பார்ப்பன சூழ்ச்சியில் வீழ்ந்த சிவாஜி

பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (சென்ற இதழ் தொடர்ச்சி)

கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509 - 1530)

1) தென்னகம் முழுவதையும், தனது ஆட்சிக்கு உட் படுத்திய மன்னர். பார்ப்பன தாசர். வர்ணா°ரமப் பற்றாளர். பார்ப்பனர்களுக்கே முக்கிய பதவிகளைத் தந்தார். பெரும்பாலான பார்ப்பனர்கள் சுகவாசி களாக, உண்டு உறங்கிக் கிடந்தனர். “வேத மார்க்க பிரதிஷ்டாபன சாரியா” என்று பட்டம் சூட்டிக் கொண்டனர்.

2) நீண்ட காலத்துக்குப் பிறகு, அவருக்கு குழந்தைப் பிறந்தது. திருமலைராயன் என்று பெயரிட்டு, 6 ஆம் வயதிலேயே முடிசூட்டி வைத்தார். முடிசூட்டிய ஒரு மாதத்திலேயே திம்மாதண்ட நாயகன் எனும் பார்ப்பான், குழந்தைக்கு நஞ்சு ஊட்டிக் கொன்றான். இவன் சாளுவ திம்மன் எனும் பார்ப்பன முதலமைச்சரின் மகன்.

3) 3 பார்ப்பனர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திம்மா தண்டநாயகன் சிறையிலிருந்து தப்பி, தனது பார்ப்பன உறவினரான அதிகாரிகளிடம் தஞ்ச மடைந்து, சதி செய்து நாட்டில் கலகத்தை உருவாக்கினான்.

4) படையினால் மீண்டும் பிடிக்கப்பட்டான்; விசாரணை நடந்தது. திம்மா தண்டநாயகன், அவனது தந்தை சாளுவ திம்மன், தம்பி சாளுவ குண்டராஜன் ஆகிய பார்ப்பனர்கள் கண்களை பறிக்க மன்னர் ஆணையிட்டார். பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை தரப்படக் கூடாது என்பதால், கண்கள் மட்டும் பறிக்கப்பட்டன.

5)  உயிரினும் மேலாக வளர்த்த குழந்தையின் மரணத்தைத் தாங்காமல், கிருஷ்ண தேவராயரும் உயிர் நீத்தார்.

மதுரை - திருமலை நாய்க்கர் (கிபி. 1529 - 1736)

1) மதுரையில் பாண்டியர்கள் ஆட்சிக்குப் பிறகு விஜய நகரத்தின் அரசப் பிரதிநிதிகளான நாயக்க மன்னர்கள் ஆளத் தொடங்கினர். அதில் ஒருவன் திருமலை நாயக்கர்.

2) கோயில்கட்டுவதற்கும், கோபுரங்கள் கட்டுவதற்கும் பணத்தை அள்ளிக் கொட்டினான்.

3) ‘அபிஷேகப் பண்டாரம்’ எனும் பார்ப்பனர் அல்லாதார் நிர்வாகத்தில் இருந்த மதுரை மீனாட்சி கோயிலை, அவர்களிடமிருந்து பறித்து, பார்ப்பனர்களான குலசேகரப்பட்டன், விக்கிரமப்பட்டன் கும்பலிடம் ஒப்படைத்தான்.

4) நீலகண்ட தீட்சகன், ராமப்பைய்யன் என்ற பார்ப் பனர்கள் அமைச்சர்களாகவும், தளபதிகளாகவும் இருந்து மன்னனை ஆட்டிப் படைத்தனர். தமிழர்களான பண்டாரகர்கள் பூசை செய்த பழனி கோயிலை அவர்களிடமிருந்து பறித்து,  பார்ப்பனர் களிடம் ஒப்படைத்தது, இவன்தான்.

5) திருமலை நாயக்கன் படைத் தளபதியாக இருந்த பார்ப்பானே, மைசூர் போரில் எதிரிகளிடம் பணம் வாங்கி, காட்டிக் கொடுத்தான்.

