸ் கட்சினை வீழவே வைத்தது இன்று வரை அதனை நிமிர விடாமல் வைத்திருக்கின்றது.
வழக்குகளும் – எதிர்ப்புகளும்
மண்டல் கமிசன் அறிக்கையினை அமல்படுத்தப்படக் கூடாது என்று சிந்தித்த உயர் வகுப்பினர் பல்வேறு வகையிலும் அதற்கான முட்டுக் கட்டையினை போட்டுக்கொண்டே வந்தனர், அதனடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் போடபட்ட எதிர்ப்பு வழக்கு அரசியலமைப்பு சட்டத்தின் கூறு 340வது படி சரியே என்றும் அதே நேரத்தில் மொத்த இட ஒதுக்கீட்டில் 50%க்கு மேல் அமைந்திடக் கூடாது என்று 1992 ஆம் ஆண்டு ‘இந்திரா சகானி’ வழக்கில் தீர்ப்பளித்தது.
ஆனால் சமூகநீதி கருத்தியல் புரையோடிக் கொண்டிருக்கும் தமிழகம் தான் அமல்படுத்திக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான 69% விழுக்காடு இடஒதுக்கீடு எந்தவகையிலும் பங்கம் விளைந்திடக் கூடாது என்பதற்காக அதனை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 9ல் இணைத்ததின் காரணத்தால் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு சலுகையினை மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக கொடுக்க முடிகின்றது, தற்போது அதற்கும் தடைபோட முயற்சிகள் வழக்கின் வாயிலாக தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
பிற்படுத்தப்பட்டவர்கள்
பிற்படுத்தப்பட்டவர்கள் என்பவர்கள் ஏதோ பிறப்பால் உருவானவர்கள் இல்லை, மாறாக ஆதிக்க மனப்பான்மை உடையவர்களால் ஏற்படுத்தப்பட்டவர்கள். இதற்கு அடிப்படையே பொருளாதார நிலையே பிரதானம் 1979ல் ‘மண்டல்’ அவர்களால் 3734 சாதிகள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று நீண்ட ஆய்வுக்கு பின் அடையாளப் படுத்தப்பட்டன.
அரசு அதற்கான தீர்வினை சரியான முறையில் நடைமுறை படுத்தியிருந்தால் அவர்கள் முன்னேறி பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும் மாறாக தங்களையும் ‘பிற்படுத்தப்பட்டோர்கள்’ என அறிவியுங்கள் என்ற கோரிக்கைகள் ஏனைய சாதிகளிடம் தற்போது எழுந்து கொண்டிருக்காது அல்லது அதிகரித்துக் கொண்டிருக்காது.
- நவாஸ்