சென்னை பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களின் போராட்டம் 700 நாட்களை தொட்டுவிட்டது. இத்தனை நாட்கள் போராடியும், தங்களின் எதிர்ப்புக்கு எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தமிழ்நாட்டை துறந்து ஆந்திராவிற்கு சென்றுவிட திட்டமிட்டுள்ளதாக பரந்தூரில் போராடி வரும் மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து கொண்டே இருக்கின்றன.

சென்னையின் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. அதன் மூலமாக நடைபெறும் சரக்கு போக்குவரத்திற்கான கொள்ளளவு மற்றும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவை 2035-ம் ஆண்டிற்குள் அதிகரிக்கும், இடம் போதாமை ஏற்படும் என்பதால் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கான இடத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன. புதிய விமான நிலையம் ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டவையாக இருக்கும் என்று இந்த பசுமை விமான நிலையம் முன்மொழியப்பட்டது.parandur 700அரசாங்க ஆவணங்களின்படி, விமான நிலைய கட்டுமானம் 2026 -ல் தொடங்கப்பட்டு, 2028-ல் செயல்பாடுகளை தொடங்கும் என்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (TIDCO) -ஐ மாநில அரசு நியமித்தது. தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சிக் கழகம், திட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய புள்ளியாக ஆரம்ப முன் சாத்தியக்கூறு ஆய்வுகளை நடத்திய பிறகு, அது நான்கு சாத்தியமான திட்ட இடங்களை தேர்வுசெய்தது – காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர்; திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பண்ணூர்; மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் மற்றும் படளம்.

சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. 4,563 ஏக்கர் பரப்பளவில் 20,000 கோடி மதிப்பீட்டில் பசுமை விமான நிலையம் (Green field), 13 கிராமங்களை கையகப்படுத்தி அமைக்கப்படும் என்று அறிக்கை வெளியானது. தற்போது 20 கிராமங்களை கையகப்படுத்தி 5,369 ஏக்கர் பரப்பளவில் 29,144 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று அறிக்கை திருத்தப்பட்டுள்ளது.

 நிகழ்வுகளின் காலவரிசை

காலம்

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

மே 2007

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி, சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் தாலுகாக்களுக்கு அருகில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

மார்ச் 2012

தமிழ்நாடு விஷன் 2023 ஆவணத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீபெரும்புதூர் அருகே ₹ 20,000 கோடி செலவில் விமான நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.

29 அக்டோபர் 2021

தொழில்நுட்ப முன் சாத்தியக்கூறு அறிக்கையை உருவாக்குமாறு AAI (இந்திய விமான நிலைய ஆணையம்) யிடம் TN அரசாங்கம் கேட்டது.

பிப்ரவரி 2022

AAI அதிகாரிகள் பிப்ரவரி 2022 இல் மேற்கண்ட தளங்களைப் பார்வையிட்டு, முன்-செயல்திறன் ஆய்வை மேற்கொண்டனர்.

மார்ச் 2022

AAI அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

ஜூலை 2022

ஆய்வின் அடிப்படையில் அரசாங்கத்தால் திட்ட இடமாக பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

16 ஆகஸ்ட் 2022

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கலந்தாய்வு நடைபெற்றது.

டிசம்பர் 2022,

விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க தமிழக அரசு டெண்டரை வழங்கியது.

மே 2023

லூயிஸ் பெர்கர் ஒரு விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை (DTER) செய்ய ஒரு ஆலோசகரை நியமித்தது .

ஜூன் 2023

லூயிஸ் பெர்கர் DTER -ஐச் செயல்படுத்துவதற்கான வேலையைத் தொடங்கியது.

31 அக்டோபர் 2023

தமிழ்நாடு தொழில்கள், முதலீடு, ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறையால் வெளியிடப்பட்ட அரசாணையின் மூலம், கையகப்படுத்தப்பட்ட நிலம் திட்டத்திற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.

டிசம்பர் 2023

நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்க சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) நியமிக்கப்பட்டார்.

