தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி இணைந்து நடத்தும் புலம்பெயர்தல் வரலாறும் இலக்கியமும் பன்னாட்டு கருத்தரங்கம், நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் இருநாட்கள் நடை பெற்றன. இலங்கையிலிருந்து எழுத்தாளர் ஏ.பி.எம். இத்ரீஸ் கலந்து கொண்டு தொடக்கவுரை ஆற்றினார். ஹெச்.ஜி.ரசூல் கருத்தரங்க மையக்கருத்துரையை வழங்கினார்... கருத்தரங்க மலரை ஏ.பி.எம். இத்ரீஸ் வெளியிட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் சி.சொக்கலிங்கம் பெற்றுக்கொண்டார். துவக்கவிழா  அமர்வில் முனைவர் அருட்சோதரி சோபி, முனைவர் வ.ஜெயசீலி, முனைவர் சு.செல்வகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இலங்கையிலிருந்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட எழுத்தாளர்  ஏ.பி.எம். இத்ரீஸ், புலம்பெயர் வரலாறும் இலக்கியமும் பன்னாட்டு கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஈழத்தமிழர், முஸ்லிம், சிங்கள உறவுகள், முரண்கள், போர்க்காலச் சூழல், போருக்குப் பிந்தைய வாழ்க்கை, ஈழ படைப் பிலக்கியப் போக்குகள், கிழக்கிலங்கை எழுத்தாளர்கள் பற்றிய விவரிப்புகள், அரபு மொழியினூடாக தான் கற்றுக்கொண்ட பின்நவீனத்துவக் கோட்பாடு என உரையாடல் பன்முகத்தளங்களில் விரிவடைந்தது.

டயாஸ்பொரா ((Diaspora), மைகிரேசன் ((Migration) எக்ஸைல் (Exile), டிஸ்பிளேஸ்மென்ட் (Displacement) என்பதான வேர்ச்சொற்களின் தேடலில் துவங்கி இலங்கையின் போர்ச்சூழல் தமிழர் வெளியேற்றம், அதிலும் ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியா உட்பட்ட ஆசிய நாடுகளுக்கும் புலம்பெயர்தலின் வேறுபாடுகள் எனப் பல களங்கள் பேசப்பட்டன.

உள்நாட்டுப் புலப் பெயர்வு என்றவகையில், மலையகத்தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள் அவர்களது வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்ட வரலாறு குறித்தும் நினைவுபடுத்தினார். இதுபோன்றதொரு சூழல் இஸ்ரேலின் உருவாக்கமும், பாலஸ்தீனியர்களின் புலப்பெயர்வும் நிகழ்ந்த வரலாற்றுத் தடங்களையும் விரிவுபடுத்தினார்.

தாயக நினைவும், புகலிட சூழலும் கலந்த ஒரு பண்பாட்டினக்கலப்பு புலம்பெயர் இலக்கியங்களில் தென்படுவதையும் வ.ஐ.ச. ஜெயபாலன்,சேரன், உட்பட பல படைப்பாளிகளின் எழுத்துக்களில் பதிவாகியுள்ள விதம் குறித்தும் பேசினார். மிகவும் ரசனை சார்ந்த அதே சமயம் ஹங்கேரிய திரைமொழி, நாட்டார் பாடல் மரபு, பின்நவீனத்துவ மொழியாடல்கள், என ஒரு பல்துறைசார் உரையாடலாக அது இருந்தது.

தொல்லியல், சமண பவுத்த வரலாறு, இலங்கை முஸ்லிம் இயக்கங்கள் வரலாறு, பிரதிகளை வாசித்து பொருள்கொள்ளல், அரங்கியல் நாடக மறு உருவாக்கம், பெருவெளி இதழின் செயற்பாடு, மறைந்த கவிஞர் ஏஜிஎம் சதக்காவின் செம்பதிப்பு மலர், தமிழின் முக்கிய படைப்பாளிகள் ரியாஸ்குரானா, அனார், ஷர்மிளா சையத், அப்துல் ஹக் லரீனா அகமது பைஸல் எனப் பல தளங்களில் உரையாடல் தொடர்ந்தது.

ஒரு இலங்கையாளன், அதுவும் ஒரு முஸ்லிம் என்ற வகையில் ரெட்டைபயமுறுத்தல் விசாரணையை மதுரை விமானநிலையத்தில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தையும் அவர் சொல்லத் தவற வில்லை. தொடர்ந்து பிற அமர்வுகள் நடைபெற்றன.

பழையபடி நானொரு கறுப்பியானேன்

பெருங்கதையாடல்களின் மீதான கட்டுடைப்பும், மொழி, குடும்பம், பாலியல், உடல் என நுண் அளவில் செயல்படும் அதிகாரத்தின் மீதான எதிர்ப்புணர்வும். புலம்பெயர்தலின் வலிகளும், அடையாள அரசியலும் பின்காலனிய கவிதைகளில் நிகழ்கிறது. மைய நீரோட்டத்திலிருந்து விலகிய புறக்கணிக்கப்பட்ட குரல்களின் கலாச்சாரம் சார்ந்த தொன்மங்களோடும் யதார்த்தமும் புனைவும் கலந்ததொரு எழுத்தாகவும் நவீனம் தாண்டிய பின்காலனிய கவிதைகளின் இடை யறாத பயணம் தொடர்கிறது.

