“கிறித்தவ இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியல் சமூக மக்களையும், பட்டியலினத்தவர்களாகவே கருதி, அவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. அந்த பொதுநல மனுக்களுக்கு எதிராக பாஜக அரசு, எதிர் உறுதிச்சான்றை (Counter Affidavit) நீதிமன்றத்தில் (09/11/2022) சமர்ப்பித்துள்ளது. அதில் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.

பாஜக நீதிமன்றத்தில் கூறியவை என்ன?

“பட்டியலின மக்கள் எந்த மதத்துக்கு மாறியிருந்தாலும் அவர்கள் பட்டியலினத்தவராகவே கருதப்பட வேண்டும்” என்கிற நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை தவறு என்றும், ஹிந்து மதத்தில் இருக்கும் அளவுக்கான தீண்டாமையோ, மற்ற ஒடுக்குமுறைகளோ கிருத்தவ இஸ்லாமிய மதங்களில் பரவலாக இல்லை என்றும், கிறித்தவமும் இஸ்லாமும் அந்நிய நாட்டு மதங்களாக இருப்பதால் ஜாதி அமைப்பை அம்மதங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும்,

கிறித்தவ இஸ்லாமிய மதம் மாறியவர்களுக்கு, பட்டியல் இன இடஒதுக்கீட்டை வழங்கினால் அவர்களும் ஹிந்து மதத்தில் இருக்கும் பட்டியலினத் தினரை போலவே ஒடுக்குமுறைகளை சந்திக்க வேண்டி வரும் என்றும், சமத்துவ (egalitarian) மதமான கிறித்துவ மதத்தில் ஜாதிக்கு எந்தவித அங்கீகாரமும் இல்லை என்றும், புத்த மதத்துக்கோ, சீக்கிய மதத்துக்கோ மாறிய பட்டியல் இனத்தவர் களின் ஜாதியை இப்போதும் கூட அடையாளம் காண முடியும் என்றும், ஆனால் பல நூற்றாண்டு களாக கிறித்தவ இஸ்லாமிய மதங்களுக்கு மாறி வருகின்ற பட்டியலினத்தவர்களின் ஜாதியை அடையாளம் காண முடியாது என்றும்,

“இந்து பட்டியலினத்தவர்களைப் போலவே, கிறித்தவத்துக்கும் இஸ்லாமியத்துக்கும் மதம்மாறிய தலித் மக்களும், ஒடுக்குமுறைகளை சந்திக்கிறார்கள் என்பதை நிறுவுவதற்கு, துல்லியமான நம்பகத்தன்மை வாய்ந்த சான்றாவணங்கள் எதுவும் இதுவரை இல்லை” என்றும் கூறியுள்ளது.

பாஜக அரசு மக்களிடம் பாஜக இன்றுவரை செய்யும் பிரச்சாரங்கள் என்னென்ன? நீதிமன்றத்தில் பாஜக தெரிவித்திருக்கும் கருத்துக்களில் இருந்து அவை எவ்வாறு மாறுபடுகின்றன?

“இந்துக்களே தாய் மதம் திரும்புங்கள்” என்று கிறித்தவ இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியல் இனத்தவரையும் சேர்த்தே தான் பாஜக அழைக்கிறது; இந்து முன்னணி வகையறாக்களும் அழைக்கிறார்கள். அவ்வாறாக அழைக்கப்படுபவர்களை ஏதேனும் ஒரு ஜாதியில் சேர்த்து தானே ஆக வேண்டும். கிறித்தவ மதம் மாறியவர்கள் முற்றிலுமாக ஜாதியை கைவிட்ட வர்களாக மாறி இருந்தால், “தாய் மதம் திரும்புங்கள்” என்ற இவர்களின் கோரிக்கையை ஏற்று வருபவர் களை எந்த ஜாதியில் பாஜகவினர் சேர்த்துக் கொள் வார்கள்? பார்ப்பனர்களாக ஏற்றுக் கொள்வார்களா?

கிறித்தவ இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை கொடுமைகள் பரவலாக இல்லை என்று நீதிமன்றத் தில் உறுதியாக கருத்து தெரிவிக்கும் பாஜக அரசு, மக்களிடம் இதே கருத்தை தான் தெரிவிக்கிறதா? “மீண்டும் இந்து மதத்திற்கு திரும்புங்கள்” என்று பட்டியலினத்தவரை நோக்கி கோரிக்கை வைக்கும் பாஜக, என்ன சொல்லி கோரிக்கை வைக்கிறது? “கிறித்தவத்துக்கு நீங்கள் மதம் மாறினாலும், அங்கே ஜாதி உண்டு; இந்து மதத்தை விட கிறித்தவத்தில் ஜாதி வேறுபாடுகள் அதிகமாக உண்டு; இந்து மதத்தில் ஜாதி இல்லை; நாங்கள் ஜாதியை ஒழித்து விட்டோம்; எனவே இந்து மதத்திற்கு வாருங்கள்” என்று தானே பொய் பிரச்சாரம் செய்து ஆட்களை அழைக்கிறது! நீதிமன்றத்தில் இவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கும், மக்கள் மன்றத்தில் (மக்களை மதரீதியாக பிரித்து அணி திரட்டி வாக்குகளை சேகரித்து சனாதன தர்மத்தை நிலை நாட்டுவதற்காக) இவர்கள் முன்வைக்கும் பிரச்சார வாதங்களுக்கும் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன! இது இரட்டை வேடமல்லவா!

