இலங்கையில் முஸ்லிம்கள் நவீன கல்வி, அறிவியல் சிந்தனைகளுடன் இஸ்லாத்தின் சிந்தனைகளையும் பெற வேண்டும். தவறான கொள்கைகளுக்கு எதிரான சமயப் புனர்நிர்மாணச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பழமைவாதத்தை ஒழித்திட வேண்டும். இஸ்லாமிய சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும். கல்வியின் மூலமாக கலை, இலக்கியம் வளர்க்கப்பட வேண்டும். இவற்றுக்காகப் பாடுபட்டவர் அறிஞர் எ.எம்.எ. அஸீஸ்.

aziz 200யாழ்ப்பாணத்தில் அபூபக்கர் சுல்தான் முகம்மது நாச்சியா வாழ்வினையருக்கு 04.10.1911 அன்று மகனாகப் பிறந்தார். அஸீஸின் தந்தை அபூபக்கர் யாழ்ப்பாண நகரசபையின் உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். பின்னர் 1948 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் லீக் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அஸீஸ் தமது ஆரம்பக் கல்வியை குர்ஆனும், தமிழும் சேர்த்துக் கற்பிக்கப்பட்ட பாடசாலையில் பயின்றார். பின்னர் வண்ணார்ப்பண்ணை இராமகிருஷ்ண மிஷன் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் தமது கல்வியைத் தொடர்ந்தார்.

இந்து மாணவர்கள் மட்டும் கல்வி பயின்று வந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில், அஸீஸ் முதல் இஸ்லாமிய மாணவராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அக்கல்லூரியில் தமது இடைநிலைக் கல்வியை முடித்தார்.

இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியில் 1929ஆம் ஆண்டு சேர்ந்து, வரலாற்றைச் சிறப்புப் பாடமாகப் பயின்று, வரலாற்றில் பி.ஏ (ஹானர்ஸ்) தேர்ச்சி பெற்று சிறப்;புப் பட்டம் பெற்றார்.

வரலாற்றுத்துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, இலங்கை அரசாங்கத்தின் கலைத்துறைக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

இலண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புனித கேதரின் கல்லூhயில் சேர்ந்து வரலாற்றுத்துறையில் மேல்படிப்பைத் தொடர இங்கிலாந்துக்குப் பயணமானார். ஆனால், இலங்கை குடிமைப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றதால் திரும்பி வந்து இலங்கை அரசாங்கத்தில் குடிமைப்பணியில் சேர்ந்தார். இலங்கை அரசாங்கத்தில் குடிமைப்பணியில் சேர்ந்த (Cycleon Civil Service) முதல் முஸ்லிம் அஸீஸ் ஆவார்.

அஸீஸ் 1937ஆம் ஆண்டு உம்மு குல்தூம் என்பரைத் திருமணம் செய்து கொண்டார்.

இலங்கையில் உள்ள கல்முனையில் 1942 ஆம் ஆண்டு அரசாங்க உதவி அதிபராகச் சேர்ந்தார். அங்கு அவரது அரசாங்கக் கடமையோடு பொது நல ஈடுபாடு, மக்கள் தொண்டு, வரலாற்று ஆய்வுகளுக்கான தகவல்கள் சேகரித்தல் முதலிய பணிகளையும் மேற்கொண்டார். கல்முனையில் பணியாற்றும் போது சுவாமி விபுலானந்த அடிகளாரிடம் தொடர்பு கொண்டிருந்தார்.

அஸீஸ் பணிமாறுதலில் 1943 ஆம் ஆண்டு கண்டிக்குச்; சென்றார். அங்கு இஸ்லாம் இளைஞர் இயக்கத்தை (YMMA) அமைத்தார். இந்த இயக்கம் மூலம் கல்வி முன்னேற்றம், சுகாதாரம், கிராம முன்னேற்றம், சாலைகள் அமைத்தல், அனாதைகள் பராமரிப்பு, கலாச்சார வளர்ச்சி முதலிய பணிகளில் ஈடுபட்டார்.