புலம்பெயர் கவிதையை எழுதிச் செல்லும் ஆழியாள், அனார், பஹிமாஜஹான், தமிழ்நதி என பெண்ணியக் கவிதையாளர்களின் கவிதைப்பரப்பெங்கும் தீவிரமாக முகங்காட்டுகிற பேரழிவுகளாய் எழுத்தின் நீட்சியைப் பெறுகிறது

வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே ரத்தம்

சாவின் தடயமாய்

என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

அனாரின் கவிதை வரிகளில் அழிக்கப்பட்ட ஈழத் தமிழ்வாழ்வின் துயரம் தொடர்ந்து சாவின் தடயமாய் துரத்திக் கொண்டிருக்கிறது.

ஈழத்தமிழ்மக்களின் துயரத்தையும் குண்டுவீச்சுக்குப் பயந்து காடுகளில் பதுங்குகுழிகளில் பெண்கள் குழந் தைகள் தஞ்சம் புகுந்தபோது பாம்புதீண்டி இறந்த உயிர் களின் துக்கத்தை தமிழ்நதி தன் கவிதையில் குறியீடாக்கிப் பதிவு செய்கிறார்.

கடலின் நீலத்தை காகிதத்தில் எழுதவே அமர்ந்தேன்

காடுகளில் விஷம்தீண்டி

மரித்த குழந்தைகளின் நிறமாகித் திரிந்தது கடல்

எண்பதுகளின் இறுதியில் துவங்கிய போராட்டத்தில் சிங்களப் பேரினவாத தாக்குதலில் இரண்டுலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ்மக்கள் அழித்தொழிக்கப்பட்டிருக் கிறார்கள். எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள் நாட்டிலேயே புலம்பெயர்ந்த அகதிகளாய் இருப்பிட மற்று அலைபாய்கிறார்கள். கனடா, பிரிட்டன், பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் இரண்டரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.

bookexhibition 600ஈழமக்கள் மீதான இன அழிப்பின் உச்சகட்டமாக 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் கடலோர கிராமத்தில் நாற்பதினாயிரம் தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்பட்டார்கள். தமிழ்நதி, சேரன், கி.பி.அரவிந்தன், திருமாவளவன் என நீண்டவரிசையில் கவிகள் இந்த இனப் படுகொலையின் குரூரத்தைப் பதிவு செய்துள்ளனர். பிணங்களோடு வாழ்தல் எனும் கவிதையில் இளைய அப்துல்லாஹ் இவ்வாறு எழுதிச் செல்வார்.

புணர்ந்து புணர்ந்து சக்கையாகிய

பெண்ணுடலின் யோனிக்குள்

குண்டுவைத்து தகர்த்துப் போகிறான் ஒருவன்

கேலிகேலியாக வெட்டிய குழந்தையை

கயிற்றில் தொங்கவிட்டுப் போகிறான் இன்னொருவன்

வாய்க்குள் துப்பாக்கி வைத்து

சன்னம்பாய்ச்சி சிரிக்கிறான் இன்னொருவன்

வெட்டுதல் கூறுபோடுதல் எரித்தல் கதறுதல் புணர்தல்

என்றெல்லாம் செய்துவிட்டு

இறுதியில் பிரேதம் செய்கிறான்.

கண்களில் ஒளியும் கையில் துப்பாக்கியும் கழுத்தில் சயனைடு குப்பிகளுமாய் காவு கொள்ளப்பட்ட வாழ்க்கை அலைபாய்கிறது. குறிகள் துப்பிய விஷங்கள் ஏந்திய யோனிகள் சிதைக்கப்படுகிறது. கொப்பளிக்கும் குருதியில் உறையும் கண்களும் சிதைந்த உடல்களின் ஓலங்களில் கிழிந்த செவிகளும் பயத்தில் உறைந்து சுருங்கும் விதைகளுமாக அழித்தொழிக்கப்பட்ட ஈழ மக்களின் வாழ்வின் துயர் கவிதையின்வழி பேசுகையில் அவை இதயங்களை ஊடுருவிச் செல்கிறது. பூர்வீக குடிகளாய் வாழ்ந்த வரலாற்றையும் மீள்வாசித்துப் பார்க்கிறது.