23 பிப்ரவரி 2024

TIDCO சுற்றுச்சூழல் அனுமதிக்கு (EC) MoEFCC க்கு விண்ணப்பித்தது.

பிப்ரவரி மற்றும் மார்ச்

இந்த மாதங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.

13 மார்ச் 2024

TIDCO EC விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது.

2 மே 2024

சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு EC க்கு TIDCO மீண்டும் விண்ணப்பித்தது.

17 மே 2024

EC முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு மற்றும் EAC (நிபுணர் மதிப்பீட்டுக் குழு) க்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த திட்டம் பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், பொடாவூர், சிறுவள்ளூர், எடையார்பாக்கம், வளத்தூர் என்று 20 கிராமங்களின் நிலத்தை கையகப்படுத்தும் திட்டமாகும். இதை எதிர்த்து அங்குள்ள மக்கள் கடந்த இரண்டு வருடமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திட்டம் மட்டும் திட்டமிட்டபடி நடந்தால் 1005 குடும்பங்கள் சொந்த நாட்டிலே அகதிகளாக வேறு இடத்தில குடி அமர்த்தப்படுவார்கள். 36,635 மரங்கள் வெட்டப்படும். மேலும், விமான நிலைய மேம்பாட்டிற்கென 1425.15 ஏக்கர் (576.74 ஹெக்டேர்) பரப்பளவில் உள்ள நீர்நிலைகள் பாதிப்படையும், இது முன்மொழியப்பட்ட திட்ட தளத்தில் வெறும் 26% சதவீதமே ஆகும்.

தங்கள் போராட்டங்களை கண்டுகொள்ளத மாநில, ஒன்றிய அரசுகளை கண்டித்து, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள் . இதுமட்டுமல்லாது சுதந்திர தினத்தில் கருப்பு கொடியேற்றியது போன்ற பல கவன ஈர்ப்பு போராட்டங்கள் அம்மக்களால் நடத்தப்பட்டது.

இவை எதற்கும் செவி சாய்க்காமல் தங்களின் நிலங்களை கையகப்படுத்தும் மாநில அரசின் மேல் கடைசி நம்பிக்கையையும் இழந்து விட்டதாக கூறுகிறார்கள். அந்த வெறுமையின் விளைவாக இத்தனை நாள் இந்த மண்ணிற்காக போராடிய இந்த மக்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இந்த மண்ணை துறந்து ஆந்திராவில் சென்று தஞ்சமடையப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

இந்த விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் அம்மக்களை ஆதரித்து எழுதப்பட்ட மே 17 இயக்கத்தின் கட்டுரை இணைப்புகள் :

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை நெருங்கும் போராட்டத்தை துளியும் மதிக்காமல், தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவது தங்களின் உணர்வுகளை அவமதிப்பது போலிருக்கிறது. விளைநிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் என தங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் அனைத்தையும் அழிக்கும் இது.

விவசாயிகள் வாழ்வதற்கு தகுதியில்லாத மாநிலம் என தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவிற்கு செல்வதாக கண்ணீருடன் இருபது கிராமத்தைச் சேர்ந்த மக்களும் சொல்கிறார்கள். வாழ்வாதாரங்களை இழந்து விட்டு அகதியாக வாழ்வதை விட மொழி தெரியாத ஆந்திர மண்ணில் அடிமையாக வாழப் போவதாக முடிவெடுத்திருப்பதாக வேதனையுடன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினர்.

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தாலே பரந்தூரில் கையகப்படுத்தும் அளவுக்கான இடத்தை பெற்று விடலாம் என மாற்று முன்மொழிவுகளை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தின் இரண்டாவது விரிவாக்கம் குறித்து பேசப்பட்டும் அதனை கிடப்பில் போட்டு அதிகாரிகள் மெளனமாக இருப்பது குறித்தான கேள்விகளும் எழுகிறது.parandur airport boundaryமீனம்பாக்கம் விமான நிலையத்தின் சரக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் பரந்தூர் விமான நிலையம் தேவை என தமிழ்நாடு அரசு சொல்கிறது. ஆனால் இதுவரை, மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அதிகப்படியான பயன்பாடு உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்காகவே நடைபெறுகிறது என்னும் தகவலை என புவியியல் தகவல் அமைப்பின் (GIS) நிபுணர் தயானந்த கிருஷ்ணன் அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இந்திய விமான ஆணையத்திடம் 2023-ல் பெற்றிருக்கிறார்.

