தொண்டு வீராசாமி ஏன் விலகினார்?

(அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடியதற்காக பெரியார் இயக்கத்தின் முன்னணித் தலைவராக இருந்த தொண்டு வீராசாமியை - பெரியார் கட்சியில் இருந்து நீக்கினார் என்று பொய்யுரைக்கும் ரவிக்குமார், ஸ்டாலின் ராஜாங்கத்துக்கு ஆதாரங்களுடன் மறுப்பு.)

ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு நெய்வேலியில் இருந்து வெளி வந்த ‘தலித்’ எனும் ஏட்டின் முதல் இதழில் (1997) இளையபெருமாள் அவர்கள் சொன்னதாக வந்திருந்த ஒரு செய்தி குறித்து தோழர் எஸ்.வி. ராஜதுரை அவர்கள் எழுதி, விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ என்ற நூலில் (1998) 21வது அத்தியாயமாக ‘பெரியாரும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரையின் அடிக்குறிப்பாக எழுதப்பட்டுள்ள ஒரு செய்தி:

periyar 350“பின்னாளில் ‘தொண்டு’ என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த வீராசாமியைப் பெரியார் 1952இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி (மாயவரம் இரட்டை உறுப்பினர் தொகுதி என்பதே சரி) ரிசர்வு தொகுதியிலிருந்து வெற்றி பெறச் செய்ததுடன் பெரியார் 1952இல் உருவாக்கிய அறக்கட்டளை உறுப்பினராகவும் ஆக்கினார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் காரணமாக பெரியாரிடமிருந்து பிரிந்த ‘தொண்டு’ வீராசாமியை அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியதற்காக கழகத்திலிருந்து பெரியார் வெளியேற்றினார் என்ற அபத்தமான அருவருக்கத்தக்க குற்றச்சாட்டை பொறுப்புணர்வு மிக்க தலித் தலைவர் இளைய பெருமாள் கூறியுள்ளது (தலித் எண்:1. நெய்வேலி 1997) வருந்தத்தக்கது - எஸ்.வி.ஆர்” என்பதே அவ்வடிக்குறிப்பு.

ஆனால் ‘எழுதாக் கிளவி: வரலாற்று அனுபவங்கள்’ என்ற நூலில் ஸ்டாலின் ராஜாங்கம் “வீராசாமி பெரியாரிடமிருந்து ஏன் விலகினார் என்பதைத் துல்லியமாக அறிய முடியவில்லை. ஆனால் எஸ்.வி. ராஜதுரை எழுதிய ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ (1998) என்ற நூலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாகவே வீராசாமி பிரிந்தார் என்று எழுதிய அவர் அவை எவை என்று கூறாமலேயே முடிக்கிறார். அம்பேத்கர் பிறந்த நாளைக் கொண்டாடியதற்காக பெரியார் வெளியேற்றினார் என்று எல். இளையபெருமாள் கூறிய கருத்தொன்றை அதே இடத்தில் எடுத்துக்காட்டும் எஸ்.வி.ஆர் “அபத்தமானது; அருவருக்கத்தக்க குற்றச்சாட்டு” என்று கூறுவதோடு மட்டும் முடித்துக் கொள்கிறார்.

இளையபெருமாளின் கூற்று மேற்கொண்டு ஆராயத் தக்கவையாக இருக்கலாம். ஆனால், அவரின் கூற்றை அபத்தமானது என்று கூற எந்த ஆதாரத்தையும் எஸ்.வி.ஆர் கூறவில்லை என்பதுதான் விந்தை. எல்.இளையபெருமாளின் குற்றச்சாட்டு பெரியார் மீது விமர்சனம் வைக்கிறது. எனவே, அதைப் பற்றி கூற வேண்டுமானால் எஸ்.வி.ஆர் அதை மறுப்பதற்கான ஆதாரம் இருக்க வேண்டும். எஸ்.வி.ஆர் ஆதாரம் தரவில்லை. ஆதாரமில்லாவிட்டாலும் அதை மறுக்க வேண்டுமென்ற ‘அறிவுஜீவித் தன்முனைப்பு’ என்பதைத் தவிர வேறெந்த ‘நியாயமும்’ எஸ்.வி.ஆரிடம் இல்லை’ - [எழுதாக் கிளவி: (Kindle Edition வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள் பக் : 149.150) ]

“அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடியதற்காக (தொண்டு வீராசாமி) கழகத்திலிருந்து பெரியார் வெளியேற்றினார்” என்று கூறும் “இளைய பெருமாளின் கூற்று மேற்கொண்டு ஆராயத் தக்கவையாக இருக்கலாம்” என்று அது ஒரு அற்ப குற்றச்சாட்டு தானே என்று எளிதாகக் கடந்து செல்லும் ஸ்டாலின் ராஜாங்கம், அதை மறுப்பதற்கான ஆதாரம் தராதது அறிவுஜீவித் தன்முனைப்பு என்பதைத் தவிர வேறெந்த ‘நியாயமும்’ எஸ்.வி.ஆரிடம் இல்லை” என்று ‘நாட்டாமை’ தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ஒரு செய்தி குறித்து விமர்சனம் செய்யும் போது “அம்பேத்கர் பிறந்த நாளைக் கொண்டாடியதற்காக (வ.வீராசாமியை) கழகத்திலிருந்து பெரியார் வெளியேற்றினார்” என்பது எந்த ஆண்டில், எங்கு அம்பேத்கர் விழா கொண்டாடியதற்காக என்பவற்றையாவது கூறியிருக்க வேண்டும்! அது குறித்து ஏதேனும் உரையாடல், விசாரணை நடந்ததா? அல்லது அம்பேத்கர் விழா கொண்டாடியதைக் கேள்விப்பட்டவுடன் வெளியேற்றப்பட்டு விட்டாரா? என்ற விளக்கமும் இன்றி கூறிய குற்றச்சாட்டை விமர்சித்த எஸ்.வி.ஆர் குறித்து “எல். இளையபெருமாளின் குற்றச்சாட்டு பெரியார் மீது விமர்சனம் வைக்கிறது. எனவே, அதைப் பற்றி கூற வேண்டுமானால் அதை மறுப்பதற்கான ஆதாரம் இருக்க வேண்டும். எஸ்.வி.ஆர் ஆதாரம் தரவில்லை” என்ற குற்றச்சாட்டை எஸ்.வி.ஆர் மீது வைப்பதோடு ‘அறிவுஜீவித் தன்முனைப்பு’ என்ற தீர்ப்பை மட்டும் கொடுத்திருக்கிறார்.

‘தலித்’ இதழின் நேர்காணலில் “அம்பேத்கர் விழா நடத்தியதற்காக தொண்டு வீராசாமி பெரியார் கட்சியை விட்டு நீக்கினார்” என்று கூறியதுதான் விவாதத்தின் மையப் பொருள் ஆகி உள்ளது.

அந்த அடிக்குறிப்பிலேயே ‘தொண்டு’ வீராசாமி 1952ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) தனி வேட்பாளராக போட்டியிடச் செய்ததோடு (சுயேட்சை) பெரியாரின், திராவிடர் கழகத்தின் தீவிர பரப்புரையாலும் வெற்றி பெறவும் வைத்தனர் என்பதையும் கூறுகிறது..

அத்தேர்தலில் வீராசாமி அவர்களை உறுதியளித்தபடி ஆதரிக்கவில்லை என்பதை கம்யூனிஸ்ட் கட்சியுடன் முரண்படச் செய்யும் அளவுக்கு பெரியாருக்கு ‘தொண்டு’ வீராசாமி மீதான ஒரு அக்கறை இருந்திருக்கிறது.

