காஷ்மீரைப் பாருங்கள்
நம்மால் அறியப்பட்ட காஷ்மீர்!
நாம் அறிய வேண்டிய காஷ்மீர்!

இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீர் இணைப்புக்கு, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற ஆதரவு கிடைத்தவுடன், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குத் தனியான அரச மைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கான பணியில் ஷேக் அப்துல்லா நாட்டம் செலுத்தினார். அப்படி ஒரு சட்டத் தை உருவாக்க முடியுமா என்கிற அய்யம் அவருக்கே இருந்தது.

மேலும், பல நேரங்களில், பல இடங்களில் “தனி காஷ்மீர் தேசம்” என்றும் ஷேக் அப்துல்லா பேசிய தால், மற்ற அரசியல்வாதிகள் எச்சரிக்கை செய்யத் தொடங்கினர்.

குறிப்பாக ஜம்மு, லடாக் பகுதி மக்களும், அரசியல் வாதிகளும் தூங்கிக் கொண்டிருந்த இந்திய அரசை எழுப்பி உசுப்பிவிட்டனர். இதனால், இந்திய அரசமைப் புச்சட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து அளிக்கப்பட்டது-மீண்டும் விவாதத்துக்கு உள்ளாயிற்று.

இந்த நேரத்தில் ஷேக் அப்துல்லா உண்மையில் அச்சம் கொண்டார். ஆனாலும் இந்திய அரசை மிரட்டும் தன்மையிலும் இந்திய அரசியல்வாதிகளையும் காங்கிரசுக் கட்சியையும் குறைகூறும் தன்மையிலும் பொதுக் கூட்டங்களில் பேசத் தலைப்பட்டார். காஷ்மீரின் சுயாட்சி பற்றிப் பேசிய போது, “தனி காஷ்மீர் அரசு” பற்றியும் பேசினார்.

ஷேக் அப்துல்லாவுக்கு மரியாதை நிமித்தமாக அளிக்கப்பட்டுவரும் சலுகையைத் தாண்டி அவர் வரம்பு மீறிப் பேசுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவருடைய குற்றச்சாட்டின் வீச்சு அதிகரித்த போது, வேறு வழியில்லாமல், பண்டித நேரு ஷேக் அப்துல் லாவிடம் கடுமை காட்டி மடல் எழுதினார். அப்துல்லா மனம் சோராமல் நேருவுக்கு விடை மடல் விடுத்தார்; அவர்களுக்குள் மோதல் பெரிதானது. ஆனாலும் விரைவில் சமரச முயற்சி நடந்தது.

நேருவும் அப்துல்லாவும் தில்லியில் கலந்து பேசி, 24-7-1952இல் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அது “தில்லி ஒப்பந்தம்” என்று குறிப்பிடப்பட்டது. அவ் ஒப்பந்தத்துக்கு ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் 19-8-1952இல் ஒப்புதல் அளித்தது.

அந்த ஒப்பந்தம் என்ன கூறியது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆம் விதியின் படியும், 24-7-1952இல் இந்திய அரசு டன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படியும் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் தனியாக ஓர் அரசமைப்புச் சட்டம், தனியாக ஒரு கொடி, அப்பகுதியை நிர்வகிக்கும் மக்கள் பிரதிநிதியை ‘பிரதமர்’ என்று பொருள்தரும் வசீர்-இ-ஆசம் (Vazir-i-Azam) எனக் குறிப்பிடுவது, காஷ்மீருக்கு என ஒரு தனி ‘ஜனாதிபதி’ அந்தஸ்தோடு ‘சதர்-இ-ரியாசத்’ எனக் (Sadar-i-Riyasat)) குறிப்பிடும் ஒருவரை ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றமே தேர்ந் தெடுப்பது உள்ளிட்ட மற்றும் பல தனி உரிமை கள் அளிக்கப்பட்டன.

இவற்றுள் எதுவும் இந்தியாவிலுள்ள மற்ற எந்த மாநிலத்துக்கும் அளிக்கப்படாத உரிமைகள்.

இது, ஷேக் அப்துல்லாவுக்கு அளவுக்கு மீறி இடம் தரப்படுவதாகக் கூறி, இந்தியாவில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன.

அப்படிப் போராடியவர்கள் யார்?

ஏற்கெனவே 1950 ஏப்பிரலில் பாக்கித்தான் பிரதமர் லியாகத் அலிகானுடன் நேரு செய்து கொண்ட சமரச ஒப்பந்தத்தை எதிர்த்து, நேரு வின் முதலாவது அமைச்சரவையில் ஓர் அமைச் சராக இருந்து அதற்காகவே அமைச்சரவையிலிருந்து விலகிய ஷ்யாம் பிரசாத் முகர்ஜி என்பவர்தான், இப்போதும் எதிர்த்தார்.

நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகிய உடனே அவர் “ஜனசங்கம்” (Jan Sangh) என்ற ஓர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருந்தார். அவரே தலைமையேற்று, இப்போது ஷேக் அப்துல்லாவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார்.