6) இத்தாலி நாட்டு கிறி°தவ பாதிரியான இராபர்ட்-டி நொபிலியுடன் மன்னர் திருமலை நாயக்கர் உறவு கொண்டார். அவர் கிறி°துவ மதப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தான். இதனால் பார்ப்பனர்கள் மன்னரை வெறுக்கலாயினர்.

7) அர்ச்சகப் பார்ப்பனர்கள் மன்னரிடம், ‘மதுரை மீனாட்சிக் கோயிலுக்குள் புதையல் இருக்கிறது. அதை எடுத்தால், நாட்டில் பொருளாதார நெருக்கடியைப் போக்கிடலாம்’ என்று கூறி, அர்த்த ஜாம பூஜை முடிந்த பிறகு, கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

ஓர் இருளடைந்த சுரங்கத் துக்குள் புதையல் இருப்பதாக உள்ளே அனுப்பி, உள்ளே போனவுடன் வாயிலைப் பாறாங்கல் போட்டு மூடினர். மன்னர் மூச்சுத் திணறி உள்ளேயே செத்தார். மறுநாள் மதுரை மீனாட்சி, மன்னரை தன்னோடு அய்க்கியப்படுத்திக் கொண்டார் என்று பறைசாற்றி மக்களை நம்பச் செய்து விட்டனர். மன்னரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது, அவர் அதிகாரத்தில் அமர்த்திய ‘குலசேகரப் பட்டன்’ வகையறாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சொக்கநாத நாயக்கன்

1) 16வது வயதிலே பட்டத்துக்கு வந்தவன் (மதுரை) சொக்கநாத நாய்க்கன். பார்ப்பன அமைச்சர்கள் சதி செய்தனர். மன்னரின் தம்பியை அரசராக்க சதி செய்தனர். மன்னனை, தனி அறையில் அடைத்தனர். அரசனைக் கொலை செய்ய திட்டமிட்டனர். அரண்மனைப் பெண் ஒருவள் மூலம் அறிந்த அரசன், சதிக் கும்பல் கொல்ல வரும்போது பிடித்தான். ஒரு பார்ப்பன அமைச்சருக்கு மரணதண்டனை தர உத்தரவிட்டான். மற்றொரு அமைச்சர் பார்ப்பனர் என்பதால், பார்ப்பனருக்கு மரண தண்டனை தரக்கூடாது என்று ‘தர்மத்தை’க் எடுத்துக் கூறவே, ஆளைக் கொல்லாமல், கண்கள் மட்டுமே பிடுங்கப்பட்டு விரட்டப்பட்டான்.

2) சொக்கநாதன் பழமைவாதி. வர்ணா°ரமப் பித்துப் பிடித்தவன். தங்கத்தில் ஒரு பசு செய்து, அதன் வாய் வழியாகப் புகுந்து வெளிவந்து, அந்தப் பொன்னாலான பசுவை பார்ப்பனர் களுக்கு தானமாக வழங்கினான். இதற்கு ‘இரண்ய கர்ப்பதானம்’ என்று பெயர்.

3)அரசன் ஆட்சியை மறந்து வைதீகச் சடங்குகளில் மூழ்கி, பார்ப்பனர்களுக்கு பொருள்களை வாரி இறைத்தான். பார்ப்பன அதிகாரிகள் மக்களை சுரண்டிக் கொண்டிருந்தனர்.

4) கோவிந்த தீட்சன் எனும் பார்ப்பான், அமைச் சராக இருந்தான். இவன், சொக்கநாதனுக்கு மூளைக் கோளாறு என்று கூறி மக்களை நம்பச் செய்து, சொக்கநாதனின் தம்பியும், தனது நண்பனுமான அளகாத்திரியை அமைச்சராக் கினான். அளகாத்ரியும் கோவிந்த் தீட்சனும் மக்களை வாட்டி வதைத்தனர். ‘ரஸ்தம்கான்’ என்ற முகம்மதிய வீரன், இருவரையும் கைது செய்து சொக்கநாதனை விடுவித்தான். மனம் உடைந்த சொக்கநாதன், நீண்ட நாள் உயிர் வாழவில்லை.

