கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

காலம்காலமாக சமூகத்தில் அழுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு அடித்தட்டில் வாழ்ந்து வருகின்ற மக்கள்தாம் தலித்களும், பழங்குடியினர்களும். கல்வி என்பது அவர்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. ஆதிக்க வகுப்பினர்கள் அவர்களை அடிமைகளைப்போல் நடத்தியிருக்கின்றார்கள். இது வரலாறு நெடுகிலும் காணக்கிடைக்கின்றன. அந்த சமூக மக்கள் மற்ற சமூக மக்களைப்போல் கண்ணியமாக வாழ வேண்டும்; வாழ்விலே ஏற்றங்களைக் காண வேண்டும் என்ற அடிப்படையில்தான் இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது.

10 quota reservationகல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படும்போது அந்த சமூக மக்கள் தங்களை இழிநிலைகளிலிருந்து மீண்டு மேலெழுந்து செல்ல வாய்ப்பு வழங்கப்படுகிறது. கல்வி கிடைத்தால்தான் அவர்கள் வேலைவாய்ப்புகளில் பங்கெடுக்க முடியும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்தால்தான் தங்கள் வாழ்நிலைகளை உயர்த்திக் கொள்ள முடியும். இது ஒடுக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு இழைத்த அநீதிக்கு கிடைக்கப் பெற்ற நீதிமுறையாகும். ஆனால் இடஒதுக்கீட்டை ஆதிக்க சக்திகள் ஆரம்ப காலம் தொட்டே எதிர்த்து வருகிறார்கள்.

இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதில் இந்துத்துவ சக்திகள் முனைப்பு காட்டி வந்திருக்கின்றன. அதுவும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி அமைந்ததிலிருந்து இந்த இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வது குறித்து தொடர்ந்து பேசி வந்தார். கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் தனது அபத்தமான கருத்தை பின்வாங்கிக் கொண்டார். இருந்தாலும் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களும், பாஜகவின் தலைவர்களும் தொடர்ந்து இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.

இடஒதுக்கீடு என்பது பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும், அதன்பிறகு இடஒதுக்கீடு தேவையில்லை என்று அம்பேத்கர் சொன்னதாகவும், அதன்பிறகு வந்த ஆட்சியாளர்கள் வாக்கு வங்கிக்காக ஒவ்வொரு பத்தாண்டும் அதை நீடித்து வருவதாகவும் பாஜகவின் தலைவர்கள் பொய்யுரைத்து வருகிறார்கள். இதனால்தான் சமூக செயற்பாட்டாளர், குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி 'சமூகநீதி நோக்கிலான இடஒதுக்கீட்டை ஒழிப்பதை பாஜக நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது' என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதுதான் உண்மை. டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்டுள்ள சமூகங்களுக்குப் போராடி பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டை எப்படியாவது சிதைத்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறது பாஜக அரசு.

இடஒதுக்கீடு நடைமுறையை நீக்க இயலாது. அப்படி நீக்கினால் தனது அரசிற்கு எதிராகப் பெரும் புரட்சியே ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்டபடியால் மறைமுகமாக இடஒதுக்கீட்டை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இடஒதுக்கீட்டினால் ஒடுக்கப்பட்டுள்ள சமூக மக்கள் பயன்பெறாத வகையில் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

இந்தியாவில் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தலித் மக்கள் 24.6% பேரும், பழங்குடியின மக்கள் 1.5% பேரும் இருக்கிறார்கள். இவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தலித் மக்களுக்கு 15% மும், பழங்குடியின மக்களுக்கு 7.5% மும் இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. 22.5% இடஒதுக்கீடு இருந்தும் அந்த சமூக மக்களின் உயர்கல்வி பங்கேற்பு என்பது மிக மோசமான நிலையிலேயே இருக்கின்றன. கல்வி பெறுவதிலேயே இப்படியான புறக்கணிப்பு என்றால் வேலைவாய்ப்புகளில் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எந்தவொரு சமூகமும் சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி பெற வேண்டுமானால் அதற்கு முதலில் கல்வி வளர்ச்சி பெற வேண்டியது அவசியமானதாக இருக்கின்றது. ஆனால் ஒடுக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு கல்வி பெறுவதில்கூட பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

அரசு வேலைவாய்ப்புகளில் தலித் மக்களும், பழங்குடியின மக்களும் தங்களுக்கான இடஒதுக்கீட்டில்கூட தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றனர். "01.04.2012 முதல் 31.12.2016 வரையிலான காலத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள், மத்திய அமைச்சரவை மற்றும் துறைகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பழங்குடியின மக்களுக்கு 22,829 காலி இடங்கள் இருந்தன. ஆனால் அவற்றில் 15,874 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன" என்று ஊழியர்கள் மற்றும் பயிற்சித்துறையின் தரவுகளிலிருந்து எடுக்கப்பட்டு மக்களவையில் அளிக்கப்பட்டுள்ள விபரங்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நாற்பது மத்திய பல்கலைக்கழகங்களில் வெறும் 3.47% தலித் சமூகத்தினர்கள் மட்டுமே பேராசிரியர்களாக இருக்கிறார்கள். இதில் பழங்குடியினரின் நிலை இன்னும் மோசம். வெறும் 0.7% மட்டுமே பேராசிரியராகப் பணியாற்றுகிறார்கள்.

"மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 2017ம் ஆண்டில் பழங்குடியினருக்கான 6,887 இடங்களில் 3,595 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன" என்று மேற்கண்ட அந்தக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது 47% இடங்கள் பழங்குடியினருக்கு நிரப்பப்படவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிய வருகின்றது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதிவாரியாக பங்கேற்பு விகிதம் என்ன என்பது குறித்து ஆராய்ந்ததில் இந்தியாவில் ஏற்கனவே இடஒதுக்கீடு பெற்றுக் கொண்டிருக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள் மற்றும் பழங்குடியினர்கள் பங்கேற்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

இடஒதுக்கீடு எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு குழிதோண்டிப் புதைத்து வருகிறது. கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் முன்னேறி இருக்கின்ற உயர்சாதியினர்களுக்கு அரசியல் அமைப்பை திருத்தி இடஒதுக்கீடு வழங்கி அதை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டும் அரசு, இடஒதுக்கீடு வழங்கப் பெற்ற ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு உயர்கல்வி பெறுவதிலும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

- வி.களத்தூர் எம்.பாரூக்