மிகவும் பரபரப்புடன் துவங்கிய உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் கலந்து கொண்ட ஆசிய அணிகளில் தென் கொரியாவின் ஆட்டம் மட்டுமே பெயர் சொல்லும் அளவுக்கு இருந்தது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் ஆட்டம் மிகவும் கவலைக் குள்ளாக்கியது. மற்றொரு அணியான பாகிஸ்தானும் சாதிக்கத் தவறியது.

panmm_ooபன்னிரண்டாவது உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் புதுதில்லி தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் பிப். 28 துவங்கி மார்ச். 13இல் நிறைவடைந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, அர்ஜென்டினா, கனடா ஆகிய 12 நாடுகள் பங்கேற்றன.

உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜெர்மனி, இரண்டாவது இடத்திலிருந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளாக கருதப்பட்டன.

1971க்கு பிறகு இந்தியாவில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்த இந்திய அணி நமது தேசிய விளையாட்டான ஹாக்கியின் பாரம்பரியத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்கு இந்தத் தொடர் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இதுமட்டுமின்றி, வீரர்களின் எதிர்காலமும் இந்திய ஹாக்கி அணியின் எதிர்காலமும் அடங்கி இருந்ததால் சொந்த மண்ணில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்கியது.

ஏமாற்றம் அளித்த இந்தியா

சம்பள உயர்வு பிரச்சனையின் போது வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது வீரர்களுக்கு எதிராக செயல்பட்டார் ராஜ்பால்சிங். ஆனால், அவருக்கே அணியின் தலைவர் பதவியை வழங்கி கவுரவித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம். இதற்கு மூத்த வீரர்கள் உள்ளிட்ட பலரும் பலத்த எதிர்ப்பை தெரிவித்ததோடு பிரப்ஜோத் சிங்கை தலைவராக்க வேண்டும் என்றும் மாற்று ஆலோசனையும் முன்வைத்தபோது, அதனை சம்மேளனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் விளைவு ஆட்டக்களத்திலும் எதிரொலித்தது.

இந்தத் தொடரில் இளம் வீரர்கள் அதிகம் இடம் பிடித்தும் திவாகர் ராம் மட்டும் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். முன்னாள் அணித் தலைவர் சந்தீப் சிங் ஆட்டமும் ஓரளவுக்கு கைக்கொடுத்தது. அனுபவ வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால், ரசிகர்களின் கோப்பைக் கனவும், அணித்தலைவர் ராஜ்பால்சிங்கின் அரை இறுதிக் கனவும் தகர்ந்தது.

மைதானத்தில் நமது வீரர்கள் போதுமான வேகம்காட்டாததால் இரண்டு போட்டிகளில் வெற்றியின் விளிம்புக்கே சென்றும் தோல்வியை தழுவியதால் எட்டாவது இடமே கிடைத்தது.

தெற்காசிய போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இந்திய அணி உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றிக்காக மக்களவையும், மாநிலங்களவையும் பாராட்டு மழை பொழிந்தன. இந்த உற்சாகத்தை ரசிகர்களும் கொண்டாடிட தவறவில்லை. நாடே பாராட்டியது.

சம்பளபாக்கி கேட்டு போராடியபோது வீரர்களை அவமானப்படுத்திய இந்திய ஹாக்கி சம்மேளனம், பாகிஸ்தான் அணியை இந்திய அணி வென்றதும் வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கி பகைமையை வளர்த்தது நல்ல பண்பாடல்ல.

விளையாட்டில் வெற்றி தோல்விகள் நிரந்தரமல்ல. ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக மட்டும் ஹாக்கி சம்மேளனம் பரிசு அளிப்பதும் குடியரசுத் தலைவர் பாராட்டுவதும் அண்டை நாடுகளுடன் உள்ள நட்புறவை பலப்படுத்த உதவாது.

பரிதாபம்

ஹாக்கி உலகில் ஃபெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கில்லாடிகள் என்ற தனி சிறப்பு பாகிஸ்தான் வீரர்களுக்கு உண்டு. இந்த உலகக் கோப்பை தொடரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக ஆடியதால் இந்த முறை அந்தப் பெருமையை இழந்தனர்.

உலகக் கோப்பையை அதிகமுறை (நான்கு) வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, பலம் இல்லாத அணியான  கனடாவிடமும் தோல்வி அடைந்ததால் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

சாதித்த ஜெர்மனி

பெய்ஜிங் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தையும் உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற சாம்பியன் என்ற பெருமையோடு ஜெர்மனி அணி இளம் வீரர்களை களம் இறக்கியது.

அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் இல்லையென்றாலும் நாங்கள் அரை இறுதி வரைக்கும் முன்னேறுவோம் என்று அளித்த வாக்குறுதியை உண்மையாக்கியது ஜெர்மனி.

இளம் வீரர்களின் துடிப்பான, மனஉறுதிக்கு முதல் போட்டியில் கிடைத்த வெற்றி இறுதி போட்டிக்குக் கொண்டு சென்றது. பலம், அனுபவத்தில் சிறந்த அணியான இங்கிலாந்தை அரை இறுதியில் தோற்கடித்து சாதித்தனர்.

சாதனை வெற்றி

1986ஆம் ஆண்டில் கோப் பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்த உலகக் கோப்பையில்  இங்கிலாந்திடம் துவக்கத்திலேயே தோல்வியை தழுவினாலும், அதன் பிறகு பெற்ற எழுச்சியால் 24 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.

கனடாவுக்கு எதிராக 12 கோல்கள் அடித்து கோல் மழை பொழிந்த ஆஸ்திரேலிய அணி, ஐரோப்பிய சாம்பியனான நெதர்லாந்தை அரை இறுதியிலும், ஜெர்மனியை இறுதிப் போட்டியிலும் தோற்கடித்தது. இந்த சாதனை வெற்றியின் மூலம் ஜெர்மனியின் ஹாட்ரிக் கனவை தகர்த்ததோடு, தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது.

ஆஸ்திரேலிய வீரர்களின் அனுபவமும் ஒருங்கிணைந்து செயல்பட்ட ஒற்றுமைக்கும் கிடைத்த பரிசுதான் இந்த உலகக்கோப்பை.

-சி.ஸ்ரீராமலு

Pin It