“ஷேக் அப்துல்லா தலைமையில் இயங்கும் தேசிய மாநாட்டுக் கட்சி, இன்னொரு முஸ்லீம் லீக் போன்றதுதான். முஸ்லீம் அடிப்படை வாதத்தை (Fundamentalism)) அது வளர்க்கிறது. நேரு அதை உணர மறுக்கிறார்” என்று குற்றஞ்சாட்டி, இந்துக்களின் உரிமையைக் காப்பாற்றப் போவதாகச் சூளு ரைத்து, அவரே நேரடியாகப் போராட்டக் களத்திலிறங்கினார்.

அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இந்தியா ஒரு நாடு என்றால் - அதற்கு ஒரே ஜனாதிபதி, ஒரே அரசமைப்புச் சட்டம், ஒரே கொடி என்பதுதான் சரியானது” என்று வாதிட்டார்கள்.

மேலும் “காஷ்மீரில் இந்தியக் குடிஅரசு சார்பில் பங்காற்றுபவர் மாநில ஆளுநர் (Governor)) என்று அழைக்கப்பட வேண்டும் என்பதும், காஷ்மீருக்கு ஒரு முதலமைச்சர் (Chief Minister) தான் நிருவாகியாக இருக்க வேண்டும் என்பதும், அவர்களை வேறு பெயர்களில் அழைக்கக் கூடாது என்பதும்” அவர் களுடைய முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியாவில் நடந்த போராட்டம், 72 மணிநேர ஊரடங்குச் சட்டம் அமலாக்கப்படும் சூழலை உருவாக்கியது.

இதற்கிடையில், பாக்கித்தானில் அந்நாட்டுப் பாது காப்புப் படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப் பேற்ற அயூப் கானுக்கும், காஷ்மீர் மீது படைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாக்கித் தான் தரைப் படைத்தளபதி அக்பர் கானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதனால், அக்பர் கான் தனது இராணுவ விசுவாசிகள் மூலம் ஆட்சியைக் கைப் பற்றத் திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். ‘மாஸ்கோ’ வின் ஆதரவுடன், அவர் இராணுவ ஆட்சிகயைக் கொண்டுவர, ராவல்பிண்டி நகரில் சதித்திட்டம் தீட்டிய தாகவும், குற்றஞ்சாட்டப்பட்டார்.

காஷ்மீர் விவகாரத்திலும் பாக்கித்தான் இராணு வம் பிளவுபட்டு நிற்பதாகச் செய்தி பரவியது.

இந்த இக்கட்டுகள் நிறைந்த சூழலில் 1952 அக்டோபரில் பாக்கித்தான் பிரதமர் லியாகத் அலி கான் அடையாளம் தெரியாத ஆள்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீர் தொடர்பாக முஸ்லீம் நாடுகளின் ஆதரவை வேண்டி, வெளிப்படையான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்க லியாகத் அலிகான் திட்டமிட்டிருந்தார். அதற்கென்றே நடத்தப்பட்ட பொதுக்கூட்ட மேடையி லேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீர் தொடர்பாக, பாக்கித்தான் இராணுவத்தில் பிளவு என்று வந்த செய்தியெல்லாம், இந்தியா மீது இன்னொரு போர் தொடுப்பதற்குத் திட்டமிட்டு வருவ தற்கான முகாந்திரம் தான் என்று அரசல் புரசலாகப் பேச்சு அடிபட்டது.

“காஷ்மீர் தினம்” என, 24-10-1952 அன்று பாக்கித்தானியர் கொண்டாடினர். அன்றைக்கு பாக்கித் தானுக்கு வெளிப்படையான மிரட்டலை நேரு அறிவித் தார். காஷ்மீர் சம்பந்தமாக பாக்கித்தான் மீண்டும் சில்மிஷம் செய்தால், அதனால் கடுமையான விளைவு களைச் சந்திக்க நேரிடும் என்றும் நேரு எச்சரித்தார். ஆனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிப்பதாகத் திட்டமிட்டிருந்த சிறப்பு அந்தஸ்துடன் கூடிய சலுகை களில் எந்த மாற்றத்தையும் நேரு செய்யவில்லை.

அவற்றைச் செயற்படுத்தும் வகையில், இந்திய நாடாளு மன்றத்தில் அதற்கான சட்டத்தை நிறைவேற்றும் தன்மையில், காஷ்மீர் மாநிலத்தின் முதல் சதர்-இ-ரியாசத் ஆக - (ஜனாதிபதியாக) அரிசிங்கின் மகன் கரண்சிங், 15-11-1952 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னும் இரண்டு நாள்களில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்ற போது, வாரிசு உரிமைப்படி, ஜம்மு-காஷ் மீரில் கடந்த 106 ஆண்டுகளாக நடந்து வந்த ‘மன்னர் ஆட்சி முறை’ முடிவுக்கு வந்தது.