கொழும்பு ஸாகிறாக் கல்லூரி (Zahira College Colombo) அவரது கல்விச் சிந்தனைகளுக்கும், சேவைகளுக்கும் சிறந்த களமாக அமைந்தது. 1950 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் கல்வி, அரசியல், மொழிக் கொள்கை, இலங்கை முஸ்லிம் கலாச்சார மையம், நவீன சிந்தனை. முஸ்லிம் பண்பாட்டு வளர்ச்சி முதலியவற்றிற்காக அயராது பாடுபட்டார்.

அஸீஸ் 1948 ஆம் ஆண்டு முதல் 1961 வரை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகவும், வழிகாட்டியாகவும் விளங்கினார்.

தமது அயராத உழைப்பினாலும், நிர்வாகத்திறமையாலும், நவீன கல்வித்திட்டங்களினாலும் ஸாஹிராக் கல்லூரியை சிறந்த கல்வி நிறுவனமாக்கினார். மேலும், கல்வி மட்டுமின்றி விளையாட்டு, சாரணர் படை, பேச்சுத்திறன், மொழி விவாதம், இலக்கிய ஆற்றல், தொழிற்கல்வி என அனைத்துத் துறைகளிலும் முதன்மை பெறச் செய்தார்.

அஸீஸ் 1952 ஆம் ஆண்டு அகில இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த போது, ஸ்மித் - மண்ட் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்காவில் ஆறுமாதம் பயிற்சி பெற்றுத் திரும்பினார்.

முஸ்லிம்களின் கல்வியில் நவீன மாற்றங்களை ஏற்படுத்தியதோடு, உயர் கல்வியை நோக்கி மூஸ்லிம்களின் கவனத்தைத் திருப்பியதிலும் அஸீஸின் பணி மகத்தானது. மேலும், முஸ்லிம் சமூகத்தில் வறுமைக் கோட்டில் வாழ்ந்தவர்களையும், வர்த்தக சமூகத்தவரையும் உயர்கல்வி பெறவும், தொழில் நுட்ப உயர்கல்வி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், இஸ்லாமியக் கலை இலக்கியம் முதலியவற்றின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். மேலும், இசை, வானொலி கலை நிகழ்ச்சிகள், நாடகம், கதாப்பிரசங்கம் முதலியவற்றிலும் ஸாஹிராக் கல்லூரி மாணவர்கள் சிறந்து விளங்கிட வழிகாட்டினார்.

கலாச்சார மறுமலர்ச்சிக்கும், கலை வளர்ச்சிக்கும் பாடுபட ‘இலங்கை முஸ்லிம் கலாச்சார மண்டபம்’ என்னும் அமைப்பு ஏற்படுத்திட செயல்திட்டம் வகுத்தளித்தார்.

“வறுமையின் காரணமாக முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் வளர்ந்தோர்களும் கல்வியைப் பெறாது போனால் அவர்களின் திறமையை சமூகம் இழந்துவிடும்” என எச்சரித்தார் அஸீஸ்.

இலங்கை முஸ்லிம் மக்கள் வறுமையின் காரணமாகக் கல்வி பெற இயலாத நிலை நிலவிய அக்கால கட்டத்தில், கல்விப் பின்னடைவுகளை நீக்குவதற்கு கல்விச் சகாய நிதி முறையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த அஸீஸ் திட்டமிட்டார். அதன் அடிப்படையில் 1945 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி என்னும் நிறுவனத்தை கொழும்பில் துவக்கி வைத்து அஸீஸ் உரையாற்றும் போது,

“தமது சமூகத்தாருக்கும் நாட்டிற்கும் சேவையாற்றக் கூடிய தகுதியான ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு உதவுவதற்கே இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாதிருப்பவர்களுக்கும், முஸ்லிம்களின் கல்விப் பின்னடைவை நீக்குவதற்கும் உதவுவதே இந்நிதியத்தின் நோக்கமாகும்.” என அறிவித்தார். இந்தி நிதியத்துக்கான முயற்சி அவரது வாழ்க்கையின் இலட்சியமாகும்.

ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை,  பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை, இலங்கைப் பல்கலைக்கழகம் முதலியவற்றுக்காக நூற்றுக்கணக்கான முஸ்லிம் மாணவர்களுக்கு சகாயநிதி வழங்கிட அஸீஸ் நடவடிக்கை எடுத்தார். மேலும், கல்விச் சகாயநிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை இஸ்லாமிய பெண் கல்விக்காக ஒதுக்கப்படுவதை உறுதி செய்தார். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் கல்வியானது கடமையாகும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தினார்.