ஈழத்துப் புலம் பெயர் இலக்கியங்களில் சிங்களப் பேரினவாத அரச அதிகார வன்முறையால் பாதிக்கப் படும் தமிழினத்தின் சாவுகள், துயரங்கள் உள்ளீடாக நிரம்பி வழிகின்றன. தமிழ் சகோதர போராளி குழுக் களிடையே வன்மமாக வளர்ந்துவிட்ட பகை சொந்த இனத்தின் அழிவின் துரத்தல்களாக  வெளிப்படுகின்றன.  கடலோரத்து கத்தோலிக்க தமிழ் கிறிஸ்தவமும், தமிழ் இஸ்லாமியமும், தமிழ் இந்து சமய அடையாளங் களுடனான மோதல்களாகவும் வெளிப்பட்டுக் கொள்கின்றன. தமிழ் அடையாளங்களினூடே ஆதிக்க சாதிகளின் செல்வாக்கும், சமூகரீதியான ஒடுக்குமுறை தலித்துகளின் மீது நிகழ்வதும் படிநிலை சாதீய கட்டு மானத்தை தக்கவைத்துக் கொள்வதும் நிகழ்கின்றன.  இன்றின் சூழலில்  உயிர் அழிப்பையும், உடல் சிதைப் பையும் புலம்பெயர் படைப்புலகம் முன்னெடுத்துச் செல்கிறது.

இரண்டாயிரத்திற்குப் பிறகான ஈழத்துக் கவிஞர்களின்  படைப்புகளிலும் புலம்பெயர் எழுத்துக்களிலும் நிலவியல் சார் ஒலிகளும், மண்சார்ந்த பெருந்துயர்களும் அனுபவவெளியினூடே நீக்கமற நிறைந்துள்ளன. கிளிநொச்சி, வன்னிப்பகுதியின் பிரதேச அடையாளம் சார்ந்த போர்வதைத் துயரத்தையும், குழந்தைமையின் நிராதரவையும் தீபச்செல்வனின் பதுங்கு குழியன்றில் பிறந்த குழந்தை கவிதை இவ்வாறாக எழுதிச்செல்கிறது.

நான் கடும் யுத்தப் பேரழிவில் பிறந்ததாய்

அம்மா சொன்னாள்

எனது குழந்தையை

நான் இந்த பதுங்கு குழியில்தான் பிரசவித்திருக்கிறேன்.

துவக்குகளின் அதிகாரமும், ராணுவ ஆதிக்கமும், பதற்றங்களே வாழ்வாகிப்போன யாழ்ப்பாண மண்ணின் சிதைந்த வாழ்வை, முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள் நடமாடத்தொடங்கிய பிறகு, குழந்தைகள் தெருக்களை இழந்தன என சித்தாந்தன் பதிவு செய்கிறார்.

ஈழத்தின் கிழக்குப் பிரதேச வாழ்வுலகத்திலிருந்தும், அனுபவ வெளியிலிருந்தும் உருவாகிய கவிஞர்கள் படைப்புத் தளத்தில் தீவிரமாய் இயங்கு கிறார்கள். கவிதைப் புனைவின் வெளிப்பாட்டில் எதிர் அழகியலையும் மாற்றுப்பிரதிகளின் உருவாக்கத்தையும் செய்கின்ற ரியாஸ் குரானாவின் எழுத்துக்களும், இவ்வகையில் முக்கியமானவை.

இந்த நேரத்தில் எனக்கு எண்பதுகளில் பாலியல் வன்புணர்வால் சிதைக்கப்பட்ட கோணேஸ்வரியின் துயர வலியை தன் கவிதையில் உயிர்ப்போடு பதிந்து வைத்திருந்த ஆழியாளின் அண்மைக்கால கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. பிரதேச மண்சார்ந்தும், நிறம் சார்ந்தும், நாடுசார்ந்தும், பாலினம்சார்ந்தும் அடையாள நெருக்கடிக்குள் சிதைகிற வலி நிறைந்த கவிதை இது.

பிறந்த வீட்டில் கறுப்பி

அண்டை நாட்டில் சிலோன் அகதிப்பொண்ணு

இலங்கையர் மத்தியில் ‘தெமள’

வடக்கில் கிழக்கச்சி

மீன்பாடும் கிழக்கில் நானொரு மலைக்காரி

மலையில் மூதூர்க்காரியாகும்.

ஆதிக்குடிகளிடம் திருடப்பட்ட தீவாக இருக்கும்

என் புகுந்த நாட்டில் - அப்பாடா

பழையபடி நானொரு கறுப்பியானேன்.

இலங்கைச் சிந்தனையாளர்

ஏ.பி.எம்.இத்ரீஸ் பற்றிய பின்குறிப்பு

ஏ.பி.எம். இத்ரீஸ் (நளீமி) அவர்கள்,

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஓட்டமாவடியை பிறப்பிடமாகக் கொண்டவர். Jamiah Naleemiyah (ஜாமியா நழீமியா)வில் படித்துப் பட்டம் பெற்றவர். தொடர்ந்தும் அங்கு அல்குர்-ஆன் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

இலங்கை முஸ்லிம்களின் அரங்கப் பாரம்பரியத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவு ஆய்வுகளையும் பிரதி களையும் ஆக்கியிருக்கிறார்.