“ஜாதியை உருவாக்கியதே வெள்ளைக்காரன் தான்”என்று தொலைக்காட்சி விவாதங்களில் பல வலதுசாரி சார்புடையோர் பேசுவதை நாம் கேட்டிருப்போம். இதை பாஜகவின் நிலைப்பாடு என்று எடுத்துக் கொள்வதா? அல்லது நீதிமன்றத்தில் “இந்து மதத்தில் தான் ஜாதி உண்டு; அந்நிய மதங்களான கிறுத்தவ இஸ்லாமிய மதங்கள், சாதி அமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை” என்று பாஜக சொன்னதை பாஜகவின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்வதா? எதை பாஜகவின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்வது? மக்களிடம் பிரிவினையை தூண்டி வயிறு வளர்க்க, பல கருத்துகளை முன் வைக்கும் பாஜக, நீதிமன்றத்தில் மட்டும் பல்டி அடிப்பது ஏன்?

இந்து பட்டியலினத்தவர்களைப் போலவே கிறித்தவ இஸ்லாமிய பட்டியல் இனத்தவர்களும் தீண்டாமை உள்ளிட்ட ஒடுக்குமுறைகளை எதிர் கொள்கிறார்கள் என்பதை நிறுவுவதற்கு சான்றாதாரங்கள் எதுவும் இல்லை என்று ஒன்றிய அரசு கூறுமேயானால், 2014ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருக்கும் இந்த ஒன்றிய அரசு, அதற்குரிய சான்றாதாரங்களை இந்த எட்டு ஆண்டுகளாக ஏன் திரட்டவில்லை? என்பதே நம்முடைய கேள்வியாக இருக்கிறது. சான்றாதாரங்களை திரட்டி, மதம்மாறிய பட்டியல் இனத்தவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதில் அக்கறை காட்டாத பாஜகவுக்கு, “பட்டியல் இனத்தவர்களே மீண்டும் தாய் மதம் திரும்புங்கள்” என்று கோரிக்கை வைக்க என்ன யோக்கியதை உள்ளது என்பதும் நம்முடைய கேள்வியாக இருக்கிறது.

கிறித்தவ இஸ்லாமிய மதங்களில் இந்து மதம் அளவுக்கு தீண்டாமையோ ஜாதி கொடுமைகளோ மிக அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் கூட, “பரிசுத்தமான மதங்கள்” என்றோ “ஜாதி வேற்றுமை துளியும் இல்லை” என்றோ இவ்விரு மதங்களுக்கும் நற்சான்றிதழ் அளிக்க முடியாது. க்ஷபைபநளவ உயளவந ளரசஎநல என்ற பெயரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில், 2014 ஆம் ஆண்டு நவம்பர் 29இல், தீண்டாமை குறித்த ஒரு கணக்கெடுப்பு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.

உங்கள் வீட்டு சமையலறையில் பட்டியல் ஜாதியினரை நுழைய அனுமதிப்பீர்களா? என்ற கேள்விக்கு, மக்கள் அளித்த பதிலைக் கொண்டு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஒரு பட்டியல் சமூக நபரை சமையலறைக்குள் விடமாட்டோம் என்று இந்துக்களில் 35% பேரும், சமணர்களில் 30% பேரும், சீக்கியர்களில் 23% பேரும், இஸ்லாமியர்களில் 18% பேரும், கிறித்தவர்களில் 5% பேரும், பழங்குடி மதத்தினரில் 5% பேரும், புத்த மதத்தில் 1% பேரும் கூறியுள்ளனர். எனவே, முறையாக புள்ளிவிவரங்களை சேகரித்து, பாதிப்புக்கு தகுந்தபடி, எந்தெந்த மதங்களுக்கு மாறிய பட்டியல் இனத்தவர்களை எந்தெந்த பிரிவுகளில் சேர்த்தால் அவர்களுக்கான நிவர்த்தி கிடைக்குமோ, அந்தந்த பிரிவுகளில் சேர்த்து, அவர்களுக்கான சமூக நீதியை வழங்குவது தான் ஒரு அரசின் கடமையாக இருக்குமே தவிர, மக்களிடம் மதமோதலை தூண்டும் கருத்துக்களை விதைத்து கொண்டே, நீதிமன்றத்தில் நேர்மாறான கருத்துக்களை தெரிவிப்பது என்பது, ஒரு பொறுப்பான அரசின் செயல் அல்ல.

பாஜகவின் இந்த இரட்டை வேடத்தை பட்டியலின மக்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை.

- ம.கி.எட்வின் பிரபாகரன்

Pin It