தமிழ் மொழியில் கல்வி பயிலும் பெண்களில் ஆசிரியப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சகாய நிதியிலிருந்து ஒரு பகுதி நிதி ஒதுக்கிட ஆவன செய்தார்.

அஸீஸ், “அறிவைத் தேடிக் கொள்வது ஆண், பெண் இருபாலர் கடமையாகும்” என்றார்.

இலங்கையில் சிங்கள அரசால் 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தைத் தொடர்ந்து தாய்மொழி, கல்வி மொழி குறித்த விவாதங்கள் இலங்கை முஸ்லிம்களிடையே வலுவடைந்தன.

இலங்கையின் வடக்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பிரதான மொழியாகத் தமிழ் உள்ளது. இலங்கை முஸ்லிம்களை ஒன்றிணைக்கும், மொழி தமிழ் என்பதை அஸீஸ் வலியுறுத்தினார்.

தமிழ் மொழிக்குப் பாதகமான சட்டங்களை இலங்கை சிங்கள அரசாங்கம் அமுல்படுத்த முற்பட்ட போது எல்லாம் அவற்றை அஸீஸ் எதிர்த்தார்.

இலங்கை சிங்கள அரசு 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள மசோதாவை இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த போதும், அவர் அங்கம் வகித்த செனட் சபையில் அம்மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், அச்சட்ட மூலத்தை அவர் கடுமையாக எதிர்த்தார். இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சாரம் உட்பட பல துறைகளில் அது பெரிய பின் விளைவுகளைக் கொண்டு வரும். பெரும்பான்மையினர் மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை அது சிதறடித்து விடும் என்று இலங்கை அரசாங்கத்தை அஸீஸ் வெளிப்படையாக எச்சரித்தார்.

இலங்கை முஸ்லிம் சமூகம் பழமைவாதத்திற்கும், அசையாத கருத்துக்களுக்கும் ஆட்பட்டிருந்த சூழலில் அவர்கள் மத்தியில் சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை கொண்டுவர அயராது பாடுபட்டார் அஸீஸ்.

இலங்கை முஸ்லிம்கள் நவீன கல்வியைப் பெறுவதில் காட்டி வந்த ஆர்வக்குறையை, அக்கறையின்மையை மாற்றவதற்கும், நவீன சிந்தனைகளையும், அறிவு ரீதியான பார்வையையும் ஏற்படுத்த அஸீஸ் மிகப்பெரும் பங்காற்றியுள்ளார்.

பழமைவாதம், மூடநம்பிக்கைகள், பிற்போக்கான மரபுக் கருத்துக்கள், சமயத்தைப் பிற்போக்குக் கொள்கைகளுக்காகப் பயன்படுத்துதல் முதலியவற்றை கடுமையாக விமர்சித்தார்.

அறிவியலைப் புறக்கணிப்பதை இஸ்லாமியக் கோட்பாடுகள் அடிப்படையில் ஏற்கவில்லை. எனவே, மேற்கத்திய அறிவியல் இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு ஒவ்வாதொன்றல்ல, அதனுள் அடங்கும் ஓர் அம்சமே, எனவே அறிவியலை ஏற்று வாழ்ககையுடன் ஒருங்கிணைத்துக் கொள்வதில் எத்தகைய சிரமமும் இருத்தலாகாது. எனவே, அறிவியல் சிந்தனைகளை முஸ்லிம் சமூகம் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தினார்.

அஸீஸ், இலங்கையில் இஸ்லாம், மொழி பெயர்ப்புக் கலை, தமிழ் யாத்திரை, அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ், கிழக்காப்பிரிக்கக் காட்சிகள், மிஸ்ரின் வசியம் முதலிய நூல்களைப் படைத்து அளித்துள்ளார். மேலும் இலங்கை வானொலியில் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார். சிலோன் டெல்லி நியூஸ் என்னும் ஆங்கில நாளிதழில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 

தமது வாழ்நாள் முழுவதும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அஸீஸ் 24.11.1973 அன்று மறைந்தார்.

-  பி.தயாளன்