விஜயராகவன்

1) தஞ்சையை ஆண்ட விஜயராகவன், நாயக்க மன்னர்களில் கடைசி மன்னன். பார்ப்பன அடிமை. தினமும் 12,000 பார்ப்பனர்களுக்கு அறுசுவை உணவு போட்டான். பார்ப்பனர் களுக்கு உணவு பரிமாறப்பட்ட பிறகே அவன் சாப்பிடுவான்.

2) ஒருமுறை பார்ப்பனர்களுடன் ராமேசுவரம் சென்று, மொட்டை அடித்து, காவி தரித்து, எடைக்கு எடை பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கினான். தஞ்சை திரும்பியவுடன், “அயல் மன்னன் ஆட்சியிலுள்ள கடவுளுக்கு அளவற்ற பொருள்களைத் தானமாக வழங்கியதால், சொந்த நாட்டு தெய்வம் சீற்றமடைந்துள்ளது” என்று பார்ப்பனர்கள் கூறினர். 20,000 பொன்னை பார்ப்பனர்களுக்கு அளித்து, தெய்வத்தின் சீற்றத்தை அடக்கிவிட்டதாக நம்பினான்.

3) அவனது குரு, குமார தாதாச்சாரி என்ற பார்ப்பனர், ஒவ்வொரு நாளும் 30 மைல் தொலைவிலுள்ள திருவரங்கம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அதேபோல் பார்ப்பன குருவையும், விலை உயர்ந்த பொன் னாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், அரண்மனை தாதிகள், குருவை அமர வைத்து 30 மைல் தூரத்க்கு தூக்கி வருவார்கள். அதற்குப் பின்னே மற்றொரு பளபளப்பான பல்லக்கில் தாதாச்சாரியின் “செருப்புகள்” நவரத்தினங்களால் இழைக்கப் பட்டு, தாதிகளால் தூக்கப்பட்டு வரும். மன்னன், கையில் பூசை பாத்திரம் ஏந்தி கால்நடையாக நடந்து வருவான்.

4) நாட்டில் கடும் பஞ்சம்; கொடும் நோய்; மக்கள் வேறு பகுதிகளுக்குக் குடியேறினர். பலர் டச்சுக் காரர்களின் சர்ச்சுகளில் அடைக்கலமானார்கள். சீரழிவிற்குக் காரணம், கிறிஸ்தவ மதமும், அவர்களின் சர்ச்சுகளும் தான் என்று பார்ப் பனர்கள் பிரச்சாரம் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வந்த கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினர்.

5) இளவரசன் மன்னாடுதாசன், மனம் கொதித் தான். தந்தையின் மூடத்தனத்தைக் கண்டித் தான். மத குருவுக்கும், கோயிலுக்கும் பணத்தைச் செலவிட்டால், பிறகு, அரசாங்கம் ஏன்? நீதிமன்றம் ஏன்? என்று கேட்டான்.

6) இளவரசனை வீழ்த்த பார்ப்பனர்கள் சதித் திட்டம் போட்டார்கள். இளவரசனை மன்னனிட மிருந்து பிரித்தார்கள்.

7) மதுரை மன்னன் சொக்கநாத நாயக்கனுக்கும், விஜயராகவனுக்கும் கோவிந்த தீட்சத் எனும் பார்ப்பான் சதி செய்து போர் மூட்டினான். விஜயராகவன் தோல்வி அடைந்தான். பார்ப்பன புரோகிதர்கள் மன்னன் மறு பிறவி எடுக்க வேண்டும் என்று கூறி, அதற்காக சடங்குகளை செய்ய வேண்டும் என்றனர். வெண்கலத்தாலான பசு செய்யப்பட்டது. மன்னன் உள்ளே புகுந்தான்; பார்ப்பனர்கள் மந்திரம் ஓத, பசு, கன்றினை ஈனுவது போல, உயிரற்ற அந்த பசு, அரசனை ஈன்றது.