12.4.1953 அன்று மதுரையில் நடைபெற்ற தென்பகுதி ரயில்வே மென் யூனியன் கிளையின் கூட்டத்தில் (திராவிடர் கழகத்தின் துணை அமைப்பு) மத்திய சங்கத் தலைவர் எஸ். இராகவானந்தம் (பின்னர் அஇஅதிமுக அமைச்சராகவும் இருந்தார்) ஆற்றிய உரை 23.4.1953, 26.4.1953 ஆகிய நாளிட்ட ‘விடுதலை’ ஏடுகளில் வெளிவந்துள்ளது. 1952 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் கொண்டிருந்த உறவும், நட்பும் முறிந்து போவதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.

அவரது உரையின் ஒரு பகுதி: “தேர்தலின் போது பெரியார் அவர்களிடம் இவர்கள் (கம்யூனிஸ்டுகள்) கேட்டுக் கொண்டது என்னவென்றால், மணலி கந்தசாமி, ஜீவானந்தம், அனந்த நம்பியார், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட 4, 5 கம்யூனிஸ்ட்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் போதுமென்றும், மற்ற இடங்களில் பெரியார் அவர்கள் ஆதரிக்கும் தோழர்களைத் தாங்கள் ஆதரிப்பதாகவும் உறுதி கூறினார்கள்.

ஆனால் பிறகு நடந்து கொண்டதென்ன? உங்களுக்குத் தெரியும், கம்யூனிஸ்ட் தோழர் அனந்தன் நம்பியார் பார்லிமென்ட்க்கு நின்ற அதே தொகுதியில், ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு (பட்டியலினத்துக்கு) எங்கள் சங்க பொதுச்செயலாளர் தோழர் வீராசாமி நின்றார். அவரை ஆதரிப்பதாக வாக்குறுதி கொடுத்த கம்யூனிஸ்டுகள், தாங்கள், ஒதுக்கப்பட்ட அந்த தொகுதியில் நிறுத்தி வைத்த கம்யூனிஸ்ட் அபேட்சகரை (வேட்பாளரை) வாபஸ் வாங்குவதாக உறுதி கூறிக்கொண்டு, வாபஸ் வாங்குவதற்கு முடிவான தேதி முடிகிற வரையிலும் வாபஸ் வாங்காமலே இருந்து விட்டார்கள். ஏதோ அதற்கு சமாதானம் சொல்லி, தங்களால் ஒதுக்கப்பட்ட ஸ்தானத்துக்கு நிறுத்தப்பட்டத் தோழரை Withdrawal தேதி வரையிலும் வாபஸ் வாங்காமல், வாக்கெடுப்புக்கு சில நாட்களுக்கு முன்பு வாபஸ் வாங்குவதாக அறிவித்துவிட்டு, வாக்கெடுப்பு நேரத்திலும் தங்கள் ஆசாமியின் பெட்டியும் இருக்கும் படி செய்து கொண்டு, தங்கள் தோழர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழக்கமாக அவர்கள் செய்வார்களே தலைமறைவு வேலைத்திட்டம், அந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில், வீராசாமி அவர்களுக்கு ஓட்டு போடாமல், வாபஸ் வாங்கப்பட்ட தங்கள் ஆசாமியில் பெட்டியிலேயே ஓட்டுப் போடும்படி செய்து வந்தார்கள். அதன் காரணமாகவே வீராசாமி அவர்களுக்கு விழவேண்டிய ஓட்டுகள் குறைந்து காலியாக இருக்க வேண்டிய வாபஸ் வாங்கிக் கொள்ளப்பட்ட கம்யூனிஸ்ட் பெட்டியில் 80,000 ஓட்டுகளுக்கு மேல் விழுந்திருக்கின்றன. சுமார் 20,000 ஓட்டுகள் Invalid (செல்லாதவை) ஆயின. வீராசாமி அவர்கள் தோற்க வேண்டும் என்கிற நோக்கமல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? இவ்வளவு துரோகத்திற்குப் பிறகும் எங்கள் பொதுச்செயலாளர் தோழர் வீராசாமி அவர்கள் 10,000 ஓட்டுக்களே அதிகம் பெற்று காங்கிரஸ் மெம்பரிடம் வெற்றி பெற்றாரென்றால் அதற்கும் காரணம் திராவிடர் கழகம் செய்த தீவிர வேலையும், கழகத்திற்கு அங்கே இருந்த செல்வாக்கும் தான்” என்பதுவே அந்த உரையின் ஒரு பகுதியாகும்.