ஆனால் ஷேக் அப்துல்லாவுக்காகச் செய்யப்படும் பல முடிவுகள் அவர் வாழ்ந்த - அவர் அதிக அளவு ஆதரவு பெற்றுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளன என்றும், மற்ற ஜம்மு, லடாக் மக்களுக்கு உரிய கவனம் செலுத்தப்படாமல் இருக்கின்றன என்றும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மீண்டும் வலிமை பெற்றன.

இந்நிலையில், ‘ஜனசங்கம்’ காஷ்மீருக்கு சலுகை கள் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டது. 1953இல், ஜனசங்க நிறுவனர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி வேறொரு கோரிக்கை முழக் கத்தை முன்வைத்தார். “ஒன்றுபட்டு இருக்க வேண்டிய பாரத தேசத்தை, முகமது அலி ஜின்னாவின் இரு தேசக் கொள்கையும் அதிகாரத் தாகமும் இரண்டாக்கியது. இப்போது ஷேக் அப்துல்லாவின் நடவடிக்கை 3ஆவது தேசத்தை உருவாக்க வழிசெய்கிறது” என, ஓங்கி முழங்கினார்.

1953, பிப்பிரவரியில் ‘காஷ்மீர் சலோ!’ - ‘காஷ்மீரை நோக்கிச் செல்லுங்கள்’ என்ற போராட்டத்தை முகர்ஜி தொடங்கினார். அவர் காஷ்மீருக்குள் செல்ல முயன் றார்.

அப்போது காஷ்மீருக்கு இருந்த சிறப்பு உரிமை களில் ஒன்று - காஷ்மீர் குடிமகன் அல்லாத மற்ற வர்கள் - இந்தியர்களாக இருந்தாலும்கூட, “நுழைவு அனுமதிச்சீட்டு” பெற்றுக் கொண்டுதான் காஷ்மீர் மாநி லத்துக்குள் செல்லமுடியும். இதற்கும் முகர்ஜி எதிர்ப்புத் தெரிவித்தார்.

உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் நுழைகிறார் என்பதால், முகர்ஜி காஷ்மீர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 11-5-1953இல் கைது செய்யப்பட்டார். ஆனால், ஜன சங்கம் இதை எளிதில் விடுவதாக இல்லை. ஜம்மு-காஷ்மீர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது. இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு 23-6-1953இல் வெளியாக இருந்தது. ஆனால், முகர்ஜி, 22-6-1953 இரவு காஷ்மீர் சிறையிலேயே மறைவுற்றார்.

மாரடைப்பு நோய் கண்டுதான் முகர்ஜி இறந்தார் என, காஷ்மீர் அரசு சார்பில் சொல்லப்பட்டாலும், அதுகுறித்து அய்யங்கள் நிலவின. அய்யப்பாட்டுக்கு உரிய சூழலில் முகர்ஜி இறந்ததாக ஜனசங்கக் கட்சி யினரும் மற்றும் வலதுசாரிக் கட்சியினரும் ஷேக் அப்துல்லா மீது குற்றஞ்சுமத்தினர். இவை நிற்க.

பாக்கித்தானில் அக்பர்கான் அடக்கப்பட்டு, முகமது அலி போக்ரா நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றி ருந்தார். அதுசமயம் 1953 சூனில் இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது எலிசபெத் மகாராணியின் பதவி ஏற்பு விழாவுக்கு இந்தியா, பாக்கித்தான் பிரதமர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அங்கே சந்தித்த வேளையில் இருநாட்டுப் பிரதமர்களும் காஷ்மீர் சிக்கல் பற்றிப் பேசினார்கள். அன்றைய பேச்சு வார்த்தை சமூகமாக இருந்ததாக, செய்தியாளர்கள் கருத்துக் கூறினார்கள்.

இந்தியா, பாக்கித்தான் பிரதமர்கள் இலண்டனில் பேசியதை ஒட்டி, மீண்டும் கராச்சியில் ஒரு தடவை யும், தில்லியில் ஒரு தடவையும் சந்தித்துப் பேசினார்கள். அப்பேச்சுகளின் போது, காஷ்மீர் முழுவதிலும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தும் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கலாம் என்பது பற்றிப் பேசினர் எனத் தெரிகிறது.

அப்போது விவாதத்துக்கு உரிய பெயர்களில் அமெரிக்க அட்மிரல் நிம்திஸ் என்பவரைத் தவிர வேறு யார் பெயரையும் ஆய்வுக்கே எடுத்துக் கொள்ள முடியாது என்று பாக்கித்தான் பிடிவாதமாகக் கூறி விட்டது. அந்த அமெரிக்க அட்மிரலை மட்டும் ஏற்க முடியாது என இந்தியா மறுத்தது. மற்றயார் பெயரை யும் இந்தியா முன்மொழிவதையும் பாக்கித்தான் மறுத்தது. அதன்பிறகு, காஷ்மீர் மக்களிடம் வாக் கெடுப்பு நடத்துவது பற்றிய முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

(தொடரும்)