ஈழத்தில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கியிருந்த காலகட்டத்தில் இலங்கை வடக்குப் பிரதேச முஸ்லிம்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்பாணத்திலிருந்து புலிகளின் மிரட்டலைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம் அகதி முகாம்களில் இன்றும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இலங்கை அரசும் சொந்த நாட்டில் அகதிகளாக இருக்கும் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலோ அவர்களை சொந்த நிலத்தில் மீள்குடியமர்த்துவதிலோ போதிய அக்கறை காட்டாமலே இருந்து வருகிறது. தேர்தல் காலங்களில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக முஸ்லிம் நலனில் அக்கறையிருப்பதாக காட்டிக் கொள்வதில் இலங்கை அரசியல்வாதிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களல்ல.

உள்நாட்டு அகதிகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் அவ்வப்போது தேவையான உதவிகளை செய்து வந்தாலும் - அரசாங்கத்தின் அனுசரணை அம்மக்களுக்கு தேவையாக இருக்கிறது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னும், அகதி முஸ்லிம்களின் வாழ்க்கையில் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை. தமிழ் மக்களை மீள்குடியேற்றும் முயற்சிகளை சர்வதேச அழுத்தத்திற்கு உட்பட்டு செய்து வரும் இலங்கை அரசு - முஸ்லிம் அகதிகள் விஷயத்தில் பாராமுகமாக இருப்பது முஸ்லிம் சமூகத்தில் போதிய அழுத்தமோ அல்லது முஸ்லிம் பிரச்சினை சர்வதேச அளவில் ஒலிக்காததோதான் முக்கிய காரணமாக கூற வேண்டியுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தையோ முஸ்லிம் அரசியல் கட்சிகளையோ நம்பி பிரயோசனமில்லை என்ற எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்த இலங்கை வடக்கு முஸ்லிம் சம்மேளனம், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினையை கையிலெடுத்திருக்கிறது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளைச் சந்தித்து, இலங்கை முஸ்லிம் அகதிகள் தொடர்பாக பேசியிருக்கிறது.

இச்சந்திப்பின்போது, 21 வருடங்களுக்கு முன் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம், அவர்களை மீள்குடியேற்றம் செய்வதில் நிலவும் சிக்கல்கள் - அவர்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் - அவர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் வாழ்வுரிமை, வாக்குரிமை போன்றவற்றை பட்டியலிட்டு, ஐ.நா. அதிகாரிகளிடம் விளக்கிச் சொல்லியிருக்கின்றனர் சம்மேளத்தின் பிரதிநிதிகள்.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும், வரும் காலங்களில், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி குழுக்களிடமும், உதவி நிறுவனங்களுடனும் சந்திப்பை ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

அதே சமயம் சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற அரபு நாட்டு உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து யாழ்பாண முஸ்லிம்களின் தேவைகளைப் பற்றியும் - அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்கான உதவிகள் குறித்தும் எடுத்துச் சொல்லும் முயற்சிகளில் இறங்கியுள்ளது இலங்கை வடக்கு முஸ்லிம் சம்மேளனம்.

- ஃபைஸல்

Pin It