இதற்கு தீர்வாக அவர் “ஒன்றிய அரசு அறிவித்த புல்லட் ரயில் அல்லது அதிவேக ரயில்களை கொண்டு வரலாம். விமானத்திற்கு ஆகும் எரிவாயு செலவை விட இதற்கு குறைவாகவே ஆகும். சர்வதேச பயணம் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு, தற்போதுள்ள விமான நிலையங்களிலுள்ள வசதிகளே செயல்பட போதுமானதாக இருக்கும்” என்கிறார்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மற்றொரு விமான நிலையம் வேண்டும் என்கிற அரசின் கொள்கையை எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கான மாற்று இடங்களைப் பற்றி சிந்திக்காமல், தங்கள் பகுதியில் விமான நிலையம் வேண்டாம் எனப் போராடும் மக்களின் போராட்டங்களை துச்சமென மதித்து, வாழ்வாதாரங்களை வேரோடு அகற்றி, அகதியாக மாற்றும் போக்கு என்பது திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொள்ளும் திமுக அரசுக்கு உகந்ததல்ல என்பதே கருத்தாக இருக்கிறது.

சென்னையில் மட்டுமே அதிக மக்களைக் குடியேறச் செய்யும் வகையில் தொழில்நுட்ப பூங்காங்கள், சென்னையை சுற்றி மட்டுமே வளர்ச்சி திட்டங்கள் ஏனென்கிற கேள்வியே எழுகிறது. அனைத்து நகரங்களிலும் சமமான வளர்ச்சி திட்டங்கள் நிறுவப்பட்டால் சென்னையில் அளவுக்கு மீறி குடியேறும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தலாம். மேலும் பிற நாடுகளுக்குச் செல்லும் சர்வதேச விமான நிலையங்களை பல மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் திட்டங்களை வகுக்கலாம்.

கோவை, திருச்சி மாநகரங்களின் சர்வதேச விமான நிலைய தரத்தை மேம்படுத்தலாம். மேலும் உள்நாட்டு விமான நிலையங்கள் மட்டுமே இருக்கும் சேலம் மற்றும் மதுரையில் சர்வதேச விமான நிலையங்களாக மாற்றினாலே பல மாவட்டங்களிலிருந்து சென்னை வர வேண்டிய அவசியம் இருக்காது. சென்னையில் குவியும் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

உலக சுற்றுச்சூழல் தாக்கத்தால் எதிர்காலப் பேரிடர்கள் உருவாக்கப் போகும் விளைவுகள் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவில் கடுமையானதாக இருக்கும் என்பது சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் நீர்நிலைகளை அழித்து இந்த விமான நிலையம் கட்டப்பட்டால் மழைக்காலங்களில் சென்னையில் மேலும் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல்கள் மிகுதியாகும் என்பதே அவர்களின் எச்சரிக்கையாகவும் இருக்கிறது.

தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பரந்தூர் மக்கள் மேற்கொண்ட விவசாயம் மற்றும் இதர தொழில்களும் வளர்ச்சிக்கு பங்கு பெற்றிருக்கிறது. கூட்டு வளர்ச்சியே நாட்டின் நிலையான வளர்ச்சி. மக்களைத் துயரத்தில் தள்ளி விட்டு வளர்ச்சி என்பது நிலையானதல்ல. அனைத்து மக்களும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்திய தமிழ்நாட்டில், பரந்தூர் மக்களை அகதியாக்கி விட்டு வளர்ச்சியை சாத்தியப்படுத்துவோம் என்பது எவராலும் ஏற்க முடியாதது.

- மே பதினேழு இயக்கம்