மன்னன், குழந்தையைப் போல கையை, காலை ஆட்டிக் கொண்டு வெளியே வந்தான். ஒரு பார்ப்பன குருவின் மனைவி, மருத்துவச்சியாக இருந்து, 80வயது அரசனை, குழந்தையாக பாவித்து, தனது காலில் கிடத்தி, தாலாட்டி, மார்போடு இணைத்து முத்தம் கொடுத்தாள்.

- இப்படி எல்லாம் பார்ப்பனர்கள் கூத்து அடிக்க, அரசர்கள் அவர்களின் தாசர்களாக இருந்தார்கள் என்பதே இந்த நாட்டின் வரலாறு.

வீழ்ந்த சிவாஜி

1) சூத்திரனாகிய சிவாஜி, பார்ப்பன தாசன். அவன் மூடி சூட ‘சத்திரியனாக’ வேண்டும். அதனால் பார்ப்பனர்கள் முடிசூட்ட மறுத்தனர்.

2) பெரும் தொகையை வாங்கிக்  கொண்டு காசியி லிருந்து காகப்பட்டன் என்ற பார்ப்பனர் முடிசூட்ட வந்தான். நாடு முழுதுமிருந்தும் 11,000 பார்ப் பனர்கள், குடும்பத்துடன் அழைக்கப்பட்டனர். அன்றாடம் பூசைகளும், சடங்குகளும் நடந்தன. 44வது வயதில் பூணூல் போடப்பட்டு, சத்திரியன் ஆக்கப்பட்டான். தானும் ஒரு சத்திரியன் என்று ஒப்புக் கொண்டு விட்டபடியால், தனது காதில் விழுவதுபோல் மந்திரங்களை ஓத வேண்டும் என்று சிவாஜி விரும்பினான். பார்ப்பனர் களிடையே சலசலப்பு ஏற்பட்டது.  “வேத மந்திரங்கள் என்பது இரு பிறப்பினருக்கு மட்டுமே உரியது.

தற்காலத்தில் பார்ப்பனர்கள் தவிர வேறு எவரும் இரு பிறப்பாளர்களாக மாட்டார்கள். உலகில் உண்மையான சத்திரியர்களும் இல்லை” என்று கூறிவிட்டனர். “பேராசை பிடித்த பார்ப்பனன் மந்திரங்களின் ஒரு சிறு அசைவுகூட, சிவாஜியின் காதில் விழாத வண்ணம், தங்கள் வாய்க்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டனர்” என்று எச்.எம். அரிபிரசாத் சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

3) சிவாஜியின் எடைக்கு எடை பல பொருட்கள் எடையில் நிறுக்கப்பட்டன. திடீரென இரண்டு பார்ப்பனர்கள், சிவாஜி படையெடுப்பின்போது பார்ப்பனர்கள், பசுக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு மரணம் அடையத்தக்க வகையில் நகரங்களை எரித்தான் என்றும், அப்பாவங்களுக்கு தகுந்த விலை கொடுத்து, பாவத்திலிருந்து மீள வேண்டும் என்று கூறவே, அதற்காக, 8000 பார்ப்பனர்களுக்கு பணமாகக் கொடுத்தான் சிவாஜி.

 பார்ப்பனர்களை நம்பி, அவர்கள் காலடியில் வீழ்ந்த சிவாஜியின் சாம்ராஜ்யத்தை பார்ப்பனர்கள், பொன்னையும், பொருளையும் சுரண்டியே ஆட்சியை திவாலாக்கி விட்டனர். இந்த வரலாற்றையே-‘இந்து கண்ட சாம்ராஜ்யம்’ என்று அண்ணா நாடகமாக்கினார். அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காகத்தான் ‘சிவாஜி’ என்ற பட்டத்தை பெரியார் சிவாஜி கணேசனுக்கு சூட்டினார்.

(நிறைவு)

தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்