இதன்வழியாக 1952 இல் குடியரசான இந்திய நாடாளுமன்றத்துக்கு நடந்த முதல் தேர்தலில் திராவிடர் கழகம், தனது உறுப்பினரான தோழர் வ.வீராசாமி தனி வேட்பாளராக போட்டியிட்டபோது எவ்வளவு தீவிரமாக ஆதரித்தார்கள் என்பதும், வீராசாமி பெரியார் தொடங்கிய தென்பகுதி ரயில்வே மென் யூனியனின் பொதுச் செயலாளராக இருந்ததையும் நம்மால் அறிய முடிகிறது.

மேலும் அதற்கு முன்னதாகவே 24.3.1945 இல் ‘தொண்டு’ வீராசாமி அவர்களின் முயற்சியில் ‘அம்பேத்கர் மாணவர் இல்லம்’ தொடங்க உதவி செய்துள்ளது. மீனாம்பாள் சிவராஜ் தலைமையில் நடந்த அவ்விழாவில் சிறப்புரையாற்றியவர்கள் தி.பொ, வேதாச்சலமும் எஸ். ராமநாதனும் ஆவர். (குடிஅரசு 7.7.1945) தொடர்ந்து 17.3.1947 அன்று அம்பேத்கர் மாணவர் இல்லத்தின் இரண்டாவது ஆண்டு விழா பெரியார் தலைமையில் தி.பொ.வேதாச்சலம், பி.சிவபிச்சை, வ.வீராசாமி ஆகியோரின் சிறப்புரையோடு நடந்துள்ளது.(குடிஅரசு 22.3.1947)

இதற்கிடையில் மற்றொரு செய்தியையும் பதிவு செய்தாக வேண்டும். கடந்த ஆகஸ்ட் 30ஆம் நாள் முடிவெய்திய ஓய்வு பெற்ற மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதி சாமிதுரை அவர்கள் ‘அம்பேத்கர் மாணவர் இல்லம்’ இயங்கியதால் தான் அதில் தங்கி தனது கல்லூரிக் கல்வியைக் கற்க முடிந்தது” என்று குறிப்பிட்டதோடு பின்னர் அந்த இல்லம் திருச்சி பெரியார் மாளிகையின் ஒரு பகுதியில் வாடகை இன்றி நடந்து வந்த செய்தியையும் 2018இல் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் எடுத்துக் கூறியுள்ளார் என்பதையும் இவற்றோடு பொருத்திப் பார்க்க வேண்டிய செய்தியாகும்.

‘தொண்டு’ வீராசாமி அவர்கள் அம்பேத்கர் மாணவர் இல்லம் மட்டுமின்றி திருத்துறைப்பூண்டியில் ‘பெரியார் ராமசாமி மாணவர் இல்லம்’ என்ற பெயராலும் அடித்தட்டு மாணவர்களுக்கான விடுதி ஒன்றினையும் நடத்தியுள்ளார். 6.4.1953 நாளிட்ட ‘விடுதலை’ ஏட்டில் கீழ்கண்ட ஓர் அறிக்கையினை அவர் வெளியிட்டுள்ளார்.

“திருத்துறைப்பூண்டியில் சென்ற ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வரும் ‘பெரியார் ராமசாமி மாணவர் இல்லத்திற்கு’ சென்னை சர்க்கார் அங்கீகாரம் அளித்துள்ளார்கள் என்பதைப் பெரும் மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கிறேன்” என்று தொடங்கும் அந்த அறிக்கை “வ.வீராசாமி, ஸ்தாபகர் - செயலர்” என்ற பெயரால் வெளியிடப்பட்டுள்ளது.

(தொடரும்)

கொளத்தூர் மணி

Pin It